கீதைத்தருணம்

கீதை – தொகுப்பு

அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது.

ஆர்.சங்கர நாராயணன், மும்பை

அன்புள்ள சங்கர நாராயணன்,

கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கையில் கிடைத்தவற்றையெல்லாம் உடனுடன் படித்துத் தள்ளும் ஆர்வம் மிக்க சிறுவனாக நான் இருந்த நாட்களில் பகவத்கீதை என் கண்ணில் பட்டது. என் பெரியப்பா சோதிடம், மருத்துவம் முதலியவற்றைத் தொழிலாகச் செய்துவந்தார். பழைய திருவிதாங்கூர் மன்னர் அரசு (ஸ்ரீ சித்ரா இந்து மதப் பிரச்சார சபா) பதிப்பித்த மலையாள கீதை அது. சி.செ.ஸ்ரீரங்கநாத சாஸ்திரி அவர்கள் உரை எழுதியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்து ”படித்துவிட்டுத் தருகிறேன்” என்று பெரியப்பாவிடம் கூறினேன். அவர் ஏதோ சுவடியை ஆராய்ந்து கொண்டிருந்தவர், கயிறு கட்டப்பட்ட வட்டச்சில்லு மூக்குக்கண்ணாடியுடன் நிமிர்ந்து, ”எப்போது திரும்பத் தருவாய்?” என்று கேட்டார். நான் அதன் பக்க அளவை பார்த்துவிட்டு ”நான்கு நாட்களில்” என்றேன். அவர் புன்னகைத்து ”அங்கே வை” என்றார். ”ஏன்?” என்றேன். ”அது ஒரு மருந்து. நோய் இல்லாதவன் மருந்து சாப்பிட்டால் புது நோய்கள்தான் வந்து சேரும்” என்றார்.

இப்போது யோசிக்கும்போது அவர் கூறிய அச்சொற்களில் உள்ள உண்மை என் மனதை பிரமிக்கச் செய்கிறது. எந்த நூலுக்கும் அக்கூற்று பொருந்தும் என்று படுகிறது. தேடல் இல்லாதவன் முன்பு வைக்கப்படும் பதில் அர்த்தமில்லாதது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

மீண்டும் பன்னிரண்டு வருடம் தாண்டிய பின்னர்தான் நான் கீதையைப் படித்தேன். உயிர் கரைக்கும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி போல கண்ணீருடன் பதைபதைப்புடன் கீதையை நோக்கி வந்தேன். மூழ்கப் போகிறவன் பற்றிய கரை மரத்து வேர் போல அதைப் பற்றிக் கொண்டேன். அந்நிலையில் என்னைப் பொருத்தவரை அந்நூலுக்கு ஒரே மதிப்புதான், அது எனக்கு உதவுகிறதா, இல்லையா என்பது. அது எத்தனை பழைமையானது என்பதோ, எந்தெந்த ஞானியர் அதை வழிபட்டனர் என்பதோ எனக்கு ஒரு பொருட்டாகவோ இருக்கவில்லை. நான் எரிந்து கொண்டிருந்தேன். எனக்குத் தேவை அந்தத் தீயை அணைக்கும் நீர் மட்டுமே. கீதையை அப்படிப்பட்ட தருணம் ஒன்றினால் தட்டி எழுப்பப்பட்ட ஒருவன் மட்டுமே உண்மையான ஆழத்துடன் புரிந்து கொள்ள முடியும். கீதையில் இருப்பதும் அப்படிப்பட்ட ஒரு தருணம்தான். அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

