காற்று

aruna2

டீ போட்டுவிட்டு கோப்பைகளைத் தேடினால் ஒன்றுகூட கைக்குச் சிக்கவில்லை. அருண்மொழி ஊரில் இல்லை. ஊட்டிக்கு என்னுடன் வந்துவிட்டு அவளும் அஜிதனும் திருவாரூருல் அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கவேண்டும் சிலநாள். இந்த வீட்டில் அருண்மொழி எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறாள், அலுவலகம் சென்றுவிட்ட பின்னரும் – என உணர்கிறேன். ஆகவே அவள் ஊருக்குச் சென்றுவிட்டபின் பெரும்பாலும் இதற்குள் தனியாக இருக்கும் என்னால். அப்படிஇருக்கமுடியவில்லை. இந்த வீடு ஒருபக்கம் சுழல நான் எதிர்த்திசையில் சுழல்வதுபோல எப்போதும் எதன்மீதாவது உரசிக்கொண்டும் முட்டிக்கொண்டும் தடுமாறிவிழுந்துகொண்டும் இருக்கிறேன். குறிப்பாக இரவுகளில் இதற்குள் துயில முடியவில்லை. ஒவ்வொரு ஓசையும் தூக்கிவாரிப்போடவைக்கிறது. ஆனால் பெரும்பாலான நாட்களில் நான் எங்கெங்கோ விடுதிகளில்தான் இயல்பாக இரவுறங்குகிறேன்.

இப்போது டீக்கோப்பைகள் வேண்டும். இதோ டீ ஆறிக்கொண்டிருக்கிறது. மேலே கணிப்பொறியைச் சுற்றி நான்கு கோப்பைகள். ஜன்னல்கட்டைமேல் ஒன்று. வெளியே வாசல் அருகே கூட ஒன்று தென்பட்டது. மீண்டு வந்தால் டீ ஆறிவிட்டது. மீண்டும் சூடு செய்யலாமா? அதைவிட அப்படியே குடித்துவிடலாம். கோப்பைகளை கழுவும்போது நினைத்துக்கொண்டேன். முன்னர் இப்படி ஆனதில்லை, எப்போதும் கையெட்டும் தொலைவில் கோப்பைகள் இருக்குமே. அருண்மொழி வீட்டுக்குள் உலவும்போது அவளை அறியாமல் அனிச்சையாகவே கோப்பைகளை திரும்ப எடுத்துச்செல்கிறாள். கீழே விழுந்தவற்றை எடுத்து மேலே வைக்கிறாள். அழுக்குத்துணிகளை கொண்டுசெல்கிறாள். உலர்ந்தவற்றை உள்ளே கொண்டுவருகிறாள். அவள் ஒரு காற்று.

மூச்சுக்காற்று என்று இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும். உள்ளும் வெளியுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது வீட்டின் எல்லா பக்கங்களிலும் ஏதேதோ கிடக்கிறது. சோபா அருகே நூல்கள். பத்திரிகைகளின் தபாலுறைத்தாள்கள். குளியலறையைச் சுற்றி துண்டுகள், சமையலறை முழுக்க விதவிதமான பாத்திரங்கள். இவையனைத்தும் காற்றிலேறி தங்கள் இடங்களுக்கு தொடர்ச்சியாக மீண்டுகொண்டே இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் செயலற்று விழித்துக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் இவையனைத்துக்கும் என்னைத் தெரியும். நான் அன்றாடம் கழுவி அடுக்கி வைக்கும்பாத்திரங்கள் இவை. நான் துவைத்து போடும் துணிகள். ஆனால் அவற்றுக்கு என்னை தெரியாது. நான் வலிந்து எடுத்துச் செல்லவேண்டும். என் மேல் அவை இயல்பாக தொற்றிக்கொள்வதில்லை.

வழக்கமாக  செல்பேசியில் பேசும்போது நடக்கச்செல்வேன். இப்போது கடும் வெயில். ஆகவே பேசியபடி வீட்டைத் தூய்மைசெய்கிறேன். கம்பிகளைத் துடைக்கிறேன். கண்ணாடிகளை கழுவுகிறேன். தரையை சுவரை மெருகேற்றுகிறேன். ஆனால் இந்தத் தனிமையில் வீட்டை அப்படியே விட்டுவிட்டேன். மொத்த வீடும் என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது. பிறிதொன்றாக. அப்போதெல்லாம் இந்த வீடு குழந்தையைப்போல. குளிப்பாட்டுவதன் இன்பம் அது. இப்போது பொம்மைபோலிருக்கிறது. இரண்டுநாளில் அருண்மொழி திரும்பிவந்துவிடுவாள். செல்லமாக திட்டியபடியே இந்தக் கட்டிடத்தை வீடாக ஆக்க ஆரம்பிப்பாள். அரைமணிநேரத்தில் இது ஒழுங்காக ஆகும். உடனே கலைந்து மீண்டும் மீளத் தொடங்கும். காற்று ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறது.

 

முந்தைய கட்டுரைவீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
அடுத்த கட்டுரைசுஜாதா விருதுகள்