கிசுகிசு வரலாறு குறித்து…

Nehru
அரவிந்தன் கண்ணையனின் கட்டுரை. கிசுகிசு வரலாறு குறித்து அவருடைய அவதானிப்புகள், [எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு ]   மறுப்புகளுடன். நான் சொன்னது சம்பிரதாயமான வரலாற்று நோக்குக்கு அப்பால் நின்று பார்க்கும் ஒரு புதிய கோணம், ஒரு புதிய கருத்து. அதை அவர் புரிந்துகொள்ளாமல் அவரது கோணத்தில் எழுதியிருக்கிறார். ஆகவே சில விளக்கங்கள்.
நான் நேருவைப்பற்றிய அவதூறுகள், வசைகள் அனைத்திற்கும் எப்போதும் அழுத்தமான மறுப்புகளும் விளக்கங்களும் அளித்துவருபவன். நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்பதில், உலகமறிந்த மாபெரும் ஜனநாயகவாதி என்பதில், மாபெரும் மானுடத்தலைவர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவருடைய நேர்மையை, இலட்சியங்களை நான் எப்போதும் ஐயப்பட்டதில்லை.
அதேசமயம் நேருவை நல்ல நிர்வாகி அல்ல என்றே நான் நினைக்கிறேன். பெருங்கனவுகளை காண, சமூகத்தை வழிநடத்த அவரால் இயன்றது. இலட்சியவாதிகளை ஒருங்கிணைக்க, அதனூடாக பெருஞ்செயல்களைச் செய்ய முடிந்தது.. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் திறமையற்ற நிர்வாகி என்றே நான் நினைக்கிறேன்.

அவருடைய பலவீனங்கள் என்பவை அவருடைய நல்லியல்புகளேதான். அவர் மானுடத்தை, மனிதர்களை நம்பியவர். தன்னைச்சூழ்ந்தவர்களுக்கு இனியவர்.  கடுமையான மறுப்புகளைச் சொல்லும் திராணியற்றவர்.அவரது ஆட்சியில் அவருடைய உறவினர்களின் செல்வாக்கு மிதமிஞ்சி இருந்தது. கிருஷ்ண மேனன் போன்றவர்களை நட்பின் பொருட்டே அவர் முதன்மைப்பதவிகளில் வைத்திருந்தார். அவருடைய காதலிகள் ஆட்சியில் பலவகையில் செல்வாக்கு செலுத்தினர்.தனிப்பட்ட உணர்வுகளை ஆட்சியுடன் கலந்துகொள்வது அவருடைய பலவீனமாக இருந்தது.

அதனால் விளைந்த பிழைகள் அவர் நிர்வாகத்தில் இருந்தன. பட்டேல் இருந்தவரை அவரால் அவற்றைக் கடக்கமுடிந்தது. பின்னர், சீனப்படையெடுப்புக்குப்பின்  அவருடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் கைவிடப்பட்டவராக, தனித்தவராக உணரச்செய்யும் அளவுக்கு தோல்விகள அவரைச் சூழ்ந்தன. அவருடைய மரணத்துக்கே அது காரணமாகியது.

நான் அவரை வழிபடுபவன். ஆனால் அவரை தெய்வநிலைக்கு கொண்டுசெல்வதில், அவருடைய பிழைகளுக்கும் சரிவுகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை. சென்ற முப்பதாண்டுகளாக நேருவை வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து வாசித்து, அவதானித்து நான் அடைந்த புரிதல் இது.

 

m.o

நான் என் கட்டுரையில்  ‘கிசுகிசு வரலாறு’  எழுதியதை அரவிந்தன் கண்ணையன் புரிந்துகொள்ளவில்லை.. அது எளிதாகப்புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு சம்பிரதாயமான கருத்தும் அல்ல. நான் கிசுகிசுவை வரலாறு என்று சொல்லவில்லை. கிசுகிசு எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் சொல்லவில்லை. மாறாக அந்த மதிப்பை அவற்றுக்கு அளிக்கக் கூடாது என்றே அக்கட்டுரையில் பல முறை சொல்கிறேன். கிசுகிசுவரலாற்றை எழுதுபவரின் ஆளுமை, நோக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளாமல் அதை கருத்தில்கொள்ளக்கூடாது.

