‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42

41. தனிநகை

flowerவிராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம்சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பொதுக்கூடங்களில்தான் அந்தியுறங்க வேண்டுமென்பது ஆணை” என்றாள். திரௌபதி திரும்பி அவளை பார்க்கவில்லை. அவள் மெல்லிய சிரிப்பொலியுடன் “எவள் எங்கு எவருடன் சென்றிருக்கிறாளென்ற கணக்கை தலைமைச்சேடி எடுக்கவேண்டுமல்லவா? அதற்கு உகந்த வழி அதுவே அன்றி, தனியறைகள்தோறும் சென்று கதவைத் தட்டவா முடியும்?” என்றாள்.

திரௌபதி அவளை நோக்காமலேயே நடந்தாள். எதையோ மிதித்து குழப்புவதுபோன்ற காலடிகளுடன் ததும்பும் தடித்த வெண்ணிற உடலை உந்தி உந்தி நடந்தாள் பிரீதை. உருண்ட முகமும் மின்னும் சிறிய கண்களும் கொண்ட பிரீதை முன்பொரு காலத்தில் அழகியெனக்கூட தோன்றியிருக்கக்கூடும். வாழ்வினூடாக ஊறி அவள் முகத்தில் தேங்கியிருந்த அறியமுடியாத நஞ்சு ஒன்று பார்த்த முதற்கணமே எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக்குவதாக இருந்தது. மூச்சிரைத்தபடி வியர்வை வாடை எழ அவள் நடந்தாள். அவள் மூச்சில் வெந்த ஊனின் கெடுமணம் இருந்தது.

“இந்த அறையில் முன்பு நான்தான் தங்கியிருந்தேன். என்னை அடுமனைக்கூடத்தின் தலைவியாக அமர்த்தியபோது இங்கிருந்து ஒழிந்து சென்றேன். அதிலிருந்து இங்கு எவரும் தங்குவதில்லை. உள்ளே பெட்டிகள்தான் இருந்தன. அரசி ஆணையிட்டதனால் இதை தூய்மை செய்யச் சொன்னேன்” என்று சொல்லி அவள் நீண்ட மூவெட்டுத் தாழ்க்கோலால் அதன் பூட்டை திறந்தாள். மும்முறை சுழற்றி உள்ளே தாழ்விலகும் ஒலியை கேட்டபின் கதவை தள்ளித்திறந்து “குனிந்து வரவேண்டும். தலை மேலே முட்டக்கூடும்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

திரௌபதி மிகவும் குனியவேண்டியிருந்தது. மிகச் சிறிய அறை. இரு கைகளையும் விரித்தால் இரு சுவர்களையும் தொடமுடியுமென்று தோன்றியது. சிறிய ஒரு சாளரம் மட்டுமே இருந்தது. கைகளை தூக்கினால் மச்சுப்பலகை முட்டியது. முழங்காலளவு உயரம் கொண்ட சிறிய மஞ்சம் ஒன்று அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மஞ்சம் அளவுக்கே இடம் எஞ்சியிருந்தது. “இங்கு ஒரு பெரிய மரப்பெட்டி உள்ளது. உங்கள் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அதை மூடி தரையில் அமர்ந்து பெட்டி மேல் ஓலைகளை வைத்து எழுதவும் செய்யலாம்” என்று பிரீதை சொன்னாள். “நீங்கள் ஓலைகளில் எழுதுவதை விரும்புவீர்களென்று அரசி என்னிடம் சொன்னார்.”

மீண்டும் அந்தச் சிரிப்பு. அது வெறும் ஒலியாகவே அவளிடமிருந்து எழுந்தது. முகத்திலும் கண்களிலும் அச்சிரிப்பு தெரியவில்லை. “மலரையோ கணையாழியையோ அனுப்புவதைவிட ஓர் ஓலையில் இரண்டு வரி எழுதி அனுப்பினால் ஆண்கள் பெரிதும் மகிழ்கிறார்கள். நூல் பயிலாதவர்களுக்குக்கூட கற்ற பெண்ணொருத்தியுடன் கூடுவது பெருமிதத்தை அளிக்கிறது” என்றாள். “அடுமனைச்சேடியரில்கூட எழுத்து தெரிந்தவளுக்கு மதிப்பு மிகுதி. இங்கே அனிதை என்று ஒருத்தி இருந்தாள். காவியம் கற்றவள் என்பார்கள். புரவிச்சூதன் ஒருவனுடன் சென்றாள். அவன் அவளை அயலூர் விடுதியில் கைவிட்டுவிட்டுச் சென்றான் என்றார்கள்.”

