ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்

t_janakiraman_2

தி.ஜானகிராமன் விக்கி

இனிய ஜெயம்,

உங்கள் மேல் எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. நீங்கள் அறிந்ததுதான். ஜெமோ அசோகமித்ரனை விதந்தோத ஏதேனும் எழுதப் புகுந்தால் சுந்தர ராமசாமியை மட்டம் தட்டுவார். அப்படித்தான் சி நே சி ம கட்டுசிலரையில் ஜெயகாந்தனை விதந்தோத தி.ஜானகிராமனை மட்டம் தட்டி இருக்கிறார். நேற்று நள்ளிரவு வரை நடந்த விவாதத்தில் நண்பர்கள் அக்கட்டுரை குறித்து சொன்னது இது.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் ஜெயகாந்தன் கங்காவின் பார்வையில் அமைத்த உரையாடல்களின் ஆழம் என்ன, மோக முள் நாவலில் தி.ஜானகிராமன் யமுனாவின் பார்வையில் அமைந்த உரையாடல்களின் ஆழம் என்ன என எனக்குள் உரசிப் பார்க்க நல்ல தருணமாக அமைந்தது அந்த உரையாடல்.

உதாரணமாக எட்டு வருடம் கழித்து பாபுவை தேடி யமுனாவே வருகிறாள் எனும் புள்ளியில் அனைத்துமே உணர்த்தப்பட்டு விடுகிறது ஆனாலும் அதற்கு மேல் திஜா போகிறார். யமுனா பாபு வசம் சொல்கிறாள் ”இப்ப இல்ல. இருந்ததுண்டு. ஆனா ராவும் பகலுமா தவிச்சு நசுக்கிட்டேன். எல்லாத்தயும் அப்பிடி சுலபமா நசுக்கக்கூடிய சக்தி இல்லை. வேற என்ன செய்யுறது? தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடுறதை பிடிச்சு நசுக்கி, காலால மிதிச்சு தேச்சு வந்தேன். இப்ப உசிர் இல்லாம கிடக்கும். நீதான் உயிர் குடேன்” இந்த உரையாடல் அங்கே நிகழ என்ன காரணம்? நாவல் மொத்தமும் பாபுவின் பார்வை எனும் குறுகிய சாலையில் ஓடுவதே காரணம். பாபுவின் யமுனா மீதான மேலான பக்தியும் கீழான காமமும் யமுனா மீது உருவாக்கிய விளைவு என்ன என யமுனாவின் கோணம் நாவலுக்குள் உருவாகி வரவில்லை. ஆகவேதான் இந்த ”தளுக்கான ” அந்த உரையாடலை அங்கே அமைப்பதன் வழியே திஜா அந்த நாவல் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய முரண்களை தாவி சென்று விடுகிறார். நீங்கள் குறிப்பிட்ட இந்த ”தளுக்கு ” தான் எனது சில நண்பர்களை உணர்ச்சி வசப்பட செய்து விட்டது.

அடுத்து ஒரு எழுத்து ஆளுமையாக திஜாவின் எல்லை. ஒரு முறை உரையாடல் ஒன்றினில் வெள்ளைக்காரன் காலத்தில் சீட்டுக் கம்பெனியில் பணம் கட்டி அது திவால் ஆனதால் நடுத்தெருவுக்கு வந்த தஞ்சை கும்பகோண பகுதி பிராமண குடும்பங்கள் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். தூக்கு மாட்ட தெரியாமல் மாட்டி குற்றுயிராய் பிழைத்து துவண்ட கழுத்துடன் அன்று அலைந்த பல ”அரைத்தூக்கு” பிராமணர்கள் பற்றி சொன்னீர்கள். [தேடி வாசித்தேன் வா.வே.சு.அய்யர் அது குறித்து கதை ஒன்று எழுதி இருக்கிறார்] அந்த உரையாடலை இப்படி முடித்தீர்கள் ”அப்போ பாபு யமுனாவை மோந்து பாத்துக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருந்தான் ”.

அன்று ஏனோ உள்ளே குமுறலாகவே இருந்தது. மோக முள் நாவலில் சாஸ்திரி சொல்வார் ”இந்த கும்பகோண ராமசாமி கோவில்ல ஒரு தூணை, ஒரு சிற்பத்தை பாத்தவன் அதுக்குப் பிறகு இந்த கும்பகோண அழுக்கையும் கீழ்மையையும் நினைச்சுக்கிட்டு இருப்பானா என்ன?” இந்த உரையாடலையே அன்று முழுதும் திஜா சார்பாக உள்ளே சொல்லிக்கொண்டு இருந்தேன்.