ஆனால் அதற்கு ஓர் வரலாற்றுமுக்கியத்துவம் உண்டு என்பதே நான் சொல்லவந்தது. அது என்ன என்பதையே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அக்கட்டுரையில் அதிகாரபூர்வ வரலாறு என்பது அரசாங்க வெளியீடான வரலாறு என்னும் பொருளில் அல்ல. அதையும் அக்கட்டுரையிலேயே வரையறை செய்திருக்கிறேன். அது அரசு அறிக்கைகள், செய்திகள் வழியாக வெளியிடப்பட்டு, அரசியல்சரிகளால் ஆமோதிக்கப்பட்டு, பொதுவாக ஏற்கப்பட்ட வரலாறு. அதன் சுருக்கமான வடிவமே பாடங்களில் கற்பிக்கப்படுகிறது.

வரலாறு என்பது பொதுவாக அறியப்பட்ட செய்திகளாலும் தரவுகளாலும் தர்க்கங்களாலும் ஆனது அல்ல என்பது என் எண்ணம். அது தனிமனித பலவீனங்கள், தனிமனித உறவுகள் ஆகியவற்றாலும் ஆனது. தனிமனிதர்களின் ஆசைகள், வஞ்சங்கள் ஆகியவற்றாலான பல்வேறு ரகசிய உள்ளோட்டங்களும் கொண்டது. இவ்வெண்ணத்தை தல்ஸ்தோயின் போரும் அமைதியும் என்னும் நாவலில் இருந்தே நான் அடைந்தேன். எப்போதும் நான் வரலாற்றை அணுகுவது இந்தக்கோணத்தில்தான்.

அரசியல்நோக்கர்கள், அரசியல் சித்தாந்திகள் இந்த அம்சத்தை பொருட்படுத்துவதில்லை. அதாவது பொதுமேடைகளில். அந்தரங்க உரையாடல்களில் முழுக்கமுழுக்க கிசுகிசுக்களையே அரசியலென்றும் வரலாறென்றும் பேசிக்கொண்டிருப்பார்கள். அதை நம்பியே முடிவுகள் எடுப்பார்கள். ஆனால் விவாதங்களில் புறவயமான தரவுகளால் ஆன ஒரு வரலாற்றுச்சித்திரம் மட்டுமே அவர்களால் பொருட்படுத்தப்படும். அதுவே முறையானதும்கூட. ஏனென்றால் அதைக்கொண்டே ஏற்றும் மறுத்தும் வாதிடமுடியும்.

ஆனால் மனிதர்களாலானதாக வரலாற்றை அணுகும் எழுத்தாளனுக்கோ சமூகவியல்சிந்தனையாளனுக்கோ அவர்கள் ஆராயும் அந்தச் சித்திரம் போதுமானது அல்ல. மேலும் உள்ளே செல்லும் ஒரு பார்வையை அவன் நாடுகிறான். அதற்காகவே அவன் அந்த வரலாற்றுச்சூழல் சம்பந்தமான தனிப்பட்ட பதிவுகளை அணுகுகிறான். அந்தத் தனிப்பட்டப் பதிவுகளுக்கு புறவயமான ஆதாரங்கள் இருக்கமுடியாது. ஆகவெ அவை கிசுகிசுக்களாகவே வரலாற்றில் இருக்கும். அவை அவனுக்கு முக்கியமானவை, நான் சொல்லவந்தது அதையே.

அவற்றை கருத்தில்கொண்டே வரலாறு எழுதப்படவேண்டும் என நான் சொல்லவரவில்லை. வரலாற்றாசிரியன் நோக்கில் அவை ’ஆதாரமற்றவை’தான். ஆனால் வரலாற்றை மனிதகதையாக புரிந்துகொள்பவனுக்கு அவை தவிர்க்கமுடியாதவை. இந்தக்கோணத்திலேயே நான் எம்.ஓ.மத்தாயின் நேரு நினைவுகள் நூலை பார்க்கிறேன். அது கிசுகிசுவரலாறுதான். ஆனால் நேருயுகத்தின் விடுபட்ட பகுதிகளைப்புரிந்துகொள்ள அதைப்போல உதவும் இன்னொரு நூல் இல்லை. அந்நூலைப்பற்றிய விமர்சனத்திலேயே மத்தாயின் சிறுமையை, அவர் எழுதவிரும்பும் சித்திரத்தின் உள்ளடக்கத்தை சொல்லி அதைக்கடந்தே அதன் பல அம்சங்களைக் கருத்தில் கொள்கிறேன்.

