ஒவ்வொருநாளும்

நேற்று வசந்தபாலன் கூப்பிட்டார். ”சார், என்ன செய்கிறீர்கள்?”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா?”என்று சிரித்தார். ”ஏன்?”என்றேன். ”பிரபல எழுத்தாளர் துணி தேய்க்கிறார்னு பத்திகையிலே போடவேண்டியதுதான்” நான் ”துவைச்சா அப்றம் அயர்ன் பண்ண வேண்டியதுதானே?”என்றேன் ”துவைக்கிறீங்களா? நீங்களா?”

என் நண்பர்கள், வாசகர்களுக்கு அந்த ஆச்சரியம் அடிக்கடி வந்திருக்கிறது. சில வாரம் முன்பு கெ.பி.வினோத் கூப்பிட்டபோது காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தேன். ஹீரோவுக்கு காலையுணவுக்காக. அவன் எடை கண்டபடிக்கு அதிகரித்தமையால் கடும் ‘டயட்’டில் இருக்கிறான். இருவேளை இறைச்சிச்சோறு ஒருவேளையாகிவிட்டிருக்கிறது .பசிதாளாமல் குப்புற விழுந்துகிடப்பதைக் கண்டபின் இப்போது காய்கறியில் சற்றே கறிவாசனை கலந்து காலையுணவு. அதை நான்தான் தயாரிக்கவேண்டும். ”அதிருஷ்டம் செய்த நாய். பெரிய எழுத்தாளர் கையால் பணிவிடை செய்யப்படுகிறதே” என்றார் வினோத். சிரிக்கத்தான் தோன்றியது.

பலர் நான் என் நேரத்தை எப்படி திட்டமிட்டுச் செலவிடுகிறேன் என்று கேட்டிருக்கிறார்கள். பலருக்கும் எழுதியிருக்கிறேன். இப்போது அதைப் பதிவு செய்கிறேன், எதிர்காலத்தில் எடுத்துப்பார்க்க ஆர்வமூட்டுவதாக இருக்கும் என்பதால். என் நேரம் என்னுடைய கட்டுபபட்டில் இருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே எனக்கு பிடிவாதம் உண்டு. அதுவே என்னுடைய செயல்களில் பெரும்பாலும் முழுமை கூடுவதற்கான காரணம் என்று நினைக்கிறேன். திரும்பிப்பார்க்கையில் வாழ்க்கையை கொஞ்சம்கூட வீணாக்கிவிடவில்லை என்ற நிறைவுக்கும் அதுவே காரணம்.

தனிவாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களை நாமே செய்துகொள்வது, பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் செய்யத்தெரிந்திருப்பது, வாழ்க்கையை ஒரு அகக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை ஒருவகையில் காந்திய மதிப்பீடுகள். நான் என் முன்னோடிகளாகக் கொண்ட பலர் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி, சிவராம காரந்த் போன்ற பலருக்கு இந்த ஒழுங்குகள் காந்தியின் முன்னுதாரணம் மூலமே கிடைத்திருக்கின்றன.

நான் என் நண்பர்களுடன் பேசும்போது அடிக்கடிச் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. சற்றும் மிகையில்லாதது. ‘போர் அடிக்கிறது’ என்று  நான் எப்போதுமே உணர்ந்தது இல்லை. எதுவும் செய்யாமல் இருக்கும் நாட்கள் உண்டு. இனம்புரியாத மௌனம் ,தனிமை, கனம் ஆகியவற்றை உணரும் நாட்கள் உண்டு. சிலசமயம் அந்த நாட்கள் ஒருமாதம் வரைகூட நீண்டுசெல்லும். அது படைப்புமனத்தின் ஓர் இயல்பான உள்வாங்கல்நிலை. படைப்புகள் சரிவர உருவாகாத நிலையில் ஒரு தத்தளிப்பு சிலநாட்களுக்கு அகத்தில் நீடிக்கும்.