*

1982 செப்டம்பர் 23ம் தேதியுடன் என் இளமைப்பருவம் முடிவுக்கு வந்தது. அன்றுவரை நான் உற்சாகமான சிறுவன். வணிகவியல் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். படிப்பதைத்தவிர பிறவற்றில் உச்சகட்ட ஆர்வம் கொதித்துக் குமிழியிட்டபடியே இருந்த நாட்கள். முதலில் இலக்கியம். இரவுபகலாக படிப்பேன். பெரிய எழுத்தாளனாகி நோபல் பரிசு பெற்று உலக நாடுகள் முழுக்க பயணம் செய்வது குறித்த தீராத பகல்கனவுகள். கூடவே அரசியல். பெரும் புரட்சியாளனாகி தூக்குமேடையில் உயிர்விட்டால் என்ன என்று இன்னொரு கனவு. அப்போது படிக்கும் புத்தகங்களுக்கு ஏற்ப கனவுகள் மாறும். கொத்தமங்கலம் சுப்புவின் மாபெரும் தொடர்கதை ‘தில்லானா மோகனம்பாளை’ப் படித்துவிட்டு நாதஸ்வர வித்வானாக ஆகிவிட வேண்டும் என்று ஒரு சில நாள் வேகம். அ.லெ.நடராஜன் எழுதிய விவேகானந்தர் வரலாறு படித்துவிட்டு துறவியாகி இந்தியாவெங்கும் சுற்ற வேண்டும் என்ற மோகம்.

இது உள்ளுர. வெளியே நான் நண்பர்களுடன் ஊரைக் கலக்கி அலையும் பொறுப்பில்லாத பையன். கல்லூரிக்கு மிக அபூர்வமாக மட்டுமே போவேன் – ஒரு மொத்த வருடத்தில் முப்பத்திரண்டு நாள்தான் வருகைப்பதிவு இருந்தது. குமுதம், விகடன் கதைகளைப் படித்துவிட்டு அக்கதைகளையே மறுசமையல் செய்து அவற்றுக்கே அனுப்பி அவை பிரசுரமாகும். அவை அனுப்பும் ஐம்பது ரூபாயில் நண்பர்கள் திருவனந்தபுரம் சென்று பிரேம் நஸீரும் ஜெயனும் நடித்த அடிதடிப் படங்களை வரிசையாகப் பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் ஊர் வந்து சேர்வோம். சாலையோர தட்டுகடையில் பரோட்டா இறைச்சி சாப்பிடுவோம். சுற்றுவட்டத்தில் நடக்கும் எல்லா திருவிழாக்களுக்கும் போய் வெயிலில் வறுபடுவோம். இரவு முழுக்க கண்விழித்து சாம்பசிவன் நடத்தும் கதாப்பிரசங்கங்களும் கொல்லம் ஏ.கே.ராஜுவின் நாடகங்களும் பார்ப்போம். நான் கல்லூரிக்கு மட்டம் போட்டு மாடு மேய்க்கும் பையன்களுடன் அலைவேன். புல்லறுப்பவர்களுடன் மலை ஏறிப்போய் காட்டுக்குள் சுற்றுவேன்.

அனைத்திற்கும் நீங்காத்துணையாக பாலிய நண்பன் ராதாகிருஷ்ணன் இருந்தான். யோசிக்காமல் எந்த சாகஸத்தையும் செய்பவன், தயக்கமில்லாமல் எவருடனும் பேசுபவன், எப்போதும் சிரிப்பு கொப்பளிப்பவன். திடீரென்று   செப்டம்பர் 23ம் தேதி அவன் ரப்பர் பாலை உறையை வைக்கப் பயன்படுத்தப்படும் நைட்ரிக் ஆஸிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டான். குடும்பப் பிரச்சினைதான் காரணம் என்று பிறகு கூறினார்கள். அவன் ஆசிட் குடித்த செய்தியை கேட்டு ஓடிக்கூடியபோது வைக்கோல் போர் அருகே எரியும் பிளாஸ்டிக் வயர் போல நெளிந்து முறுகிக் கொண்டிருந்தான். கழுத்து இறுகும் மிருகம் போல் ஓர் ஊளையுடன் திறந்த வாய் வழியாக, அவனுடைய மூச்சு, வெந்து சிதைந்த உள்ளுறுப்புகளை அள்ளியபடி வெளியே பீரிட்டது. இருளில் ஓடி தபால் நிலையத்தைத் திறக்க வைத்து தொலைபேசியில் சொல்லி கார் வரவழைத்து அவனைத் தூக்கி கிடத்தினோம். அவனுடைய உடல் அதற்குள் குளிர ஆரம்பித்துவிட்டது. இறுகப் பற்றிய முஷ்டியுடன் வலது கையும், தூக்கில் தொங்குபவனின் கால்போல நீட்டி இறுகிய வலது காலும் மட்டுமே மின்னதிர்ச்சி பட்டது போலத் துடித்துக்கொண்டிருந்தன.