பின்னொரு சமயம் வாசிக்கையில் கண்டேன். அந்த நாவலில் திஜா அழகு குறித்து பேசும் தருணம் எல்லாம் அசிங்கம் குறித்தும் பேசிவிடுகிறார். உதாரணம் சாஸ்திரி குறித்த வர்ணனை அவர் நெற்றியின் தழும்பு போல அவரது புன்னகை என வர்ணிக்கிறார். இப்படி பல இடங்களை சுட்ட முடியும். ஆக திஜா அந்த நாவலில் இன்னும் ஆழம் சென்றிருந்தால் அவர் உருவாக்கிய மொத்த அழகு கனவையும், அன்றைய குரூர யதார்த்தம் கொண்டு அவரால் சமன் செய்திருக்க முடியும்.

எழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.

உதாரணமாக புதுமைப்பித்தன் அவர் சமகால சுதந்திர வேட்கை குறித்து எதுவுமே எழுத வில்லை. இதுவே அடுத்த ”வாய பொத்து ” வாதமாக இருக்கும்.

புதுமைப்பித்தன் இரு உலகப் போர்களின் மத்தியில் ஆதிக்க வெறி கொண்டு இந்த உலகின் அனைத்து கூறுகளிலும் பாதிப்பு செலுத்திய ஹிட்லர் முசோலினி போன்ற கிராக் பாட்டுக்கள் குறித்து முக்கியமான பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஸ்டாலினுக்கு தெரியும் பதிவில் பொது உடமை ஒரு சித்தாந்தமாக இருக்க, அதை அரசியல் மூலம் நடைமுறைpபடுத்துவதில் உள்ள இடர்களை [என் நோக்கில்] கரிசனத்துடன் அணுகுகிறார். இது போன்ற பல கட்டுரைகள் வழியே புதுமைப்பித்தன் ”முன் முடிவுடன் ” இந்திய சுந்தந்திர வேட்கை குறித்து மௌனம் காத்தார் என்றே ஊகிக்க முடியும்.

ஆக புதுமைப்பித்தனின் அந்த விடுபடல் அவரது ஆளுமைக் குறைபாடல்ல என்றே சொல்வேன். திஜா வில் உள்ள விடுபடல் புதுமைப்பித்தன் போன்றது அல்ல.

மோக முள் வழியே அடுத்து முன் வைக்கப்படும் ”வாய பொத்து ” விவாதம். அந்த நாவல் மொழியனுபவம் வழியே அப்படியே இசை அனுபவத்துக்கு வாசகனை உயர்த்தி விடுகிறது. இசையறியா பேதைகள் இந்த நாவலின் உணர்வு உச்சத்துக்கு செல்ல இயலாது. ஆகவே ”அது ” உனக்கு இருந்தால் மட்டும் இந்த நாவலை மதிப்பீடு.

அதாவது வாசகனாகிய நான் விவசாயம் குறித்த அடிப்படைகளை தெரிந்து கொண்டே கண்மணி குணசேகரனையும், சு.வேணுகோபாலையும் வாசிப்பதைப் போல, மீன் பிடித்தல் அடிப்படைகளை அறிந்து கொண்டு ஜோ.டி.க்ரூஸ் ஐ வாசிப்பதை போல, இசையின் அடிப்படைகளை தெரிந்து கொண்டு மோகமுள்ளை வாசிக்க வேண்டும்.

இந்த நாவலில் மூன்று இழைகள். பாபுவின் யமுனா மீதான பிரேமை. பாபுவின் இசை ரசனை. பாபு அவனது தந்தை, குரு, நண்பன் ஆகியோருடன் கொள்ளும் உறவு. இந்த நாவல் இந்த மூன்று தளத்தில் அதன் தர்க்கம், கற்பனை, கடந்து உணர்வு நிலையில் இசையில்தான் நிறைவு கொள்கிறதா என்று வினவினால் [எனக்கு இசை அறிவு இன்மை காரணமாக] எனக்கு அதை மதிப்பிட வழி இல்லை.