இருபதுவருடங்களுக்கு முன்னர் என்னை உக்கிரமான துயரமும் நிலைகொள்ளாமையும் வாட்டி வதைத்ததுண்டு. மாதக்கணக்கில் ஊர்கள் தோறும் அலைந்திருக்கிறேன். பசித்து கையேந்தியிருக்கிறேன். பொது இடங்கலில் தூங்கியும் இருக்கிறேன். நாட்கனக்கில் தூக்கமில்லாமல் தவித்த நாட்களுண்டு. இப்போதுகூட மாதத்தில் பல நாட்கள் இரவு முழுக்க தூக்கமில்லாமல் சென்றுவிடும். ஆனால் பொழுதுபோகவில்லைஎன உணர்ந்ததே இல்லை. போகாத பொழுது என்மீது கனத்து நின்றதே இல்லை.

பொழுது போகாமையை உணரும் வாழ்க்கையில் அடிப்படையாக ஒரு பிழை இருக்கிறது என்று எண்ணுகிறேன். உடனடியாக நிவர்த்திசெய்தாகவேண்டிய பிழை அது. நடைமுறைசார்ந்த அல்லது தத்துவார்த்தமான, அல்லது ஆன்மீகமான பிழை. பெரும்பாலான மனிதர்கள் குடி, சூதாட்டம் போன்ற அடிமைப்படுத்தும் பழக்கங்களுக்குச் சென்றுசேர்வது உள்ளூர உருவாகிவிடும் பொழுதுபோகாமையினால்தான். குறிப்பாக நாற்பதைத்தாண்டிய வயதுகளில் அந்த சலிப்பு உச்சம் கொள்கிறது. அதுவரை அவர்களை அடித்துக் கொண்டுவந்த உணர்ச்சிவேகங்களும் மேலோட்டமான ஈடுபாடுகளும் அப்போது கரைந்து பொருளழிந்து பின்னுக்கு நகர்ந்துவிடுகின்றன.

பொதுவாக கட்டுப்பாடு, திட்டமிடல் என்பவை கலைஞர்களுக்கு உரிய பண்புகள் அல்ல என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது ஒருவகை மூடநம்பிக்கையே.  பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா பலவகையான மாறுதல்களின் காலகட்டம். அம்மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் சிதறுண்டு போன சில புகழ்பெற்ற படைப்பாளிகளின் வாழ்க்கையில் இருந்து உருவான மனப்பிம்பம் அது. உலகின் முதல்தர படைப்பாளிகள் தங்களுக்கு ஈடுபாடுள்ள விஷயங்களில் கட்டுப்பாடும் திட்டமிடலும் கொண்டவர்களே. எல்லா உலகியல் விஷயங்களிலும் அந்த திட்டமிடலையும் கட்டுப்பாட்டையும் அவர்களால் செயல்படுத்த முடியாது,அவ்வளவுதான். அவற்றில் அவர்களின் ஆர்வம் நிற்காது. நல்ல கலைஞர்கள் தங்களால் எது முடியாதோ அதை தெளிவாக உணர்ந்து அதிலிருந்து முழுமையாகவே தங்களை விலக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அது அவர்களுக்கு தேவையான விடுதலையை அளிக்கிறது.

கட்டுப்பாடு என்பது யாருக்கும் மிகச்சிரமமானதும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதுமாகும். முழுமையான கட்டுப்பாடு சிலருக்கே சாத்தியமாகிறது. காந்தியம் என்பது அடிப்படையிலேயே சுயகட்டுப்பாட்டை வலியுறுத்துவது. தன்னியல்பில் உணர்ச்சிகள் எண்ணங்கள் ஆகியவற்றில் நான் மிகுந்த அராஜகம் கொண்டவன். என்னை கட்டுப்படுத்துவதே என் வாழ்நாளின் மிகப்பெரும் சோதனையாக எனக்கு இருந்துகொண்டிருக்கிறது.

கட்டுப்பாடு என்பதை முன்வைப்பவர்கள் மானுட இச்சையின் எல்லையற்ற மூர்க்கத்தை உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவேதான் மேலும்மேலும் அவர்கள் கட்டுபபட்டை வலியுறுத்துகிறார்கள். மனித இச்சையும் சரி அதற்கான வாய்ப்புகளும் சரி எல்லையற்றவை. மனித வாழ்க்கையும் சரி, மனித உடலும் சரி, மிகமிகக் குறுகிய எல்லைக்குட்பட்டவை. சுயக்கட்டுப்பாடு என்ற எண்ணம் இந்த பிரபஞ்சதரிசனத்திலிருந்தே மண்ணில் உதித்திருக்கிறது.

