‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27

26. நிலைக்கோள்

flowerபுலரிக்கு முன்னர் முக்தன் சென்றபோதே பிருகந்நளை அணிபுனைந்து முடித்திருந்தாள். அவள் தங்கியிருந்த மூன்று அறைகள் கொண்ட சிறிய இல்லத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டிருந்தது. முக்தன் மூன்று முறை “தேவி” என்றழைத்தான். வாயில் உள்ளிருந்து திறக்கப்படும் ஓசையே அவளென்று அவனுக்கு காட்டியது. அவ்வோசையிலேயே அவள் முழுஉருவத்தைப் பார்த்து அதிர்வுகொண்ட அவன் உள்ளம் படபடக்கலாயிற்று.

இளஞ்செந்நிறப் பட்டாடையும் ஆரங்களும் குழைகளும் கொண்டைச்சரங்களுமாக முழுதணிக்கோலத்தில் தோன்றிய பிருகந்நளை “வருக, வீரரே!” என்றாள். முந்தைய நாள் இரவே அணிபுனைந்து அவனுக்காகக் காத்திருந்தவள் போலிருந்தாள். வெளியே அப்போதும் இருள் விலகியிருக்கவில்லை. இரவுச்சீவிடு நிலைக்கவில்லை. அவன் தன் இல்லத்திலிருந்து கிளம்பியபோது புரவியின் வெண்ணிறப் பிடரிமயிர்கூட தெரியாத கருக்கிருட்டு இருந்தது.

அவன் அவள் உடலில் இருந்து எழுந்த புதுமலர்களின் மணத்தையும் நீராடி ஈரம் முழுதுலராத உடலின் நீராவி கலந்த வியர்வையின் மணத்தையும் முகர்ந்தபடி உள்ளே சென்றான். ஆடை சரசரக்க கைவளைகளும் சிலம்பணிகளும் கழுத்தணிகளும் ஒலிக்க அவனுக்குப் பின்னால் வந்து “முன்னரே வந்துவிட்டீர்கள், வீரரே” என்றாள். அவன் திணறலுடன் “ஆம்” என்றான். “அமருங்கள். அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவருகிறேன்” என்றாள். முக்தன் அவள் உடலிலிருந்து விழிகளை விலக்கி “நான் இல்லத்தில் இன்கூழும் அப்பங்களும் அருந்திவிட்டுத்தான் வந்தேன்” என்றான். அவள் மெல்ல சிரித்து “என் கையால் ஒரு குவளை இன்கடுநீர் அருந்தலாம். இது அன்னைகைச்சமையல் அல்ல. இதன் சுவை வேறு” என்றாள்.

அவள் சொன்னதென்னவென்று புரியாமலேயே முகம் சிவந்து குரல் பதற “ஆம், உண்மை” என்றான் முக்தன். விழிகள் பிறிதொரு மொழியில் ஒரு சொல்லுதிர்த்தனவென நொடிக்க அவள் எழுந்து சிலம்புகளும் கைவளைகளும் ஒலிக்க உள்ளே சென்றாள். மெல்ல அசைந்த அவள் பின்னழகுகளைப் பார்த்து பின்பு தன்னுணர்வுடன் விழிவிலக்கிக்கொண்டு “எப்போது எழுந்தீர்கள்? நீராடி அணிபுனைந்து சித்தமாக இருக்கிறீர்கள்?” என்றான்.

அவள் அடுமனைக்குள்ளிருந்து “நீங்கள் புலரிக்கு முன்னரே வந்துவிடுவீர்கள் என்று தெரியும்” என்றாள். “எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலையை நீட்டி சிரித்து “தெரியும்… அவ்வளவுதான்” என்றபின் மறைந்தாள். தன் உள்ளத்தின் ஓசையைக் கேட்டபடி மூச்சுத் திணறுவதை உணர்ந்து தசைகளை எளிதாக்கி இயல்புநிலைகொள்ள முயன்றபடி முக்தன் அமர்ந்திருந்தான்.

இரு உள்ளங்கால்களும் வியர்த்திருப்பதாகத் தோன்றியது. உள்ளங்கால்கள் வியர்க்குமா? முன்பெப்போதும் அதை உணர்ந்ததில்லை. குளிர் எஞ்சியிருந்த புலரியிலேயே இத்தனை வியர்வை! புரவியில் வந்ததனால்தான். ஆனால் புரவியை மிக மெல்லத்தான் செலுத்தினான். மூச்சிரைக்க வியர்வை மணத்துடன் வந்திறங்கலாகாதென்று எண்ணியிருந்தான். அறியாமல் குதிமுட்கள் புரவியை தூண்டியிருக்கலாம்.

புரவியென்பது ஓட்டுபவன் உள்ளம் பருவடிவு கொண்டது என்று அவனுக்கு போர்க்கலை கற்பித்த சுஷமரின் சொற்களை நினைவு கூர்ந்தான். “எதிரியின் விழிகளை நோக்குவது உன்னை அவன் நோக்கும் வாயில் திறப்பது. அவன் புரவியை நோக்கு, அது அனைத்தையும் கூறும். அவன் பதற்றத்தை, அச்சத்தை, வெறியை, விரைவை.”

உள்ளே அவள் கைபட்டு கலங்கள் மணியொலியும் சிலம்பலோசையும் எழுப்புவதை கேட்டான். ஓசையிலேயே அவள் முற்றிலும் காட்சியெனத் தெரிந்தாள். தன் அன்னையின் காலடி ஓசையை அவனால் அறிய முடிந்தது. புரவியின் குளம்போசையை அவன் அறிந்திருந்தான். ஒவ்வொரு ஓசையிலும் இவளை உணரமுடிகிறது.

நன்கு தேய்த்து பொன்னென ஆக்கப்பட்ட குவளையில் இன்கடுநீர் ஆவியெழ மரத்தாலத்தில் வைத்து ஏந்தியபடி அவள் நடந்து வந்தாள். ஒவ்வொரு அசைவும் ஆடல். நடையென்று ஒன்றை எப்போதும் அறிந்திருக்கமாட்டாள் என்பதுபோல. “என்ன பார்வை?” என்று புன்னகைத்தபடி கலத்தை நீட்டி “அருந்துக!” என்றாள். “ஆம்” என்றபடி அவன் அதை எடுத்துக்கொண்டான்.

தாலத்தை அப்பால் வைத்துவிட்டு எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து கால்களை அதன் மேல் மடித்துக்கொண்டாள். “அரண்மனையிலிருந்து தேர் வருமென்றார்கள் அல்லவா?” என்றாள். ஒரு மிடறு இன்நீர் குடித்துவிட்டு “ஆம். நீங்கள் செல்வது அரசிக்கு ஆசிரியராக அல்லவா?” என்றான். அவள் சிரித்து “அவளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பது புரவிக்கு பறக்கக் கற்றுக்கொடுப்பதுபோல என்று முந்தைய ஆசிரியை என்னிடம் சொன்னாள்” என்றாள்.

அவன் சிரித்து “மெய்தான். நிஷத குடிகளில் எந்தப் பெண்ணுக்கும் ஆடல் அமைந்ததே இல்லை. இங்கு விறலியர் வந்து மேடையில் ஆடும்போதெல்லாம் ஒவ்வொருவரும் அதை உணர்வதுண்டு” என்றான். அவள் “ஆடலற்ற குடியென்று ஏதும் இல்லை” என்றாள். “ஆம், எங்களுக்கும் ஆடல்கள் உண்டு. விழவுகளிலும் குடிப்பண்டிகைகளிலும் நாங்கள் கூடி ஆடும் கலைநிகழ்வுகள் பல. ஆனால் அது தாளத்திற்கு உடலை ஒப்புக்கொடுப்பது மட்டுமே. அத்தாளத்தினூடாக ஒவ்வொருவரும் தாங்களெனும் உணர்வையிழந்து குடியென்று பெருக்கில் ஒழுகும் துளியாகிறார்கள். அதன் அலைகளில் தாங்களும் அசைகிறார்கள்” என்றான்.

அவள் சிரித்து “நடனமென்பதே அதுதான்” என்றாள். “ஆனால் இங்கு கலையென ஆடப்படும் நடனங்கள் அனைத்தும் ஒருவர் தன் உணர்வுகளினூடாகச் சென்று எங்கோ எதையோ எய்துவதுதான்” என்றான் முக்தன். அவள் தலைசரித்தபோது குழல்கற்றையில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த முத்துச்சரம் சரிந்து கன்னத்தை தொட்டபடி ஆடியது. புன்னகையுடன் “நன்கு நோக்கி இருக்கிறீர்கள். கூர்ந்து எண்ணியும் இருக்கிறீர்கள்” என்றாள்.

அப்பாராட்டுரையால் அவன் முகம் சிவந்தது. விழிகளை விலக்கிக்கொண்டான். “இவ்வண்ணம் எண்ணி நோக்குங்கள்… அவ்வாறு தன்னை இழந்து தன் குலத்தின் அலைகளுக்கு உடலை ஒப்புக்கொடுத்த ஒருத்தி பின்னர் மெல்ல கனிந்து மேலும் முன்னெழுந்து வெறும் கற்பனையிலேயே அக்குலத்தை தன்னைச் சூழ உணர்ந்தாள் என்றால்? அவ்வாறு நிலையழிந்து பெருநிலை கொண்டாளென்றால்? அவளுக்கு அவ்வாறு தன்னிலையழிந்து பேருருக்கொள்ள குலமோ திரளோ தேவையில்லை என்றால்?” என்றாள்.

அவன் “ஆம், அது நிகழக்கூடுவதே” என்றான். “நடனமென்பது அதுவே… தன்னை தன் உடலை கற்பனையினூடாக பிறிது பலவாக ஆக்கி பெருக்கிக்கொள்ளுதல். தன் அன்னையாக, தந்தையாக, உடன்பிறப்பாக, சுற்றங்களாக, குடியாக, குலமாக… மேலும் விரிந்து மரக்கிளைகளாக, நீர்த்துளிகளாக, புகையாக, காற்றாக, கனலாக, வானாக” என்றாள் பிருகந்நளை. “அவ்வண்ணம் பிறிதாகி பெருகி முழுமை கொள்வதற்கு தடையென்றிருப்பது உடல் கொண்டிருக்கும் தன்னிலையே. ஒவ்வொரு உடலிலும் அவ்வுடலை உள்நின்று வடிவமைக்கும் தன்னுணர்வொன்று உள்ளது. பார்த்திவப் பரமாணு என கருவறைக்குள் நுழைகையிலேயே அவ்வுணர்வு உருவாகிவிடுகிறது என்கிறார்கள்.”

“தானென்றும் பிறிதென்றும் உடல் கொள்ளும் இருமையும் விலக்கமுமே முதல் தன்னுணர்வு. தொப்புள்கொடியைப் பற்றி இது வேறு என விலக்குகிறது குழவி. கருவறைச் சுவர்களில் கால் வைத்து எம்புகிறது. தன் காலையும் கையையும் தானென்று எண்ணி முத்தமிடுகிறது. பின்பு பிறந்து வந்து காற்றையும் ஒளியையும் நீரையும் உணரும்போது பிறிதெனும் தானெனும் விலக்கே புவி என்ற அறிவாகி அதற்குள் நிறைகிறது. அயல்விழி தொடுகையில் அயல்கை படுகையில் அது கொள்ளும் தன்னுணர்வு அச்சமும் எச்சரிக்கையும் ஆகி இங்கு வாழவும் வெல்லவும் அதற்கு தேவையாகிறது. தன் உடலும் தன்னவர் உடலும் தொடுகையில் அளிக்கும் இன்பமே இப்புவியில் மானுட உடலுக்கு முதன்மைக் கொடை. இவ்விரண்டையும் முற்றிலும் களைவதினூடாகவே மூன்றாவது பேரின்பமாகிய பிறவாதலை பெருகுதலை சென்றடைய முடியும்.”

“நோக்குக, ஒவ்வொரு குழவியும் அன்னையர் மடியில், கைகளில், இடையில் அமர்ந்து உடலசைவுகளை பயின்று எடுப்பதை. சிறுகால் வைத்து நடந்தும் விழுந்தும் உணவுக்கலத்தில் அள்ளியும் துழன்றும் தன் அசைவுகளை தீட்டிக்கொள்கிறது. பின்பு விளையாடல்கள், பலநூறு பயிற்சிகள், அவைநிற்றல்கள். களம்காணல்கள். மானுட உடலென்று திரள்வது தன்னைச் சூழ்ந்திருக்கும் பிற அனைத்திற்கும் உடலுள் வாழும் உளம் கொண்டிருக்கும் எதிர்வினை மட்டுமே. காட்டில் நின்றிருக்கும் ஒரு மரம் அக்காட்டிற்குள் அது தனக்கெனக் கண்டடைந்த வெளி என்பது போல.”

“உங்கள் விழிகள் ஒவ்வொரு கணமும் பிற விழிகளால் பந்தென விளையாடப்படுகின்றன. மரக்கிளைகளை காற்றுபோல சூழ்ந்திருக்கும் புறவுலகு உங்கள் கைகளை சுழல வைக்கிறது. பிற என எழுந்து சூழ்ந்த அனைத்திற்கும் விளையாட்டுப் பாவையென நம்மை நாம் அளித்திருக்கிறோம். நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளுதலே. மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.”