இசையில் ஆழ்ந்த புலமையும், இலக்கிய வாசிப்பில் தேர்ச்சியும் கொண்ட சஞ்சய் சுப்ரமணியன் போன்றோர் மதிப்பீடு செய்ய வேண்டிய இடம் அது.

எனது வினா இதுதான்

இசை பயிற்சி அற்றவர்கள் காண இயலா உன்னத தளம் ஒன்று மோக முள் நாவலில் இலங்குகிறதா?

இசை பரியச்சம் அற்றவர்கள் அந்த உணர்வு உச்சத்தை எய்த இயலாது என்பது அந்த நாவலின் பலவீனம் தானே?

மேலும் ஒரு எழுத்தாளர் என்பவர், [அவரது ஆளுமை திறன் சார்ந்து] எக்காலத்திலும் அவர் எழுதியவற்றுக்கு ”மேலதிகமாக ” எதையேனும் அளிப்பவர்தானே. எனவே,

எழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.

எனும் கூற்றிலுள்ள பலம் பலவீனங்களை ஒரு வாசகன் எவ்வாறு வகுத்துக் கொள்வது?

கடலூர் சீனு.

***

அன்புள்ள கடலூர் சீனு

உங்கள் கடிதத்தை படித்த போது மெல்லிய எரிச்சலொன்றை அடைந்தேன். கடந்த இருபத்தைந்தாண்டுகளாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் குரலொன்று அதில் உள்ளது. அதை தொடர்ந்து பலவகையாக மறுத்து விளக்கிக்கொண்டே இருக்கிறேன். இலக்கிய விமர்சனத்தை ஒருவகையான வம்பாக புரிந்துகொள்வதும் வம்பாகவே அதில் ஈடுபடுவதும் தான் அந்த மனநிலை.

ஆரம்பகாலத்தில் சுந்தர ராமசாமி இலக்கிய விவாதங்களில் வம்புக்கு ஒர் இடமுண்டு என்பதை ஏற்றுக்கொண்டார். ஏனெனில் இலக்கிய விவாதங்களில் இலக்கியவாதிகளும் அவர்களுடைய ஆசாபாசங்களும் ஓரளவுக்கு பேசப்பட்டுதான் ஆகவேண்டும் என்று அவர் எண்ணினார். அவை கருத்துக்களை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றார். ஆனால் தேவதச்சன் அவருடைய உரையாடல்களில் இலக்கிய வம்புகளை முதலிலேயே ஓரிரு சொற்களில் வெட்டி அகற்றி விடுவதைக் கண்டேன். அவரைப் பொறுத்தவரை இலக்கிய வம்பு சார்ந்த ஒரு மனநிலை என்பது இலக்கியம் சார்ந்த பிற அனைத்தையும் பார்க்கும் பார்வையை முழுமையாகத் தடை செய்துவிடும். இத்தனைக்கும் அரசியல் சினிமா சார்ந்த வம்புகளில் மிகக்குதூகலமாக ஈடுபடுபவர் தேவதச்சன்.

பின்னர் சுந்தர ராமசாமியும் அதை ஒருவகையில் உணர்ந்தார். அவருடைய அவையிலிருந்து கிளம்பிச்சென்ற இளம் எழுத்தாளர்கள் சிலர் பிரபல ஊடகங்களை அடைந்த போது சிறுபத்திரிகை சார்ந்த செய்திகளை அங்கு கொண்டு சென்றனர். முதலில் எப்படியோ சிறுபத்திரிகை அங்கு பேசப்படுகிறது என்ற எண்ணத்தை சுந்தர ராமசாமி அடைந்தாலும் மிக விரைவிலேயே அது பயனற்றது என்பதை உணர்ந்தார். தொடர்ச்சியாக சிறுபத்திரிக்கை சார்ந்த வம்புகளை குமுதத்திலோ விகடனிலோ படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும் சிறுபத்திரிக்கை வாங்கிப்படிப்பதோ அதிலுள்ள கதைகளை, கட்டுரைகளைப்பற்றி ஆர்வம் கொள்வதோ கிடையாது.

எனக்குத் தெரிந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன். இலக்கியக் கருத்துக்களை தனிப்பட்ட ஆசாபாசங்களின் பகுதியாக, உள்நோக்கங்களின் வெளிப்பாடாக, ஒருவகைப்புரணியாக எடுத்துக்கொள்வதென்பது சிந்தனையின் மிகப்பெரிய தேக்க நிலையைக் காட்டுகிறது.