கட்டுப்பாடற்ற தன்மையின் மூலம் மனிதன் இழப்பவை மிகமிக அதிகம் என்பதை மீண்டும் மீண்டும் வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். கட்டுப்பாடின்மை இருவகையில் வாழ்க்கையை வீணடிக்கிறது. ஒன்று தேவையில்லாத பொருளில்லாத விஷயங்களில் நம் நேரம் விரயமாகிக் கொண்டிருக்கும். நாம் விரும்பும், மதிக்கும் விஷயங்களுக்கு நேரம் இல்லாமலாகும். இன்னொன்று கட்டுபப்பாடின்மை நம் உடலை சீக்கிரத்திலேயே அழித்துவிடும். சீரழிந்த உடல் உடனடியாக இழப்பது பருவமாறுதல்களில் உள்ள பேரின்பத்தை. பயணங்களின் சுதந்திரத்தை.இருத்தலின் உவகையை.

என் இருபது வயதில் நான் வாசித்த எமர்சன் எந்த மேலைநாட்டுச் சிந்தனையாளரை விடவும் என்னை பாதித்தவர். இப்போதும் மீண்டும் மீண்டும் நான் வாசிப்பது அவரையே. இயற்கைமுன் புலன்களை திறந்துவைத்து வாழும் ஒருவனுக்கு வாழ்க்கைமுடிவிலாத இன்பவெளி என்ற எண்ணத்தை அவரே உருவாக்கினார். நுண்ணுணர்வுள்ள மனம் இயல்பாகவே இயற்கையில் ஈடுபடுகிறது. இயற்கையை அது தன்வயப்படுத்துகிறது. ஆனால் அது போதாது என்பதை எமர்சனே எனக்குக் கற்பித்தார். ஒவ்வொருகணமும் நாம் விழிப்புடன் இயற்கையை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ”இதோ நான் இயற்கையின் மடியில் இருக்கிறேன், இந்தக்கணத்தை நான் இனிமேல் அடையவே போவதில்லை” என்ற பிரக்ஞையுடன் அதை ‘நோக்க’ வேண்டியிருக்கிறது. இயற்கையில் ஈடுபட நாம் நம் அகத்தை முறைப்படிப் பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொருநாளும் அந்த நாளுக்குரிய இன்பங்களை தவறாமல் பெற அந்த நாளை நாம் வகுத்துக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது. ஒருநாள் என்ற பரப்பில் ஒவ்வொன்றுக்கும் அதற்கான இடம் இருக்கிறது. ஒன்றுக்காக இன்னொன்றை இழக்கும் அளவுக்கு எதுவுமே முக்கியமற்றது அல்ல. மனிதவாழ்க்கையின் நிறைவு என்பது அவன் மனம் இன்பத்தை அடையும் ஒவ்வொரு துளியையும் தவற விடாமலிருப்பதில்தான் இருக்கிறது. ஒருநாள் என்பது முக்கியமான ஒரு கொடை என்ற உணர்வு அதற்கு இன்றியமையாதது. பெரும்பாலும் நடுவயதைத் தாண்டியபின் உருவாகும் இந்த உணர்ச்சியை இளவயதில் பெறுபவர்கள் எதையும் இழப்பதில்லை. நான் குரூரமான மரணங்களில் இருந்து பெற்ற உணர்வு அது.

என்னுடைய வாழ்க்கைநோக்கு நானே என் அனுபவங்களின் வழியாக உருவாக்கிக் கொண்டது. ஒருபோதும் வெறுமே கற்று அறிந்த வரிகளை நான் இவ்விஷயத்தில் சொல்வதில்லை. எமர்சன், தோரோ, காந்தி, ஷ¥மாக்கர், தல்ஸ்தோய் என என் மனதில் அந்த எண்ணங்களை உருவாக்கியவர்கள் ஒரே வரிசையில் இணைந்திருக்கிறார்கள். ஒரு வரியாக என் அனுபவ அறிவை தொகுத்துக் கொள்வதாக இருந்தால் இப்படிச் சொல்வேன் ‘ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இன்பமும் நிறைவும் உள்ளது,வாழ்க்கை என்பது சிறுவிஷயங்களினால் ஆனது’

*

ஒருநாளில் இப்போது என் செயல்நிரல் என்ன? பல நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இதை எவ்வகையிலேனும் எழுதிப்பார்த்துக்கொள்வது நல்லது என்று எண்ணுகிறேன்.எழுதிப்பார்க்கும்போது அது நம் கண்முன் புறவயமாக நிற்கும். அப்போது அது நமக்கு நம்மைக் காட்டும் ஆடியாக ஆகிறது.

நான் தினமும் 6.30க்கு விழித்தெழுகிறேன். எழுந்ததுமே வெளியே நிற்கும் டெட்டியை கூண்டுக்குள் அடைத்து, உள்ளே நிற்கும் ஹீரோவை வெளியே விடுவது முதல் கடமை. டெட்டி டாபர்மான் நாய். துரத்திப்பிடிப்பது முடியவே முடியாது .தானாக எளிதில் வரவும் மாட்டான். கொஞ்சம் விளையாடுவான். வருவதுபோல வந்து சட்டென்று விலகி ஓடி எங்கிருந்தாவது உற்சகமாக எட்டிப்பார்ப்பான். அருகே செல்லும்வரை நின்றுவிட்டு பிடிக்கச்செல்லும்போது பாய்வான். ஆனால் சற்றும் எதிர்பாராத கணம் வந்து அவனே கூண்டுக்குள் செல்வான். அதன் பின் ஹீரோ. அவன் நாய்க்குட்டிகளைப்போல எம்பிக்குதித்து கைகளை கவ்வுவான். இருவரையும் கொஞ்சி தடவி விட்டு அதன்பின்புதான் வீட்டுக்குள் நுழைய முடியும்.

பல்தேய்த்தபின் பால் இல்லாத டீ. அதன்பின் பிள்ளைகளின் சீருடை, அருண்மொழியின் ஜாக்கெட், என்னுடைய உடை போன்றவற்றை இஸ்திரி போடுவேன். ஏழு மணியளவில் கணிப்பொறிமுன் அமர்ந்து மின்னஞ்சல்கள் பார்ப்பேன். காலையில் எழுதுவது எப்போதுமே மிக உற்சாகமான விஷயம்.சும்மா தட்ட ஆரம்பித்தாலே எதையாவது எழுத முடியும். மாலையில் புதிதாக எதையும் ஆரம்பிப்பது கடினம். ஏழுமணிக்கு சைதன்யா, எட்டு மணிக்கு அருண்மொழி, எட்டரைக்கு அஜிதன் கிளம்பிச்செல்வார்கள்.

நடுவே எட்டரை மணிக்கு எழுந்து போய் ஹீரோவுக்குக் காய்கறி நறுக்கி காலையுணவைச் சமைப்பேன். அது வேகும் நேரத்தில் இரண்டாவது பாலில்லா டீயுடன் அமர்வேன். அரைமணிநேரம் தியானம் என் நெடுநாள் வழக்கம். ஒன்பது மணிக்கு நாய்களின் காலையுணவை ஆறவைத்துவிட்டு அவசரமாகச் சவரம்செய்து குளித்து உடைமாற்றுவேன். காலையுணவு. அனேகமாக இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. அதை நானே செய்துகொள்வேன். அவசரம் என்றால் பிரட். பட்டினியுடன் அலைந்த நாட்களில் நான் பிரட்டை மிக விரும்பி உண்டிருக்கிறேன். இப்போதும் அந்த மோகம் ஒரு மனப்பழக்கமாக தொடர்கிறது.சாதாரணமான வெறும் பிரட்டையே விரும்பி சாப்பிடுவேன். ஜாம் ஏதும் இல்லாமல்.

