வற்கீஸின் அம்மா மரணம்

நான் திருவையாறில் இருந்தபோது வர்கீஸின் தொலைபேசி அழைப்பு இருந்தது. திருவையாறில் இருக்கிறேன் என்று ஒரு செய்தி மட்டும் அனுப்பினேன். காலையில் வந்திறங்கியதும் அவனைக் கூப்பிட்டேன். ”அம்மாவுக்கு ஹார்ட்டுல பிரச்சினையாகி ஜெயசேகரன் ஆஸ்பத்திரியிலே இருக்காங்க கேட்டியளா?” என்றான். ”என்ன ஆச்சு?” என்றேன். அவர்களுக்கு ஏழெட்டுவருடங்களாகவே இதய அடைப்பு உண்டு. சிறிய முதல் தாக்குதல் வந்துமிருக்கிறது. சற்று தீவிரமான நிலை என்றான்.

காலையில் கிளம்பி வர்கீஸைப்போய்ப் பார்த்தேன். ஆஸ்பத்திரியின் அவசர சிகிழ்ச்சைப்பிரிவின் வாசலில் வற்கீஸ் நின்றிருந்தான். என்னைக்கண்டதும் வந்து கைகளைப்பிடித்துக்கொண்டான். உடற்பயிற்சி செய்து வலுவேறிய கரம். ”முந்தா நேத்து ஒருமாதிரி இருக்குன்னு சொன்னாவ. பின்ன நெஞ்சுவேதனை வர ஆரம்பிச்சிட்டுது. அக்காமார் ரெண்டாளும் இங்க கூட்டிக்கிட்டு வந்தாவ. இங்க உள்ள டாக்டர் பாத்துட்டு அட்மிட் ஆகணும்னு சொன்னப்ப அம்மைக்கு அது பிடிக்கல்லை. இனிமே இங்க வந்து கிடந்தா செரிப்படாது மக்கா, வீட்டுக்குப்போவம், எனக்கு ஒண்ணுமில்லைண்ணு சொன்னாங்க. அதனால மூணு மாத்திரையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாவ. முதல் மாத்திரைய போட்டப்பமே கழுத்திலே வலி ஆரம்பிச்சிட்டுது. உடனே திரும்பவும் இங்கே கொண்டுவந்து சேத்துட்டோம்..”என்றான்

அப்போது அம்மாவுக்கு சுயநிலைவே இல்லை. நுரையீரலும் இயங்கவில்லை. செயற்கை சுவாசமும் இதயத்துடிப்பும் கொடுக்கும் கருவிகளுடன் பிணைக்கப்பட்டு செயலிழந்த உடலாகப் படுத்திருந்தார்கள். டாக்டர்கள் ‘ஒன்றும்செய்வதற்கில்லை பார்ப்போம்’ என்று மட்டும்தான் சொன்னார்களாம். திருவனந்தபுரம் கொண்டுபோனால் என்ன என்று டாக்டரிடம் கேட்டுப்பார்த்திருக்கிறான். அது முடியாது, பயணத்தைக்கூட உடல் தாங்காது என்றாராம் டாக்டர். திருவனந்தபுரம் டாக்டரும் ‘நினைவு திரும்பினால் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று சொன்னாராம்.

ஆஸ்பத்திரியே ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது எனக்கு. மனித துயரம். நான் உள்ளே நுழையும்போது இரு பதின்பருவத்துப்பெண்களை இருவர் கைத்தாங்கலாக அழைத்துச்செல்ல அவர்கள் அழுது குமுறியபடி தள்ளாடிச் சென்றார்கள். அவர்கள் கோயில்பட்டிப் பக்கமிருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப்பயணம் வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றார் வற்கீஸின் அக்கா கணவர். காவல் துறையில் இருந்து ஓய்வுபெற்றவர்.

திற்பரப்பு அருவியும் கன்யாகுமரி கடலும் வருடத்துக்கு சில பலிகளை வாங்காமல் விடுவதில்லை. அதன் பாறைகள் மிக அபாயமானவை. அபாயமான ஓர் இடம் அத்தகைய அழகுடன் இருக்கும்போது மேலும் அபாயமாக ஆகிவிடுகிறது. பயணிகளுக்கு உற்சாகம் ஏறுகிறது. சாகஸம்செய்யவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. வழுக்கினால் பாறையில் மண்டை அடிபட்டு மண்டை ஓடு திறந்துவிடும். அங்கே அமர்ந்திருக்கும்போது சில கணங்கள் அருவியின் ஆர்ப்பரிப்பைக் கேட்க முடிந்தது.

அம்மாவைச்சென்று பார்க்க அனுமதி இல்லை என்றார்கள். பொதுவாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். உள்ளூர அது அவரது மரணப்படுக்கை என்று தெரிந்து விட்டது. எண்பது வயதுக்கு மேல் இதயம் அத்தகைய அபாயங்களைத் தாங்காது.  துயரம் என ஏதும் இல்லை. மரணத்தின் முனையில் நினைவுகள் காற்றில் சருகுகள் போல பதறிப்பதறி தட்டழியும் அனுபவம் மட்டுமே எஞ்சியது. வற்கீஸ¤க்கும் அப்படித்தான் போல.

மறுநாள் மாலையில் சென்ற போது நிலைமை இன்னும் சிக்கலாகிவிட்டிருந்தது. ஆக்ஸிஜனை எடுத்துப்பார்த்திருக்கிறார்கள். கைகால்கள் பதற வலிப்பு போல வந்துவிட்டது. அப்போது வற்கீஸ் உள்ளே இருந்திருக்கிறான். ”அம்மை மூச்சுக்காக கிடந்து பரிதவிச்சதைப் பாத்தப்ப மனசு பதறிப்போச்சு…” என்றான். ஆஸ்பத்திரி வாசலில் நின்ற மரத்தில் பலநூறு பறவைகள் கூடணைந்து கூவிக்கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவன் மனதிலும் என் மனதிலும் நினைவுகள்.

”இந்த கிறிஸ்துமசுக்கு எல்லா அக்காமாருக்கும் தங்கச்சிமாருக்கும் படி குடுக்கணும்னு அம்மை சொன்னாங்க”என்றான் வற்கீஸ். அக்காமாருக்கு திருமணமாகி முப்பதுவருடமெல்லாம் தாண்டி அவர்களும் மாமியாராக ஆகிவிட்டிருந்தார்கள். நெடுநாட்களாக படி கொடுத்துவந்த வழக்கம் சில வருடங்களாக நின்று விட்டிருந்தது. ஆகவே வற்கீஸ் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டான். ”எனக்க கிட்ட இஞ்ச பைசா ஒண்ணும் இல்லை”என்று சொல்லியிருக்கிறான். அம்மா தன் சிறுசேமிப்பில் இருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்து படிகொடுத்தாகவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

படி கொடுத்த முறையை வேடிக்கையுடன் வற்கீஸ் சொன்னான். கிறிஸ்துமஸ் கேக்கும் ஐநூறு ரூபாய் வீதம் அன்பளிப்பும் கொடுக்கலாம் என்று வற்கீஸ் சொன்னபோது அம்மா ஐம்பது ரூபாய்க்குக் காய்கறியும் வாங்கிக் கொடுத்தாகவேண்டும் என்றார்கள். காய்கறியெல்லாம் இப்போது எல்லா இடத்திலும் கிடைக்கிறது, வாங்கிக்கொண்டு அவ்வளவு தூரம் போய்வருவதெல்லாம் மெனக்கேடு என்று சொன்னால் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. காய்கறி வாங்கிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றார்கள். சரி என்று காய்கறி வாங்கினால் ‘நார்த்தங்காய் வாங்கினாயா?’ என்று ·போனில் கேட்டு நார்த்தங்காய் கண்டிப்பாக வேண்டும் என்றார்கள். சாதாரண கறிகாய்கடையில் நார்த்தங்காய் கிடைக்காமல் சந்தையில் போய் வாங்க வேண்டியிருந்தது.

காய்கறிப்பையுடன் கிறிஸ்துமஸ் படியுடன் வற்கீஸ் ஒவ்வொரு சகோதரி வீடாகப்போனபோது எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. வேடிக்கை. ஆனால் அந்த கௌரவம் அக்காமாரின் வீட்டாருக்குப் பிடித்தும் இருந்தது. ”அப்ப நெனைக்கேல்ல, அம்மை இதுதான் கடைசி கிறிஸ்துமஸ்னு நெனைச்சுத்தான் சொல்லியிருக்கான்னு…” என்றான் வற்கீஸ். எனக்கும் அது வினோதமாகத்தான் இருந்தது.

இனிமேல் எதிர்பார்ப்பதற்கில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டதாகச் சொன்னார்கள். சிறுநீரகங்களும் பணியாற்றுவதை நிறுத்திவிட்டிருந்தன. வற்கீஸின் மூத்த அக்கா அழுகையும் ரத்த அழுத்தமுமாக சிரமப்பட்டு கணவரால் கொண்டுசெல்லப்பட்டாள். உள்ளே சென்று பார்க்கலாம் என்றார்கள்.

அவசரசிகிழ்ச்சை அறைக்கு உள்ளே சென்று பார்த்தோம். குளிரூட்டப்பட்ட அறை. மென்மையான இயந்திர ஒலி. சமபந்தமே இல்லாமல் நான்கு நர்ஸ¤கள் கம்யூட்டரைப்பார்த்து எதையோ கவனித்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். கட்டிலில் மெல்லிய உருவம் படுத்திருந்தது. மூச்சுக்கருவியின் அழுத்த – எதிர் அழுத்தத்தால் மூச்சு ஓடுவது போல ஒரு பிரமை தோன்றியது. கரிய வட்ட முகம், நரை மயிர். வற்கீஸின் வீட்டில் அவன் அம்மாவின் முகம் போல எவருக்கும் ஐஸ்வரியம் அமையவில்லை. முகம் என்பது வயதாகும்தோறும் அகத்தால் தீர்மானிக்கப்படுகிறது போல.

அன்று இரவு ஏதோ நேரத்தில் வற்கீஸ் ·போன்செய்தான். ”அம்மை விடியற்காலை இரண்டு மணிக்கு எறந்துடாங்க…ஊருக்குக் கொண்டு போறோம்…” பெருமூச்சுடன் செல்லை வைத்துவிடு கணிப்பொறியையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் வாழ்ந்த சிறுவயது ஊரின் நில அடையாளங்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. நீர்நிலைகள் சுருங்கி இல்லாமலாகின்றன. மரங்கள் முறிக்கப்படுகின்றன. மனிதர்கள் மறைகிறார்கள். வற்கீஸின் அம்மாவின் மரணம் என்பது என் இளமைப்பருவத்தின் ஒரு பகுதியின் மறைவுதான்.

இன்று மாலை வற்கீஸை அவன் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அருமனையில் ஒரு பெரிய மனிதன் ஆகையால் பலரும் வந்துகொண்டே இருந்தார்கள். பல சாதியினர் மதத்தினர். அம்மா பெரும்பாலானவருக்கு வேண்டியவராக இருந்திருக்கிறார். நான் அவன் கையைப்பற்றிக்கொண்டேன். கொஞ்சநேரம் கைகளைப் பிடித்தபடி இருந்தோம். என்னைப்பற்றி அங்கே வந்திருப்பவர்களுக்குச் சொன்னான்.

தோட்டத்தின் பின்பக்கம் வற்கீஸின் அப்பாவை அடக்கம்செய்த கலல்றைக்கு அருகே அம்மவையும் அடக்கம் செய்திருந்தார்கள். இரு கல்லறையையும் சேர்த்து ஒன்றாகக் கட்டப்போவதாகச் சொன்னான். அருகே அவன் குடும்பத்தின் பழைய கல்லறைகள். தரையெங்கும் ரப்பர் சருகுகள். பால் சொட்டிக்கொண்டிருந்த மூத்த ரப்பர் மரங்கள்.

ஈரம் உலராத கல்லறையின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தோம். வற்கீஸின் பெரியம்மா மகளின் மகன் ஒருவர் கூட இருந்தார். தினமலர் நிருபர் கமல செல்வராஜ் வந்திருந்தார். அவனது குடும்ப கல்லறையில் ஒன்றாக அவனுடைய பாட்டியின் கல்லறை இருந்தது. அவரை நான் பார்த்திருக்கிறேன். நான் பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்த வருடம்தான் அவர் இறந்தார். வற்கீஸின் அத்தைவீடு எங்கள் பள்ளி அருகே இருந்தது. அங்கே அந்தப்பாட்டி இருந்தாள்.

பேச்சு வாக்கில் வற்கீஸ் நானும் அவனும் படித்த நாட்களின் நினைவுகளை நோக்கிச் சென்றான். அந்தவழியாகத்தான் நாங்கள் அவன் வீட்டுக்கு வருவோம். மதியம் சாப்பிடுவோம். நான் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பேன். படித்தவை, படிக்காமலேயே சொல்லக்கூடிய பீலாக்கள். என் வரட்டுக் கௌரவம், வெற்று இலட்சியக்கனவுகள்… வற்கீஸின் தம்பி சேவியர் மிக இறுக்கமாகவே எப்போதும் இருப்பவன். அவனும் கலந்துகோண்டான். மூவருமே சிறுவர்களாக ஆகிவிடதைப்போல இருந்தது

ஒருமுறை ஆசிரியர் வகுப்பில் ‘வானவில் எந்த திசையில் தெரியும்?’ என்று கேட்டார். நான் கிழக்கு திசையில் என்றேன். வற்கீஸ் எழுந்து மேற்கு திசையில் என்றான். மீதிப்பேர் நான் சொன்னதையே அவர்களும் சொன்னார்கள். காரணம் நான் வகுப்பில் முதல் மாணவன். ஆசிரியர் மீண்டும் கேட்டபோதும் வற்கீஸ் அவன் சொன்னதையே சொன்னான்.

சூரியன் கிழக்கில் இருந்தால் மேற்கிலும் மேற்கில் இருந்தால் கிழக்கிலும் வானவில் தெரியும், ஆகவே இருவர் சொன்னதும் சரிதான் என்று சொன்ன ஆசிரியர் படிப்பாளியான மாணவனை கண்மூடித்தனமாக ஆதரித்தமைக்காக மற்ற மாணவர்களுக்கு தண்டனை கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை வற்கீஸ் உற்சாகமாக சொல்லச் சொல்ல அவனுடைய கவலை தோய்ந்த முகம் மாறி சிரிப்பு நிறைந்தது. அவன் பள்ளியில் கற்றுக்கொண்ட ஆகப்பெரிய பாடமே அதுதான் போல என்று எண்ணிக்கொண்டேன். ஆகவேதான் படிப்பு சிறப்பாக வராவிட்டாலும் அவன் தன் துறையில் சாதிக்கவும் வாழ்க்கையில் வெற்றிபெறவும் முடிந்தது.

சேவியர் அக்காலத்தில் ஒரு கல்லறை மீது அமர்ந்துகொண்டு நாங்கள் பேசுவதைப்பற்றி நினைவுகூர்ந்தான். அங்கே இன்னும் கல்லறை கட்டபப்டாத புதைகுழியின் அருகே நின்று நாங்கள் பேசியதை தூரத்தில் நின்று எவராவது பார்த்திருந்தால் அந்த இடத்தில் என்ன அத்தனை மகிழ்ச்சியான விஷயம் என்று கேட்டிருப்பார்கள். வற்கீஸ் அவன் அப்பா பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தபோது சுபாஷ் சந்திரபோஸ் கைதுசெய்யப்பட்ட தருணத்தில் கல்கத்தாவில் வெடித்த கலவரத்தில் அவர் தனியாக ராணுவ ஜீப்பில் சென்று சிக்கிக்கொண்ட அனுபவத்தை அவர் சொல்வதை விவரித்தான். ஒன்றின் மீது ஒன்றாக நினைவுகள். ஒருவர் பின் ஒருவராக இறந்து போனவர்களின் முகங்கள்…

திரும்பிவரும்போது யோசித்தேன், அப்படி அவர் கல்லறைமுன் நின்று நானும் அவனும் சிரித்துப்பேசிக் கொள்வதைத்தான் அவன் அம்மாவும் விரும்பியிருப்பார் என்று. அந்த இடத்தில் நின்று செய்ய வேண்டிய ஒரே விஷயமே அதுதான் என்று. வழக்கமாக நான் பேசிக்கோண்டிருக்கும்போது அவன் அம்மா சிரிக்கும் கண்களுடன் மெல்ல வந்து எதையாவது தின்பதற்குத் தருவார்கள். அவர்கள் கல்லறைக்குள் கிடந்தமையால் அதைச்செய்ய முடியவில்லை அவ்வளவுதான்.  

வற்கீஸின் அம்மா

வற்கீஸின் அம்மா:கடிதங்கள்

வற்கீஸின் அம்மா:மேலும் கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅச்சுப்பிழை : கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்