திரௌபதி அவளை நோக்கி திரும்பி “என்னுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே?” என்றாள். அவள் தடுமாறி “அங்கே வெளியே” என்றாள். நேருக்கு நேர் விழிநோக்கிப் பேசுவது அவளை நிலைகுலைய வைக்கிறது என்பதை திரௌபதி முன்னரே கண்டிருந்தாள். பிறரில் அவள் எழுப்பும் வெறுப்பும் கசப்பும் அவள் தனக்குச் சுற்றும் போட்டுக்கொண்டிருக்கும் அரண். “அவற்றை எடுத்துக்கொண்டு வந்து இந்த மஞ்சத்தில் வை” என்று திரௌபதி ஆணையிட்டாள். அறியாது “அவ்வாறே” என்றபின் பிரீதை சட்டென்று முகம் சிவந்து விழிகள் எரிய “சேடியர் தங்கள் பணிகளை தாங்களேதான் செய்துகொள்ளவேண்டும்” என்றாள்.

“நன்று! இப்பணிகளைச் செய்ய பிறிதொரு சேடியை அனுப்பும்படி நான் அரசியிடம் சொல்கிறேன்” என்றாள் திரௌபதி. பிரீதை தடுமாறி “இல்லை, நான் அவ்வாறு சொல்லவில்லை. இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றாள். அங்கு அவள் பிறிதொரு சேடியை நோக்கி “யாரடி? அங்கு என்ன செய்கிறாய்? இந்த மரவுரிகளையும் தலையணைகளையும் எடுத்து உள்ளே வைக்கவேண்டுமென்று உன்னிடம் பலமுறை சொல்லியிருந்தேனல்லவா? எழுதித் தந்தால்தான் செய்வீர்களோ? சவுக்கின் சுவை என்ன என்று உங்கள் தோல்களுக்கு இன்னும் தெரியவில்லை. நான் எப்போதும் இதேபோல பொறுமையாக இருக்க மாட்டேன்” என்று கூச்சலிட்டது கேட்டது.

மாநிற உடலும் நீண்ட முகமும் பெரிய கண்களும் கொண்ட சேடிப்பெண் ஒருத்தி மரவுரிகளையும் தலையணையையும் உள்ளே எடுத்துக்கொண்டு வந்து மரவுரிகளை சீராக விரித்து அவற்றில் தலையணையை வைத்தாள். திரௌபதி மரப்பெட்டிமேல் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். முதற்கணம் மிகச் சிறிதென்று தோன்றிய அவ்வறை விரிந்துகொண்டிருந்தது. அவளுக்கு மட்டுமேயான ஒரு சிறிய இடம். அலைவிரிவில் ஓர் ஓடம்போல.

மரவுரிகளை விரித்து முடித்து நிமிர்ந்து நின்ற இளம்சேடி தாழ்ந்த குரலில் “பிறிதேதாவது…?” என்றாள். திரௌபதி திரும்பிப்பார்த்து “உன் பெயரென்ன?” என்றாள். அவள் முகம் சிவந்து விழி தாழ்த்தி மெல்லிய குரலில் “சுபாஷிணி” என்றாள். “நான் சூதப்பெண். இங்குதான் பிறந்து வளர்ந்தேன்.” திரௌபதி “இசை கற்றிருக்கிறாயா?” என்று கேட்டாள். “இல்லை, நாங்கள் அடுமனையாளர்கள்” என்று அவள் சொன்னாள். “என் அன்னை இங்குதான் பணியாற்றினாள். சென்ற ஆண்டு வயிற்றுச் சூலை நோயால் உயிர் துறந்தாள். தந்தை எவரென்று அவள் என்னிடம் சொன்னதில்லை.”

திரௌபதி “உன் குரல் நன்று, நீ பாட்டு கற்றிருக்கலாம்” என்றாள். “இங்கு அதற்கெல்லாம் பொழுதே இல்லை” என்றாள் சுபாஷிணி. அவள் செல்லலாம் என திரௌபதி விழிகாட்டி சாளரத்தை நோக்கினாள். அவள் அங்கேயே நிற்பதை விழிமுனையால் கண்டு புருவத்தை தூக்கினாள். அவள் தயங்கி “ஒன்று சொல்லவா?” என்றாள். “சொல்” என்றாள் திரௌபதி புன்னகையுடன். “தாங்கள் சூதப்பெண் அல்ல, ஷத்ரியப்பெண். சூதப்பெண்களுக்கு இவ்வாறு ஆணையிட முடியாது. தாங்கள் எங்கோ அரசொன்றை ஆண்டவர். அரியணை அமர்ந்தவர். அதை இங்கு அனைவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“நன்று” என்று திரௌபதி புன்னகைத்தாள். “தாங்கள் யாரென்று நான் கேட்கப்போவதில்லை. கேட்கக்கூடாதென்று பேரரசியின் ஆணை என்றார்கள்” என்று சுபாஷிணி சொன்னாள். “ஆனால்…” என்றபின் சொல்நிறுத்தி திரும்பிச் செல்ல முயன்றாள். “சொல், என்ன?” என்றாள் திரௌபதி. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்! என்ன சொல்ல வந்தாய்?” என்றாள் திரௌபதி. “தாங்கள் ஏதோ மாற்றுருகொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். மாற்றுருவேயானாலும் எங்கள் கூட்டத்தில் ஒருவர் இவ்வண்ணம் பேரரசியரின் தோற்றத்துடனும் நிமிர்வுடனும் இருப்பது மிகப்பெரிய உவகையளிக்கிறது” என்றாள்.