நாய்களுக்கு உணவை வைத்துவிட்டு ஒன்பதரை மணிக்கு அலுவலகம் கிளம்புவேன். உடைகள் விஷயத்தில் ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கிறேன். அலுவலகத்துக்கு சாதாரணமான பழைய உடைகளையே அணிந்து செல்வேன். தன் கீழே பணியாற்றுபவர்கள் நல்ல உடைகள் அணிவதை பெரும்பாலும் மேலதிகாரிகள்  எரிச்சலுடன் தான் பார்க்கிறார்கள். நான் ‘தலைமறை’வாகவே வேலைசெய்து திரும்பிவர விரும்பக்கூடியவன்.அது மிக வசதியானது. என் சூழலில் என்னை எழுத்தாளர் என்று அறிந்தவர்கள் அனேகமாக யாருமே இல்லை.மேலும் கிராமத்து டீக்கடைகள், சாலைகள், முச்சந்திகள் என நான் திரியும் இடங்களில் எல்லாம் நல்ல உடைகள் என்னை அன்னியப்படுத்துகின்றன.

இருபது நிமிடப் பேருந்துப்பயண தூரத்தில் இருக்கிறது தக்கலை. பெரும்பாலும் கூட்டமே இல்லாமலிருக்கும். காலையில் நாகர்கோயிலுக்கு வரும் வண்டிகள்தான் பிதுங்கி வழியும். பெரும்பாலும் வலப்பக்கம் அமர்ந்து வேளிமலைமுடிகளைப் பார்த்துக் கொண்டு செல்வேன். நான் கல்லூரிக்கு வந்த அதே பாதை இது. இருபத்தைந்து வருடங்களாக , அன்றுமுதல் இன்றுவரை, ஒவ்வொருநாளும் பார்த்தாலும் எப்போதும் மேகம் சூழ நிற்கும் இந்த மலைமுடிகள் எனக்கு மன எழுச்சியையே அளிக்கின்றன. இவ்வழியில் பயணம்செய்தவர்களுக்கு ஒன்று தெரியும், இந்தியாவிலேயே மிக அழகான இடங்களில் ஒன்று இது [இப்போது வேகமாக கட்டிடங்களால் மறைக்கப்படுகிறது]

பத்துமணிக்கு அலுவலகம். நான் பதினொருவருடங்களாக இதே வேலையில் இதே மேஜையில் இருக்கிறேன். ஆகவே அரைப்பிரக்ஞையில்கூட புயல்வேகத்தில் என்னால் வேலைகளைச் செய்துவிடமுடியும். பதினொன்றரை மணிக்கு நேர் முன்னால் உள்ள கூரைவேய்ந்த சிறிய டீக்கடைக்குச் சென்று அமர்ந்து அங்கே வரும் விவசாயிகளின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு இருபது நிமிடம். ஒரு பாலில்லாத டீ.

மதியம் ஒரு மணிக்கு உணவு. கீழே லைன் மேன் ஓய்வறையில். சாப்பாடு கொண்டுவந்திருப்பேன். ‘எடுத்தது கண்டார் இற்றது கண்டார்’ வேகத்தில் சாப்பிடுவேன். ஒன்று ஐந்துக்கெல்லாம் அங்கே ஒரு பெஞ்சில் படுத்து தூங்குவேன். பத்துவருடத்தில் அந்த பெஞ்சு இதற்கானது என ஆக்கியிருக்கிறேன். யாராவது அமர்ந்திருந்தால்கூட ஒரு மணிக்கு எழுந்துவிடுவார்கள். தலைக்குமேல் லைன்மேன்கள் நாளிதழ் வாசித்து உச்ச குரலில் அரசியல் விவாதம் புரிவார்கள்.சமயங்களில் பூசலும் நிகழும். எனக்கு அவை கனவுக்குள் எங்கோ கேட்கும்.

சரியாக இரண்டுமணிக்கு எழுந்துவிடுவேன். உடல்கடிகாரம் மிகமிகத் துல்லியமானது. ஐந்து மணி வரை வேலைகள். அதிகமும் பொதுமக்கள் தேடிவந்து சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் முதலிரு சொற்ளைச் சொன்னதுமே என்ன சிக்கல், என்ன வழி என்று தெரிந்து விடும். தொலைபேசி சம்பந்தமாக மொத்தமே நான்கு புகார்கள்தான் வரும். ஆனாலும் முதல்தரம்  கேட்பதுபோன்ற பாவனையுடன் பொறுமையாக அவர்களைக் கேட்க வேண்டும். அதுவே போதுமானது. என் வேலை சுமையானது அல்ல. காரணம் பொறுப்புகள் குறைவான மிகச்சிறிய பதவி என்னுடையது. அதை மேலும் எளிமையாக்கி வைத்திருக்கிறேன்.