அவள் குரலும் கூறுமுறையும் பலநூறு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்குரியவை என முக்தன் எண்ணினான். “நோக்கற்கோ சுவைப்பதற்கோ அல்ல அது, பிரம்மம் புடவியை நிகழ்த்துவதுபோல ஆடற்கென நிகழும் ஆடல் அது. உடல் உருமாறி எழுந்து உடலின்மையை எய்தும் ஒரு கணம். ஏன் மேடையிலும் நிகழலாம் என்றால் அது தொடங்கும்போது சூழ்ந்திருக்கும் அனைத்தும் மறக்கப்பட்டுவிடுகின்றன என்பதனால்தான். ஆடல் எங்கு நிகழினும் ஆட்டன் முழுத்தனிமையில்தான் இருக்கிறான்” என்றாள்.

அவள் பேசப்பேச அவன் மகுடி ஒலியில் விழி கட்டப்பட்டு மெல்ல உடன்அசையும் பாம்பென முன்னால் அமர்ந்திருந்தான். செவ்விய உதடுகள் சுருங்கி விரிந்து, சிறுவெண்பற்களைக் காட்டி மறைத்து, கன்னக்கோடுகள் இழுபட்டு விரிந்து, கண்கள் ஒளிகொண்டு, காது மடல்களில் ஆடிய குழைகள் கழுத்தைத் தொட்டும் விலகியும் ஆட, புரிகுழல் தன் நிழல்களுடன் நெளிந்து பறக்க, கழுத்து ஒசிந்தும், தோள் விலகியும், கை நெகிழ்ந்தும் அவனை ஆட்கொண்டிருந்தது அவள் உடல். “உங்கள் விழிகளில் கனவைக் கண்டேன். ஆகவே உடன் சேர்த்தேன். இவ்வண்ணம் முழுக் கனவில் ஆழ்வீர்கள் என்று எண்ணவில்லை” என்றாள். அவன் விழித்துக்கொண்டு “இல்லை, நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள்.

“விறலியர் உடல்கள் இளமையிலேயே தன்னுணர்வைத் துறக்கும் பயிற்சி கொண்டிருக்கின்றன. சூதர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொஞ்சி தோளிலும் நெஞ்சிலும் சூடி வளர்க்கிறார்கள். பிற குலமகள்களோ இரண்டு வயதில் இடைத்தாலி அணிவதுவரைதான் குழவிகளாக கருதப்படுகிறார்கள். பின்பு அன்னையரும் தோழியருமன்றி பிறர் அவர்களை தொட இயலாது. தந்தையர்கூட விழிகூர்ந்து நோக்க இயலாது. ஐம்படைத்தாலி அணிகையில் இற்செறிப்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விழிதொடுகையிலேயே உடல் சிலிர்க்கத் தொடங்குகிறார்கள். தன்னுடலுக்குள் அனைத்து வாயில்களையும் மூடி சிறைகொள்கிறார்கள். ஒவ்வொரு உடலசைவும் எண்ணி எண்ணி பயிற்றுவிக்கப்படுகிறது. அரசியரோ மேலும் பெரிய சங்கிலிகளால் தளைக்கப்படுகிறார்கள். அவைமுறைமைகள், குலச்சடங்குகள், குடிமுறைமைகள். ஒரு சொல்கூட உளம் தெளிந்து குமிழியென எழ இயலாது. ஓர் அசைவுகூட சித்தத்தால் தொட்டு அலையென எழுப்பப்பட முடியாது. அவர்கள் நடனம் கற்பதே ஒருபோதும் இயலாது” என்றான்.

பிருகந்நளை நகைத்து “கேட்கையில் அது மெய்தான் எனத் தோன்றும். ஆனால் என் அறிதல் வேறு. ஆம், விறலியர் உடலில் நெய்யில் அனலென ஆட்டம் பற்றிக்கொள்கிறது. ஆனால் உலர்ந்திறுகிய அரணிக்கட்டையிலும் அனல் உறைகிறது. அத்தனை சிறைகளுக்கு உள்ளே பெண்கள் தனித்திருக்கிறார்கள். சிறையறைக்குள் நாம் அடையும் விடுதலை என ஒன்று உண்டு, வீரரே. அதை ஆண்கள் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். பிறர் நம்மை உள்ளே அடைத்து மூடுகையில் மறுபக்கம் நாம் நம்மை உள்வைத்து முற்றிலும் மூடிக்கொள்ள முடியும். எவருமறியாத தனிமையில் அனைத்தையும் எடுத்து நாமென்று அமரமுடியும். குலமகள்கள் அத்தனிமையில் பற்றிக்கொண்டு பெருந்தழலென எழுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்” என்றாள்.

“அவ்வண்ணம்தான் உத்தரை எழவிருக்கிறாரா?” என்றான் முக்தன். தன் குரலில் எழுந்த ஏளனத்தை வெல்லும் பொருட்டு “என்ன இருந்தாலும் அவர் இளவரசி” என்றான். பிருகந்நளை “முந்தைய ஆசிரியர் அவள் கற்றிருக்கும் இளவரசியின் உடலசைவுகளுக்கு மேல் கூடுதலாக நடனம் எனும் உடலசைவை கற்றுக்கொடுக்க முயன்றார். அவள் கற்ற ஒவ்வோர் அசைவும் இவர் கற்பித்த அசைவுகளுடன் முரண்பட்டன. பிடியானையின் துதிக்கைபோல கை தூக்கி வாழ்த்துகளை ஏற்கவேண்டுமென்று அரசமுறைமை கற்பிக்கிறது. மலைப்பாம்பு இரை நோக்கி இறங்குவதுபோல் அவைவணக்கம் அமையவேண்டுமென்று ஆட்ட நூல் சொல்கிறது. அவை ஒத்திசையவில்லை” என்றாள்.

“நான் அவளுக்கு உள்ளிருந்து பிறிதொன்றை எடுக்க கற்பிக்கப்போகிறேன். அரசியென அவள் இருக்கும்போது ஆடல் அவளுடன் உறையாது. அரசியல்லாதாகி அவளென்று எஞ்சும் தனியறைக்குள் ஆடல் மட்டும் அவளுடன் இருக்கும். அதை தடுக்கும் தன்னுணர்வொன்றும் அவளிடம் எஞ்சாது” என்றாள். அவன் நகைத்து “நன்று. அவைநடுவே அரியணை மேடையில் அவ்வாட்டம் எழாதிருக்கும்வரை அனைத்தும் நலமே” என்றான். அவள் நகைத்து “இரண்டாக பகுத்துக்கொள்வதைப்போல் பெருகும் வழி பிறிதொன்றில்லை. அவ்விரண்டில் ஒன்று பெருகி பிறிதொன்றை உண்ணுமென்றால் அமையும் முழுநிலைபோல் சிறந்த தவமும் இல்லை” என்றாள்.

flowerஉத்தரைக்கு பிருகந்நளை நடனம் கற்பிக்கும் இளவேனில் மண்டபம் அரண்மனைக்கு வடகிழக்காக அமைந்திருந்த அணிச்சோலைக்கு நடுவே இருந்தது. நீள்வட்ட வடிவமான அக்கூடத்திற்கு வெளியே இடைநாழியில் உடைவாளுடன் முக்தன் காவல்நின்றான். உள்ளே பெண்களின் சிரிப்பொலிகளும் அணியோசைகளும் நகையாடும் குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் அவற்றை ஒதுக்க முயன்றாலும் அவையன்றி எவையும் சித்தத்தில் நிலைகொள்ளவில்லை.

முதல்நாள் ஆடல் கற்க தன் ஏழு தோழியருடன் உத்தரை வந்தபோது அவன் கூடத்தின் விரிந்த திண்ணையில் இடையில் கை வைத்து இடை ஒசிய நின்று அவர்களை நோக்கிக்கொண்டிருந்த பிருகந்நளையிடம் “ஏழு பேருக்கும் கற்பிக்கப்போகிறீர்களா?” என்றான்.

அவள் திரும்பி “எந்தப் பெண்ணும் அறியா நிலையில் ஆடல்கற்க தனியாக வருவதில்லை. ஆடலை ஒரு விளையாட்டென்றே எண்ணுகிறார்கள். அதில் கூடி உவகை கொள்ள பிறருடன் வருவார்கள். எப்போது அவ்வாறு உடன்வருபவர்கள் வேண்டியதில்லை என்று அவளுக்குத் தோன்றுகிறதோ அப்போதே நடனம் அவளுக்குள் செல்லத் தொடங்குகிறது. இந்நகரின் அனைவரும் சூழ இருந்தாலும் முற்றிலும் தனிமையிலிருப்பதாக தோன்றுகையில் நடனம் நிகழத் தொடங்குகிறது” என்றாள்.

பட்டாடை உலையும் ஒலியுடன், மெல்ல குலுங்கிய வளையோசை உடனிணைய, உத்தரை படியேறியபோது ஒரு தோழி அவள் காதில் ஏதோ சொல்ல அவள் திரும்பி அவள் கைகளை அடித்தாள். பிற பெண்கள் சேர்ந்து சிரிக்கும் ஓசை கேட்டது. அருகே வந்துநின்ற உத்தரை “வணங்குகிறேன், ஆசிரியையே” என்றாள். “அல்லது ஆசிரியர் என்று சொல்லவேண்டுமோ?” என்று இன்னொரு பெண் கேட்க அனைவரும் சிரித்தனர்.

“ஆசிரியர் எப்போதும் ஆண்பால்தான்” என்று பிருகந்நளை சொன்னாள். “ஏன்?” என்று உத்தரை புருவம் சுளிக்க கேட்டாள். “அன்னை எப்போதும் பெண்பால் என்பதுபோல” என்றாள் பிருகந்நளை. புரியாமல் தன் தோழியரைப் பார்த்தபின் “நன்று” என்று உத்தரை கைநீட்டினாள். ஒரு தோழி தாலத்தில் அணிகளும் பட்டும் பொன் நாணயங்களும் வைத்து அளிக்க அதை பிருகந்நளைக்கு தலைவணங்கி “என் எளிய குருகாணிக்கை. ஏற்று அருளல் வேண்டும். கலையளித்து வாழ்த்துக!” என்று சொல்லி நீட்டினாள்.

பிருகந்நளை அதை வாங்கி அவனிடம் அளித்தபின் கைகூப்பி நின்றாள். உத்தரை முழந்தாளிட்டு அவள் கால்களைப் பணிய பிருகந்நளை அவள் தலையில் கைவைத்து “கலை தேர்க! கலையினூடாக பிற அனைத்தையும் தேர்க! அறிந்தவற்றினூடாக அறியவொண்ணாதவை அருகணைக! அதன் தொடுகை நிகழ்க! ஆம், அதன் தொடுகை நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றாள்.

அவர்கள் ஆடற்களத்திற்குள் சென்றபோது வாயிலில் நின்றபடி அவன் அவர்களை பார்த்தான். அவர்கள் எவரும் ஆடலை ஒரு பொருட்டென எடுத்தவர்களல்ல என்பது ஒவ்வொரு முகத்திலுமிருந்த சிரிப்பிலும், விழிகள் ஒருவரோடோருவர் தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டதிலும் தெரிந்தது. பிருகந்நளை “அமர்க!” என்றாள். “நான் சலங்கையை கட்டிக்கொள்ளட்டுமா?” என்றாள் உத்தரை. “முதலில் ஆடலை நோக்குவதை பயில்க!” என்று சொன்னாள் பிருகந்நளை. “ஆடலை வழக்கமாக விழிகளால் நோக்குவோம்” என்று ஒரு தோழி சொன்னாள். பிருகந்நளை அவளை நோக்கி திரும்பி “ஆம், ஆனால் விழிகளுக்குப்பின் பிறிதொரு ஆடற்பெண் வந்து அமரவேண்டும். உடன் ஆடாது எந்த ஆடலையும் எவரும் அறிய முடியாது” என்றாள்.

உத்தரை அங்கிருந்த சிறு பீடமொன்றில் அமர்ந்து மடியில் கைகோத்தபடி “இப்போது நீங்கள் ஆடப்போகிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றபின் பிருகந்நளை திரும்பி அவனிடம் கை அசைத்தாள். அவ்வசைவின் அழகில் அவன் இளவரசியையும் தோழியரையும் மறந்து முகமலர்ந்து கள்ளுண்டவன்போல் அருகணைந்தான். “அச்சலங்கைகளை அணிவி” என்றபடி பிருகந்நளை தன் காலைத் தூக்கி சிறுபீடம் மீது வைத்தாள்.

அவள் சுட்டிக்காட்டிய சிறு சந்தனப்பேழையைத் திறந்து அதிலிருந்த வெள்ளிச் சலங்கையை எடுத்தான். அது பேழையின் சிவந்த பட்டுமெத்தையில் ஓர் அழகிய சிரிப்பு போலிருந்தது. கைகளில் எடுத்தபோது சிணுங்கியது. அதை அவள் கால்களில் அணிவித்தான். ஆணியை முறுக்கி இரு கால்களிலும் சலங்கை கட்டியதும் அவன் விலகிச்செல்லலாம் என்று அவள் கைகாட்டினாள். ஊதி பஞ்சென தன்னை அவள் விலக்குவதாக உணர்ந்தான். எடையின்றி பறந்து சென்று அறைச்சுவர் அருகே மெல்ல படிந்தான்.

பிருகந்நளை இயல்பாக நடந்து சென்று கூடத்தின் நடுவே நின்றாள். உத்தரை “தாளமிடுவது யார்?” என்றாள். அவள் புன்னகைத்து “காற்றிலாடும் மரங்களுக்கோ நீர்பொழியும் அருவிக்கோ பிறிதொருவர் தாளமிடுவதில்லை” என்றாள். உத்தரை தன் தோழியரை நோக்கியபோது கண்களில் மெல்லிய நகைப்பிருப்பதை அவன் அறிந்தான்.

ஒரு கணத்தில் பிருகந்நளையின் உடலில் தாளத்தின் முதல் ஒலி எழுவதை அவன் கண்களால் பார்த்தான். அவ்வொலி அசைவின்மையின் கணம் என நிகழ்ந்தது. முழு உடலும் உறைந்து அக்கணம் திரைவிலக்கி வைக்கப்பட்ட சிற்பமென்றாகியது. பின்பு நுண்சிற்பங்கள் அவ்வுடலினூடாக ஒழுகத் தொடங்கின. அசைவென புறவுலகில் அவன் கண்ட அனைத்தும் தங்கள் தூயஉருவில் அவ்வுடலினூடாக நிகழ்ந்து சென்றன. அனலும், புனலும், மலர்மரமும், முகிலும். மானும் மயிலும் புரவியும் யானையும் சிம்மமும். குழந்தையும் கன்னியும் காளையும்.

மீண்டும் நிலைகொண்டு உடல் மீண்டாள். குனிந்து நிலம் தொட்டு வணங்கி இடையில் கைவைத்து நின்று உத்தரையிடம் “ஆடுவதென்றால் என்னவென்று அறிந்திருப்பாய்” என்றாள். “ஆம்” என்று அவள் கைகூப்பினாள். அங்கிருந்த ஒவ்வொருவரும் பிறிதெங்கிருந்தோ மீண்டு உடலில் வந்தமைந்தனர். கைநீட்டி “எழுக!” என்று பிருகந்நளை சொல்ல கூப்பிய கைகளுடன் எழுந்த உத்தரை “நான் உங்களுடன் ஆடினேன். உமை இறைவனுடன் ஆடுவதைப்போல” என்றாள் நடுங்கும் குரலில். “உங்கள் ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவிலும் எஞ்சியிருந்த ஒரு சிறு பகுதியை நான் நிறைத்தேன்” என்றாள்.

குரல் தழுதழுக்க உடல் துவள வேறேதோ சொல்ல நாவெடுத்தபின் கால் மடித்து அமர்ந்து பிருகந்நளையின் கால்களில் தன் தலையை வைத்து “எனக்கு அருள்க, தேவா! ஒருகணமேனும் இவ்வுடலால் அவ்வாடலை ஆடமுடிந்தேன் என்றால் பிறவி கொண்டதன் பொருளை அடைவேன்” என்றாள். “நன்று! அது நிகழ்க!” என்றாள் பிருகந்நளை. பெண்டிர் ஒவ்வொருவராக எழுந்து வந்து அவள் அருகே நின்றனர்.

ஒருத்தி கைகூப்பி “பிழை பொறுக்கவேண்டும்” என்றாள். “ஏன்?” என்று பிருகந்நளை கேட்டாள். “தாங்கள் உமையொருபாகன். நாங்கள் அதை உணரும் விழிகளற்றிருந்தோம்” என்றாள். பிருகந்நளை குனிந்து உத்தரையைத் தூக்கி எழுப்பி அவள் விழிநீரைத் துடைத்து “நாம் நாளை முதல் தொடங்குவோம்” என்றாள். “அல்ல, இன்று இக்கணம் ஒருமுறையேனும் ஒரு சுவடேனும் நான் கற்றாக வேண்டும். இன்று இரவு அதை என் நெஞ்சில் வைத்து துயில்வேன்” என்று உத்தரை சொன்னாள்.

குழலை பின்னால் தள்ளி இனிய பறவையொலி ஒன்று எழ வாய்விட்டு நகைத்த பிருகந்நளை “நன்று! முதற்சுவடு என்னவென்று இன்று கற்பிக்கிறேன்” என்று அவள் தோளைத் தொட்டு அழைத்துச்சென்று களம் நடுவே நிறுத்தினாள். “முதல் பாடம் என்பது நிற்பதே. அரைமண்டியில் அல்ல அரைஅளைவோ மூன்றொசிவோ அல்ல. மலரமைவோ கிளைவளைவோ அல்ல. இயல்பாக, எளிதாக” என்றாள்.

உத்தரையின் விழிகளை நோக்கி அவளுக்கு மட்டுமே என பிருகந்நளை சொன்னாள் “ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு நடையுண்டு என்று அறிந்திருப்போம். ஒவ்வொரு நிலை உண்டென்று அறிக! அது உங்கள் கால்கள் நிலத்தூன்றும் அமைப்பால், முழங்காலுக்கும் மூட்டுக்குமான தொலைவால், முழங்கால் வளைவால், தொடைகளின் பருமனால், பின்னழகின் குவிவால், முலைகளின் முழுப்புகளால், கைநீளத்தால் அமைக்கப்படுகிறது. உள்ளிருக்கும் தசைகளின் இழுவிசையால் இன்னும் நாம் அறியாத பலநூறு உடற்கூறுகளால் வழிவாகிறது. அத்துடன் ஒவ்வொரு தசையையும் இழுத்து இயக்கும் உள்ளத்தாலும் அது அமைக்கப்படுகிறது. நின்றிருக்கும் ஒருவனை பார்க்கையில் அவன் உடல் எண்ணங்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் என்பதை காணலாம். எப்போது உளம் கூர்கிறான், எப்போது கிளர்கிறான், எப்போது கருத்தழிகிறான் என்பதை தசைகள் காட்டும்.”

உத்தரை முலைகள் எழுந்தமைய பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். உத்தரையை மெல்ல அழைத்துவந்து அவள் நின்றிருந்த இடத்தில் நிலைகொள்ளச்செய்து “இங்கு நிற்கிறாய். உள்ளத்தின் பிடியிலிருந்து உடலை முழுமையாக விடுவிக்கிறாய்” என்றாள். உத்தரை இரு கைகளையும் கோத்து நின்றாள். பிருகந்நளை “உன் முலைகளை எண்ணி நாணுகிறாய், ஆகவே இவ்வசைவை அடைகிறாய்” என்றாள். “கன்னியாக உணர்கையிலேயே முலை குறித்த உணர்வை பெண்டிர் அடைகிறார்கள். அது நோக்கப்பட வேண்டுமென்று விழைகிறார்கள். நோக்கப்படுகையில் கூசுகிறார்கள். உந்தி முன் நிறுத்துகிறார்கள். தோள் வளைத்து பின் இழுக்கிறார்கள். அவற்றை முற்றிலும் மறந்துவிடுக! அவை மரக்கிளையில் வந்தமர்ந்த இரு அயல்பறவைகள். முற்றிலும் அவற்றை காற்றுக்கும் வெளிக்கும் விட்டுவிடு” என்றாள்.

உத்தரை தோள்களை மெல்ல தளர்த்தினாள். “இடையை ஒசிக்கிறாய். எங்கு நிற்கும்போதும் அங்கிலாதிருப்பதே இடைவளைவில் வெளிப்படுகிறது. இங்கிருக்கையில் உள்ளம் பிறிதெங்கோ பிடிகொண்டிருக்கிறது. அதை விடு. மரங்களைப்போல் நின்றிருக்கும் இடத்தில் முழுமையாக நில்!” உத்தரை அச்சொற்களுக்கு ஏற்ப அறியாது உடல்மாறுபட்டுக் கொண்டிருந்தாள். அவள் சொற்களின் காற்று பட்டு அசையும் சுடர்போல.

அவன் அச்சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான். மிக இயல்பாக பிருகந்நளையின் கைகள் உத்தரையின் உடல்மேல் தொட்டுச் சென்றன. அவளுக்கு மட்டுமேயான குரலில் உடலை விடுவித்து பிறிதொன்றாக்கி அங்கு நிறுத்துவதைக் குறித்து அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். முக்தன் விழிகளை விலக்கி வெளியே பார்த்தான். தன் உள்ளம் பதைப்பு கொண்டிருப்பதை உணர்ந்தான். எங்கோ அரிய பொருளொன்றை வைத்துவிட்டு நினைவு கூர்ந்ததுபோல். பேரிழப்பொன்று அணுகுவதை முன்னரே அறிந்தவன்போல்.

அவ்வுணர்வுடன் தனித்து நின்று அவன் போராடினான். அதை வெல்லவும் கடக்கவும் முயன்றான். அதன்பொருட்டு அதை கூர்ந்து நோக்கினான். அந்நோக்கு சென்று தொட்ட ஒன்றை முழுதுணர்ந்ததும் அஞ்சி உடல் விதிர்க்க பலநூறு காதம் பின்திரும்பி ஓடி மீண்டு வந்தான். உடலில் வியர்வை சூழ்ந்திருக்க மரக்கிளையின் காற்றசைவை உணர்ந்தபின் மூச்சிழுத்து நேர்விட்டு நிலைகொண்டு நேரே பார்த்தான்.

நடனக்கூடத்தில் உத்தரை நின்றிருக்க சற்று தள்ளி இடையில் கைவைத்து பிருகந்நளை நோக்கி நின்றாள். அங்கு நின்றிருந்த உத்தரை முற்றிலும் பிறிதொருத்தியாக இருப்பதை அவன் கண்டான்.

முந்தைய கட்டுரைவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்
அடுத்த கட்டுரையானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்