“ஏன்?” என்றாள் திரௌபதி. நாணப் புன்னகையுடன் “தனியறையில் அமர்ந்து பகற்கனவு காணும்போது தங்களைப்போல நானும் ஆவதாக கற்பனை செய்துகொள்ளலாம் அல்லவா?” என்று அவள் சொன்னாள். அவ்விளமையின் தூய சிரிப்பு திரௌபதியை மலரவைத்தது. “அருகே வா!” என்றாள். அவள் கால் உழற்றி தயங்கி சிறுமியைப்போல அருகே சென்றதும் அவள் கைகளைப்பற்றி இழுத்து அருகணைத்து “உனக்கு என்ன வயதாகிறது?” என்றாள் திரௌபதி. “பதினாறு” என்றாள் சுபாஷிணி.

“கனவுகள் காணும் வயது. கனவு காண்பதில் பிழையொன்றுமில்லை. குற்றவுணர்வோ நாணமோ கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. உன் வயதில் நானும் மிகப்பெரிய கனவுகளைக் கண்டேன். இன்று எண்ணுகையில் அக்கனவுகளுக்கு நடைமுறைப் பொருளென்று ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அக்கனவுகள் அளித்த இன்பம் மட்டுமே அவற்றின் பயன்” என்றாள் திரௌபதி. அவள் “தாங்கள் கண்ட கனவுகள் எதுவும் நிறைவேறவில்லையா?” என்றாள்.

திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை” என்றாள்.

“நீங்கள் நூல்கற்ற விறலியைப்போல் பேசுகிறீர்கள்” என்றாள் சுபாஷிணி. “நான் நூல்கற்றிருக்கிறேன்” என்றாள் திரௌபதி. வெளியே பிரீதை “ஏய் சுண்டெலி, அங்கு என்ன செய்கிறாய்? உன்னிடம் நான் சொன்னதென்ன?” என்று குரலெழுப்பினாள். “அய்யோ… நான் செல்லவேண்டும்” என்ற சுபாஷிணி புன்னகையுடன் “சுண்டெலி என்பது நான்தான். என் முகம் கூரியது என்கிறார்கள்” என்றாள். சிறிய வாயிலுக்கப்பால் பிரீதை தோன்றினாள். திரௌபதியின் கைகளை உதறி பின்னால் நகர்ந்த சுபாஷிணி “நான் இவர்களிடம்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க அவள் “உன் தோலை உரிக்காமல் இன்று விடப்போவதில்லை. ஒரு நாழிகையாக ஒரு வேலையை செய்கிறாயா? வா, வாடி” என்றாள்.

திரௌபதி பிரீதையிடம் “உள்ளே வா” என்றாள். “யாரிடம் சொல்கிறாய்? என்னிடமா?” என்றாள் அவள். “உன்னிடம்தான். உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் முகம் சிவக்க மூச்சு சீற “நான் இங்கே சேடியர்தலைவி… நான்…” என பேசத்தொடங்க “உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் கண்ணறியா சரடொன்றால் இழுக்கப்பட்டதுபோல உள்ளே வந்ததும் “உன்னிடம் ஒரு சொல் தனியாக நான் சொல்லவேண்டும்” என்றாள் திரௌபதி. “என்ன சொல்லப்போகிறாய்?” என்று பிரீதை படபடப்புடன் கேட்டாள். அவள் உடலே சிவந்து வியர்வை பொடித்தது. “என்ன சொல்லப்போகிறாய்? நான் யார் என்று அறிவாயா?” என்றாள்.

“அறிந்த பின்தான் இதை சொல்கிறேன். இனி எனக்கெதிராகவோ எனக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவோ ஓர் எண்ணம் உன் உள்ளத்தில் எழுந்ததென்று நானறிந்தால் உன் கழுத்தில் குறுவாளைப் பாய்ச்ச தயங்கமாட்டேன். என்னால் அது மிக எளிதாக இயலும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. பிரீதை இரு கைகளும் தளர்ந்து தொடைமேல் உரசி விழ தொங்கிய முலைச்சுமைகள் எழுந்தமைய “நான் இங்கு…” என்று தடுமாறினாள். “இனி இந்த அகத்தளம் முழுவதும் என் ஆணைகள் மட்டுமே செல்லும். மறுசொல் எடுக்கவோ எண்ணவோ எவருக்கும் ஒப்புதல் இல்லை. அவ்வாறு என் சொல் கடந்து செல்லும் எவரும் இங்கு உயிர் வாழமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.

அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “ஏனெனில் ஐந்து கந்தர்வர்களால் காக்கப்படும் பெண் நான். உனது அத்தனை கரவுச் செயல்களையும் நன்கறிந்தவள். இனி அறியவேண்டுவதும் ஏதேனும் இருந்தால் ஓரிரவுக்குள் என்னால் அறியவும் இயலும்” என்றாள் திரௌபதி. அவள் கால் தளர்ந்து கைநீட்டி சுவரை பற்றிக்கொண்டு “கரவு என்று எதை சொல்கிறீர்கள்? நான் ஏதுமறியேன்” என்றாள். திரௌபதி “இவ்வரண்மனையிலிருந்து கீசகருக்கு செய்திகளை கொண்டு செல்லும் சிலரில் ஒருத்தி நீ. இங்கு நான் வந்த முதல்நாள் நானும் அரசியும் தனித்திருந்து பேசுகையில் அவ்வறைக்கு வெளியே நீ நின்றிருந்தாய். அரசி பேசுவது உனக்கு காதில் விழவில்லை. ஆனால் அரசியிடம் நான் எத்தனை பொழுது பேசினேன் என்பதை உடனடியாக கீசகரிடம் சென்று சொன்னாய்” என்றாள்.

கையசைத்து முகம் பதறி “இல்லை…” என்று சொல்லத் தொடங்கிய பிரீதை “நான் என்ன செய்வேன்? சொல்லும்படி எனக்கு ஆணையிட்டால் அதை செய்துதானே ஆகவேண்டும்? கீசகரின் ஆணையை மீறும் ஆற்றல் கொண்ட எவரும் இந்த நகரில் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், நீ சொல்லக்கூடாதென்று நான் ஆணையிடவில்லை. நீ சொல்வது எனக்குத் தெரியும் என்று மட்டும்தான் சொன்னேன். செல்க!” என்றாள். அவள் கைநீட்டி “நான் எளியவள். நினைவறிந்த நாள்முதலாய் இங்கு அண்டிப்பிழைப்பவள். எவருக்கும் உளமறிந்து எந்தத் தீங்கும் செய்ததில்லை. வாழ்வதின் பொருட்டு எதையோ செய்கிறேன்” என்றாள். “ஆம், எந்தத் தீங்கும் செய்யாமலிருக்கும் வரை உனக்கும் எத்தீங்கும் நிகழாது” என்று திரௌபதி சொன்னாள். கைகூப்பியபின் கண்ணீரைத் துடைத்தபடி பிரீதை வெளியேறினாள்.

சுபாஷிணி அவள் செல்வதைப் பார்த்தபின் நெஞ்சில் கை வைத்து “ஐயோ” என்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “அவள் யார் தெரியுமா? அவளுக்கு நாவில் நஞ்சு. கண்களில் அதைவிடக் கொடிய நஞ்சு. இங்கு அவளை அஞ்சாத பெண்கள் எவருமே இல்லை” என்றாள். “இனி அஞ்ச வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், நான் உங்கள் கண்களில் பட்டுவிட்டேன். இனி எதையும் நான் அஞ்சவேண்டியதில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். பிறகு தாழ்ந்த குரலில் “மெய்யாகவா?” என்றாள்.

“என்ன?” என்றாள் திரௌபதி. “ஐந்து கந்தர்வர்கள் இருக்கிறார்களா?” என்றாள். “ஆம், ஐந்துபேர். நான் ஐந்து கந்தர்வர்களை மணந்தவள்” என்றாள். அவள் மேலும் குரல்தாழ “எங்கிருக்கிறார்கள்?” என்றாள். கண்களில் சிரிப்புடன் “இங்கு” என்றாள் திரௌபதி. அவள் கழுத்திலும் தோளிலும் மெய்ப்பு எழுந்தது. அழுவதுபோன்ற குரலில் “இங்கென்றால்…” என்றாள். “இந்த அறைக்குள்” என்றாள் திரௌபதி. “இந்த அறைக்குள்ளா?” என்று அவள் அறியாது பின்னடைந்தாள். “அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் உன்னை பார்ப்பார்கள். உன்னால் அவர்களை பார்க்க இயலாது” என்றாள் திரௌபதி.

அவள் நீள்மூச்சுவிட்டாள். பிறகு “பொய்தானே?” என்றாள். “மெய்” என்று திரௌபதி சொன்னாள். “நான் யானைமேல் ஏறியதை நீ சாளரத்தின் அருகே நின்று பார்த்தாய் அல்லவா?” அவள் “அய்யோ, இல்லை” என்றாள். “நீ ஒரு தூணை பற்றிக்கொண்டு நின்று பார்த்தாய். நான் பிரீதையுடன் வரும்போது எங்களுக்குப் பின்னால் வந்தாய். வரும்போது ஓசை கேட்காமலிருக்க சிலம்புகளைக் கழற்றி மடியில் கட்டிக்கொண்டாய். இப்போது அவை மடியில் உள்ளன. வெண்கலச் சிலம்புகள். உன் அன்னைக்குரியவை.”

அவள் “அய்யோ!’ என கன்னத்தில் கைவைத்து வியந்தாள். மடியில் இருந்து சிலம்புகளை எடுத்துக்காட்டி “என் அன்னையிடமிருந்த ஒரே அணி இதுதான். அன்னை இறக்கும்போது இதை எனக்கு அளித்தாள்” என்றாள். பித்தளையாலான பழைய சிலம்பின் செதுக்குகளில் களிம்பு படிந்திருந்தது. திரௌபதி “உனக்கு நேர்பின்னால் என் கந்தர்வன் ஒருவன் வந்துகொண்டிருந்தான்” என்றாள். “அவன் பெயர் என்ன?” என்றாள் சுபாஷிணி. “ஃபால்குனன். பெண்களை விரும்புபவன்” என்றாள் திரௌபதி. “யானைமேல் எப்படி ஏறினீர்கள்?” என்றாள். “விருகோதரன் என்ற கந்தர்வனின் ஆணைக்கு யானை பணிந்தது” என்றாள்.

“புரவிகளுக்கு?” என்றாள் சுபாஷிணி “புரவிகளை மாத்ரன் என்ற கந்தர்வனைக் கொண்டு ஆள்கிறேன்” என்றாள் திரௌபதி. அவள் பெருமூச்சுவிட்டாள். “வருவது உரைக்க நேமிகன் என்னும் கந்தர்வன் உதவுவான். நான் விரும்பிய நூலில் உள்ள வரிகளை எடுத்து அளிப்பவன் யமன் என்னும் கந்தர்வன்.” அவள் “உங்கள் ஆணைப்படி அவர்கள் நடப்பார்களா?” என்றாள். “ஆம், ஆணையிடவே வேண்டியதில்லை. எண்ணினால் போதும். அதை நிகழ்த்துவார்கள்.”

சில கணங்களுக்குப் பிறகு “அப்படியென்றால் உங்களை அவர்கள் ஏன் ஒரு பேரரசியென்று ஆக்கக்கூடாது?” என்று சுபாஷிணி கேட்டாள். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியென்றே அவர்களால் என்னை ஆக்க முடியும். அதை நான் இப்போது விழையவில்லை” என்று திரௌபதி சொன்னாள். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றுவிட்டு “நீங்கள் மானுடப்பெண்ணே அல்ல. நீங்களும் ஒரு கந்தர்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது” என்றாள். திரௌபதி வெறுமனே சிரித்தாள். அவள் நெஞ்சில் கைவைத்து “சிரிக்கையில் மிக அண்மையில் வந்துவிட்டீர்கள். உங்களால் இப்படி சிரிக்க முடியுமென்றே என்னால் எண்ணமுடியவில்லை. கொற்றவைபோல தோன்றினீர்கள். சிரிக்கையில் திருமகள்போல ஆகிவிட்டீர்கள்” என்றாள்.

திரௌபதி புன்னகைத்து “உன்னிடம் எப்போதும் சிரித்துதான் பேசுவேன், சரியா?” என்றாள். “அய்யோ… நெடுநேரமாயிற்று, என்னை தேடுவார்கள். நான் வருகிறேன். பணிகள் உள்ளன” என்று சுபாஷிணி வெளியே சென்றாள்.

flowerஅரசியின் அறையிலிருந்து திரௌபதி நள்ளிரவில்தான் தன் அறைக்கு திரும்பிவருவது வழக்கம். அந்த அறை அவளுக்கு மிக அணுக்கமானதாக ஆகிவிட்டிருந்தது. அதற்குள் தனிமையில் அரையிருளில் சாளரம் வழியாகத் தெரியும் விண்மீன்களை நோக்கியபடி அவள் விழித்திருப்பாள். அறியாது துயிலில் ஆழ்கையில் கனவுக்குள் எப்போதும் ஒரு விண்மீனாவது எஞ்சியிருக்கும். அந்த அறை சிறிதாக இருப்பதனாலேயே அத்தனை அணுக்கம் கொள்கிறது என்று தோன்றியது. அவள் அணிந்த ஆடைபோன்றிருந்தது அது. கரவுத்தோற்றம் போல.

புலரியில் எழுந்து நீராடி ஆடையணிந்து அரசியின் அறைவாயிலை அடைவாள்.  அரசி துயிலெழுந்து அணிச்சேடியருக்காக காத்திருக்கும் பொழுது அது. அவளைக் கண்டதும் அரசி உடல் எளிதாகி பெருமூச்சுவிடுவாள். “வந்துவிட்டாயா?” என்பதுதான் எப்போதும் அவள் கேட்கும் முதல் வினா. திரௌபதி புன்னகைத்து “நன்றாகத் துயின்றீர்களா?” என்று கேட்பாள். “ஆம், நான் எப்போதுமே துயில்கிறேன். பகலில் சற்று ஓய்வெடுப்பதற்குக்கூட என்னால் முடிவதில்லை” என்று அரசி சொல்வாள்.