நான்கு மணிக்குக் கிளம்பி ஒரு பாலில்லாத டீ. பத்து நிமிடம் வேகமாக நடந்து பின்பக்கம் உள்ள வயல்வெளியை ஒரு சுற்று சுற்றிவருவேன். ஐந்துமணிக்கு ஆபீஸ் முடிகிறது. கிளம்பினால் மீண்டும் கூட்டமில்லாத பஸ்ஸில் நாகர்கோயில். அப்போது நாகர்கோயில்விட்டு திரும்பும் பஸ்களில் கூட்டம் நெரிபடும். மீண்டும் வேளிமலை. குதிரைபாய்ஞ்சான் ஏரி. சவேரியார்மலைக் குன்று. ஐந்தரைக்கு வீடு. மாலைக்கான வாழைப்பழங்கள் வாங்கிக் கொள்வேன்.

வீட்டில் சைதன்யா வந்து காத்திருப்பாள். கதவை திறந்து ஹீரோவை அடைத்து டெட்டியை திறந்து சிறுநீர் கழிக்க விடவேண்டும். மீண்டும் அவனைப் பிடித்து கட்டவேண்டியதில்லை. அவனே உள்ளே போய்விடுவான். கதவையும் காலால் சாத்திக் கொள்வான். தாழ்போடவேண்டியதுதான் வேலை. இது என்ன கணக்கு என்பது புரிவதேயில்லை.

சைதன்யாவுக்கு மாலை டிபன் செய்து கொடுப்பேன். அனேகமாக தோசை. நான் ஏதாவது புதிதாக ஏதேனும் செய்து கொடுக்கவேண்டுமென ஆசைப்படுவாள். தோசைமாவிலேயே தேங்காய் தோசை, நிலக்கடலைப்பொடித்தோசை என்று ஏதேனும் செய்வேன். வாழைப்பழத்தால் பலவகை அப்பங்கள் செய்ய முடியும். மாடர்ன் பிரட் என்பது ஏராளமான சிற்றுண்டிகளைச் செய்ய உதவும் ஒரு சிறந்த மூலப்பொருள்.

சைதன்யா பள்ளிநிகழ்ச்சிகளை விரித்துரைப்பதில் ஆர்வம் கொண்டவள். ஒரு வழியாக அவளை டியூஷனுக்கு அனுப்பிவிட்டு என் அறையையும் கூடத்தையும் கூட்டிப் பெருக்கி விட்டு கணிப்பொறிமுன் ஒரு கறுப்பு டீயுடன் அமர்வேன். மின்னஞ்சல்கள். ஒருநாளைக்கு சராசரியாக காலையில் முப்பது மாலையில் ஐம்பது மின்னஞ்சல்கள் இருக்கும். பதில்கள் போடுவேன். அதிகபட்சம் மூன்றுநாட்களுக்குள் பதில்போடுவதென்று ஒரு கணக்கு. கடிதங்களுக்கு பதிலை அலுவலகத்திலேயே எழுதுவேன்.

ஆறுமணிக்கு அருண்மொழி களைத்து தள்ளாடி வருவாள். உலகிலேயே இந்திய தபால்நிலையங்களில்தான் வேலை அதிகம் என்று நினைக்கிறேன். சிடுசிடுப்பு விலகி அவள் சுமுகமாக ஆக சற்று நேரம் ஆகும். சிலசமயம் நானே டீ போட்டுக் கொடுக்கவேண்டியிருக்கும். பெரும்பாலான நாட்களில்நானும் அருண்மொழியும் பாறையடி என்று அழைக்கப்படும் மலையடிவாரம் வரை ஒரு மாலைநடை செல்வோம். வேளிமலையின் அழகிய அடிவாரம். உக்கிரமாக காற்று வீசும். பேச்சிப்பாறை சானலின் இருபக்கமும் விரிந்த வயல்வெளிகள். அவள் மாலைச்சமையலுக்கான வேலைகளை ஆரம்பிக்க நான் சில்லறை உதவிகள் செய்வதுண்டு. தேங்காய் துருவுவது போன்று. வேலைகள் நடுவேதான் பேச்சு.

