அம்மையப்பம், பிழை -கடிதங்கள்

siva

வணக்கம்,

நான் அவ்வப்போது உங்கள் சிறுகதைகளை படிப்பதுண்டு. அப்படி படித்த ஒரு கதை – அம்மையப்பம். அதில் இட்டிலியை அம்மா எடுத்து வைப்பதாக கதை ஆரம்பித்தது. அப்போது அவள் மீன் குழம்பு ஊற்றும்பொது, ‘குழிலே குழிலே’ என்று எழுதியிருந்தீர்கள்.

ஜென் கதைகள் ஒன்றில்…ஜென் ஞானி ஒருவர் மாணவர்களிடையே பேச ஆரம்பிக்கலாம் என்று துவங்கும்போது, ஒரு குயில் கூவும்… அப்போது, அவர் இன்றைக்கு உங்களுக்கான பாடம் முடிந்தது என்று கூறிவிட்டு கிளம்புவார்….

அதுபோல இருந்தது அந்த ‘குழிலே … குழிலே…’. என்னமோ தெரியவில்லை. மனம் நிறைத்திருந்தது. நானும் அதற்குமேல் படிக்கவில்லை.

நன்றி,

ஸ்ரீதர்

****

அம்மையப்பம் [புதிய சிறுகதை]

 

அன்புள்ள ஜெமோ,

நான் முன்பு வாசித்த கதை பிழை. அப்போது strange என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். பின்பு என் வேலையில் அதே போன்ற ஒரு சந்தர்ப்பம் வந்தபோது ஆச்சரியத்துடன் அந்தக்கதையை நினைவுகூர்ந்தேன். மிகமிக அபூர்வமான நுட்பமான ஒரு விஷயம். இதையெல்லாம் பொதுவாசகர்கள் தவறவிட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். இலக்கியவாசகர்களும் அவர்கள் தேடும் சில ரெகுலர் விஷயங்கள் இல்லை என்று கடந்துசெல்லக்கூடும். மிக அபூர்வமான ஒரு எழுத்து இந்தக்கதை.

ஒரு பிழையில் இருப்பது முடிவின்மையின் கிரியேட்டிவிட்டி என்று நானே சொல்லிக்கொண்டேன். முக்கியமான சிறுகதை அது. பல கோணங்களில் இந்த பிரபஞ்சத்தின் செயல்முறை பற்றியே யோசிக்கவைத்தது.

உண்மையான செய்திகளைக்கோர்த்து செய்திக்கட்டுரை வடிவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கொலாஜ் தன்மைதான் அதன் நுட்பம் என்று இன்று உணர்கிறேன். ஏனென்றால் இல்லை என்றால் அது வெறும் கற்பனை என்று ஆகிவிடும். அது உண்மையில் நிகழ்வதை நாம் கவனிக்காமல் ஆகிவிடுவோம். உண்மையில் பிழையின் கிரியேட்டிவிட்டி நம்மைச்சுற்றி நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனந்தன்

பிழை [சிறுகதை] 1

பிழை [சிறுகதை] -2

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29
அடுத்த கட்டுரைஇயல் விருதுகள்