வெற்றியின் நிகழ்தகவுகள்

images

அன்புநிறை ஜெ,

கண்களின் வலியும் செம்மையும் குறைந்திருக்கிறதா.

மூன்று நாள் வெண்முரசை எட்டிப்படித்துக் கொண்டிருக்கிறேன்.

‘வெற்றி’ தொடங்கி வைத்த விவாதம் நீர்க்கோலத்திலும் தொடர்ந்தது போல உணர்ந்தேன் – //திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா – தமயந்தியின் எண்ண ஓட்டம்//

நேற்று பினாங் சென்று சேரும் வரை சரணும் கணேஷும் நானும் இக்கதையை (வெற்றி) விவாதித்துக் கொண்டிருந்தோம்.

இக்கதைக்குள் வேறு சில கதைகள் நிகழ்தகவுகளாக (probabilities) ஒளிந்து கொண்டிருக்கின்றன.

நமச்சிவாயத்தின் மனைவி லதாவின் மனப்போக்கை நாம் சிறு சிறு வெளிப்பாடுகள் வழியாக மட்டுமே உணரமுடிகிறது – அதுவும் நமச்சிவாயத்தின் பார்வை வழியாக. தனக்கெனத் தனி விருப்புகளேதும் அற்றவளாக, எப்போதும் அடங்கிப் போக முனைபவளாகவே அவரளவில் அவரரிந்த மனைவி. எனில் ரங்கப்பருடனான பந்தயத்திற்கு பிறகு, அதுவரை தனது இருப்பு பொருட்படுத்தப்படாத ஒரு வாழ்வில், காரணங்களற்ற எரிச்சலும் வசையும் பொழியும் கணவனையும், கரிசனமும் கண்ணியமும் காட்டும் ஒரு பெரிய மனிதரையும் ஒன்றாகக் காண நேரிடுகிறது.

ரங்கப்பர் குறித்தும் அவர் திட்டம் குறித்தும் அவளிடம் கணவர் கூறாவிட்டாலும் கூட அவளை ரங்கப்பரோடு படுக்கத் தயாரனவள் போன்ற வசைகள் வாயிலாகத் தன் கணவனின் அகச்சிக்கலை அவள் மனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கும். அவள் இக்கதையின் ஆண்கள் நம்புவது போல உலகமறியாத பேதையாக இருப்பினும், தன் துணையின் வாயுரைக்காத குறிப்புகளை முன்னமே அறிந்து நடக்கும் திறன் உடையவள் என்பதை நமச்சிவாயத்தின் வாயிலாக முன்னரே அறிகிறோம். எனவே ஜமீன்தார் பெயரும் வருகையும் நமச்சிவாயத்தில் ஏற்படுத்தும் நிலைகொள்ளாமையும் பதட்டமும் அவள் உணர்ந்தே இருப்பாள். அந்நிலைகொள்ளாமையிலும் அவளை ரங்கப்பரோடு பழகும் வாய்ப்புகளை மேலும் மேலும் அமைத்துக் கொடுக்கும் அவளது கணவனின் ஒரு நுண்ணிய அகநாடகத்தை ஏதோ ஒரு வகையில் அறிந்தே அவளும் பங்கு கொள்கிறாள். மகனது உடல்நிலை என்ற பெரும் காரணம் இருப்பினும், ரங்கப்பருடன் மருத்துவமனை செல்லும்போது நிகழ்பவற்றை அன்றாடம் ஒப்பிப்பது போல தன் கணவரிடம் கூறிக் கொண்டே மெல்ல மெல்ல ஒரு வகையான விடுதலையை அடைகிறாள்.

என்றுமே ஏதோ ஒரு வகையில் எல்லை மீறுபவர்கள், தங்களது மீறல் தனது வேலிகளுக்கு மேலோட்டமாகவேனும் தெரியும் என்ற நிலையில் அடைவது போன்ற ஒரு மனவிடுதலை. யாரும் அறியாத மீறல் எனும் இறுக்கம் தளர்ந்து,

மனதளவில் நிகழும் கட்டுக்களின் முறுக்கவிழ்ப்பாகவே இருக்கும்.

பின்னர் மகனது உயிர்ப்போராட்ட நாளில் உச்சதருணத்தில் ரங்கப்பர் லதாவுக்கு இடையில் நிகழ்ந்தது என்ன என்பது கதைக்குள் இல்லை. அங்கே ஒரு கதை சில சாத்தியங்களோடு காத்திருக்கிறது.

1.கடமைகளின் அழுத்தத்தில் உணர்வுகளின் உச்சத்தில் ரங்கப்பரோடு சென்ற லதாவிடம் அந்தப் பந்தயம் குறித்து ரங்கப்பர் கூறியிருக்கலாம். அவளை சூதில் பணயம் வைத்த தருமனை அவளது மரியாதைக்குரிய அர்ஜுனன் முற்றாகக் கவரும் இடமாக அது இருந்திருக்கலாம். அச்சாத்தியத்தின் நீட்சியில் அந்த ஐந்து லட்சமும், அதன் பிறகு நமச்சிவாயம் கொள்ளும் புதுப்பணக்கார மோஸ்தர்களும் அவள் மனதுக்குள் அடக்கிய இளிவரலோடு ஒரு துளி விஷத்தோடு காலம் முழுவதும் பார்த்திருந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த விஷத்தையே தனது இறுதி நொடியில் நமச்சிவாயத்தின் கண்டத்தில் நிறுத்திவிட்டுச் செல்கிறாள்.

  1. அன்று மருத்துவமனையில் மகனிருக்க, நமச்சிவாயத்தின் பந்தயம் குறித்து ரங்கப்பர் குறிப்பிட்ட பின்னர் அவள் கொள்ளும் மனவிலக்கமும் அதிர்ச்சியும் காரணமாக அவளுக்கும் ரங்கப்பருக்கும் அன்று உண்மையில் உறவென ஏதும் நிகழாதிருக்கவும் சாத்தியம் நிறைய உண்டு. அந்த சாத்தியத்தை நீட்டிப் பார்த்தாலும் அர்ச்சுனன் தருமனை மனதளவில் வென்றதும், அவளது இறுதி நஞ்சாக அது வெளிப்படுவதும் உகந்த முடிவே.

நமச்சிவாயம் கதையின் மைய நாயகனாக வருபவர். எதையும் சற்றுப் புராணம் கலந்து சொல்லும் தன்மை கொண்டவர். அவரும் அன்றாடம் இயங்கும் அவரது கர்ம மணடலத்தில் பெரும் பணக்காரர்களால் பொருட்படுத்தப்படாதவர். அவர்கள் மேல் எல்லாம் அவருக்கு ஏற்படாத ஒரு பொறாமை அவரை சமமாக நடத்தும் ரங்கப்பர் மேல் ஏற்படுவதும் மனித இயல்பே. ஆணவம் கொண்டவர்களை அவர்களது சமூக நிலை கருதி அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள், அம்மேல்தட்டுக்குள் தங்களை சமமென நடத்துபவர்களால் நுண்மையாக எங்கோ சீவப்பட்டு வஞ்சம் கொள்வதைக் காணலாம்.

ஒருவகையில் ரங்கப்பர் போல ஆக விரும்பும் கனவு அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தொண்ணூற்றாறு வயதிலும் தொடரும் ப்ளாக்லேபிள் ரசனை அதன் ஒரு அடையாளம். அப்பந்தயம் நமச்சிவாயம் பின்னர் உணர்வது போல ஆணவத்தின் ஒரு உச்சதருணம்.

எனினும் ஐந்து லட்சத்துக்குத் தன் தெருவில் இருக்கும் எந்தப் பெண்ணும் வருவாள் எனும் அவரது எண்ண ஓட்டம் அவருக்குள் முன்னரே இருக்கும் ரங்கப்பர் தரப்பையே காட்டுகிறது. ஐந்து லட்சத்துக்கான சாத்தியங்களையும் ஒருவேளை அவர் தோற்றாலும் பெறக்கூடிய பணவரவுகளையும் எண்ணும்போதும், பென்ஸ் கார் தேவை என்று ரங்கப்பர் கூறியதும், மொத்த எரிச்சலும்போய் அவர்மேல் பிரியம் வந்தது எனும் இடத்திலும் விலை போவது நமச்சிவாயம்தான்.

தன்னைப் பொருட்படுத்தாத அண்ணன் குடும்பத்தின் பதற்றத்தை ரசித்து ஐந்தாயிரத்தை இருபதாயிரம் எனச் சொல்லும் அவர் மனநிலை காட்டுவது – உண்மை எதுவாக இருப்பினும் சமூகத்தின் பார்வைக்கு மட்டுமே அவர் கொடுக்கும் மதிப்பைக் காட்டுகிறது. மனைவி திரும்பி வந்தபிறகு தான் தோற்றுவிட்டதாக முடிவு செய்து கொள்ளும் நமச்சிவாயம், பந்தயத்தின் இறுதியில் ரங்கப்பர் தான் தோற்றுவிட்டதாகக் கூறித் தரும் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு தருணத்தில் சில நிமிடங்கள் நிற்கிறார். எனில் சமூகத்தின் முன் இன்னும் முகத்தை இழக்காதவரை அது வெற்றியே என அதைக் கடந்து அப்பணத்தை மூலதனமாக்கி வாழ்வில் பொருளாதார ரீதியாக உயர்கிறார்.

