‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23

23. இருள்மீட்சி

பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “மூச்சும் நெஞ்சும் சீரடைந்துள்ளது. உமிச்சாம்பலுக்குள் அனல் என உடலுக்குள் எங்கோ உயிர் தெரிகிறது” என்றனர். நெஞ்சுபற்றி ஏங்கிய மூதரசரிடம் “ஆயினும் நம்பிக்கை கொள்வதற்கு ஏதுமில்லை. இது இறுதி விழைவொன்று எஞ்சியிருப்பதனால் மண் மீண்டு வந்த உயிரின் சில நாட்களாகவும் இருக்கலாம்” என்றனர். அவர் “நற்செய்தி சொல்லுங்கள், மருத்துவர்களே!” என கைபற்றி ஏங்கினார். “அவன் மீண்டு வருவான் என அவர்கள் சொல்லவில்லை. இதையும் அவர்களால் சொல்ல இயலாது” என்றாள் அன்னை.

சிதை சென்றவன் மீண்டு வருதல் நாட்டுக்கு நலம் பயக்குமா என்று நகர்மக்கள் ஐயுற்றனர். சென்றவன் மீள்வது நற்குறியல்ல. வாய்க்கரிசி இடப்பட்டவனுக்கு அருகே இருளுலகத்தின் பன்னிரு தெய்வங்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன. அழுகைகளையும் அமங்கலப் பொருட்களையும் கண்டு அவை உளமகிழ்கின்றன. காண்பவர் உள்ளங்களுக்குள்  துயரின் அறவுணர்வின் இங்கிதத்தின் சுவர்களை மீறிச்சென்று அமர்ந்து மெல்லிய உவகை ஒன்றை அவை ஊதி எழுப்புகின்றன. பாடையில் படுத்திருப்பவனைச் சூழ்ந்திருக்கும் துயரையே அணுகிநின்றோர் காண்பர். அகன்று நிற்பவர்கள் அங்கே நின்றிருப்பவர்களின் உடலசைவுகளில் வெளிப்படும் நிறைவையும் நிம்மதியையும் காணமுடியும். அவர்களின் நிழல்களை மட்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் அங்கே எழுந்துள்ள இருட்தெய்வங்களின் அசைவை கண்கள் அறியும் என்றனர் குலப்பாடகர்.

இடுகாட்டுக்கு பாடை கொண்டுசெல்கையில் நிழலுருக்களென தொடர்கின்றன அத்தெய்வங்கள். சிதையில் எரி எழுந்து தழலாடுகையில் சூழ்ந்து களியாட்டு கொள்கின்றன. அவ்வுடல் உருகி கருகி நெய்யென்றாகி எரியுண்டு விண்ணில் மறைகையில் உதறி எழும் உயிரை சரடெறிந்து பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் உலகுக்கு செல்கின்றன. இறக்கும் எவ்வுயிரும் சென்றடைவது மண்ணுக்கு அடியில் வாழும் இருளுலகையே. ஒவ்வொரு கல்தரிப்புக்கும் நடுவே சிறுதுளி இருளென நிறைந்திருப்பது அவ்வுலகே. அங்கே அவை பதினாறு நாட்கள் வாழ்கின்றன. அங்குள்ள துலாமேடை ஒன்றில் அவ்வுயிர்கள் நிறுத்தப்படுகின்றன.  யமன் தலைமையில் நூற்றெட்டு இருளுலகதேவர்கள்  அவற்றை பிழையும் பழியும் உசாவி அவை மிகுந்திருப்பின் மேலும் அடியில் வாழும் இருளுலகுகளுக்கு தள்ளுகின்றனர். பதினாறாம்நாள் ஊண்கொடை அதன்பொருட்டே.

பழிகடக்கும் நிறைகளால் விடுவிக்கப்படும் நல்லுயிர்கள் எழுந்து விண்ணுக்கு அடியில் மண்ணுக்குமேல் கொதிக்கும் அடுமனைக்கலத்திற்குமேல் நீராவி என அருவுருவாகி நின்றிருக்கும் மூச்சுலகிற்கு செல்கின்றன. அங்கே நாற்பத்தொரு நாட்கள் அவ்வுயிர்கள் வாழ்கின்றன. அவற்றை அங்கே விண்கனிந்து வந்தமையும் மூதாதையர் கூடியமர்ந்து உசாவுவார்கள். நன்றும் அன்றும் முறையும் வழுவும் சொல்லி கணக்கு தீர்க்கப்படும். நன்று மிகையே எனில் மூதாதையர் அவ்வுயிரை அள்ளி தங்கள் நெஞ்சோடணைத்து கொண்டுசெல்வார்கள். ஏழு விண்ணுலகங்களையும் கடந்து நலம் நிறைந்தோர் சென்றடையும் ஃபுவர் லோகத்தை அவ்வுயிர் அடையும். அங்கு தவம் முழுத்ததென்றால் தேவருலகடையும். நாற்பத்தோராம் நாள் நீர்க்கொடை அதனால்தான்.

இங்கு விட்டுச்சென்ற விழைவுகள் அவற்றை இழுக்குமென்றால் விண்சென்ற நீராவி குளிர்ந்து சொட்டுவதுபோல் மூச்சுலகிலிருந்தே மண்ணுதிர்ந்து மீண்டும் கருபுகுந்து உருவெடுத்து மண் திகழும் அவ்வுயிர்கள். “விழைவுகளின் சரடறுத்து வினைகளின் வலையறுத்து விண்புகுதல் எளிதன்று” என்றனர் குலமூத்தார். “சிதைசென்ற அரசன் மீண்டு வருகையில் ஆழுலகத்து தெய்வங்கள் அவனுடனே நகர் புகுந்துவிட்டிருக்கின்றன போலும்” என்றனர் மூதன்னையர். “இன்று அவை அவர் அரண்மனைச் சேக்கையைச் சூழ்ந்து நின்றிருக்கும். சினந்தும் சீறியும் சுழன்றாடும். பின் இருட்துளிகளென்றாகி அவர் நிழலில் குடியேறும். இவ்வாழ்வை உதறி மீண்டும் அவர் சிதை செல்லும்வரை அவை அவருடன் இருக்கும்” என்றார் பூசகர்.

ஒவ்வொரு நாளுமென புரூரவஸ் தன் உடலிலிருந்து முளைத்து மீண்டு வந்தான். கருவறை விட்டு இறங்கிய கைமகவு என அவன் விழிகளில் நோக்கின்மை பாலாடையென படிந்திருந்தது. கைகளும் கால்களும் ஒத்திசைவிழந்திருந்தன. மெல்ல அவன் தசைகளில் துடிப்பு எழுந்தது. மட்கிய மரப்பட்டைபோலிருந்த தோல் உரிந்து உயிர்த்தோல் எழுந்து வந்தது. உதிர்ந்த மயிர்கள் ஆலமரக்கிளையில் புதுத்தளிர் பொடித்தெழுவதுபோல முளைத்தன.  கண்கள் ஆடைவிலகி முகம் நோக்கத் தொடங்கின. நாவு துழாவி எழுந்த ஒலி சொல்லென திருத்தம் கொண்டது. நீர்சொட்டி அசையும் இலையென திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்தமைந்த நெஞ்சக்கூடு உலைதுருத்தி என சீராக மூச்சு இழுத்து உமிழத் தொடங்கியது.

புரூரவஸ் ஓநாய்க்குட்டியின் பெரும்பசி கொண்டவனானான். நாழிகைக்கொருமுறை படுக்கையை கையால் தட்டி “உணவு! உணவு!” என்று அவன் கூவினான். பாலில் கரைத்த தேனை முதலில் அவனுக்கு ஊட்டினர். பின்னர் உப்பிட்ட அன்னச்சாறு. நெய்சேர்த்த இளங்கஞ்சி சில நாட்களிலேயே. ஒவ்வொருநாளும் நெல்லிக்காய்ச்சாறு கலந்த பழக்கூழ் அளிக்கப்பட்டது. பின்னர் நெல்லிக்காய், தானிக்காய், கடுக்காய் கலந்த முக்காய்வடித்த மூலிகைமது மூன்றுவேளை கொடுக்கப்பட்டது. வேம்பெண்ணை பூசி உலரச்செய்த உடல்மேல் கல்மஞ்சளும் சந்தனமும் பயறுப்பொடியும் உழப்பிய கலவை பூசப்பட்டு வெந்நீரில் முக்கிய மென்பஞ்சால் வேது செய்யப்பட்டு ஒற்றி எடுக்கப்பட்டது.

உடல் பெருக்கி நாற்பத்தொன்றாம்நாள் படுக்கையில் எழுந்தமர்ந்தான். கூட்டுப்புழுவின் உடலென அவன்மேல் உலர்ந்த தோல்சுருள்கள் இருந்தன. விரிந்த தசைகளின் வெண்வரிகள் தோளிலும் புயங்களிலும் மழைநீர்வடிந்த மென்மணற்தடமென படிந்திருந்தன. அவன் எழுந்தமர்ந்து உணவுண்டுகொண்டிருந்தபோது கைகூப்பியபடி உள்ளே வந்த அமைச்சர் உவகையுடன் “இக்காட்சியைக் காண்பதற்கென்றே என் விழிகள் நோக்குகொண்டன போலும். இந்நாள் இனியென்றும் குருநகரியின் விழவுநாள்” என்றார். வாயில் வடிந்த கஞ்சியைத் துடைத்த சேடியின் கையை விலக்கி அவரை அயலவர் என நோக்கும் கூர்மையுடன் விழிநாட்டி “என் மணிமுடியை இப்போது சூடுவது யார்?” என்று கேட்டான் புரூரவஸ்.

குழப்பத்துடன் “தங்கள் முதல் மைந்தர் ஆயுஸ், அரசே” என்றார் அமைச்சர். “நான் இறக்கவில்லை என்று அவன் வருந்துகிறானோ?” என்றான் அரசன். புரூரவஸின் விழி அல்ல அது என்று அமைச்சர் உள்ளே திடுக்கிட்டார். “என்னை சிதைக்கு கொண்டுசெல்ல காத்திருந்தான்போலும்” என்றான் புரூரவஸ். அமைச்சர்  “அரசே, இளவரசர் மணிமுடி சூடுவதில்லை. கோலேந்தி கொலுவீற்றிருப்பதுமில்லை.  நெறி வழங்குகையில் மட்டுமே அரியணை அமர்கிறார். குல அவைகளில் மட்டுமே கோல் கைக்கொள்கிறார்.  அரசுமுறை செய்திகளில் மட்டுமே கணையாழியில் முத்திரை இடுகிறார்” என்றார். “ஆம். தன் எல்லைகளை அவன் உணர்ந்திருப்பது நன்று” என்றான் புரூரவஸ்.

மறுவாரமே எழுந்து நடக்கலானான். “என் அணியாடைகள் வரட்டும்!” என்று ஆணையிட்டான். ஆடையும் அணியும் அவனுக்கு உடல் கொள்ளாதபடி சிறிதாகிவிட்டிருந்தன. அனைத்தையும் புதிதாக சமைக்கும்பொருட்டு அணிக்கலைஞர்களுக்கும் பொற்கொல்லர்களுக்கும் ஆணையிட்டான். புதிய தோற்றத்தில் முடிசூடி கோலேந்தி வெண்குடை எழ அவன் அவை மீண்ட அன்று குடிகளும் குலமூத்தாரும் பெருவணிகரும் படைவீரர்களும் ஒருங்கே பேருவகை கொண்டனர். எழுந்து நின்று கைகளை உயர்த்தி “சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க! பேரறத்தான் வாழ்க! பெருங்கருணையோன்  வாழ்க! இறந்து மீண்ட இறையருளோன் வாழ்க!” என்று அவர்கள் குரலெழுப்பியபோது அது அவர்களின் உயிர்விசை கொண்டிருந்தது.