சரியான அர்த்தத்தில் இலக்கிய விமர்சனம் என்பது எவ்வகையில் நிகழ்த்தப்பட்டாலும் இலக்கிய படைப்பை நோக்கி வாசகனைக் கொண்டு செல்லும். அவன் இலக்கிய படைப்பை படித்துக்கொண்டிருக்கும் விதத்தை சற்று மாற்றும் அவன் பாராததை சுட்டிக்காட்டும். மிக எதிர்மறையான விமர்சனங்கள் கூட ஒரு படைப்பின் மீதான நம்முடைய பார்வையை மேலும் துலக்குவதை நாம் எப்போதாவது உணர்ந்திருப்போம். இலக்கியப்படைப்புகளைப்பற்றி முற்றிலும் பேசாமலிருப்பது தான் அவற்றை அழிக்கும் வழி. அதுதான் அனைத்து வகையிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் வினாவுக்கு வருகிறேன். ஜெயகாந்தனைப்பற்றி பேசும்போது ஜானகிராமனையோ, அசோகமித்திரனையோ பேசும்போது சுந்தர ராமசாமியையோ, சுந்தர ராமசாமியைப்பற்றி பேசும்போது பிறிதொருவரையோ நான் கீழிறக்குகிறேன். இதை ஒரு விவாத உத்தியாக கடைப்பிடிக்கிறேன். இதுதான் நீங்கள் சொன்ன நண்பரின் கூற்று இல்லையா? இதை ஒருவர் சொல்லுபோது அவர் இலக்கியவாசகர் என்றால் முதலில் செய்ய வேண்டியது ஜானகிராமனைப் பற்றியோ சுந்தரராமசாமியைப் பற்றியோ அசோகமித்திரனை ப்பற்றியோ ஜெயகாந்தனைப் பற்றியோ நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முழுமையாக வாசிப்பதுதான். அதைச் செய்யாதவரைத்தான் நான் புறணிபேசுபவர் என்கிறேன். தெருக்களில் குப்பை பொறுக்குவதுபோன்ற ஒரு தொழில் அது.

என்னுடைய கருத்துக்களை இந்த இலக்கிய முன்னோடிகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். இலக்கிய முன்னோடி வரிசை என்று ஏழு தொகுதிகளாக் நூல்கள் வெளிவந்துள்ளன. இவர்களைப் பற்றி தமிழில் மிக அதிகமாக எழுதிய படைப்பாளி நான். என்னுடைய வழிமுறை இலக்கிய ரசனை சார்ந்தது என்பதனாலேயே ஒப்பீடு அதில் தவிர்க்க முடியாது. ரசனை என்பதே ஒருவகையான ஒப்பீடு தான். ரசனை மதிப்பீடு என்பது ஒப்பீட்டில் இருந்து உருவாகும் மதிப்புதான். ஒரு படைப்பாளியின் ஒரு தனிச்சிறப்பை இன்னொரு படைப்புடன் ஒப்பிடாமல் அறிவதற்கு இலக்கிய விமர்சனத்தில் வழியேயில்லை.

ஜெயகாந்தனுடைய அறிவார்ந்த தன்மையை விவாதத்தில் எடுத்துக்கொள்ளும்போது ஜானகிராமனுடைய அறிவார்ந்த தன்மையற்ற உணர்ச்சிகரத்தை ஒப்பிட்டுத்தான் சொல்ல முடியும். ஜானகிராமனுடைய கட்டற்ற மொழி ஒழுக்கை பற்றி விவாதிக்கும்போது எண்ணிச் சொற்களை அடுக்கும் அசோகமித்திரனுடன் ஒப்பிட்டே அதை விளக்க முடியும். மிகச் சிறிய நுட்பங்களை தொட்டெடுக்கும் ஜானகிராமனின் எழுத்துமுறையைப்பற்றி எங்காவது விவாதிக்க நேர்ந்தால் தடித்த கோடுகளில் மட்டுமே சித்திரங்களை வரையும் ஜெயகாந்தனை அங்கே சுட்டிக்காட்டியிருப்பேன். அப்போது ஒருவர் அங்கு ஜானகிராமனைத் தூக்குவதற்காக ஜெயகாந்தனை மட்டம் தட்டுவதாக சொல்வாரேயானால் அவருக்கு இலக்கிய விமர்சனத்தில் அறிமுகமில்லை என்று தான் பொருள்.

ஜானகிராமனின் புனைவுகளைப்பற்றி நான் எழுதியவற்றை தொகுத்து இங்கு மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அவருடைய எழுத்துக்கள் வெளியாகி கால் நூற்றாண்டுகழித்துதான் நான் படிக்க ஆரம்பிக்கிறேன். அன்று வரை அவருடைய படைப்புகளைப்பற்றி பேசிய எவரும் சுட்டிக்காட்டாத நுட்பங்களை, அவர்கள் எவரும் கண்டடையாத உள்மடிப்புகளை, அவருடைய புனைவுகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர் மீதான வாசிப்புகளை அவ்வாறு விரிவாக்கம் செய்திருக்கிறேன். அவ்வாறு ஜானகிராமன் எதை அளித்தாரோ அதை அனைத்தையும் பெரும்பாலும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் நிலையில் எழுந்த பிறகுதான் அவருடைய போதாமைகளை சுட்டிக்காட்டுகிறேன். அவருடைய எல்லைகளை வரையறுக்கிறேன். அதுவே அந்த எதிர்மறை விமர்சனம் வைப்பதற்கான தகுதியாகிறது.

அந்த எதிர்மறை விமர்சனங்கள் முற்றிலும் புதியவையும் அல்ல. வேறு வார்த்தைகளால் ஜானகிராமனின் சமகாலப்படைப்பாளிகளால் முன்வைக்கப்பட்டவைதான். கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் ஜானகிராமனை உண்மையின்மேல் கனவில் திரையை விரித்த கலைஞன் என்று மதிப்பிடுகிறார்கள். இதற்கு நான் விரிவாக பதில் சொல்லியிருக்கிறேன். கனவின் திரையை அல்ல ஜானகிராமன் விரிப்பது. அவருடைய அனைத்து படைப்புகளிலும் அக்கனவு கிழிபடும் தருணங்கள் தான் உச்சமாக அமைந்துள்ளன. இதற்குத்தானா என்று யமுனா கேட்பதோ, நீயும் அம்மா பிள்ளைதான் என்று அலங்காரத்தம்மாள் சொல்வதோ ஒரு உதாரணம். ஆனால் அந்த முனை வரை செல்லும் போது பெரும்பாலும் சரளமான ஒழுக்கென்பதை அவர் முன் நோக்கமாகக் கொள்கிறார். வலுவான புனைவுதருணங்களை உருவாக்கும்போதே தத்துவார்த்தமான மோதலோ அறிவார்ந்த சிடுக்குகளோ விழுமிய மோதல்களோ வரும் தருணங்களை தவிர்த்து செல்கிறார்.

உதாரணமாக, யமுனாவுக்கும் பாபுவுக்குமான உறவு ரங்கண்ணாவுக்குத் தெரிந்தால் வரக்கூடிய முரண்பாடென்பது மரபின் இருபெரும் தரப்புகளுக்கிடையேயான அனல் தெறிக்கும் மோதலாக அமைந்திருக்கும். எந்த நாவலாசிரியனும் இயல்பாக சென்றடையும் அந்த இடத்தை ஜானகிராமன் தவிர்க்கிறார் என்பதை ஒர் உதாரணமாக சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்படியெல்லாம் தான் நான் ஜானகிராமனை நான் விவாதிக்கிறேன் அவருடைய சாதனைகளுடன் எல்லைகளை மதிப்பிடுகிறேன்.

நான் இந்த விவாதத்தில் கேட்கும் கேள்வி அறிவார்ந்த தளத்தை முழுமையாகவே விலக்கி உணர்வு நிலைகளில் மட்டுமே சஞ்சரிக்கும் ஜானகிராமன் தமிழ்ச் சிற்றிதழ்களின் எழுபதுகளில் அவ்வாறு கொண்டாட்டத்துக்குரிய படைப்பாளியாக இருந்தபோது சமரசமற்ற அறிவார்ந்த தன்மை கொண்டிருந்த ஜெயகாந்தன் எப்படி ஒவ்வாமல் ஆனார் என்பதே. இன்று ஒரு தலைமுறைக்குப் பிறகு நின்று படிக்கையில் இந்த முரண்பாடு மேலும் கூர்மையாக எழுகிறது. அவை எழுபதுகளின் வாசகர்களிடம் ஆண்பெண் உறவு சார்ந்து இருந்த மென்மையான உணர்வுநிலைகளையும், சிலவகைச் சபலங்களையும் நோக்கித்தான் நம்மை கொண்டு செல்கின்றன.

நான் செய்ததுபோல வரலாற்றில் பண்பாட்டில் ஜானகிராமனை நிறுத்திப் பேசிய ஒருவரே என்னை எதிர்கொள்ளும் தகுதிகொண்டவர். அந்த வாசிப்பை நிகழ்த்திய ஒருவனுக்குத்தான் மேலதிகமாக ஜானகிராமனிடமிருந்து எதிர்பார்க்கவும் ஜானகிராமனின் எல்லைகளைத் தொட்டுப்பேசவுமான தகுதி அமைகிறது. வெறுமே ஜாதிப்பற்று, ஊர்ப்பற்று ஆண்பெண் உறவுநிலைகள் மீதான சபலம் போன்றவைதான் காரணம் என்றால் அது வாசிப்பு அல்ல.

இந்த விவாதங்கள் எதுவும் புதிதாக கிளம்பி வருபவை அல்ல. ஜானகிராமன் எழுதியிருந்த காலம் முதலே அவருடைய் படைப்புகள் மீது அவற்றின் தரிசனக்குறைவு சார்ந்து, அவற்றின் அறிவார்ந்த தன்மைக்குறை சார்ந்து கடுமையான விமர்சனங்கள் அவருடைய சகபடைப்பாளிகளாலும் விமர்சனங்களால் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னுடையது அந்த விவாதத்தின் அடுத்த கட்டம். இந்த அவதானிப்புகள்கொண்ட ஒருவர் முரண்படலாம். மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம் அவ்வாறு முன்வைக்கையில் தான் இலக்கியவிமர்சனம் முன் செல்கிறது.

மாறாக அதற்கு ஒரு சிறுமையைக் கற்பிப்பது சொல்பவரின் சிறுமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இலக்கியத்தை மிக மிகச் சிறிய உள்ளத்துடன் அவர் எதிர்கொள்கிறார் என்பதற்கான சான்று மட்டும்தான் அது.

மோகமுள் நாவலின் இசைக்கூறு பற்றி எல்லாம்கூட விரிவாகவே முன்பு எழுதியிருக்கிறேன். அந்நாவலில் இசை பேசப்பட்டிருப்பதாகச் சொல்பவர்கள் இசை குறித்த சில நாவல்களை வாசிக்கவேண்டும். குறைந்தபட்சம் ழீன் கிறிஸ்தோஃபையாவது. இசை கேட்டான், கண்ணீர் வழிந்தோழியது, அஹ் அஹ் என்று விம்மினான் என எழுதுவதெல்லாம் இசை குறித்த எழுத்து அல்ல. அல்லது சாவேரி ஆறாக ஓடியது, சங்கராபரணத்தில் முடிச்சு விழுந்தது என்று எழுதுவதும் இசை குறித்த எழுத்து அல்ல.

இசையோ, ஓவியமோ, கட்டிடக்கலையோ வேளாண்மையோ, இயற்கையோ எதுவானாலும் இலக்கியத்தில் ஒருவகையான குறியீட்டுத்தன்மை கொண்டே வரமுடியும். இசை உணர்ச்சிகளின் புற அடையாளமாக ஆகலாம். சிற்பம் பெருந்தரிசனங்களைச் சுட்டலாம். புனைவுக்குள் அவையாக மட்டும் அவற்றுக்கு இடமில்லை. வாழ்க்கையின் உணர்வுகளை, தரிசனங்களை அவை சுட்டிநிற்கவேண்டும். அன்றி வெறும் இசையென வரும்போது அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இசையைப்பற்றிய நுண்மையான மதிப்பீடாக இருந்தாலும்கூட.

ழீன் கிறிஸ்தோப் நாவல் இசையினூடாக ஐரோப்பியப் பண்பாடு ஒருங்கிணைக்கப்பட்டதன் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இசை நுண்மையைத்தேடும்போது செவ்வியலாகி ஆடம்பரமாகி ஒருபக்கம் இறுகிச்செல்ல மறுபக்கம் தன்னை அவிழ்த்துக்கொண்டு நாட்டுப்புறசியல் நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. அது ஐரோப்பியப் பண்பாட்டின் என்றுமுள்ள அறச்சிக்கல். அதற்கும் அப்பால் இசைக்கும் ஒழுக்கநெறிகளுக்கும் இடையே உள்ள மாறாத போராட்டத்தைப் பேசுகிறது. காதலை, பிரிவை இசை இசையினூடாகவே அதில் முன்வைக்கிறார் ரோமெய்ன் ரோலந்து. அதில் பேசப்பட்டவை ஒரு வாழ்நாள் முழுக்க சென்று வாசிக்கத்தக்கவை.

மோகமுள்ளில் இசை பாபுவின் ஒர்உலகம் என்ற அளவிலேயே வருகிறது. பாபுவுக்கும் யமுனாவுக்குமான உறவை அது எங்கே பாதிக்கிறது? பாபுவின் ஆளுமையை எங்கே அது தீர்மானிக்கிறது? அதில் பேசப்படும் இசைசார்ந்த ஒரு தருணமாவது நீங்கள் இன்று நினைக்கையில் தொடர்ந்து அர்த்தங்கள் அளித்து விரியும் தன்மைகொண்டிருக்கிறதா?அந்நாவல் எழுதிச்செல்லும் பாலுறவின் சிக்கலை அது எப்படி முடிவுக்குக் கொண்டுவந்து தரிசனமாக உயர்த்துகிறது? அதில் இசை வகிக்கும் பங்கு என்ன?

ஆயுர்வேதம் அறிந்தால்தான் ஆரோக்கியநிகேதனம் வாசிக்கமுடியும் என எந்த இலக்கியவிமர்சகனும் சொல்வதில்லை. அதில் வரும் ஆயுர்வேதமும் அலோபதியும் வெறும் மருத்துவத்தகவல்கள் அல்ல. அவை இருவேறு காலகட்டங்களின் குறியீட்டுவடிவங்கள் இரு யுகங்களின் தோற்றங்கள். அவ்வாறு சொல்லப்படுவது மேலெழுவதற்குப் பெயர்தான் கலை. குறைந்தபட்சம் கண்மணி குணசேகரனின் கோரை நாவலில் வரும் கோரை ஒரு வெறும்செடியல்ல, அது வேளாண்மைச் செய்தி அல்ல, என்றாவது நாம் அறியவேண்டும்.

மோகமுள்ளின் நடையில் ‘இசை’ இருக்கிறது என்பதெல்லாம் நெடுங்காலம் இங்கே சொல்லப்பட்டுவந்த ஒரு ‘கூற்று’ மட்டுமே. சுந்தர ராமசாமி காலம் முதலே பேசிக் கடக்கப்பட்டுவிட்ட ஒன்று. அது ஜானகிராமனின் தேர்ந்த உரைநடை. அதேசமயம் சிந்தனையில், உணர்வுகளில் சிடுக்குகள் என எதையும் எதிர்கொள்ளாமல் செல்வதனால் உருவாகும் சரளம். அதிலுள்ளது பெரும்பாலும் செவிவழிப்பதிவுகளை, உரையாடல்களை நம்பிச்செல்வதன் ஒழுக்கு. அதை ரசிக்கலாம். அதற்கு ஓர் இலக்கிய மதிப்பும் உண்டு. ஆனால் அடுத்த வினா ‘இதெல்லாம் எதுக்கு?’ என்பதே. புதுமைப்பித்தன் கேட்டது அது. ஒருநாவலை உருவாக்கும் மொழிநடை என்பது தொடர்ந்து தன்னை உருமாற்றிக்கொண்டு சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் சித்தரிப்புகளுக்கும் செல்வது.

எந்த ஒரு படைப்பாளியிடமும் அவன் அளித்தவற்றை முழுக்க வாங்கிக்கொண்டு மேலுமென்ன என்று எதிர்பார்க்க வாசகனுக்கு உரிமை உண்டு. அதற்குப்பெயர்தான் இலக்கியவிமர்சனம் என்பது.

ஜெ

***

முந்தைய கட்டுரைமலையாளத்தில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29