ஒன்பதரை மணிக்கு இரு குழந்தைகளுடன் பேசியபடியே சாப்பிட வைப்பது. இப்போது இருவரும் பெரிய பிள்ளைகளாக ஆன பிறகும் நான் முன்பு தட்டில்போட்டு சோறு ஊட்டிய காலகட்டத்து வழக்கம் தொடர்கிறது. இந்த நேரம் பிள்ளைகளுக்குரிய நேரம். என் சிறுவயது நினைவுகள், பயண அனுபவங்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் வித்தாரமாக கதை சொல்லக்கூடியவன். இப்போதெல்லாம் குழந்தைகள் கடுமையான மன அழுத்தத்தை பள்ளிகளில் பெறுகிறார்கள். ஆகவே சிரித்துச் சிரித்து விழ வைத்தபின் தூங்க வைத்தால் அவர்கள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இருவருக்கும் படுக்கைகள் போட்டு படுக்கவைப்பதுவரை சிரிப்பு.

பத்தரை மணிக்கு அவர்கள் தூங்கியபின் பாத்திரங்கள் கழுவுவேன். அருண்மொழிக்கு மொத்த நாளில் ஓய்வெனக் கிடைப்பது இந்த அரைமணிநேரம் மட்டுமே. சமைப்பது அவள் முறை, பாத்திரம் கழுவுவது என்முறை என்பது ஒரு பரஸ்பரப் புரிதல். அதன்பின் நாய்களுக்கு உணவு வைத்தல். டெட்டியை வெளியேவிட்டு ஹீரோவை உள்ளே விடவேண்டும். அதற்கு இருவரையும் பத்துநிமிடமாவது கொஞ்சவேண்டும். நாய்களுக்கு பின்மண்டை கழுத்து இரண்டையும் வருடுவது மிகமிகப்பிடித்தமானது. தினமும் இருமுறை அப்படி உரிமையாளரால் வருடிவிடப்படும் நாய்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. அவை அந்த நேரத்தை தவற விடுவதேயில்லை.

சனிக்கிழமை இரவில் நானும் அருண்மொழியும் சேர்ந்து ஒரு படம் பார்ப்போம். அனேகமாக மலையாளபப்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் நானும் அஜிதனும் சேர்ந்தே பேசியபடி மாட்டிறைச்சி வாங்கச் செல்வோம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுவோம். ஒரு வாரத்துக்குரிய தேங்காய்களை தொலிப்பேன். நாய்களைக் குளிப்பாட்டுவேன். அஜிதனுடன் ஒரு நெடுந்தூர நடை உண்டு. பேசியபடியே செல்வோம். பிற்பகல் தூக்கம், மாலையில் நானும் அருண்மொழியும் சேர்ந்து துணிகள் துவைப்பது.

பதினொன்றுக்கு வீடே தூங்கிவிடும். வெளியே டெட்டி மட்டும் பாய்ந்து ஓடியும் குரைத்தும் சுற்றிவரும். வீட்டில் மூவரும் மூச்சுவிடும் ஒலி கேட்க அமைதியாகத் தூங்குவது என் மனதுக்கு ஒரு நிறைவை அளிக்கும். தனித்திருக்கும் உணர்வும் தனிமை இல்லை என்ற உணர்வும் ஏற்படும். நான் இரவில் பழங்கள் மட்டுமே உண்பேன். ஒன்பது மணிக்கு பழங்கள் உண்டபின் இப்போது மீண்டும் பசிக்கும்.எடுத்து வைத்திருந்த ஒரு பழமும் கறுப்பு டீயும். எழுதவோ வாசிக்கவோ அமர்ந்தால் விடிகாலை இரண்டு மணிவரை.

விடிகாலைக் குளிர் நன்றாக ஏறியபின் படுப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். கடல் அருகே இருப்பதனால் நாஞ்சில்நாட்டில் பின்னிரவில் காற்று திசைமாறி அடிக்கும். அந்த ஒலியே வேறு வகையாக இருக்கும். தூங்கும் வரை அதன் இலைச்சலசலப்பைக் கேட்டபடி படுக்கையில் படுத்திருப்பது என் வாழ்க்கையின் இனிய அனுபவங்களில் ஒன்று. மீண்டும் மீண்டும் நாளில் கடைசியாக எழும்  எனக்கு பிடித்தமான ஒரு நினைவு உண்டு. நான் பெரிதும் விரும்பும் என்னுடைய மண் என்னைச்சுற்றி இருக்கிறது என்று. இருளில் மூழ்கிக்கிடக்கும் வேளிமலையை வயல்வெளிகளை ஓடைகளை நினைத்துக் கொள்வேன். இந்த மண்மீதான பித்துதான் என் வாழ்க்கையை பொருளுள்ளதாக்குகிறது.

ஆனால் இந்த ஒழுங்கு கட்டுப்பாடு எதுவுமே இறுக்கமான ராணுவ முறைகள் அல்ல. மனநிலை கட்டறுத்ததென்றால் எதையும் கலைத்துக்கொள்ளவும்செய்வேன். பன்னிரண்டு மணிநேரம் வரை இடைவெளியே இல்லாமல் எழுதியிருக்கிறேன். முழுநாளும் வாசித்திருக்கிறேன். தியானம் போன்றவற்றை பல மாதங்கள் விட்டிருக்கிறேன். எழுதாமல் இருந்திருக்கிறேன். வாசிக்காமல் இருந்திருக்கிறேன்.நாட்கணக்கில் பலமணி நேரம் இசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன். இரவெல்லாம் வயல்வெளிகளில் நடந்து அலைந்திருக்கிறேன்.  பயணங்களில் அப்போது சாத்தியப்படுவனவற்றையே செய்வது என் வழக்கம்.

முற்றாகவே செய்யாமலிருக்கும் சில விஷயங்கள் உண்டு. இப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. என் பிள்ளைகளுக்கும் ஆர்வம் இல்லை. நான்கு வருடம் முன்பு தொலைகாட்சி இருந்த நாட்களில்கூட நான் அனேகமாக முற்றிலும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. ஒருபோதும் எவரிடமும் தேவையில்லாத அரட்டைகளுக்குள் சென்றதில்லை. இவ்விரண்டையும் தவிர்த்தாலே நேரம் என்பது முழுமையாக நம் கையில் இருக்கும் என்று எண்ணுகிறேன். மதுப்பழக்கம் போன்ற சிக்கல்கள் உள்ளவர்களின் நேரத்தில் பெரும்பகுதி அவர்களின் வசம் இல்லை.

தவறாமல் செய்யும் விஷயம் ஒன்று உண்டு. டைரி எழுதுவது. இருபதுவருடங்களுக்கும் மேலாக நான் டைரி எழுதுகிறேன். அது என்னை தொகுத்துக் கொள்வதற்காக மட்டும்தான். பழைய டைரிகள் தருமபுரியில் பிரம்மசாரியாக இருந்தநாட்களில் அலமாராவுக்குள் எலிகுட்டிபோட்டு குதறித்தள்ளி அழிந்தன. பதினைந்து வருட டைரிகள் கைவசம் உள்ளன. அவ்வப்போது திருப்பிப்படித்து நாட்களை ‘சும்மா’ நகர்த்தியிருக்கிறேனா என்று பார்ப்பேன். எல்லா நாட்களிலும் ஏதேனும் வாசித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன், பயணம்செய்திருக்கிறேன், முக்கியமானவர்களைச் சந்தித்திருகிறேன். பொருளில்லாமல் போன நாட்கள் இல்லைதான்.

ஆனால் கூடவே இன்னொன்றும் தோன்றும். பதினைந்துவருடங்களுக்கு முந்தைய நாட்கள் நேற்று போல உள்ளன. காலம் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. சிறு வயதில் குச்சி ஐஸ் சாப்பிடும் அனுபவம்தான். ருசியை விட கண்ணெதிரே அது கரையும் பதற்றம்தான் அதிகம். நூறு வருடம் துளித்துளியாகச் சுவைத்து வாழமுடிந்தாலும்கூட மானுட வாழ்க்கைதான் எத்தனை குறுகியது, எத்தனை சாமானியமானது!

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ்ட் 2008

முந்தைய கட்டுரைகுரு நித்யா வரைந்த ஓவியம்
அடுத்த கட்டுரைவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை