மலம்

mask

சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது

இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில் சாதாரணமாகப் பலர் எண்ணுபவை கூட பொதுவெளியில் வராத நிலை இருந்தது.

அதற்கு இன்னொரு காரணம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் இலட்சியவாதம் இன்னொருதலைமுறைக்காலம் நீடித்ததுதான். கடைப்பிடிக்க முடிகிறதோ இல்லையோ மானுட சமத்துவம், அடிப்படை மனிதாபிமானம் சார்ந்த முற்போக்கான இலட்சியங்களில் பரவலான நம்பிக்கை இருந்தது. காந்தி,நேரு என அவர்கள் நம்பி ஏற்ற ஆளுமைகளின் குரலாக அந்த இலட்சியங்கள் நம்பப் பட்டன.

அடுத்த தலைமுறை முற்றிலும் இலட்சியவாதம் அற்ற சூழலில் பிறந்து வளர்ந்தது. பிழைப்புவாதம் அன்றி அது அறிந்த கொள்கை என ஏதுமில்லை. அந்த வேகத்தில் வாழ்க்கையில் முண்டியடித்தபின் ஒரு புள்ளியில் சுயஅடையாளத்துக்காகச் சாதி, மத, இன, மொழி சார்ந்த முத்திரைகளை ஆரத்தழுவிக்கொள்கிறது. இணையம் கட்டின்றி அந்த மேட்டிமைகளையும், காழ்ப்புகளையும் வெளிப்படுத்த வழியமைத்துத் தருகிறது. இன்று இணையத்தில் அத்தனை சாதியினரும் தங்களை தங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் காலகட்டத்தைய மனநிலையுடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இவை உண்மையிலேயே உள்ளவை என்றால் இவற்றை வெளிப்படுத்துவதில் என்ன பிழை என்று கேட்கலாம். வெளிப்படுத்தும்தோறும் இவை வளர்கின்றன, தொற்றுகின்றன, நியாயப்படுத்தப்படுகின்றன. மொழியில் முன்வைக்கப்படும் எக்கருத்தும் எவ்வகையிலோ வாழும். ஆகவேதான் உலகமெங்கும் அனைத்தும் விவாதிக்கப்படும் சமூகங்களில்கூட சில மானுடஎதிர்ப்புக் கருத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதை எழுதிய ஆசாமி நவீனக்கல்வி அடைந்தவர் என நினைக்கிறேன். ஓரளவு எழுதிக்கொண்டிருக்கிறார், குறைந்தபட்சம் சுஜாதா அளவுக்காவது எதையோ வாசித்திருக்கிறார். இக்கட்டுரையின் மனநிலையும் கருத்தும் இந்தியாவின் மாபெரும் சமூகசீர்திருத்த, மதச்சீர்திருத்த அலைகள் எழுவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுக்காலம் இந்த ஆத்மாவை தீண்டாமலேயே கடந்து சென்றுவிட்டிருக்கிறது.

அப்படியும் சொல்லமுடியாது. இதிலுள்ள சமத்காரம் இன்றிருக்கும் நவீன ஜனநாயகச் சூழலுக்கு ஏற்ப அமைத்துக்கொண்டது. உணவிலும் சூழலிலும் உளநிலையிலும் தூய்மைதேவை என்பது எவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் தூய்மை என்றபேரில் இங்கே இவரால் முன்வைக்கப்படுவது சாதியாசாரம். அசைவ உணவு உட்பட அந்த சாதியாசாரத்துக்கு வெளியே உள்ளவை அனைத்தும் அசுத்தமானவை, அருவருப்பானவை. சாதியாசாரத்துக்குள் வரும் அனைத்தும் தூய்மையானவை- இக்கட்டுரை உருவாக்கும் சித்தரிப்பு இதுதான்.

அதாவது சாதியாசாரமும் தூய்மையும் ஒன்று என்கிறது இக்கட்டுரை. பிறரை இழிவுபடுத்தி ஒதுக்குவது தூய்மைபேணுவதற்கு அவசியம் என்கிறது..தூய்மைக்கும் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத ஒரு மனம் இந்தக் காலகட்டத்தில் இருக்கமுடியாது. ஏன் நேரடியாகவே சொல்கிறேனே, ஸ்ரீரங்கம் உட்பட பல வைணவ ஆலயங்களின் மடைப்பள்ளிகள்தான் நான் வாழ்க்கையில் கண்ட மிகமிக அழுக்கான சமையல்கூடங்கள்.நகம் வளர்ந்த அழுக்குக் கைகளால் புளியோதரையை அள்ளி அள்ளி கொடுக்கும் பட்டர்களை கண்டு குமட்டி ஒதுங்கியதுண்டு. ஓரிரு மாதங்களுக்கு முன்னால்கூட இது நிகழ்ந்தது- நண்பர்களுக்குத்தெரியும்.

அழகர்கோயிலில் தோசைப்பிரசாதத்தை வெறுந்தரையில் அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். சுத்தம் குறித்த நவீனக்கருதுகோள்கள் எவையும் சென்றடையாத பழங்கால உள்ளங்கள் இவை. ஆசாரமானவை, ஆனால் தூய்மையற்றவை. ஏன் ஆலயங்களில் பெருமாளின் உடலில் போடப்பட்டிருக்கும் துணிகூட பெரும்பாலும் எண்ணையும் பிசுக்கும்படிந்த கந்தல்களாகவே இருக்கும். கருவறையில் கரப்பான்களும் எலிகளும் ஓடும். மடப்பள்ளி மூலையில் அழுக்குப் பாத்திரங்கள் நாட்கணக்கில் கிடக்கும். இவர்கள் எவருக்கும் அதில் அருவருப்பு இல்லை- அருவருப்பது பிறசாதியினரின் உணவையும் இல்லங்களையும் மட்டுமே.

தான் விரும்புவதை தேடி உண்ண எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதன் பேரில் இவர்கள் உருவாக்கும் இந்த அசட்டுத்தனமான, சாதிக்காழ்ப்பு கொண்ட இருமையாக்கம் இந்நூற்றாண்டில் எத்தனை அசிங்கமானது. இந்த வாதம்தான் அத்தனை சாதிசார்ந்த, இனம்சார்ந்த, நிறம்சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கும் பின்னணியில் உள்ளது.

எத்தனை எண்ணி சமாதானம் செய்துகொண்டாலும் கூட இக்கீழ்மையை தாளமுடியவில்லை. சென்ற நூறாண்டுக்காலத்தில் ஞானிகளும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உருவாக்கிய அத்தனை இலட்சியவாதங்களையும் மனிதாபிமானங்களையும் புல்லென ஒதுக்கி செம்மாந்து நின்றிருக்கும் மூடத்தனத்தின் உச்சம். தமிழ்ச்சூழலை இக்குரலால் ஒன்றும் செய்யமுடியாது, அது இதைக்கடந்து சென்றுவிட்டது. உண்மையில் வருத்தப்படவேண்டியது இவருக்காகாகத்தான், ஞானம், கலை, கல்வி எதுவும் இந்தக் கீழ்மைநிறைந்த மனத்திற்கு இல்லை.

***

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாதக்கூடுகை – புதுச்சேரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78