வானதி- அஞ்சலிகள்

va

அன்புடன் ஆசிரியருக்கு

மீண்டும் வெய்யோன் படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட வெய்யோன் நிறைவுற்ற போது தான் வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரைப் பற்றி தளத்தில் ஒரு பதிவினைப் பார்த்தேன். அமைதியின்மையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்தது அவர்களின் பணி. சில நாட்களுக்கு முன் வெய்யோன் குறித்து பிரபுவிடம் உரையாடிய போது பேச்சு இயல்பாகவே அந்த சகோதரிகளை நோக்கிச் சென்றது.

நேற்று முன்தினம் மூத்த சகோதரியின் இறப்பு குறித்த செய்தி மிக மிகத் தனிமையான ஒரு துயரை அளித்தது. பகிர்ந்து கொள்ள முடியாத துயர். ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கும் வலியுடன் வாழ்வதே என்னால் எண்ணிப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அதையும் ஏற்றுக்கொண்டு பெருஞ்செயல் புரிந்திருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் இன்று இல்லையென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் என் மூத்த சகோதரியின் வயதுகூட இன்னும் ஆகாதவரின் ஒருவரின் மரணத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

அஞ்சலி போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் இதற்குத் தான் போல. அவருக்கு என் அஞ்சலி.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

 

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். வானதி அவர்களுடைய மறைவுச்செய்தியைப் படித்து சில கணங்கள் பேச்சற்று அமர்ந்துவிட்டேன். மனம் தளராமல் நம்பிக்கையுடன் போராடி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் வானதியைப் போன்றவர்களை கிரியா ஊக்கிகளாகவும் வழிகாட்டும் விண்மீன்களாகவும் எண்ணுகிறவன் நான். மற்றவர்கள் வாழ்வில் நம்பிக்கையை விதைப்பது மாபெரும் செயல். அவ்வழியில் ஊறிப் பெருகும் ஆற்றலே இந்தப் பாதையைக் கடந்துசெல்லும் விசையை எனக்குள் நிறைக்கிறது. அவர் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.

அன்புடன்

பாவண்ணன்

முந்தைய கட்டுரைமேடையில் நான்
அடுத்த கட்டுரைசம்ஸ்காரா- நவீன்