காலச்சுவடு நூறாவது இதழ்

காலச்சுவடு நூறாவது இதழ் வெளியாகிறது. தமிழிலக்கிய சூழலில் இது ஒரு முக்கியமான சாதனை. தமிழில் சிற்றிதழியக்கம் என்பது எப்போதுமே பொருளாதாரச் சிக்கல்கள் நிர்வாகத்திறனின்மை ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டே இயங்கி வந்துள்ளது. சந்தா அனுப்பினால் இதழ் வரும் என்ற உறுதியை அளிக்கும் இதழ்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த நிர்வாகத்திறனும் தெளிவான இதழியல் நோக்கும் கொண்ட கண்ணனின் மேற்பார்வையில் காலச்சுவடு அடைந்த வெற்றி ஒரு சமகால வரலாறு. அவ்விதழில் அவரது கனவும், சலியாத தொடர் உழைப்பும் முன்னெடுக்கும் விசையாக இருந்துள்ளன. நம் சூழலில் இத்தகைய அழுத்தமான அறிவார்ந்த நீடித்த உழைப்பும் அர்பப்ணிப்பும் மிக அபூர்வமானவை.

இதழில் கண்ணன் எழுதியிருக்கும் முன்னுரைக்குறிப்பில் [ http://www.kalachuvadu.com/issue-100/page14.asp ] சுபமங்களாவின் இலக்கிய இடம் குறித்த எதிர்மறைக் கருத்து இடம்பெற்றிருப்பதைப்பற்றி வாசகர் ஒருவர் எழுதிக்கேட்டிருந்தார். ஒரு சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பை அத்தனை சாதாரணமாக மதிப்பிட்டுவிடமுடியாது. வரலாற்றுச் சூழல் , இலக்கிய மதிப்பீடுகள் என அதை மதிப்பிட பல அளவுகோல்கள் உண்டு. கண்ணனின் மதிப்பீடு அவசரமானது, போதாமைகள் கோண்டது என்றே எனக்குப் படுகிறது.

தமிழில் நடுத்தர இதழ்களுக்கான தேவையை தொடர்ச்சியாக முன்வைத்தவர் சுந்தர ராமசாமி. அவரே ஈடுபாடு காட்டி பல முயற்சிகள் வந்தன. எஸ்.வி.ராஜதுரையின் ‘இனி’, வசந்தகுமாரின் ‘புது யுகம் பிறக்கிறது’ போன்றவை முளையிலேயே கருகின. தமிழில் வெற்றிபெற்ற முதல் நடுத்தர இதழ் சுபமங்களா.

முந்தைய நடுத்தர இதழ்களின் தோல்வியிலிருந்து சுபமங்களா கற்றுக் கொண்ட பாடம், எந்த ஒரு குழுவின் குரலாகவும் ஒலிக்காமலிருப்பது என்பதே. அந்த பாடத்தால்தான் அது வெற்றி பெற்றது. கோமல் சுவாமிநாதன் மார்க்ஸியர். முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பிலிருந்தவர். சாதாரணமாக அவர் அதை ஒரு முற்போக்கு மேடையாக ஆக்கியிருக்கலாம். ஆனால் சுபமங்களாவில் எல்லா கருத்தியல் தரப்புக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆகவே அனைவரும் அதில் எழுதினார்கள். சில இதழ்களுக்குள்ளேயே அது ஒரு பொதுமேடையாக ஆகியது. அதுவே அதன் முதன்மைப் பங்களிப்பு.

தமிழ் இலக்கியத்தளத்தின் அனைத்து தரப்பினரும் விவாதிக்கும் ஒரு பொதுத்தளம் என ஒன்று அதற்கு முன்னர் உருவானதே இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவரவர் இதழ்களில் பேசிக்கொள்வதே வழக்கம். சுபமங்களாவில் நடந்த அந்த விவாதம் மூலமே உண்மையில் தமிழ் இலக்கியச்சூழலில் ஒர் உயிரசைவு உருவாகியது. கோமலின் அந்த நிலைப்பாட்டை சுந்தர ராமசாமி ஏற்கவேயில்லை. சுபமங்களா சுயநிலைபாடு இல்லாமல் ‘எல்லாருக்கும்’ இடமளிக்கிறது என்று தொடர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார். அதைத்தான் கண்ணனும் சொல்கிறார்.

சுபமங்களாவுக்கு சுயநிலைபாடு தெளிவாகவே இருந்தது என்பதை சுபமங்களா நேர்காணல்களை வாசிக்கும் எவரும் உணரலாம். சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற வணிகஎழுத்தாளர்களிடம் அதன் நோக்கும் போக்கும் கறாராகவே இருந்தன என்று காணலாம். அது வணிக இலக்கியத்துக்கு எதிராக இலக்கியம் என்ற பொதுவட்டத்தை முன்வைத்தது. அதற்குள் இயங்கும் அனைவரையும் தன் பக்கங்களில் கொண்டுவர முயன்றது. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றது. அ.மார்க்ஸ¤ம் நாகார்ஜுனனும் அருணனும் ஞானக்கூத்தனும் ஒரே இதழில் பேச ஆரம்பித்த பிறகே தமிழில் இன்றைய இலக்கிய காலகட்டம் தொடங்கியது.