அவைக்குள் நுழைந்து அவ்வாழ்த்துக்களை தலைவணங்கி ஏற்று அரியணையில் அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டதும் இயல்பாகவே அவன் நோக்கு திரும்பி அருகிலிருந்த ஆயுஸைப் பார்த்தது. இரு புருவங்களும் சுருங்கி ஒன்றையொன்று தொட்டன. சற்று தலைசரித்து அருகே நின்றிருந்த அமைச்சரிடம் “அவன் ஏன் இங்கிருக்கிறான்?” என்றான். “அதுதான் முறைமை, அரசே” என்றார் அவர். “அவன் அவை வீற்றிருக்க வேண்டியதில்லை” என்றான் புரூரவஸ். “அரசே, அது குடிவழக்கு” என்றார் அமைச்சர். “அதை நான் மாற்றுகிறேன். அரியணைச் சுவை அறிந்த ஒருவன் இவ்வவையில் இருக்கலாகாது. இக்கணமே அவனை நம் எல்லைக்கனுப்புக! அங்குள்ள தொல்குடிகளை ஒருங்கு திரட்டி அங்கே காவலரண் ஒன்றை அவன் அமைக்கட்டும்” என்றான்.

அமைச்சரின் முகம் மாறியது. ஆனால் விழிகள் எதையும் காட்டாது நிலைத்திருந்தன. “அவ்வாறே” என்று தலைவணங்கி திரும்பிச்சென்றார். முதல் அரசாணையாக தன் கணையாழியை அந்த ஓலையிலேயே அவன் பதித்தான். அவ்வோலையை அவையில் அமைச்சர் படித்தபோது முற்றிலும் அறியாத இருட்பேருருவம் ஒன்று முன்னெழுந்ததுபோல் அவையினர் திகைத்து ஒருவரையொருவர் நோக்கி விழிசலிக்க அமர்ந்திருந்தனர். அவை முழுக்க எழுந்த கலைவோசையைக் கேட்டு புரூரவஸ் கைதூக்கினான். “நன்று! நாம் அடுத்த அவைச் செயல்களுக்கு செல்வோம்” என்று ஆணையிட்டான். ஆயுஸ் எழுந்து தந்தையை வணங்கி வெளியேறினான்.

அன்று உச்சிப்பொழுதுவரை அரசன் தன் அவையில் அமர்ந்திருந்தான்.  முன்னாட்களில் ஆயுஸ் இட்ட அனைத்து ஆணைகளையும் அவன் நிறுத்திவைத்தான். அனைத்து முடிவுகளையும் மாற்றி அமைத்தான். எழுந்து செல்கையில் அமைச்சரிடம் “அமைச்சரே, இனி நான் அறியாது ஏதும் இங்கு நிகழக்கூடாது. இதுவரை நிகழ்ந்த பிழைகளேதும் இனி எழலாகாது. சிறு பிழைக்கும் என் தண்டம் வலிதென இவர்களுக்கு உரையுங்கள்” என்றபின் நடந்து அவைவிலகிச் சென்றான். அமைச்சர் “ஆணை!” என உரைத்து தலைவணங்கி நின்றார். குழப்பச்சொற்களுடன் அவை கலைந்து சென்றது. ஆயுஸ் அருகே வந்து “நான் இன்றே கிளம்புகிறேன், அமைச்சரே” என்றான். “தந்தைசொல் மீறாதிருங்கள் இளவரசே, நலம் சூழும்” என்றார் அமைச்சர். “ஆம், அவரிடமிருந்து நான் கற்றதும் அதுவே” என்றான் ஆயுஸ்.

imagesஎப்போதும் உச்சிப்பொழுதின் உணவிற்கு ஊன் மிக வேண்டுமென்று புரூரவஸ் ஆணையிட்டிருந்தான். உடல் புடைக்க உண்டபின் மதுவும் அருந்தி மஞ்சத்தில் படுப்பது அவன் வழக்கம். நோய்மீண்டபின் தன் துணைவியரை பார்க்க மறுத்து ஒவ்வொரு நாளும் இளம்அழகியொருத்தி தன் மஞ்சத்திற்கு வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தான். அவன் துணைவியர் நாளும் அவன் அறைவாயில்வரை வந்து அவன் முகம் காணவேண்டுமென கோரி நுழைவு மறுக்கப்பட்டு விழிநீருடன் மீண்டுசென்றனர். அவன் மைந்தருக்கும் நோக்கு விலக்கப்பட்டது.

ஆனால் மூதரசர் மட்டும் அவனுடனேயே இருந்தார். உடல்தேறி அவன் எழுந்த நாட்களில் மூதரசர் ஒவ்வொரு நாளும் புலரிவிழிப்புகொண்ட உடனேயே ஒரு காவலன் தோள் பற்றி வந்து துயின்றுகொண்டிருக்கும் அவன் காலடியில் அமரும் வழக்கம் கொண்டிருந்தார். அவனுக்கு சேடியர் உணவூட்டுகையில் நோக்கியிருப்பார். அவன் சிறுமைந்தனைப்போல உதடு குவித்து உறிஞ்சி உண்ணும்போது மகிழ்வில் மலர்ந்து சுருக்கங்கள் இழுபட்டு விரிந்த முகத்துடன் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடி “நல்லுணவு! நல்லுணவு! பிரம்மம் அதுவே. உயிர் அதுவே. எண்ணம் அதுவே. மூதாதையரின் வாழ்த்து என வருவதும் அதுவே” என்பார்.

ஒவ்வொருநாளும் மருத்துவர்களைச் சென்று கண்டு “எத்தனை விரைவில் அவன் நலம்பெறுவான், மருத்துவர்களே?” என்று கேட்பார். “மூதரசே, அவர் நலம்பெறுவதே ஒரு மருத்துவ விந்தை. நுரையெழுவதுபோல அவர் உடல் எழுகிறது. இதற்குமேல் ஒன்றை மானுட உடலில் எதிர்பார்ப்பதே அரிது” என்றனர் அவர்கள். ஆயினும் நட்ட விதையை ஒவ்வொரு நாளும் தோண்டிப்பார்க்கும் இளம்குழந்தை போலிருந்தார்.

அவர் துணைவியே அவரை நகையாடினாள். “நேற்று உண்ட உணவிற்கு இருமடங்கு இன்று உண்கிறான். நீங்களோ கலத்தில் எஞ்சிய உணவைப் பார்த்து சினம் கொள்கிறீர்கள். சேடியர்கள் பின்னறைகளில் உங்களை எண்ணி நகைகூட்டுகிறார்கள்” என்றாள்.  “அவர்களுக்குத் தெரியாது தந்தையின் அனல்…” அவர் சினந்து சொன்னார். பின்னர் மனைவியின் மெல்லிய கரங்களை விரல்களுக்குள் எடுத்துக்கொண்டு “அவன் உணவுண்ணும்போது இளங்குழவியாக நம் மடியிலமர்ந்து இட்டும் தொட்டும் கவ்வியும் துழன்றும் அமுதுகொண்ட காட்சி என் நினைவிலெழுகிறது.  நீ நினைவு கூர்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். “உன் நெஞ்சில் கனிவு வற்றிவிட்டது. முதுமகளாகிவிட்டாய்” என்றார். முதுமகளுக்குரிய மிகைநாணத்துடன் “உங்களுக்கு மட்டும் இளமை திரும்புகிறதோ?” என்றாள் அவள். “ஆம், எனக்கு இப்போதுதான் ஒரு மைந்தன் பிறந்திருக்கிறான். இளந்தந்தை என்றே உணர்கிறேன். முந்நாளில் இவன் என் மடிதவழ்ந்தபோது அத்தனை எண்ணங்களுக்கு அடியிலும் இவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். எது ஓயும்போதும் ஒளிர்விழிகளும் நகைமுகமும் பட்டுக்கைகளும் எழுந்து வரும். இப்போதும் அவ்வாறே உணர்கிறேன். எண்ணித் துயில்கிறேன். எண்ணியபடி விழிக்கிறேன்” என்றார்.

நிலைகொள்ளாது தன் அறைக்குள் சுற்றியபடி “என்னால் இங்கிருக்க முடியவில்லை. நான் மீண்டும் என் மைந்தனின் அறைக்கே செல்கிறேன்” என்றார். “உங்களுக்கு பித்தென்று சொல்கிறார்கள். அதை மீள மீள நிறுவவேண்டாம்” என்றாள் அன்னை. “ஆம், பித்துதான். அதை நான் இல்லையென்றே சொல்லவில்லை. ஏழூர் மன்றில் நின்று கூவுவேன், நான் பித்தன் என்று. பிள்ளைப்பித்துபோல் பெரும்பித்து பிறிதில்லை” என்றார் அவர். “பிள்ளை முதியவனாகிவிட்டான், விழி பார்க்கிறதா?” என்றாள். அவர் “பார்த்தேன். அவன் முதுமை குறைந்து வருகிறது. நீ அதைப் பார்த்தாயா?” என்றார்.  “நோயுறும்போது அவன் தாடியிலும் குழலிலும் ஓரிரு நரைகள் இருந்தன. இன்றுள்ளதா அது?”

திகைத்து “ஆம், இல்லை!” என்றாள் அவள். “முளைத்து வரும் முடி அனைத்தும் கரிய பட்டுபோல் உள்ளன. நேற்று அவன் துயிலும்போது அவன் குழலை மெல்ல தடவிப்பார்த்தேன். கரடிக்குட்டியின் தோல்போல் தோன்றியது. அடி, அவன் இளமை மீள்கிறான். மேலும் குருதியூறி அவன் உடலின்  சுருக்கங்கள் அனைத்தும் விலகும்போது இளமைந்தனாக இருப்பான்” என்றார். அவள் முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். அவர் கண்களில் குறும்புடன் “படை பயில்வான். நூல் தேர்வான். பின் பிறிதொரு பேரழகியை மணம் கொள்வான்” என்றார்.

அவள் நோக்கில் எழுந்த கூர்முள்ளுடன் “ஆம், காட்டுக்குச் சென்று எவளென்றறியாத இருள்தெய்வம் ஒன்றை அழைத்து வருவான்” என்றாள். வலிக்கும் நரம்பு முடிச்சொன்றில் தொட்டதுபோல் அவர் முகம் மாறியது. “நன்றுசூழவே உனக்குத் தெரியவில்லை, மூடம்!” என்றார். “தீது நிகழ்ந்தவளின் அச்சம் இது” என்றாள். “தீதென்ன நிகழ்ந்தது? சொல், இறுதியில் எஞ்சிய தீதுதான் என்ன? பொன்னுடல் கொண்ட ஏழு மைந்தர்களை பெற்றிருக்கிறான். ஆல் என அருகு என இக்குடி பெருகுவதற்கு அவர்களே உகந்தவர்கள். பிறிதேது?” என்றார்.

அவள் “ஆம், ஆனால்…” என்றபின் “நன்று, நானொன்றும் அறியேன்” என்று சொல்லி மூச்செறிந்தாள். “ஐயுறாதே, அழகி. நன்றே நிகழ்கிறது. ஆம், ஒரு பெருந்துயர் வந்தது. கடலிலெழுந்த பேரலை அறைந்து நகர்கோட்டையை உடைத்துச் சென்றதும் முத்துக்கள் எஞ்சியிருப்பதைப்போல இதோ இளமைந்தர்கள் இருக்கிறார்கள்” என்றபின் “இங்கிருக்க முடியவில்லை. இங்கிருக்கையில் என் மைந்தன் எங்கோ நெடுந்தொலைவில் இருக்கிறான் என்றுணர்கிறேன். அங்கு சென்று அவனுடன் இருக்கிறேன்” என்றார்.

“அங்கு அவனை அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்.  அவன் சற்று துயிலவேண்டும். ஆகவேதான் பேசி மன்றாடி உங்களை இங்கு அனுப்புகிறார்கள்” என்றாள் மூதன்னை. “நான் ஓசையின்றி அவ்வறையிலேயே இருக்கிறேன். ஓவியம்போல் இருப்பேன்” என்றார். “நீங்கள் அங்கிருந்தால் சேடியர் இயல்பாக இருக்க முடியாது. சற்று இங்கிருங்கள்” என்று அவள் சொல்ல அவர் சோர்ந்து பீடத்தில் அமர்ந்தபின் “ஏதேனும் ஒரு மாயம் வழியாக என் விழிகளை மட்டும் அவன் அறையில் ஒரு பீடத்தில் எடுத்துவைத்துவிட்டு வரமுடியுமென்றால் அதன்பொருட்டு எதையும் கொடுப்பேன்” என்றார்.

புரூரவஸ் உடல் மீண்டு வந்தபோது ஒவ்வொரு நாளும் அவரும் உடல் வளர்ந்தார். கேட்டு வாங்கி உண்ணலானார். படுத்தால் எழாது துயிலலானார். ஒவ்வொரு நாளும் முகம் தெளிந்து வந்தது. விழி ஒளி கொண்டார். குரல் நடுக்கம்கூட இல்லாமல் ஆயிற்று. “எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டாள் அவர் துணைவி.  மைந்தனின் அணிகள் அனைத்தையும் கொண்டு வரச்சொல்லி அவற்றில் நல்லனவற்றை தேர்ந்து கொண்டிருந்தார் அவர். திரும்பி “எப்படி?” என்றார். “ஓவியம் வரையும்பொருட்டு துணியை சட்டத்தில் இழுத்துக்கட்டியதுபோல”  என்றாள் அவள்.  அவர் நகைத்து “ஆம், இன்னும் சில நாட்களில் ஒரு இளமங்கையை நானும் மணந்துகொள்ள முடியும்” என்றார். பொய்ச்சினத்துடன் “நன்று! தந்தையும் மைந்தனும் சேர்ந்து தேடுங்கள்” என்றாள் முதியவள்.

images புரூரவஸ் மீண்டு வரும் செய்தியை நகரில் உள்ளோர் முதலில் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் அச்செய்தி வந்தபோது அது அவர்களை அச்சுறுத்தியது.  சூதர் சொன்னபடி அரசன் உடலில் அறியாத் தெய்வமொன்று குடியிருக்கக்கூடுமோ? இடுகாட்டில் அலைந்த இயக்கர்களோ கந்தர்வர்களோ உள்நுழைந்து எழுந்திருக்கக்கூடுமோ? “ஆமாம், அதை முன்னரே சொன்னார்கள். பின் எவ்வாறு இவ்வண்ணம் எழுதல் இயலும்?” என்று முதிய பெண்கள் ஐயுற்றனர். “அவர் விழிகள் மாறியிருக்கின்றன என்கிறார்கள். ஓநாயின் இரு கண்கள் அமைந்திருக்கின்றன என்று அரண்மனையில் பணிசெய்யும் அணுக்கன் ஒருவன் சொன்னான்” என்று அங்காடியில் ஒருவன் பேசினான்.

சற்று நேரத்திற்குள்ளேயே நகரெங்கும் அக்கூற்று ஆயிரம் வடிவம் கொண்டது. “ஓநாயென அவர் உண்கிறார்” என்றான் ஒருவன். “ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் பசுங்குருதியருந்துகிறார்” என்றான் பிறிதொருவன். “நாளுக்கு ஒரு வெள்ளாட்டை கொண்டுவந்து அவர் முன் நிறுத்துகிறார்கள். உறுமியபடி பாய்ந்து வந்து வெறும்வாயால் அதன் கழுத்தைக் கவ்வி குருதியுறிஞ்சி வெறும்தோலென அதை எடுத்து வீசுகிறார்” என்றான் இன்னொருவன். இரவில் அங்கு அரசனென வந்துள கொடுந்தெய்வத்திற்கு களம் வரைந்து மந்தணப் பூசனைகள் நிகழ்கின்றன என்றும் குருதிபலி கொடுத்து நிறைவுசெய்யப்படுகின்றது என்றும் பேசினர்.

நாள்தோறும் பெருகின கதைகள். அரண்மனையிலும் அவையிலும் அவன் ஆற்றிய அறமிலாச் செய்கைகள் ஒவ்வொன்றும் பெருகிப்பெருகி அவர்களை வந்தடைந்தன. அவன் மேன்மேலும் கொடுமைகொண்டவனாக ஆகுந்தோறும் அவர்களுக்குள் கதைதேடும் குழவிகள் அதை விரும்பி அள்ளி எடுத்துக்கொண்டன.  அவன் நடந்து செல்கையில் கால் பட்ட கல் குழிகிறது. கதவுகளை வெறும் கையால் உடைத்து மறுபக்கம் செல்கிறான். நீராட இறங்குகையில் சுனைநீர் பொங்கி வழிந்து வெளியே ஓடிவிடுகிறது. அவனைக் கண்ட புரவிகள் அஞ்சி குரலெழுப்புகின்றன. அவன் மணம் அறிந்ததும் யானைகள் கட்டுக் கந்தில் சுற்றி வருகின்றன. இந்நகர் பேரழிவை நோக்கி செல்கின்றது, பிறிதொன்றுமில்லை என்றனர் நிமித்திகர்.

தங்கள் அச்சத்தை அவர்களே உள்ளமைந்த இருள்நாக்கு ஒன்றால் நக்கிச் சுவைத்து மகிழ்ந்தனர். ஆகவே சொல்லிச் சொல்லி அதை பெருக்கிக்கொண்டனர். அச்சுறுத்தும் கதைகளை சொல்லும் சூதர்களுக்கு வெள்ளி நாணயங்கள் விரிப்பில் விழுந்தன. எனவே அவர்கள் மேலும் மேலும் கற்பனை நுரையை எழுப்பினர். ஆறு மைந்தர்களை அரசனிடமிருந்து முற்றிலும் விலக்கி வைத்திருக்கிறார்கள். அருகணைந்த எவரையும் பற்றி குருதிஉண்ண அவர் துடிக்கிறார். முதற்பகையென அரசமைந்தனே இருக்கிறார்.

“நோக்கியிருங்கள், ஒருநாள் அவரை முதல்மைந்தனே வாள்கொண்டு தலைகொய்து கதைமுடிப்பார்” என்றான் ஒரு சூதன். கேட்டுநின்றவர்கள் விழி ஒளிர மூச்செறிந்தனர். எவரேனும் கேட்கிறார்களா என்ற ஐயத்தை அடைந்து ஒருவரை ஒருவர் ஒளிர்கண்ணால் நோக்கிக்கொண்டனர். ஒன்றும்நிகழா அந்நகரில் கதைகளில் மட்டுமே கொந்தளித்தன அனைத்தும். நகரம் நழுவிச்சென்று கதைப்பரப்புக்குள் விழுந்துவிட்டது போலிருந்தது. கதைகளில் வாழும் நகர் ஒன்றுக்குள் நடப்பதாக உணர்ந்தபோது அவர்களின் கால்கள் விதிர்த்தன. உள்ளம் பொங்கி விழிகள் மங்கலாயின. மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தபடி அங்கிலாதவர் போல் நடந்தனர்.

முந்தைய கட்டுரைVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2