இருகுரல்கள்

suna

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

உங்கள் பதில் கண்டதில் பெரு மகிழ்ச்சி. நண்பர்களிடம் சிலாகித்து மாய்ந்துப் போனேன். தமிழ் தட்டச்சு மின்பொறியினைத் தேடிப்பொருத்தி, அடுத்த மின்னஞ்சல் தமிழில் தான் எழுத வேண்டும் என்று ஒரு வாரம் ஓடிற்று.

நீங்கள் வாசிப்பு பற்றியும் மொழி பற்றியும் சொன்னது உண்மையே. பிடிப்பின்றி ஒரு ஊரிலுருந்து இன்னொரு ஊருக்கு மாற்றலாகியே, எங்கள் வாழ்க்கை கழிகிறது. தமிழர்கள் எங்கு சென்று குடியேரினாலும், அந்த நிலத்தின் வாழ்வியலின் மீது பற்றற்றே இருக்கின்றனர் என்று ஒரு புத்தக விமர்சனித்தின் போது நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்த ஊரில் தேர்தல் அன்று விடுமுறை விட்ட பின் தான், அன்றுதான் தேர்தல் என்று, எங்கள் இருவருக்கும் தெரிந்தது.

உங்கள் புத்தகங்கள் மூலமாக தான், “தத்துவம்” என்ற genre அறிமுகமாகியது. நடுநிலை அரசியல் கட்டுரைகளும், தமிழில் உங்கள் எழுத்துகள் மூலமாக தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். (ஜனநாயக சோதனைச்சாலையில்). இந்திய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவதை, உங்கள் பயண அனுபவங்கள் வழியே மிக அழுத்தமாகப் பதிவு செய்து இருந்தீர்கள்.அப்போது ராணுவ வாழ்க்கையின் மீது எனக்கு, ஒரு சலிப்பு ஏற்பட்டிருந்தது. உங்கள் கட்டுரைகளே சரியான புரிதலை கற்பித்தது.

போன வருடம், விஜயா பதிப்பகம் திரு. மு. வேலாயுதம் அவர்களை முதன்முறை சந்தித்தேன். பில் போடும் போது, உங்கள் படைப்புகளை நான் வைத்ததிருந்ததைப் பார்த்து, மிகவும் மகிழ்ந்துப் போனார். என்னுடன் வா என்றுக் கூட்டிச் சென்று இன்னும் பல நல்ல புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். “நூறு நாற்காலிகள்” தனி பதிப்பாக வெளிவந்திருந்த நேரம். ஏற்கனவே படிச்சுட்டேன் சார் என்றதும், பரவாயில்லம்மா திரும்ப படி, என் ஞாபகமா வெச்சிக்கோ என்று கையொப்பமிட்டு பரிசாகத் தந்தார். “புறப்பாடு” நூலை முதலில் படி, என்று நிறைய அன்புக்கட்டளைகள் வேறு. என் வயசினர் மூன்றாம் தளத்திற்கு செல்வதே மிக குறைவு என்று வருந்தினார்.

ஒரு புத்தகம், ஒரு கட்டுரை, நம் கருத்தோட்டத்தை, அணுகுமுறையை, வாழ்வியலை எப்படி புரட்டிப்போடும் என்று உணர்ந்து இருக்கிறேன். என் வருத்தம் எல்லாம், என் சந்ததியினரே புத்தகங்களை அயர்ச்சியுடனே அணுகுகின்றனர். சமூக வலைதளகங்களே அவர்கள் நேரத்தை தின்றுவிடுகின்றன. இவர்கள், இலக்கியத்தைப் பற்றிய அறிவும், புரிதலும் பெற வேண்டும். நான் கருவுற்றிருந்தப் போது நிறைய புத்தகங்கள் படித்தேன் (754). வயிற்றில் உள்ள என் குழந்தைக்கும் இப்பழக்கம் வர வேண்டும் என்று பிராத்திப்பேன்.

உலோகம், ஜெ. குறுநாவல்கள், விசும்பு, பேய்க் கதைகளும் தேவதைக்கதைகளும் படித்துவிட்டேன் ஒரு வாரத்தில். சாரு நிவேதித்தா அவர்களின் ஜீரோ டிகரி, ராஸ லீலா முடிக்க முடியவில்லை. க. வெங்கடேசன் அவர்களின் “காவல் கோட்டம்” படித்துக்கொண்டுருக்கிறேன். “இவர்கள் இருந்தார்கள்” இல் இருந்த எழுத்தார்களின் படைப்புகளைத் தேடிக் கொண்டுருக்கிறேன்.

“டார்த்தீனியம்” மனசை இருளடித்துவிட்டது.

நிறைய எழுந்துங்கள் சார். எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் உலகம் முழுக்க. உங்கள் எழுத்தே எங்கள் தனிமைக்கு மருந்து.

இப்படிக்கு,

சுனந்தா விஜயகுமார்

***

அன்புள்ள சுனந்தா,

உற்சாகமாக நீங்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலக இலக்கியங்களை ஏராளமாகவே ஆங்கிலம் வழியாக வாசிக்கலாம். ஆனால் நாம் மன அளவில் வாழும் பண்பாட்டின் நுட்பங்களை தமிழிலேயே வாசிக்கமுடியும். அவை மொழிவெளிப்பாடுகளாகவே காலத்தில் பதிவாகின்றன. வாழ்த்துக்கள்

ஜெ

***

Gnana_golden

ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடந்த ஆறு மாதங்களாக உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாசித்து வருகிறேன் என்பதை விட, என்னைப் பின்தொடரும் என் நிழலின் குரலாகி விட்டீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. என் சிந்தனை முறையில் நீங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் என் நெஞ்சத்து அகம் மட்டுமே அறியும் ஒன்று.

நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதத்தின் முதல் வார்த்தை இதுவாக இருக்க வேண்டும் என்று விரும்பி தேர்ந்தெடுத்தேன். துளியும் மிகை இல்லை.. நன்றிகள் பல..

இலக்கிய அமர்வுகளில் அல்லது விவாதங்களில் பங்குபெறும் தேர்ச்சி அல்லது தகுதியை இன்னும் அடையவில்லை, ஆனால் விரைவில் தங்களை சந்திப்பேன் என்றே தோன்றுகிறது.. அதுவரை கடிதங்கள் மூலம் தொடரலாம் என ஒரு எண்ணம்.

அன்புடன்,

ஞானசேகர் வே

***

அன்புள்ள ஞானசேகர்

விவாத அரங்குகளில் பங்குபெறுவதே தேர்ச்சியை அடைவதற்காகத்தான். ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருக்கும். ஓரிரு முறை அமர்ந்தபின் தைரியம் வரும். பேசப்பேச தெளிவு வரும். தேர்ச்சி அடைந்தபின் உண்மையில் விவாதங்களோ அரங்குகளோ தேவையில்லை. தைரியமாக அரங்குகளுக்கு வாருங்கள். ஒரு பிரச்சினையுமில்லை

ஜெ

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
அடுத்த கட்டுரைஅறத்தால் கண்காணிக்கப்படுதல்