Gen_P_N_Thapar

ஜெனரல் தாப்பர் பற்றிய சித்திரம் பலநூல்களில், மத்தாயின் நேருநினைவுகள் உட்பட, ஏறத்தாழ ஒரேவகையாகவே சொல்லப்பட்டுள்ளது. தாப்பர் அந்த இடத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குக் காரணம் விஜயலட்சுமி பண்டிட்டின் பிடிவாதம்தான் என்று மத்தாய் சொல்கிறார். எனக்கு அது நம்பகமானதாகவே தோன்றுகிறது. ஆதாரம் கொண்டுவா என்றுகேட்டால் அது ஆதாரபூர்வமானது அல்ல என்றே சொல்வேன். ஆதாரங்களுடன் மட்டுமே வரலாறு செயல்படமுடியும் என நம்புபவர்கள் நம்பிக்கொள்ளவேண்டியதுதான்.

உதாரணமாக இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் தீரேந்திர பிரம்மசாரி ஒரு மாபெரும் அதிகார மையம். வாஜ்பேயியின் ஆட்சிக்காலம் அவருடைய அத்தனை ஆளுமைக்கும் அப்பால் ரஞ்சன் பட்டாச்சரியா, பிரிஜேஷ் மிஸ்ரா ஆகியோரால் ஆட்டுவிக்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் எந்த ஆதாரபூர்வ வரலாறு காட்டும்? ஆனால் அதை அறியாதவனுக்கு எந்த வரலாற்று உண்மை புலப்படும்? அது கிசுகிசு வரலாறாகவே எஞ்சும். அதைத்தவிர்த்து ஒருவரலாறு எழுதப்படட்டும். அந்தக் கிசுகிசுவரலாற்றையும் சேர்த்து வாசிப்பவனுக்கே வரலாற்றை மனிதகதையாகப் பார்க்கமுடியும்.

aravi
அரவிந்தன் கண்ணையன்

 நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய வீரம்செறிந்த போர் ஒரு வரலாற்றுச்சித்திரம். ஆனால் அந்த ராணுவத்தில் பணியாற்றிய என்.என்.பிள்ளை எழுதிய நான் என்ற சுயசரிதை காட்டும் சித்திரம் முற்றிலும் வேறு. நான் இந்த தனிநபர் சார்ந்த வரலாற்றையும் கருத்தில்கொண்டுதான் நேதாஜியை மதிப்பிடுவேன். இதை அரசியல் நோக்கர்களுடன் அமர்ந்து வாதிட முடியாது. இது ஆதாரங்களை முன்வைத்து வாதிட்டு நிறுவவேண்டிய வரலாறு அல்ல, சொந்த வாழ்க்கைநோக்கால் அந்தரங்கமாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.

வலம்புரி ஜானின் எல்லைகள், நோக்கங்கள் ஆகியவற்றைப்பற்றி அறிந்துகொண்டு அவ்வரலாற்றை வாசிப்பவனுக்கு தமிழக அரசியல் பற்றிக்கிடைக்கும் சித்திரம் மேலும் நுட்பமானது, யதார்த்தமானது. நான் சொல்லவருவது இதைத்தான். எம்ஜியார் ஜெயலலிதாவை வெறுத்தும் விரும்பியும் கொள்ளும் போராட்டத்தை வாசிக்கையில் நாம் அடையும் வரலாற்றுச்சித்திரம் ஒன்று உண்டு. அது எனக்கு முக்கியமானது. வந்து தொலைக்காட்சி விவாதத்தில் அல்லது முகநூலில் பேசி அதை நிறுவு என்றால் என் வேலை அதுவல்ல என்பதே பதில்.

வேண்டுமென்றால்இந்த கிசுகிசு வரலாறு, மையப்போக்கு வரலாற்றால் அதை நம்பும் அரவிந்தன் கண்ணையன் வழியாக முறையாக மறுக்கப்பட்டுவிட்டது என்று கொள்வோம். அப்புறம் என்ன?

ஜெ

***

 


நேருவின்பொருளியல்கொள்கை பற்றி…

நேரு

நேரு x பட்டேல் விவாதம்

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்

***

முந்தைய கட்டுரைவரலாற்றின் வண்டலில்…
அடுத்த கட்டுரைகிசுகிசு,நேரு,அரவிந்தன் கண்ணையன்