அந்திமம் -கடலூர் சீனு

old

இனிய ஜெயம்,

நேற்று இரவு வழமை போல மொட்டைமாடியில் அமர்ந்து வெண்முரசு அப்டேட் ஆகும் தருணத்துக்காக்க காத்திருந்தேன். மின்சாரம் வெட்டு. நிலவுண்டு ஒளிரும் மேகம் போர்த்திய இரவு வானம். மிக மிக மெல்லிய, இளம்பெண்களின் மேலுதட்டு வியர்வைப்பொடிப்பு மழைத்துளிகள். காற்றின்றி உறைந்த தென்னைகளின், நிழல்வெட்டு தெரு வீட்டு வடிவங்களின் உறக்கம்.

தெரு முனையில் நாயின் ஊளை. உள்ளே ஒரு புலன் அதன் அபயம் அபயம் என்ற விளியை உணர சென்று பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில்,முதுமை எய்தி, செவியும், விழியும், மோப்பமும் கைவிட்டு,  மரணம் வேண்டி காத்துக் கிடக்கும் ஒற்றைக் கண் பிளாக்கி நாயை, பக்கத்து தெரு நாய்கள் இரண்டு அதன் குரல்வளையை கவ்வி தரதரவென எங்கோ இழுத்துச் சென்று கொண்டு இருந்தது.

பிளாக்கி பிறந்த சில வாரங்களில் அதன் சகோதரனும் தாயும் இறந்து விட்டது. அப்போது எங்கள் வீட்டுக்கு காம்பௌண்ட் சுவர் கிடையாது. வராண்டாவுக்கு வலது புறம் ஜன்னலுக்கு கீழே தளத்தின் அடிவாரத்தில், பெருச்சாளி தோண்டிய பெரிய போந்து உண்டு. அடைத்து வைத்திருந்த அதை மண்பறித்து நீக்கி பிளாக்கி அம்மா அவனை அங்கே ஈன்றாள்.

அம்மா பிளாக்கிக்கு அள்ளி அள்ளி வைப்பார்கள். தாயில்லா பிள்ளை இல்லையா. நல்ல எருமைக் கண்ணுக்குட்டியின் வளத்தி.  நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமான யாரையும் வீட்டை கடக்க விடாது. அதில் ஒருவன் கையில் கிடைத்ததைக் கொண்டு பிளாக்கியை தாக்க அதன் விழிகளில் ஒன்று பறி போனது. அண்ணன் தனது விழிகளில் ஒன்றில் பார்வை குறைந்த போது, பிளாக்கியுடன் மேலும் சிநேகம் கொண்டார். இவர் அதனிடம் ஏதாவது பேசுவார். அது மூசு மூசு என்று அதன் பாஷயில் வாலை குழைத்து குழைத்து எதோ பேசும். அவர் தெரு கடக்கும் வரை அவர் பின்னால் நடக்கும். கொஞ்சம் சோப்லாங்கி காலபைரவர் என எண்ணிக் கொள்வேன்.

கற்களை வீசி துரத்தி பிளாக்கியை விடுவித்தேன். எழுத்து இருள் உலகில் தடுமாறி என் கால்களில் முட்டிக் கொண்டு வாசனை பிடித்து, வால் குழைத்து, உடல் பதறி, தாள இயலா மெல்லிய கேவல் அழுகை ஒன்றினை எழுப்பியது. தலையை தடவி சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். மாடிக்கு ஏறி இறங்கியது, எங்கெங்கோ வாசனை பிடித்தது. மூன்றடி உயர காம்பௌண்டு சுவரை தடுமாறி ஏறி அந்தப் பக்கம் விழுந்து, வீட்டு சுற்றை வாசனை பிடித்து சுற்றி வந்தது.

அது பிறந்த இடத்தை தேர்ந்து படுத்துக்கொண்டது. விழிகளில் கண்ணீர்.

இன்று அபிலாஷ் சந்திரன் தளத்தில் இந்த கவிதையைக் கண்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்களுமான கவிதை. என் பிளாக்கிக்கான கவிதை. எனது இன்றைய நாளின் கவிதை.

ஒரு சுட்டெரிக்கும் மதியப்பொழுதில் வீடு திரும்பும் அவன்

எங்கும் எங்கும் அம்மாவைத் தேடுகிறான்.
அவள் அடுக்களையில் இல்லை, புழக்கடையில்
இல்லை, அவள் எங்குமே இல்லை,

அவன் தேடினான், தேடினான், கடும் பதற்றத்தால் பீடிக்கப்பட்டான்.
கட்டிலடியில் தேடினான், அங்கு அவன் பழைய ஷூக்களையும் அழுக்குருண்டைகளையும் கண்டான், அம்மாவை அல்ல.
அம்மா என அலறியபடி வீட்டை விட்டு ஓடினான்.

எங்கிருக்கிறாய்? நான் வீட்டுக்கு வந்து விட்டேன். எனக்கு பசிக்கிறது!
ஆனால் பதில் இல்லை, வெயில் சுடரும் பாழடைந்த தெருவில்
ஒரு எதிரொலி கூட இல்லை. திடீரென அவனுக்கு நினைவு வந்தது
தனக்கு வயது அறுபத்து ஒன்று என

மேலும் தனக்கு நாற்பது வருடங்களாய் அம்மா இல்லை என.

(Uncollected Poems and Prose: R.K Ramanujan; ed. Molly Daniels-Ramanujan and Keith Harrison, Oxford India Paperbacks)

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைசிறுகதைப் போட்டி
அடுத்த கட்டுரைஇனங்களும் மரபணுவும்