ஊட்டி 2017, கடிதம்

uruli

 

வணக்கம்

ஊட்டி காவிய முகாம் முடிந்து நேற்று இரவு ஒரு மணிக்கு வீடு வந்தோம். உண்மையிலேயே கனவுலகம் ஒன்றிலிருந்து திரும்பி வந்ததது போல் இருக்கிறது. வெண்முரசு வாசகர் வட்ட கூடுகைகளிலிருந்து இது மிக வேறு பட்டதாகவும்  நிறைய நிறைய கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் உங்களின் பிரியத்திற்குரிய வாசகர்கள் பலர் வந்திருந்ததும், மிக கட்டுக்கோப்புடன் முறையாக முகாம் நடந்ததும் ஆச்சர்யமாக இருந்தது.

நேரத்திற்கு நல்ல  குளிருக்கேற்ற சூடான உணவும் சிற்றுண்டிகளும், தேநீருமாய் ஒரு குறைவும் இன்றி எல்லோரும் கவனிக்கப்பட்டோம். உங்களுடனான அந்த காலை மாலை நடையும், தேயிலைத்தோட்டத்தில் அமர்ந்து  உங்களிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்ட பலவும் மறக்க முடியதவை.  சரியான நேரத்திற்கு துவங்கி முடிக்கப்பட்ட அமர்வுகளும், சிறுகதைகளிலிருந்து, சிற்பக்கலை வரைக்கும் பேசப்பட்ட விஷயங்களும், எங்களுக்கு கற்றுத்தந்தவை ஏராளம். குறிப்பாக நாஞ்சில் அவர்களின் சுந்தரகாண்ட விளக்கம் ஒரு மாபெரும் பாக்கியமென்றே சொல்ல வேண்டும்

அருணாச்சலம் அவர்களின் சங்க இலக்கிய பாடல்களின் அமர்வொன்றை இளம் வெயிலில், நனைந்த  புல்வெளியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது இன்னும் கனவென்றே தோன்றுகிறது.

சுஷீல்குமார் பேசுகிறார்

 

சிறுகதை அமர்வொன்றில் கதையை குறித்த விவாதமென்பது அது குறித்த சொந்த வாழ்க்கை அனுபவங்களை பேசிக்கொண்டிருப்பதல்ல என்றும் அதன் தொடர்ச்சியான வேறு கதைகளின் வழி இந்த கதை எப்படி துலங்குகிறது என்றே அதை விவாதிக்க வேண்டும் என்ற உங்களின் கருத்தும், தண்ணீர் குறித்து நீங்கள் சொன்ன அந்த ராஜஸ்தான் கதையின் வரும் பெண்ணும் அவள் கற்பிற்கு சான்றாக பச்சை மண்ணில் எடுத்துக்கொண்டுவந்த தண்ணீரும் , உள்ளே கருவறையில்  தெய்வமும் தண்ணிராகவே இருப்பதும், ருசி பற்றிய கதை விவாதத்தில் நாம் எப்படி பல கலாச்சாரத்தின் உணவு வகைகளையும் பழக்க வழக்கங்களையும் மனதார ஏற்றுக்கொள்கிறோம் என்பதிலிருந்தே நாம்  inferior மனிதர்களாகாமல் இருக்கமுடியும் என்பதையும், அது சார்ந்த பல சொந்த அனுபவங்களுமாய், எத்தனை எத்தனையோ கற்றுக்கொண்டோம்.

வெண்முரசு வாசகர் வட்டமென்பது இனி வெண்முரசு வாசகர் குடும்பமாகிவிட்டது. பிரிய மனமின்றி அந்த கனவுலகிலிருந்து வீடு வந்தோம். உங்களுக்கு எங்கள்  அனைவரின் சார்பாக பலப்பல நன்றிகள் சார்.

அடுத்த வருட ஊட்டி முகாமிற்காக இப்போதிலிருந்தே காத்துக்கொண்டிருக்கும்

லோகமாதேவி

 

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91
அடுத்த கட்டுரைஊட்டி 2017 –கவிதைபற்றி…