பின் எப்போதுமுள்ள அந்த வினா “நீ ஏனடி என்னுடன் இரவு தங்குவதில்லை? காவல்பெண்டு என்றால் இரவுதானே உடனிருக்கவேண்டும்?” அவள் புன்னகையுடன் “நான் என் கந்தர்வர்களை காணும்பொழுது இரவுதானே?” என்பாள். “நீ விளையாடுகிறாயா என்றே தெரியவில்லை” என்று அரசி சலிப்புடன் சொல்வாள். “இங்கு நான் உங்களுக்கு அமைத்துள்ள காவலர்கள் என்னால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அவர்களை நீங்கள் என்னைப்போலவே நம்பலாம்” என்பாள் திரௌபதி. “இந்த அரண்மனையில் எவரையுமே நம்பமாட்டேன்” என்பாள் சுதேஷ்ணை.

ஆனால் பகலெல்லாம் நீளும் தொடர் அலுவல்களில் இருந்து முழுமையாக தன்னை விலக்கிக்கொள்ளும் ஒரு தருணம் அவளுக்கு வேண்டியிருந்தது. அவள் அரசியுடன் அவை அமரும்போதும் ஆலயங்களுக்குச் செல்லும்போதும் குடிக்கூடல்களில் நின்றிருக்கும்போதும் அரசியருகே வாளேந்தி நின்றிருந்தாள். அரசிக்குரிய நேரடிச் சிற்றேவல்களை செய்தாள். அரசியின் காவல்பணிகளை ஒருங்கிணைத்தாள். அவற்றைவிட முதன்மையாக ஓயாமல் புலம்பிக்கொண்டே இருந்த சுதேஷ்ணையின் சொற்களுக்கு செவியளித்துக்கொண்டே இருந்தாள். திரும்பத்திரும்ப கேட்டவை என்றாலும் அவளால் உளமளிக்காமலிருக்க இயலவில்லை. அவள் உளமளிக்கிறாள் என்பதனாலேயே மீண்டும் விரித்துரைத்தாள் சுதேஷ்ணை. “நான் அரசி அல்ல. கைவிடப்பட்ட அன்னை. எனக்கு எவருமே இல்லை” என்று அவள் திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு சொல்லும்போது கண்களில் நீர்ப்படலம் வந்து ஒளிரத்தொடங்கிவிடும்.

அவள் மக்கள் இருவருமே அவள் சொல்வனவற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. உத்தரை நீர்த்தாமரைபோல ஒளியுடன் ததும்பிக்கொண்டிருந்தாள். ஆகவே அன்னையின் எளிய சொற்களைக்கூட எரிச்சலுடன்தான் எதிர்கொண்டாள். சினந்து கூச்சலிட்டாள். தன் தனிமைக்குள் அவள் அன்னையை விடவேயில்லை. உத்தரன் ஏற்கனவே அனைத்தையும் உணர்ந்து கனிந்தவனாக தோற்றம் சூடியிருந்தான். அன்னை பேசத்தொடங்கும்போதே குழவியின் குதலைப்பேச்சை கேட்கும் தந்தையின் முகத்தை சூடிக்கொண்டான். எளிய நகையாட்டுடனும் இனிய அணைப்புடனும் அவள் சொல்வதை கேட்டபின் அதை அக்கணமே தவிர்த்துவிட்டுச் சென்றான். அரசி அரசரை சந்திப்பதே மிக அரிதாக இருந்தது. ஆகவே அவள் எப்போதும் திரௌபதியிடம்தான் பேசிக்கொண்டே இருந்தாள்.

“அந்த ஆணிலியிடம் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது, சைரந்திரி. என்னால் அது என்ன என்று சொல்லக்கூடவில்லை. அவளை தொலைவில் பார்க்கையில் நிமிர்வுள்ள ஆண்மகன் என்றே தோன்றுகிறது. அணுகிவருந்தோறும் பெண் என்றாகி பேரழகியாக மாறி நிற்கிறாள். அவள் நடனமாடுவதை ஒருநாள் அவளறியாமல் நோக்கினேன். என்னதான் கற்பிக்கிறாள் என்று பார்க்கவேண்டுமே? என்னை அழைத்துச் செல் என்று உத்தரையின் அணிச்சேடியிடம் சொன்னேன். பக்கத்து அறையிலிருந்து சாளரம் வழியாக நோக்கினேன். சொல்லாமலிருக்க முடியவில்லை. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். கேகயத்தில் வாழ்ந்த என் கன்னிநாட்களுக்கே சென்றுவிட்டேன். என் உளம்நிறைந்த ஆண் ஒருவனுடன் இளங்காட்டில் நடனமிட்டுக்கொண்டிருந்தேன்.”

நீள்மூச்சுடன் “ஆம், எனக்கு அவ்வண்ணம் ஆண்கள் இருந்தனர். நானும் எத்தனை கதைகளை கேட்டுவளர்ந்தவள்! அவனுக்கு முகமோ உடலோ இல்லை. அவன் இறுதிவரை ஓர் உடலென என் முன் வரவேயில்லை. ஆனால் ஒருபோதும் என்னுள் இருந்து அவன் விலகியதுமில்லை” என்றாள் சுதேஷ்ணை. “இந்த ஆணிலி அக்கனவுகளை எழுப்புகிறாள். தன்னைச் சூழ்ந்திருந்த அனைத்தையும் உடன் நடனமிடச்செய்கிறாள். மானுடர் மட்டுமல்ல, தூண்களும்கூட அவளுடன் ஆடுவதை கண்டேன். அவ்வாறு ஆட எளிய மானுடரால் இயலாது. அவள் உடல் புல்நுனியில் நின்றிருக்கும் பனித்துளியில் வானம் என நிலைகொண்டு பெருகியிருக்கிறது என்று ஒரு விறலி என்னிடம் சொன்னாள். மெய்.”

“அவள் எதை கற்பிக்கிறாள் என்று நான் கேட்டேன். அதற்கு இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும்தான் என்கிறாள் உத்தரை. சினம்கொண்டு இவ்வுலகிலுள்ள அனைத்தையும் என்றால் அரசு சூழ்தலையுமா என்று நான் கேட்டேன். ஆம் அன்னையே அதையும்தான் என்றாள். அது மெய்யென்று நானே தெரிந்துகொண்டேன். உத்தரை புரவியேறுவதும் யானையேறுவதும் முழுமையாக மாறிவிட்டன. முன்பெல்லாம் இருவர் புரவிக்கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொள்ள இருமுறை துள்ளி மூன்றாம்முறை கால்தூக்கி வைப்பாள். சென்ற நாளில் பார்த்தேன், பட்டாம்பூச்சி எழுந்து மலர்மேல் அமர்வதுபோல புரவிஏறினாள். யானைமேல் அமர்ந்திருக்கையில் முகிலில் ஊர்பவள் போலிருக்கிறாள்.”

“அவள் வாளேந்திச் சுழற்றுவதைப்பற்றி சேடி சொன்னாள் என்று சென்று பார்த்தேன். வாள் அவள் கையில் வெள்ளிமின்னல்போல ஒளிச்சுழிபோல வெண்ணிறமலர்போல இருந்தது. என்னால் விழிகளை நம்பவே முடியவில்லை. ஒற்றைக்கையால் நாணிழுத்து மூன்று அம்புகளை எடுத்துத் தொடுத்து மூன்று இலக்குகள்மேல் எய்தாள். கந்தர்வர்கள் எவரேனும் அவளுருவில் அங்கு வந்துவிட்டார்களோ என்றே ஐயுற்றேன். அவ்வித்தைகளை அவளுக்கு பிருகந்நளை எங்கே கற்றுக்கொடுத்தாள் என்று கேட்டேன். விந்தை, அவள் நடனமன்றி எதையுமே கற்றுக்கொடுக்கவில்லை. நடனத்தினூடாக இவையனைத்தையும் இவள் கற்றுக்கொண்டிருக்கிறாள்.”

“அவள் நிற்பும் நோக்கும் மாறிவிட்டன. தோள்கள் நிமிர்ந்து இடை நேராக அசைய இட்டகாலடிமேல் எடுத்தகாலை வைத்து நடக்கிறாள். ஆழ்ந்த குரலில் ஆணையிடுகிறாள். சொற்கள் ஒவ்வொன்றும் மும்முறை எண்ணி எடுத்தவைபோல் உள்ளன” என்றாள் சுதேஷ்ணை. “அது நல்லதுதானே? அவள் பேரரசியாவாள் என்றல்லவா நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்?” என்றாள் திரௌபதி. “நிமித்திகர் சொல்லவில்லை. சோலைக்கு வந்துள்ள அருகநெறிக் கணியர் சொன்னார். அதுதான் என் நம்பிக்கை. பேரரசர்களின் மைந்தர்கள் எவருக்கேனும் மகள்கொடை கேட்டு வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். இவள் செய்வதென்ன? இந்த ஆணிலியிடம்…”

திரௌபதி “ஆணிலிதானே?” என்று புன்னகையுடன் சொன்னாள். “அதுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றாள் சுதேஷ்ணை. “ஆனால் அதைவிட நான் அஞ்சுவது அந்த அரைமுனிவனை. அவன் யார்? முனிவன்போல மாற்றுருகொண்டவன். அறிஞன். ஆனால் அவன் கூர்வாளை பட்டில் சுற்றிவைத்திருப்பதைப்போலத் தோன்றுகிறான். வந்த முதல்கணமே அவன் கீசகனை வென்றதை நீ பார்த்தாய் அல்லவா? கீசகனைப்போன்ற அரசியல்சூழ்ச்சி தேர்ந்தவனே அவனை தன் அணுக்கனாக வைத்திருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்டவன்? நூல் தேர்ந்தவன் என்கிறார்கள். அவன் கற்ற நூல்களில் சூது கொடிய பிழை என்று இல்லையா என்ன? கீசகனுக்கு அரசியல் அறிவிக்காத பொழுதெல்லாம் அரசருடன் அகத்தளத்தில் அமர்ந்து சூதாடிக்கொண்டிருக்கிறான்.”

“அரசர் இப்போது பெண்களை மறந்துவிட்டார். குடியும் கூட குறைந்துவிட்டது. எழுந்ததுமே முதல் வினா குங்கன் எங்கே என்றுதான். குங்கன் கீசகனுடன் சென்றிருக்கிறான் என்றால் பதைபதைப்புடன் உலவியபடி அடிக்கொருமுறை வருகிறானா என்று பார்க்கிறார். வந்ததுமே காதலியைக் கண்ட இளையோன்போல கண்கள் சிரிக்க பாய்ந்துசெல்கிறார். தழுவிக்கொள்கிறார். பின்னர் ஒரு கணமும் பிந்துவதில்லை. சூதுக்களம் பரப்பியாகவேண்டும். அமர்ந்து பகடையுருட்டத் தொடங்கவேண்டும். உயிர்காக்கும் மருந்தை அள்ளி அருந்துவதுபோல. தெய்வங்களுக்கு பூசெய்கை இயற்றுவதுபோல.”

“அவன் உண்மையில் பகடையென வைத்தாடுவது அவரைத்தான். இன்று அவன் என்ன சொன்னாலும் அவர் செய்வார் என்ற நிலை. அதன் மாயம் என்ன என்று நான் ஒற்றர்களிடம் கேட்டேன். அரசருக்கு ஏன் இன்றுவரை சூதில் பித்து எழவில்லை என்றால் அவர் வெல்வது மிக அரிதென்பதனால்தான். அவரால் உளம்நிறுத்த முடியாது. தொடர்ச்சி பேணமுடியாது. குடியால் நனைந்து ஊறிய சித்தம். அதை நீருக்குள் மூழ்கி நுரையெழுப்பும் பெருவாய்த் தவளை என்று அவைச்சூதர் காமர் சொன்னார் ஒருமுறை. அவனுடன் ஆடத்தொடங்கிய அன்றே ஒருமுறை அவர் வென்றார். அது அவன் விட்டுக்கொடுத்து வென்றதும் அல்ல. மிகத் தற்செயலாக கூரிய நகர்வொன்றை அவர் நடத்தினார். அத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டான் அவன். அவரை வெல்லவிட்டான். தன்னால் மிகக் கூரிய நகர்வை நடத்த முடியும் என அவரை நம்பவைத்தான். பற்றிக்கொண்டுவிட்டார்.”

“அதன்பின் வெற்றி எப்போதும் அவர் அருகே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறான். எளிதில் அதை அளிப்பதில்லை. ஆனால் அது கையெட்டினால் தொட்டுவிடக்கூடியதென்றும் காட்டிக்கொண்டிருக்கிறான். பறவைகளின் ஆடல் அது. அருகே நின்றிருக்கும். பற்ற முயன்றால் பறக்கும். விழி விலக்கினால் வந்து தோளில் அமரும். பெண்களின் வித்தையும் அதுதானே? அவரை அவன் பித்தனாக்கி தன் ஆட்டக்களத்தில் நிறுத்தியிருக்கிறான்” என்ற சுதேஷ்ணை பெருமூச்சுடன் “நான் உத்தரனிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் இதையெல்லாம். அவன் சொன்னான் பிருகந்நளையை அவன் பொறுப்பேற்று நோக்கிக்கொள்வதாக” என்றாள்.

“யார்?” என்றாள் திரௌபதி. அதிலிருந்த நகைப்பை உணர்ந்த அரசி “உத்தரனால் இதையெல்லாம் செய்ய முடியும். சிறந்த ஒற்றன் வழியாக அவன் பிருகந்நளையை வேவுபார்த்து அவளுடைய கரவு என்ன என்பதை நோக்கி என்னிடம் சொல்வான். அவள் மாற்றுருகொண்டு வந்தவளா? தீயதெய்வங்கள் எவற்றையேனும் வழிபட்டு உடன்கொண்டிருக்கிறாளா? அதை அறியாமல் எனக்கு ஆறுதல் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், அதை உத்தரர் அறிந்து சொல்லக்கூடும்” என்றாள். “அதன்பின்னர்தான் குங்கனையும் வேவுபார்க்கவேண்டும்” என்றாள் அரசி.

ஒவ்வொருநாளும் சலித்து களைத்து அவள் அந்த அறைக்குள் திரும்பினாள். உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்டு ஆடைகளை கழற்றத் தொடங்கும்போது நிகழ்ந்த அனைத்தும் மீண்டும் அவள் உள்ளத்தில் ஓடத்தொடங்கும். புன்னகை வந்து இதழ்களில் அமையும். பின்னர் அவ்வறைக்குள் எப்போதும் அப்புன்னகை வந்தது. அறைக்குள் அப்புன்னகையை விட்டுவிட்டு காலையில் கிளம்பிச்சென்றாள். அதன் கதவை திறக்கையில் அப்புன்னகை தாவி வந்து அவளை தழுவிக்கொண்டது.

முந்தைய கட்டுரைபெரியசாமி தூரன்
அடுத்த கட்டுரைபச்சைக்கனவு – புகைப்படங்கள் 3