பாதி வழியிலேயே அவன் இறந்துவிட்டான். ஆனால் அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. வண்டியில் இருந்து அவனை இறக்கிப் படுக்க வைத்தோம். டாக்டர் ஆல்பன் வந்து பார்த்த சில நொடிகளிலேயே திரும்பி, அவன் செத்துவிட்டான் என்றார். அக்கணம் என் மனம் ஒரு மாயம் புரிந்தது. அதெல்லாம் வெறும் கனவு என்று சொன்னது. ஊர் திரும்பினால் அங்கு ராதாகிருஷ்ணன் இருப்பான் என்றுபட்டது. உடனே திரும்பி ஒரு கிலோமீட்டர் தூரம் வெறியுடன் ஓடினேன்.

நான் திரும்பி வருவதற்குள் அவனைக் கொண்டு வந்திருந்தார்கள். அவன் வீட்டில் அழுகைகள், விளக்கொளியும் நிழல்களும் கலைந்த ஆட்டங்கள். நான் என் வீட்டுக்குப்போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன். பகலெல்லாம் வெயிலில் திருவிழா பார்த்து இரவு முழுக்க நாடகம் பார்த்து மறுநாள் தூங்கும்போது ஒளியும் ஒலியும் தீராது ஒலிக்க உருவாகும் போதை போல ஒன்று எனக்குள் இருந்தது. எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இல்லை. தூக்கமோ விழிப்போ இல்லை. மாலையில் என் அண்ணா சிறிய புட்டியில் சாராயம் வாங்கிவந்து நீர்கலந்து எனக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினார்.

தூங்கி விழித்தபோது நள்ளிரவு. ஒலிகள் அடங்கிய நிலை. என் மனம் வியப்பூட்டுமளவு நிதானத்துடன் இருந்தது. உச்சகட்ட நெருக்கடிக்குப்பிறகு மனம் அப்படி எளிதாக ஆகிவிடுவதை அனுபவித்தவர்கள் சிலர் இதை வாசிக்கலாம், அவர்களுக்குப் புரியும். கண்ணாடி ஜன்னலின் பிசுக்குகளைத் துடைத்தது போல ஒரு துல்லியம். நான் புழக்கடை வாசலைத் திறந்து வெளியே சென்றேன். தூரத்தில், ஆற்றுக்குள்  இறங்கும் சரிவில், ராதாகிருஷ்ணனின் சிதையைப் பார்த்தேன். அதை நோக்கி நடந்து ஒரு மேட்டில் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களூரில் விறகால் எரிக்கமாட்டார்கள். நெருக்கமாக அடுக்கிய உலர்ந்த தேங்காய் மட்டைகளால் நிரப்பப்பட்ட ஆறடி ஆழமுள்ள செவ்வக வடிவக் குழியில் சடலத்தை வைத்து தீயிட்டு விட்டுச் சென்றுவிடுவார்கள். நெருப்பு கனன்று எரிந்து கடினமான எலும்புகளைத்தவிர அனைத்தையும் சாம்பலாக்கிவிடும். ஆனால் தழலே இருக்காது. குமிழியிடும் ரத்தம் தேங்கிய குளம்போல சுடர்விட்டது சிதை. ஒரு வாய்போல, பெரும்பசி எரியும் வாய் போல.

அந்த நாளுக்குப்பிறகுதான் நான் அழுத்தமான தேடல்கள் கொண்டவன் ஆனேன். வாழ்க்கையின் சாரம் பற்றிய ஓயாத கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டேன். தத்துவ நூல்களையும் மதநூல்களையும் வாசித்துத் தள்ளினேன். வீட்டைவிட்டு ஓடி அலைந்தேன். குருநாதர்களையும் வழிகாட்டிகளையும் மாறிமாறித் தேடினேன். ஓயாது, சலிக்காது எழுதினேன். எழுதுவது என்னைப் பொருத்தவரை முடிவுகளை வெளிப்படுத்துவது அல்ல, ஆழ்மனத்திற்குள் மொழியின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒரு பயணம் அது! இன்றைய நான் அந்த நாளில் பிறந்தவன்.

கீதாமுகூர்த்தம் என்ற சொல்லாட்சியானது எனக்கு அந்த நாளையே நினைவுபடுத்துகிறது. அங்கிருந்துதான் நான் கீதையை நோக்கித் திரும்பினேன். கீதையில் நான் அறிந்தவை அனைத்தும் அங்கிருந்து முளைத்த கேள்விகளின் விடைகளே.

*

கீதாமுகூர்த்தம் என்பது என்ன? என்னுடைய அனுபவத்திலிருந்து அதை இவ்வாறு விளக்கிக் கூறுகிறேன். நம்முடைய அனுபவ அறிவும் தர்க்க புத்தியும் அவற்றின் உச்சநிலைகளில் சிக்கி முன்னகரமுடியாமல் திகைத்து நிற்கும் தருணத்தில் நாம் உணரக்கூடிய ஒரு நிலை அது. அறிந்து விடலாம் என்ற நம் ஆணவம் ஆட்டம் கண்டு போகும் நேரத்தில் நாம் உணரும் ஒரு நிலை.

நான் அதிகமும் உரையாடி அறிந்து கொண்ட வரை, இது எதிர்பாராத மரணங்கள் மூலமே அதிகமும் மனிதர்களுக்கு நிகழ்கிறது. மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் உலகின் மாபெரும் வேடிக்கை எது என்று கேட்க, ‘கணந்தோறும் மானுடர் சாகக்கண்டும் வாழ்வு நிலையானது என்று எண்ணும் மனிதப் பேதமைதான்’ என்று அவர் பதில் கூறுகிறார். கல்விக்கடல் நீந்தியவர்கள், வாழ்வின் உச்சியில் கொடி ஏற்றியவர்கள் மரணம் அளித்த அடியைத் தாங்காமல் சுருண்டு விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.

மரணத்திற்கு நிகரானது எதிர்பாராத மாபெரும் வீழ்ச்சி. வியாபாரத்தில், அதிகாரத்தில், குடும்பத்தில் நிகழும் சரிவு. ஒரு வெற்றி நம்மை அடையும்போது நாம் அதற்கு படிப்படியாக ஒரு தர்க்க அமைப்பை கற்பனை செய்துகொள்கிறோம். இதனால்தான் இப்படி என்று விளக்குகிறோம். சரிவை அப்படி விளக்க முடிவதில்லை. பெரும் சரிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் பேதலித்த பலரை நான் கண்டிருக்கிறேன்.

இவ்விரண்டுக்கும் இணையானது உறவுகளின் சிக்கல்கள், புதிர்கள். நம்பிக்கைத் துரோகங்கள், பிரிவுகள், மனவேறுபாடுகள் என உறவுகள் அளிக்கும் அடிகளுக்கு முடிவேயில்லை. அவமானத்தின் மலைகளை நம் மீது ஏற்றி வைத்துவிட்டுப் போகும் உறவுகள் உண்டு. அவற்றை விடக் குரூரமானவை எந்தக் கோணத்தில் யோசித்தாலும் நம் மூளைக்குப் பிடிபடாத உறவுச்சிக்கல்கள். தேடித்தேடி மூளை சலிக்க, மனம் எரிய, அந்த முடிவிலாத் துயரத்திலிருந்து மீள முடியாமல் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஓடிப்போகிறார்கள், பைத்தியம் அடைகிறார்கள்.

இலக்கிய வாசகர்களுக்குத் தெரியும், உலகில் உள்ள மாபெரும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவை மேலே கூறப்பட்ட மூன்று உச்சதளங்களைப் பற்றியவை என்று.

இவற்றை நான் ‘முறிவுக்கணங்கள்’ என்று கூறுகிறேன். நம்முன் நம்மைத் தாங்கி நின்ற சில சட்டங்கள் முறியும் கணங்கள் இவை. நாம் ஏறி நின்ற பீடங்கள் முறியும் கணங்கள் என்றும் கூறலாம். நம்மைச் சூழ்ந்திருந்த அனைத்தும் சடசடவென்று சரிந்து உடைந்து நொறுங்கி விழுகின்றன அப்போது. சார்லி சாப்ளின் ஒரு பெரிய மரக்கட்டடத்திற்குள் நுழைவார். ஏதோ ஒரு உத்தரம் நீட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆர்வத்தால் அதைப்பிடித்து இழுப்பார். சரசரவென மொத்த கட்டடமும் இடிந்து சரிந்து சூழ்ந்து விழுந்து கிடக்கும். அதைப் போன்ற ஒரு தருணம். நம்மில் ‘ஏன்? எதற்காக?’ என்ற வினாக்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். நம் இருப்பே அந்த அடிவயிற்று ஆவேசமாக மட்டும் இருக்கும்.

இந்த உச்சத்தில் இரு பாதைகள் பிரிகின்றன. பெரிய பாதை, வழக்கமான பாதை, கோடானுகோடி பாதங்கள் பதிந்த பாதை, ‘நம்பிக்கையின் பாதை’ அது. பரிபூரண சரணாகதியின் வழி. ‘இல்லை, இந்த வினாக்களை நான் தாளமாட்டேன். இவற்றுக்கான பதில் எனக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இதோ அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக சரணடைகிறேன்’ என்று குப்புற விழும் முறை அது. மேலே சொன்ன முறிதல் கணத்திற்குப் பிறகு, நாம் சந்திக்கும் ஏறத்தாழ அனைவருமே இந்தப் பாதையையே தெரிவு செய்திருப்பார்கள். இது எளியது, நன்றாக வழிகாட்டிக் குறிப்புகள் பதிக்கப்பட்டது. அனைத்துக்கும் மேலாக நமக்கு வழித்துணைகளும் பலர் அகப்படுவர்.

இன்னொரு பாதை உண்டு. அது எவ்வளவு தூரம் முயன்றாலும் முதல் பாதையை தேர்வு செய்ய முடியாத சிலர் உண்டல்லவா, அவர்களுக்கானது. இவர்களில் பலர் முதல்பாதையைத் தெரிவு செய்து சற்றுதூரம் போய்விட்டு முடியாமல் திரும்பி ஓடிவந்தவர்கள். இவர்களுக்கு இந்தப்பாதையில் முன்னகர்வது தவிர வேறு வழியே இல்லை. இந்தப்பாதையை ‘தேடலின் பாதை’ என்கிறேன். கீதா முகூர்த்தம் என்பது தேடலின் பாதையில் ஒருவன் அடையும் மிக முக்கியமான ஓர் இடம்.

இருபது வருடங்களுக்கும் மேலாக பலவகை மதநூல்களையும் ஆர்வத்துடன் கற்றவன் என்ற முறையில் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன். இந்துமதம், புத்தமதம், தாவோ, கன்பூஷியம் போன்ற சில மதங்களில் மட்டுமே இந்த இரண்டாவது பாதை திறந்திருக்கிறது. காரணம் இவை தத்துவார்த்த மதங்களும் கூட. பிறமதங்களில் இரண்டாவது பாதை இருளுக்கு இட்டுச் செல்லும் தன்னகங்காரத்தின் பாதையாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை மட்டுமே மீட்பு என்று கூறும் அம்மதங்கள் ஐயத்தை நரகம் என்றே குறிப்பிடுகின்றன.

ஆனால் கீதா முகூர்த்தம் என்பது முடிவில்லாத ஐயங்கள் ஒன்றாகத்திரண்டு கனத்து நம்மை அசைவிழக்கச் செய்யும் ஒரு தருணம் ஆகும். கீதையில் அர்ச்சுனனை அந்நிலையில்தான் நாம் காண்கிறோம்!
*

ஒருமுறை உறையாடும்போது நித்ய சைதன்ய யதி கூறினார், ”இருண்ட வான்வெளியில் உள்ள கருமை என்பது நம் வினாக்கள். நட்சத்திரங்கள் என்பவை எளிய பலவீனமான உதிரி விடைகள்! கீதாசாரியனை கன்னங்கரியுருவாக உருவகித்தார்கள் முதாதையர். அவனுடைய சொற்கள் விண்மீன்கள் போலும்!”

முறிதலின் கணங்களை பின்னர் மனதில் மீட்டிப்பார்க்கும்போது அவற்றுக்கு இடையே பொதுவான ஒரு இயல்பு கண்ணுக்குப் படுகிறது. ஆனால் இதற்கு நீண்ட காலம் தாண்ட வேண்டும். அந்தக் கணங்கள்மீது நமக்கிருந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பு மழுங்கி விட்டிருக்க வேண்டும். அப்போது தெரியும், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து முறிவுக்கணங்களின் இயல்புகளில் எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவை அடிப்படையில் ஒன்றுதான் என்று.

மரணம் ஏன் நம்மை உடைத்து நொறுக்குகிறது? நம் அன்றாட வாழ்வின் சிந்தனைகளால் விளக்க முடியாத ஒரு பிரம்மாண்டமான புதிர் அது. நம் வாழ்வில் நடக்கும் ஒரு பெரிய சரிவானது இப்பிரபஞ்சம் எத்தனை பெரிய சங்கிலித்தொடர் என்று நமக்கு காட்டுகிறது. அதில் ஒரு சின்னஞ்சிறு கண்ணியை மட்டும் நம் வாழ்வாகக் கொண்டுள்ள நாம் அதை நம் செயல்கள் மூலம் நிகழ்த்துவதாக எண்ணிக் கொள்வதன் சிறுமையை அப்போது கண்டடைகிறோம். அதே போன்றதே உறவும். மனிதமனம் என்பது எத்தனை பெரிய புதிர்வெளி என்று அப்போது நாம் அறிகிறோம்.

மலைத்தொடர் ஒன்றில் வாழும் எறும்பு ஒன்று ஒரு விசித்திரத்தால் மொத்த மலையையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் அதற்கு ஏற்படும் சிறுமையும் திகைப்பும்தான் இந்த முறிவுக் கணம் என்று கூறலாம். நம் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு துளியைச் சூழ்ந்து இயங்கும் மாபெரும் பெருவெளியை நாம் அப்போது உணர்கிறோம். அந்நிலையில் இந்த துளிக்குள் செல்லுபடியாகும் படியாக நாம் உருவாக்கி வைத்துள்ள தர்க்க அமைப்புகள், நியாய வாதங்கள் அனைத்துமே பொருளழிந்து போகின்றன. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது நம் புத்தி பேதலித்துவிடுகிறது.

என் சிறு வயதில் பார்த்த ஓர் அனுபவம். எழுபதுகளின் தொடக்கத்தில் கேரளத்திலும் குமரி மாவட்டதிலும் ‘கொக்கோ’ பயிர் அறிமுகமாகியது. காட்பரீஸ் நிறுவனம் கொக்கோ விலையை உயர்த்தியது. மேலும் மேலும் கொக்கோவுக்கான தேவை உருவாயிற்று. காரணம் அவர்கள் சர்வதேச அளவில் கொக்கோ கொள்முதல் செய்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிகள். என் அண்டைவீட்டு கேசுமாமா அவரது நாலரை ஏக்கரிலும் தென்னகளை அழித்து கோக்கோ நட்டார். இரவு பகல் உழைத்து தண்ணீர் பாய்ச்சினார். நான்கு வருடம் கழித்து கொக்கோ காய்த்தபோது இலத்தீன் அமெரிக்க நிலை சீரடைந்தது. கொக்கோவுக்கு விலையே இல்லாமலாயிற்று. வளர்ந்து நின்ற மரங்களைப் பார்த்து கேசுமாமா ஏங்கினார். இரவு பகலாக காண்பவர்களிடமெல்லாம் விசாரித்தார். ஒருநாள் எல்லா கொக்கோக்களையும் வெட்டி வீசினார். மறுநாள் முதல் தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார். பதினாறு வருடம் பைத்தியமாக இருந்து இறந்தார்.

உழைப்பு, அதற்கேற்ப பலன் தரக்கூடிய ஓர் எளிய உலகம்தான் கேசுமாமா வாழ்ந்து வந்தது. அதில் சர்வதேச அரசியலும் பொருளாதாரமும் புகுந்தபோது அவரால் அதை உள்வாங்கவே முடியவில்லை. அதை புரிந்து கொள்ளும் தாக்கம் அவரிடம் இல்லை. அவருடைய கருவிகள் அதை எதிர்கொண்டபோது முறிந்து போயின.

ஆமாம், நாம் இன்னும் பெரிய வெளி ஒன்றை எதிர்கொள்ள நேர்வதையே முறிவுக்களம் என்கிறோம். சமீபத்தில் என் வாசகர் ஒருவரின் அம்மா தற்கொலை செய்து கொண்டார், அவரது அண்ணா ஓர் ஒரினச்சேர்க்கையாளர் என்று அம்மாவுக்குத் தெரியவந்ததே காரணம். பலவிதமான வாழ்க்கைகளைக் கண்ட அம்மாவால் அதை உள்வாங்க இயலவில்லை.

முறிவுக்கணத்தில் கேள்விகள் தீப்பட்ட மத்தாப்பிலிருந்து பொறிகள் கிளம்புவதுபோல பொங்கியெழுகின்றன. பல வருடங்களாக நான் அழுகைகளை, ஒப்பாரிகளை கேட்டு வருகிறேன். அனைத்தும் வெறும் கேள்விகள்தான். ‘என்னை எப்படி விட்டுப் போனீர்கள்? எப்படி மனம் வந்தது? இனி நான் என்ன செய்வேன்? என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இனி எதை நம்பி வாழ்வது? ஏன் இப்படி நடக்கிரது?’ நம்பிக்கையின் பாதை இந்த அனைத்துக் கேள்விகளையும் ஒரே பதிலால் மூடிப்போர்த்தி விடுகிறது. ‘எல்லாம் இறைவனின் சித்தம். நாம் அதை அறியமுடியாது.’ அவ்வளவுதான். நம்பு, சரணடை மேலே யோசிக்காதே. போதும். அது ஒரு சிறந்த வழிதான். இந்து மதம் ஒவ்வொருவருக்கும் உடனடியாக அளிக்கும் மருந்து அதுவே ‘விதி’, ‘கர்ம வினை’, ‘இறைவன் லீலை’ என்று இந்துமதம் கூறும் பதில்கள் எத்தனை! இந்த மருத்துக்குக் குணமாகாதவர்களுக்குத்தான் அடுத்த பாதை.

தேடலின் பாதையிலும் பல படிநிலைகள் உண்டு. முதல்படிநிலை நம்முடைய தன்முனைப்பு ஓங்கி நிற்கும் காலகட்டமாகும். ‘நான் பிறரில் இருந்து வேறுபட்டவன். ஒருபோதும் எளிய விடைகளால் ஆறுதல் அடையமாட்டேன். என்னுடைய தருக்க மனதிற்கும் உள்ளுணர்வுக்கும் முற்றிலும் திருப்திகரமான பதிலே எனக்குத் தேவை. அப்பதிலை பரிசீலித்து உண்மையை அறிந்து கொள்ளும் திராணி எனக்கு உண்டு’ என்ற எண்ணம் நம்முன் நிறைந்துள்ளது.

இந்நிலையில் நின்றபடி நாம் வாசிக்கும் நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தம்முனைப்பை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சொல்லப்போனால், அதிகமாக வாசிக்கும் தோறும் தன்முனைப்பு அதிகரிக்கிறது. ‘அறிவார்ந்த’ விவாதங்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்பது தன்முனைப்பின் குரலையே. ‘என் கருத்தே நான். என் கருத்து மறுக்கப்படுவது என்னை நிராகரிப்பதாகும்’ என்ற எண்ணம் மூலம் உருவாகும் பதற்றமே ஏராளமான சொற்களாக மாறி விவாத அரங்குகளை நிறைக்கிறது. ‘ஒரு கருத்து என்னுள் உதித்தது என்பதனாலேயே அது என் உண்மை, அது என்னால் நிறுவப்பட வேண்டும்’ என்று எண்ணுவதே அறிவியக்கத்தில் இந்நிலையில் உள்ள மாபெரும் மாயை.

கீதா முகூர்த்தம் என்பது இந்த தன்னகங்காரத்தின் முறிவுநிலையே என்று கூறலாம். அலைஅலையாகக் கிளம்பும் நம் கேள்விகள் அனைத்தும் ‘நான்’ எனும் போதத்தை ஊற்றுக்கண்களாகக் கொண்டவை. அந்த போதம் மீது அடிவிழுந்து அது சுருண்டு கொள்ளும்போது நம் வினாக்களும் அர்த்தமிழந்து திகைத்து நிற்கின்றன. ‘தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை’ என்றோ ‘தெரிந்து கொள்ளுதல் என்பதே வெறும் மனப்பிரமை’ என்றோ தோன்றிவிடும் ஒரு நிலை இது. வாழ்நாளெல்லாம் ஆவேசத்துடன் அறிவியக்கங்களில் ஈடுபடுபவர்கள் திடீரென்று இந்நிலையை அடைந்து மெளனமாகிவிட்டிருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஆயிரக்கணக்காக நூல்களை வாசித்தவர்கள், வருடக்கணக்காக விவாதித்தவர்கள் அதுவரை செய்த அனைத்தையுமே நிராகரித்துவிட்டு அமர்ந்திருப்பார்கள். வயதினாலும் குடும்பச்சுமையாலும் உருவாகும் சலிப்பை இங்கு குறிப்பிடவில்லை. திடீரென்று ஓர் அர்த்தமின்னையை உணர்ந்து அடையும் மெளனத்தையே குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள நேரும் ஒருவகை உச்சகட்டமே கீதாமுகூர்த்தம் என்பது.

கீதை இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் ஒரு நூல் என்ற முறையில் எவரும் எப்போதும் படிக்கலாம். கீதைக்கான உரைகள் பற்பல. ஆனால் கீதாமுகூர்த்ததில் நிற்பவனே கீதையை முற்றாக உணரமுடியும். அந்தத் தருணத்துடன் தன்னை அடையாளம் காணமுடியுமென்றால் மட்டுமே கீதையை சற்றேனும் உள்வாங்கிக் கொள்ள முடியும். பிறர் கீதையினூடாக தங்கள் ஐயங்களைப் பெருக்கிக் கொள்ளலாம். தங்கள் அகங்காரங்களை மேலும் கெட்டிப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

மறுபிரசுரம், முதல்பிரசுரம் Mar 17, 2008  

 

கீதை – தொகுப்பு

தொடர்புடைய சுட்டிகள்:

கீதை இடைச்செருகலா, மூலநூலா

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

கேள்வி பதில் – 49

தோமையர் எழுதிய சுவிசேஷம்

முந்தைய கட்டுரைகே.என்.சிவராஜ பிள்ளை – போலீஸ் தமிழறிஞர்
அடுத்த கட்டுரையுவபுரஸ்கார் விருது