அதன் பிறகான நமச்சிவாயம் – லதா வாழ்க்கையோ, ரங்கப்பர்-நமச்சிவாயம் சந்திப்புகளோ நமக்குக் கதையில் இல்லை. எனில் அவருக்கும் தனது நுட்பமான தோல்வி தெரிந்தே இருக்கும். மாமலரில் வருவது போல, புறக்கண்களுக்குப் பெரும் வெற்றிகளின் உச்சத்தில் நிற்கும் தேவயானி, தனது அடிமை நிலையை முற்றிலும் ஏற்றுக்கொண்டுவிட்ட சர்மிஷ்டையை அசோகவனியில் கண்டதும் உணரும் அம்முள்முனை – ஏதோ தானறியாத தளத்தில் தன்னை முற்றிலும் வென்று விட்டாள் சர்மிஷ்டையெனக் கண்டுகொள்ளும் அம்முள்ளை லதாவிடமோ ரங்கப்பரிடமோ நமச்சிவாயம் உணர்ந்து கொண்டேதான் இருந்திருக்கமுடியும். ஏதும் நிகழாதது போல உலவும் நம்ச்சிவாயத்தை உறங்குவது போல் நடிப்பவரை எழுப்புவதற்காக லதா தனது அந்திமத்தில் கூறியிருக்கலாம்.

இறுதியாக ரங்கப்பரின் தரப்பு. மிகுந்த தன்னம்பிக்கையோடு இறங்கி விளையாடும் அம்மனிதர் கோமளவல்லி போலல்லாது லதாவிடம் உணர்வுகளால் நெருங்குகிறார். அதனால்தான் மூன்று மாதம். எனில் உணர்வுகளால் ஆடப்படும் ஆடல் ஆடுபவனுக்கும் எதிர்விசையளிக்கும். எந்தப் பெண்ணையும் அவளது தன்மானம் புண்படாது அவள் விரும்புவதைத் தரவேண்டும் எனும் அவரது சித்தாந்தம் காரணமாகவே, இங்கு வெளிப்படையாக நமச்சிவாயத்தை வெற்றி அடைந்தவராக சமூகத்துக் காட்டுகிறார். அது அப்பந்தயத்தில் வெற்றி பெற அவர் கொடுக்கும் விலை. இந்தப் பெண்ணேனும் தோற்று விடக்கூடாது என்று விழைவதும் பின்னர் அதுவும் சரிந்து விழுகையில் தான் அழுதிருப்பதாகவும் கூறும் ரங்கப்பர், உண்மையில் அப்படி ஒரு பெண்ணை லதாவில் கண்டடைந்திருக்கவும் கூடும். அது அவரது பெண்கள் குறித்த சித்தாந்தத்தின் தோல்வியாக இருப்பினும், எதைத்தான் நம்புவது என ஏங்கும் மனதுக்கு வாழ்வின்மீது ஆதாரத்தைக் கொடுத்த லதாவின் வெற்றியாக இருக்கலாம்.

கதையைப் படித்ததும் முதலில் தோன்றியது – இது பெண்ணின் பலவீனம் குறித்த கதையல்ல, மானுடனின் பலவீனங்கள் குறித்த கதை என்பதே. எவருக்கும் ஓர் விலை அல்லது எல்லை உண்டு, அதையே வாழ்க்கை சோதிக்கிறது. அவ்வண்ணமெனில் அப்படியே எழுதியிருக்கலாமே, ஏன் பெண் என்பவள் எளிதில் வசப்படுபவள் என்று எழுதவேண்டும் என்ற கேள்விக்கு – ஆம் அதுவும் சாத்தியமே இக்கதையில் அது பெண்ணாக நேர்ந்திருக்கிறது என்பதே பதிலாகத் தோன்றுகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள ஜெ.

படித்து முடித்தவுடன் எழுத நினைத்தேன். மடிக்கணினி பழுதாகி, அதை சரி செய்ய இவ்வளவு நாள்..

பல தளங்களில் இயங்குகிறது என நினைத்தேன். பலர் முக்கியமானவைகளை எழுதி விட்டார்கள். சுபா அவர்களின் கடிதம் வேறொரு கோணத்தில் இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனக்கு தோன்றியது –

கண்ணியம் கருணையுடன் சேர்ந்த அதீத போட்டி (விளையாட்டு?) மனப்பான்மை, ரங்கப்பரை ஒரு வெல்ல முடியாத (அசுரன்?) வடிவமாக்கி விட்டது. எனினும், வெல்ல முடியாதவனின் கருணை அல்லது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல்… தெய்வத்தாலும் ஆகாது வெற்றி .. எனினும் முயற்சி தான் செய்து பார்க்க வேண்டும்.. :)

ரங்கப்பர் தன்னளவில் வெற்றி பெற – வெளியுலக தோல்வியை அறிவிக்க வேண்டும். எனினும், பிறரின் கையறு நிலையில் பேரம் பேசுவது, அவர் இது வரை தோற்றுவித்த பிம்பத்திற்கு நேர் எதிர்மாறான ஒரு மாற்றுரு. அந்த நிலையே கூட அவரது முடிவை கூட மாற்றி இருக்கலாம். வெற்றிக்கு அருகே உள்ள வெறுமை. ஒரு அபத்தம்.