எழுத்தாளர்களுக்கு படங்கள் போட்டு ‘கிளாமரைஸ்’ செய்கிறது சுபமங்களா என்று குற்றம்சாட்டபப்ட்டதுண்டு. அம்பை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி கூட அவ்வாறு சொல்லியிருக்கிறார். பின்னர் சுந்தர ராமசாமியின் பலநூறு படங்கள் தமிழில் வெளிவந்ததை, இன்றும் அவரில்லாமல் காலச்சுவடே இல்லை என்ற நிலை இருப்பதை நாம் காண்கிறோம். சுபமங்களா அன்று அறியப்பட்டிருந்த வணிக எழுத்தாளர்களுக்கு மாற்றாக ஒரு எழுத்தாளர் வரிசையை முன்னிறுத்தியது. அவர்களுக்கு அது முக்கியம் கொடுக்க விரும்பியது. அதற்கு ரவிசங்கரனின் அழகிய புகைப்படங்கள் பெரும் பங்களிப்பாற்றின.

சுபமங்களாவில் வந்த எழுத்தாளர்களின் பேட்டிகள் பொதுவாக சாதாரனமானவை. காரணம் சுபமங்களாவின் வாசகன் அவர்களைக் கேள்வியே பட்டிருக்கமாட்டான். ஆகவே எளிய அறிமுகமாகவே அந்தப் பேட்டிகள் பலசமயம் உள்ளன. ஆனால் பக்க வடிவமைப்பு வழியாக ‘இதோ முக்கியமான புது எழுத்தாளர்கள்!’ என கூவி முன்வைத்தது சுமங்களா. பாலகுமாரனுக்கு ‘நிகராக’ வண்ணதாசனை வெளியிட்டதைப்பற்றி அதிர்ச்சி அடைந்து பேசிய வாசகர்களை நான் கண்டிருக்கிறேன். [யார்யா இவரு?] இன்றைய இளம் வாசகன் இதை சற்று கற்பனைசெய்துதான் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு முக்கியப்படுத்தப்பட்ட ஓர் எழுத்தாளர் வரிசை வழியாகவே தமிழில் ஒரு புது வாசகர்வட்டம் உருவானது. இன்று நாம் காணும் பதிப்பகஅலை , புத்தகக் கண்காட்சிகள், புதிய நூல்கள் அனைத்துக்கும் விதை இவ்வாறுதான் வீசப்பட்டது. சுபமங்களாவை மறந்து எந்த இலக்கிய வாசகனும் இதையெல்லாம் பேச முடியாது. அந்தக் காலகட்டத்தின் பங்கு உள்ளது. தொலைக்காட்சி வணிக எழுத்தை அழித்துக் கொண்டிருந்த காலம்.வேறு வகை எழுத்துக்கான இடைவெளி உருவாகியிருந்தது. அந்த வரலாற்று இடத்தை சுபமங்களா நிரப்பியது.

சுபமங்களாவின் வெற்றியே மேலும் நடுத்தர இதழ்களுக்கான இடத்தை உருவாக்கியது. புதியபார்வை அதைத்தொடர்ந்து வெளிவந்தது. காலச்சுவடு வெளிவந்தது. விண்நாயகன் வந்து நின்றுபோனது. சுபமங்களாவைப் போலன்றி காலச்சுவடு ஒருபோதும் இலக்கிய எழுத்தாளர்களை முன்னிறுத்தியதில்லை என்பதை அதன் இதழ்களைப் புரட்டிப்பார்ப்பவர்கள் காணலாம். மிகச்சில எழுத்தாளர்களே அதில் பேசப்பட்டிருக்கிறார்கள். சுந்தரராமசாமி தவிர எவருமே அதில் முக்கியப்படுத்தப்படவில்லை. காலச்சுவடு உத்தேசிக்கும் ‘கறாரான’ இலக்கிய நோக்கு என்பது சுந்தர ராமசாமி தவிர பிறரையெல்லாம் கீழிறக்கும் இடத்துக்கே அதைக் கொண்டு சென்றது.

சுபமங்களா உருவாக்கிய எழுத்தாளர்கள் யார் என்று கேட்டால் நான் என்னையும் எஸ்.ராமகிருஷ்ணனையுமே முதன்மையாகச் சொல்வேன். எங்களை சிலர் இன்று முக்கியமான எழுத்தாளர்களாகச் சொல்கிறார்கள் என்பதை கண்ணன் அறிந்திருப்பார். சிற்றிதழ்களில் இருந்து எங்களை அடுத்தகட்ட வாசகர்களுக்குக் கொண்டுபோன இதழ் அது. அன்று வெறும் நான்கு கதைகளே எழுதியிருந்த என்னிடம் இரண்டாவது இதழுக்கே கோமல் கதை கேட்டு வெளியிட்டார்– ஜகன் மித்யை. பின்னர் கதாவிருது பெற்றது அக்கதை. கடைசி இதழ் வரை என் முக்கியமான கதைகள் பலவற்றை அதில்தான் எழுதினேன்.

முற்போக்கு இலக்கியவகைக்குள் எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன் சுபமங்களா வழியாகவே முக்கியமான சிறுகதையாசிரியராக அறிமுகமானார். அவரது ஒருகதையை படித்துவிட்டு நான் சுந்தர ராமசாமியிடம் பேசியதை நினைவு கூர்கிறேன். சுந்தர ராமசாமி உடனே ராமகிருஷ்ணனுக்கு அதைப் பாராட்டி கடிதம் எழுதினார். இன்று நாம் பேசும் பல படைப்பாளிகள் அதன் பக்கங்கள் வழியாக அறிய வந்தவர்கள். கண்மணி குணசேகரன்,அழகியபெரியவன் வரை.

நூறு இதழ்கள் வழியாக காலச்சுவடு தமிழுக்குக் கொடையளித்த பெரும் படைப்பாளிகள் யார் யார்? ‘அரவிந்தன்’ என்று சொல்லி நகைச்சுவை வழங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் எந்த இதழும் எழுத்தாளர்களை ‘உருவாக்க’ இயலாது. அவர்கள் உருவாகும் காலத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்கள் செய்யும் புதுமைகளுக்கு இடமளிக்கலாம். எனக்கு முதலில் ‘நிகழ்’ அமைந்தது. பின்னர் ‘சுபமங்களா’. காலச்சுவடு சிலர் கதைகளை வெளியிட்டுள்ளது. அது தொடர்ந்து கவனப்படுத்திய எழுத்தாளர் என யாருமே இல்லை.

காலச்சுவடின் கொடை மிக முக்கியமானது என்பதே என் எண்ணம். சுபமங்களாவுடன் ஒப்பிட்டுக்கொள்ள முயன்றதற்குப் பதிலாக அதை கண்ணன் சொல்லியிருக்கவேண்டும். நடுத்தர இதழ்களின் அடுத்த கட்டத்தை தொடங்கிவைத்த இதழ் காலச்சுவடு. இலக்கிய, அறிவுலக அறிமுகம் என்பதற்குப் பதிலாக மிக விரிவான இலக்கிய,அறிவுலக விவாதங்களை அது முன்வைத்தது. அப்போது காலச்சுவடு வெளியிட்ட பேட்டிகளை சுபமங்களா பேட்டிகளுடன் ஒப்பிடும்போது இதை உணரலாம். விரிவான , தொடர்ந்த கோட்பாட்டு ஆய்வுகளுக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கும் அது இடமளித்தது. பின்நவீனத்துவம், மதச்சார்பின்மை, அமைப்பியல், பின்காலனியம், நவீனகாந்தியம் என இக்கால சிந்தனைகள் அதன் பக்கங்களில் இன்றுவரை தொடர்ந்து பேசப்படுகின்றன.

அப்போது காலச்சுவடு இதழில் நான் எடுத்து வெளியான சச்சிதானந்தன் பேட்டியை சுபமங்களாவுக்கு அளித்திருக்கலாமென்று கோமல் என்னிடம் கேட்டபோது இதையே சொன்னேன். சுபமங்களாவின் வரலாற்றுப்பணி அறிமுகம் செய்வதே, விரிவான கோட்பாட்டு விவாதம் கொண்ட அப்பேட்டி அதன் வாசகர்களுக்கு உரியதல்ல என்று. இன்று எல்லா தரப்பிலும் தீவிர வாசகர்களாக உள்ள அத்தகைய ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியதில் காலச்சுவடுக்கு பெரும் பங்கு உண்டு. நிகழ் போன்ற சிற்றிதழ்களில் புழங்கிய அந்த உலகம் திடீரென விரிவானதற்குக் காரணம் காலச்சுவடுதான். அதுதான் அதன் வரலாற்றுப் பங்களிப்பு.

நூறாவது இதழின் தலையங்கம் என்பது ஒருவகையில் ஒரு வரலாற்றுப் பதிவு. அதன் ஒவ்வொரு சொல்லையும் என்றோ எவரோ வாசிக்கக் கூடும். அத்தகைய ஒரு குறிப்பில் காழ்ப்புகள் இன்றி இன்னும் திறந்த மனத்துடன் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. பிறர் மீதான நக்கல்களும் கசப்புகளும் இருக்கட்டும், காலச்சுவடு இதழின் தொடக்க கால வெற்றிகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்த மனுஷய புத்திரனைப்பற்றி மனந்திறந்து சில சொற்களாவது பாராட்டாகவோ நன்றியாகவோ சொல்லியிருந்தால் சொல்பவர் இன்னும் மேலாகவே எண்ணப்பட்டிருப்பார்..

தமிழ் இலக்கியத்தின், சிந்தனைகளின் வரும் காலகட்டங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு காலச்சுவடு மேலும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்