 (நிஜ) பாகுபலியின் கதை போல. அமெரிக்கன் பியூட்டி திரைப்படத்தில் ஒரு இளம்பெண்ணை நாடி தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு நடுத்தர வயதினன் – அவளை நெருங்கும் நேரம், திடீரென அபத்தத்தை உணர்வது போல.

ரங்கப்பரின் வார்த்தைகளை கவனிக்கலாம் – என் தீவிரம்தான் எனக்கு சில உயர்வான விஷயங்களைக் கற்றுத்தந்தது…. எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும் – அவர் சொல்ல வருவது என்ன?

எதை நாம் கட்டுப்படுத்தி வெல்கிறோம் என்று நினைக்கிறோமோ அதுவே நம்மை ஆள்கிறது – என்பதா? மரப்பந்து விளையாட்டை – வண்ணக்கடல் விவரணம் போல – திடீரென பந்து நம்மை ஆட்டுவிப்பது போல

லதா ஏன் அதை இறக்கும் தருவாயில் சொன்னாள் ? எனக்கும் தோன்றியது. மதுசூதன் கூறியது போல வஞ்சமாக இருக்கலாம். அவள் சொல்லாதிருந்தால்.. அது சுவாரசியம்.. அவள் சொல்வதே ஒரு பொய்யாக இருந்தால் .. அது இன்னும் சுவாரசியம். ஜப்பானிய திரைப்படம் ரோஷோமோன் ஞாபகம் வந்தது.

லதாவிற்கு தெரியாமல் இருக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. முதிரா வயதில் புகை பிடித்து விட்டு மெல்லும் மென்தால் மிட்டாய்கள் மூலம் புகை பிடிக்கும் வழக்கத்தை பெற்றோரிடம் மறைப்பது போல. பெற்றோர்களுக்கோ கட்டாயமாகத் தெரியும். லதா ஊகித்து இருப்பாள்.

குழந்தைக்காக – என்பது லதாவிற்கு மீட்சி தரப்போவதில்லை. வெளியே சொல்லப்பட வேண்டியது அவரது தோல்வியையே என்கிற சூழ்நிலைக்கு ஒப்புக் கொள்ள நினைத்த மாத்திரம் ரங்கப்பர் மீட்சி அடைந்து விட்டார்.

தவிர.. சூதின் தன்மை. ஊழ் எப்படி வெகு விரைவாக காய்களை நகர்த்துகிறது. திடீர் தன்னம்பிக்கை அளிக்கிறது. எல்லாவற்றையும் இழக்கும் தருணத்திலும் – இதோ – எல்லாவற்றையும் மீட்டு விடுவேன் என்கிற வேகம் – எந்த அறிவுரையையும் ஏற்காத நிலை – கலி புருஷனோ?

தேவகி சித்தியின் டயரியில் ஒரு பெண். வெற்றியில் ஒரு பெண்.

தற்போதைய சூழ் நிலையில் – பெண் (அல்லது மனைவி) என்பதால் வெற்றி கதைக்கு ஒரு சில சிக்கல்கள் தோன்றுகின்றன. அதனை மற்ற வாசகர்கள் கவனித்து விட்டார்கள்.

காகேமூஷி ஜப்பானிய என்கிற திரைப்படத்தில், போலியாக ஊடுருவும் அரசனை கண்டு கொள்வது ஒரு குதிரை தான். மகனோ மகளோ, நண்பனோ, ஒரு செல்லப் பிராணியோ, மனதிற்கு உகந்த பொருளாக கூட இருக்கலாம். சூதில் வைத்தவுடன்.. இழக்க ஆரம்பித்து விடுகிறோம். மீட்டு எடுத்தாலும் கூட.. முன் போல் இருப்பதில்லை உறவுகள்.

பன்னிரு படைக்களம் .. மீண்டும் .. வேறொரு சமயம் .. வேறு சில பாத்திரங்கள் என்றும் தோன்றியது.

ஜப்பானிய உழவர் பழமொழி – போரில் வெல்வது எவரும் இல்லை..

பந்தயத்திலும் .. சூதிலும் ..

அன்புடன்

முரளி

***

முந்தைய கட்டுரைசினிவா ஆச்சிபி
அடுத்த கட்டுரைசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு