விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்

சென்ற விஷ்ணுபுரம் விருதுகள் குறித்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தேன். இம்முறை விஷ்ணுபுரம் விருதுக்கு வண்ணதாசன் தேர்வு செய்யப்படுவது சென்ற மார்ச் மாதத்திலேயே நண்பர்கள் கூடி முடிவெடுத்த விஷயம். நான் ஐரோப்பியப் பயணம் முடிந்து வந்ததுமே வண்ணதாசனை அழைத்து அவருக்கு விருது அளிக்க இருப்பதாகவும் அதை ஏற்று அவர் எங்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். வண்ணதாசன் அவருக்கே உரித்தான தயக்கத்துடனும் பணிவுடனும் ஏற்புத்தெரிவித்தார்.

விருது அறிவிப்பை செப்டம்பர்- அக்டோபர் வாக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஏனெனில் ஒரு விருதை அறிவித்த பிறகு விருதுவிழா வரைக்குமான  தொடர்கவனத்தை நிலை நிறுத்துவது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. விருது வழங்குவதல்ல, ஓர் எழுத்தாளர்மேல் சூழலின் கவனத்தை சிலமாதங்களுக்க்கு குவிப்பதே எங்கள் நோக்கம். விஷ்ணுபுரம் விருதுகள் அதைச் செய்வதனால்தான் இன்று தமிழின் முதன்மையான இலக்கியவிருதாக இது கருதப்படுகிறது.

சிங்கப்பூர்ப் பணி முடித்து அக்டோபரில் நான் திரும்பி வந்ததுமே விருது அறிவிக்கப்பட்டது. வேறு எந்தமுறையும் இல்லாதபடி இந்தமுறை அவ்விருதை ஏற்றும் கொண்டாடியும் வந்த வாசகர்க் கடிதங்கள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. ஏறத்தாழ இருபது தொகுதிகளாக அவ்வாசகர் கடிதங்கள் இணையத்தில் பிரசுரமாயின.

 

வண்ணதாசனின் வாசகர்கள் பலதரப்பட்டவர்கள். நகர்ப்புறம் சார்ந்த வாசகர்களுக்கு அவர் தென்தமிழ் நாட்டின் நதிக்கரைப் பண்பாடு ஒன்றின் நறுமணத்தை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். நவீன இளைஞர்களுக்கு மனித உறவின் நுட்பமான தருணங்களை சொல்லிக் காட்டக்கூடியவராக இருக்கிறார். வரண்ட தென்தமிழகத்து நிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கையளித்து வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் சந்திக்க வைக்கும் ஒரு மூத்த வழி காட்டியாக இருக்கிறார்.

கடிதங்களில் பலர் அவரைத் தங்கள் ஞானாசிரியனாகவே வரித்திருப்பதை ,சிலர் தந்தைக்கு நிகரான இடம் அவருக்கு அளித்ததையும் பார்த்த போது இலக்கியத்தில் இருந்து நம் பண்பாடை நோக்கி நீளும் அன்பின் கைக்கு எவ்வளவு எதிர்வினைகள் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டோம்.

விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் இருபத்தைந்து என்று முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் இறுதிவாரம் என்பது எங்களது பொதுவான இலக்கு. அரங்கு கிடைக்கும் நாளை ஒட்டியே அது மேலதிகமாக முடிவு செய்யப்படும். இம்முறை கிறிஸ்துமஸ் அன்றே விழா நடந்தது ஒரு கூடுதலான மகிழ்ச்சி. வண்ணதாசனைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் பொருட்டு நானும் மீனாம்பிகையும் சக்தி கிருஷ்ணனும் வண்ணதாசனை அவரது இல்லத்தில் சந்தித்து இரண்டு நாட்கள் உடனிருந்து பேசி பதிவு செய்தோம். அப்போதே விழாவுக்கான மனநிலைகள் தொடங்கிவிட்டன.

 

’குருஜி’ சௌந்தர் [சத்யானந்தா யோகமையம்] நாஸருக்கு பொன்னாடை
ஒவ்வொரு வருடமும் விஷ்ணுபுரம் விழா பெரிதாகிக் கொண்டே செல்கிறது. எந்த அளவுக்கு பங்கேற்பாளர்கள் வருவார்கள் என்பதை முன்னரே ஊகிக்க முடிவதில்லை. ஆகவே எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் இறுதியில் நெருக்கடியை சந்திக்க நேர்கிறது. இம்முறை அப்படி நிகழலாகாது என்ற முன்னெச்சரிக்கை எங்களிடம் ஆரம்பத்திலேயே  இருந்தது.

எனவே ஆர்வமுடைய நண்பர்கள் அனைவரையும் முன்னரே கூப்பிட்டு பேசி அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி செய்தோம். நண்பர் ’குவிஸ்’ செந்தில் விழாவை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். நண்பர் டைனமிக் நடராஜன் தன்னுடைய நிர்வாகத் திறன்களுடன் உடனிருந்தார். நெடுங்காலம் நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட செந்தில் போன்றவர் உள்ளே வருவதன் பயனென்ன என்பது அதன்பிறகு தான் தெரிந்தது.

விழா மூன்று மாதங்களுக்கு முன்னரே தெளிவாகத் திட்டமிடப்பட்டது. பங்கேற்பாளர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. வரவேற்புக் குழு, தங்குமிட வசதிகளைக் கவனிப்பதற்கான குழு ,உணவு மற்றும் பின்னணி பணிகளைச் செய்வதற்கான குழு, அரங்க ஏற்பாடுகளை கவனிப்பதற்கான குழு என்று அமைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை செய்ய முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. விஜயசூரியன், மீனாம்பிகை, ராதாகிருஷ்ணன், செல்வேந்திரன் என பல நண்பர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்தனர்.

 

’கவர்னர்’ சீனிவாசன் இரா முருகனுக்குப் பொன்னாடை

சென்றமுறை விழாமுடிந்தபோது முற்றிலும் பழகிய முகங்கள் வந்து கூடும் ஒர் அமைவாக ஆறு ஆண்டுகளில் இது மாறிவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆகவே சென்ற ஆண்டு நான்கு புதுவாசகர்சந்திப்புகளை அமைத்தேன். அவற்றில் அறிமுகமான வாசகர்கள் ஏறத்தாழ நூறுபேர் இம்முறை வந்திருந்தனர். விழாவை ஒரு பெரிய இளைஞர்சந்திப்பாக ஆக்கிய அம்சம் இதுவே.

இருபத்து மூன்றாம் தேதி கிளம்பி இருபத்து நான்காம் தேதி காலையில் தான் நான் விழாவுக்கு வந்தேன். வழக்கம்போல நேரடியாக விழாவுக்கு. வந்திறங்கும் போதே அனைத்து ஏற்பாடுகளும் முற்றிலும் சிறப்பாக முடிந்திருப்பதைக் கண்டேன் .எங்கு பார்த்தாலும் இளையமுகங்கள். நண்பர் கிருஷ்ணன்  என்னிடம் சொன்னார், வருடா வருடம் பங்கேற்பாளர்களின் வயது குறைந்து கொண்டே போகிறது. இப்படிப்போனால் எல்கேஜி,  யுகேஜி குழந்தைகளிடம் பேசவேண்டும் போல தோன்றுகிறது என்று. பழைய விஷ்ணுபுரம் நண்பர்கள் பலரும் தங்களை மூத்தவர்களாக உணரும் அளவுக்கு இளைஞர்கள்.

சென்ற முறை விழா நடந்த ராஜஸ்தானி பவனை விட சற்று பெரியதாக அரங்கு தேவை என்பதற்காக குஜராத்தி பவன் எடுத்தோம். இங்கு தனித்தனித் , தங்குமிடங்கள் விவாதத்திற்கான கூடம் ஆகியவை இருந்தன. விழா நெருங்கும்போது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் உதவியுடன் குஜராத்தி பவன் அருகே டாக்டர் பங்களா என்னும் தங்குமிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

 

விஜய் சூரியன் பவா செல்லத்துரைக்கு பொன்னாடை

 

இருபத்து நான்காம் தேதி காலையிலே ஏறத்தாழ நூற்றிருபது பேர் வந்துவிட்டிருந்தனர். காலை உணவுக்கு முன்னரே திட்டமிட்டிருந்த நூறு தட்டுகளுக்கு மேலதிகமாக முப்பது தேவைப்பட்டது. அப்போதே தெரிந்துவிட்டது ஒவ்வொரு கணமும் இது பெருகிக் கொண்டே செல்லும் என்று அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய முடிந்தது.

பத்து மணிக்கு முதல் அமர்வு நாஞ்சில் நாடனுடையது. இந்த முறை விழாவை ஒரு கொண்டாட்டமாக மாற்றியதில் நாஞ்சில் நாடனின் பங்கு மிக முக்கியமானது. நாஞ்சில் முதல் அமர்விலேயே அவருக்கே உரித்தான வேடிக்கையும், நையாண்டியும், மரபிலக்கிய ஆராய்ச்சியும் நவீன இலக்கிய விவாதமுமாக ஒரு உற்சாக மனநிலையை உருவாக்கினார். வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாஞ்சில் பல கோணங்களில் பதில் சொன்னார். அரங்கு சிரித்துக்கொண்டே இருப்பதை இப்போது புகைப்படங்களில் காணமுடிகிறது

அடுத்து  பாரதி மணி அவர்களை வாசகர்கள் சந்தித்தனர். நெடுங்காலம் டெல்லியில் பணியாற்றிய பாரதி மணி தனது பணியனுபவங்கள் தனது சுயவாழ்க்கை அனுபவங்களுடன் ஐம்பதாண்டுகால நவீன நாடக இயக்கத்துடனான தனது உறவுகளையும் பகிர்ந்து கொண்டார். இப்ராஹிம் அல்காஷியின் மாணவராக அவர் தொடங்கியது, நவீன நாடகங்களை டெல்லியில் போட்டது, அதற்கு வந்த வரவேற்பும் ஏமாற்றங்களும் என விரிவாகப் பேசினார். அவருடைய நடிப்பு பற்றிய அனுபவங்களையும் வேடிக்கையுடன் பகிர்ந்துகொண்டார்

மீனாம்பிகை கு சிவராமனுக்குப் பொன்னாடை

 

மதிய உணவுக்குப்பின் இரா.முருகன் வாசகர்களை எதிர்கொண்டார். இரா.முருகனுடைய எழுத்து கூர்ந்து வாசிக்கும் சிறுபான்மை வாசர்களுக்கானதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் பகடிகள் பலவும் முன்னரே இலக்கிய அறிமுகம் உடையவர்கள், இசையில் ரசனை கொண்டவர்கள் ,கூடுதலாக பாலக்காட்டு கேரளப் பண்பாடு பற்றிய அறிமுகம் உடையவர்களுக்கே புரிவதாக அமைந்திருந்தது. இருப்பினும் அங்கு வந்திருந்த கணிசமான இளைஞர்கள் அவரை கூர்ந்து வாசித்திருந்தார்கள், அவருடைய படைப்புகள் சார்ந்து பலதரப்பட்ட வினாக்கள் வந்தன. அடங்கிய குரலில் பூடகமான நையாண்டியுடன் முருகன் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தார்.

மாலைத் தேநீருக்குப் பின் பவா செல்லத்துரையின் அரங்கு. பவா இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பலதரப்பட்ட இலக்கிய அரங்குகளில் பங்கு கொண்டு வருபவர். எனவே அரங்கு சார்ந்த தடுமாற்றமோ மொழி வெளிப்பாட்டில் தயக்கமோ அவரிடம் இல்லை. பால் சக்கரியாவின் தேன் என்னும் கதையை அரங்கே சிரிப்பில் அதிரும்படி மிகச் சிறப்பாக சொன்னார். நிகழ்த்தி காட்டினார் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்

தொடர்ந்து தனது புனைவுகளைப்பற்றி ,நாட்டார் பண்பாட்டுக்கும் தனக்குமான உறவுகளைப்பற்றி, தான் அறிந்த அடித்தள மக்களின் வாழ்க்கையிலிருந்து தன்னுடைய கதைகள் உருவான விதம் பற்றி பல கோணங்களில் வாசகர்களின் வினாக்களுக்குப் பதிலளித்தார். ஒவ்வொரு முறையும் அவர் சொற்களின் வழியாக வெவ்வேறு கதாபாத்திரங்கள் வந்து நின்று முகம் காட்டி செல்வது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. ஒரு கிணறு வெட்டி அதில் நீர் வெளிப்படும் தருணத்தை உண்மையில் ஒரு சிறந்த இலக்கிய அனுபவமாக மேடையில் அவரால் நிகழ்த்தி காட்ட முடிந்தது.

 

கடலூர் சீனு

மாலையில் இரண்டு மணி நேரம் செந்தில் ஒருங்கிணைத்த இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. நண்பர் செந்தில் வினாடி வினா நிகழ்ச்சிகளை கோவை வட்டாரத்தில் நிகழ்த்துவதில் புகழ் பெற்றவர். கல்லூரிகளில் அவருக்கென்று ஒரு இடம் இன்று உண்டு அவர் திறமையை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவும் சென்ற ஆந்திரப்பயணத்தின்போது கிருஷ்ணை ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது எந்த எழுத்தாளர் தனது படைப்புகளில் கதாநாய்கனின் பாதங்களை அதிகமாக வர்ணிப்பவர் என்று நான் ஒரு வினா கேட்டேன். எவருக்கும் அது பதில் தெரிந்திருக்கவில்லை. நா.பார்த்தசாரதி என்று பதில் சொன்னவுடன் பலரும் வெவ்வேறு படைப்புகளை நினைவு கூர்ந்து ஆமென்றார்கள்.

வினாடி வினா என்பது வெறுமே தகவலை நினைவிலிருந்து மீட்டிக் கொள்ளும் அனுபவம் அல்ல, நாம் வாசித்து நினைவின் அடுக்குகளில் எங்கோ பின்னால் கிடக்கும் பல்வேறு படைப்புகளை இழுத்து முன்னால் கொண்டு வரும் ஒரு அரிய இலக்கிய அனுபவமாக ஆகமுடியும் என்ற எண்ணம் அன்றைக்கு ஏற்பட்டது. அதுவே இந்நிகழ்ச்சிக்கும் தொடக்கம்.

குவிஸ் செந்தில் நிகழ்த்திய வினாடி வினா நிகழ்ச்சியில் நான்கு அணிகளாக புதிய வாசகர்களும் பழைய வாசகர்களும் இணைந்து   கலந்து கொண்டனர். பிற வாசகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. நினைத்ததை விட உற்சாகமான நிகழ்வாக அமைந்தது. வேடிக்கையும் சிரிப்பும் வெவ்வேறு இலக்கியப் படைப்புகளை நினைவுக்கூர்வதின் பரவசமும் அடங்கிய நிகழ்ச்சி . வினாக்கள் மூன்று அடுக்குகளாக உருவாக்கப்பட்டன. எளிய விடைகள் கொண்டவை, சற்றே கடினமான விடைகள் கொண்டவை, மிகக்கடினமான விடைகள் கொண்டவை. மிகக்கடினமான விடைகளுக்குக்கூட இளம் வாசகர்களிடமிருந்து வந்த உடனடியான பதில்கள் இனி ஒரு இலக்கிய வினாடி வினா என்றால் மிகக்கடினமான வினாக்களைக் கொண்டு மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கின.

 

செல்வேந்திரன் தொகுப்புரை

உதாரணமாக நல்லசிவம் என்பது எந்த எழுத்தாளரின் ஆல்டர் ஈகோவாக அவரது புனைவுகளில் வருகிறது என்ற வினாவிற்கு மூன்று பேர் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் என்று பதில் சொன்னார்கள். ”சக்கு இப்போது எப்படி இருப்பாள்?” என்ற வரி எந்த கதையில் பயின்று வருகிறது என்ற வினாவிற்கு சற்றும் தயங்காமல் அபிதா லா.ச.ரா என்று பதில் வந்தது. கு.ப.ராஜகோபாலன் எழுதிய எந்தக் கதைக்குத் தந்தி மூலம் நா.பிச்சமூர்த்தியால் பெயர் சூட்டப்பட்டது என்ற வினாவிற்கு ஆற்றாமை என்று பலர் பதில் சொன்னார்கள்.

இரவு உணவுக்குப்பிறகு மருத்துவர் கு.சிவராமன் வாசகர்களைச் சந்தித்தார். இரவு பதினொன்று வரைக்கும் நீண்டது அவ்வுரையாடல் மாற்று மருத்துவத்தின் முகமாக இன்று தமிழகத்தில் அறியப்பட்டும் மருத்துவர் சிவராமன் ஆச்சரியமாக மாற்று மருத்துவத்தை பற்றி ஒரு மத நம்பிக்கையாளனின் தோரணையில் பேசவில்லை. எந்த இடத்திலும் அலோபதியின் சாதனைகளையும் இன்றைய முக்கியத்துவத்தையும் நவீன ஆரோக்கியத்தை உருவாக்குவதில் அதன் பங்களிப்பையும் அவர் நிராகரித்து பேசவில்லை என்பது ஆச்சரியமளித்தது.

அலோபதி வணிகமாகும்போது வரக்கூடிய இழப்புகளையும் அலோபதி நோயாளியின் தனித்தன்மைகளை கவனித்துக் கொள்ளாமல் பொதுவாக மருந்துகளை அளிப்பதில் எழும் மாற்று மருத்துவம் எப்படிசந்திக்க முடியும் என்பதையும் மாற்று மருத்துவம் என்பது ஒருங்கிணைந்த மருத்துவமாக பிற மருத்துவமுறைகளுடன் இணைந்து இருக்கும்போதே மேலதிக பயன்களை அளிக்கும் என்பதையும் அவர் சொன்னார்.

 

அரங்கசாமி அமைப்பாளர் அறிக்கை

அத்துடன் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளையும் அதன் தீய விளைவுகளையும் ஆயுர்வேதம் சித்தமருத்துவம் போன்றவை நிறுவனமாக்கப்பட்டு வருவதில் இப்போது இருக்கும் அபாயங்களையும்  மிகக்கடுமையான குரலில் கண்டிக்கவும் தவறவில்லை. பலவகையில் உதவிகரமான ஒரு சந்திப்பாக அமைந்தது அது.

இரவு பன்னிரண்டு மணிக்கு தூங்கச் சென்ற போது நான் எண்ணிக் கொண்டேன். காலை பத்து மணியிலிருந்து இரவு பதினொன்று மணி வரைக்கும் ஏறத்தாழ பதிமூன்று மணி நேரம் தொடர்ச்சியான, தரமான இலக்கிய விவாதம் நிகழ்ந்துள்ளது. எந்தவிதமான தொய்வோ சோர்வோ அளிக்காததன் காரணம் விழாமனநிலை..ஒருநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களை நம்மால் பார்க்க முடியாது. திரைப்பட விழாவில் ஒருநாளில் ஐந்து திரைப்படங்களை நம்மால் பார்க்க முடியும்.

அந்த கொண்டாட்ட மனநிலை கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் மிக அவசியமான ஒன்று. நாம் இழந்து கொண்டிருப்பது அதுதான் .தனிப்பட்ட உறவுச்சிக்கல்களாலும் இலக்கிய விவாதங்களை அகங்கார வெளிப்பாட்டுக்கோ அல்லது வெற்றுக் கேளிக்கை கொண்டாட்டத்திற்கோ தளமாக ஆக்குவதன் மூலமும் நாம் இந்தக் கூட்டு களியாட்டத்தை இழந்துவிட்டிருக்கிறோம். அதன்விளைவாக அந்தக் களியாட்டம் நமக்கு கற்பிக்கும் இலக்கிய விரிவை அறியாமலிருக்கிறோம்

 

ஆவணப்பட வெளியீடு. ராம்குமார் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொள்கிறார்

உலகமெங்கும் அரசுகள் பெரும் பொருட்செலவில் இலக்கிய விழாக்களை ஏற்பாடு செய்வது இந்த விழாமனநிலையை உருவாக்கும் பொருட்டே. ஆனால் அமைப்பு சார்ந்து இந்த விழாக்களை ஒருங்கிணைக்கும் போது அமைப்பு தன்னியல்பாக உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகார மேல்கீழ் அடுக்குகள் காரணமாக ஒரு சம்பிரதாயத்தன்மையு அதில் கலந்துவிடுகிறது. அதன்பின் அங்கே உண்மையான இலக்கியவிவாதம் நிகழமுடியாது. அதுவும் சம்பிரதாயமாக ஆகிவிடும்

நான் கலந்து கொண்ட எந்த சர்வதேச இலக்கிய விழாவிலும் இங்கே இருந்தது போன்ற ஒரு உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் நீடித்ததில்லை. இத்தனை தீவிரமான விவாதம் இவ்வளவு மணிநேரம் தொடர்ந்து நீடித்ததும் இல்லை. இயல்பாக மேல் கீழ் அற்ற அடுக்கு நிலையும் நட்பார்ந்த சூழலும் உருவாகும் போது மட்டுமே இலக்கிய விவாதம் சாத்தியமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டது

தூங்கும் வரை தலைக்குள் அன்றுபேசப்பட்ட சொற்கள் சுழன்றுகொண்டே இருந்தன. ஒரு கருத்துடன் இன்னொன்று ஏறிக்கொண்டது. நான் கணிசமான அரங்குகளை அரங்குக்கு வெளியே நின்றுதான் கேட்டுக்கொண்டிருந்தேன். முன்பெல்லாம் விவாதம் தொய்வடையக்கூடாதென்பதற்காக நான் அமர்ந்து கேள்விகள் கேட்டு விருந்தினரைப் பேசவைப்பதுண்டு.

 

தாமிராபரணம் நூல் வெளியீடு. ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்

ஆனால் இம்முறை இத்தனைத் திரளான வாசகர்நடுவே அதற்கான தேவையில்லை என நினைத்தேன். அத்துடன் பேசும் என் நண்பர்கள் அவ்வப்போது என்னை பேச்சுக்குள் இழுப்பதைக் கண்டேன். நான்  விழாவின் பேசுபொருளாக ஆகாமல் முழுமையாகவே விலகி நின்றிருக்கவேண்டும், வருகைதரும் படைப்பாளர்களே பேசப்படவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.

இந்த பரிசளிப்பு விழா ஆரம்பித்தபோது இருந்த குற்றச்சாட்டு இது என்னை முன்னிறுத்தும்பொருட்டு அளிக்கப்படும் விருது என்பது. சில ஆண்டுகளில் அந்தக்குற்றச்சாட்டு முனைமழுங்கியது. ஏனென்றால் விருதுபெறும் படைப்பாளி மட்டுமே இவ்விழாவில் கொண்டாடப்பட்டார். வருகைதரும் முதன்மைவிருந்தினர்கள்கூட முன்னிறுத்தப்படவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் நான் முன்னிற்கவில்லை. என் படைப்புகள் பேசப்படவுமில்லை. ஆனால் இது விஷ்ணுபுரம் அமைப்பின் விருதாக இருப்பதற்கான காரணம் இது முழுக்கமுழுக்க வாசகர்- எழுத்தாளர் கூட்டு அளிக்கும் பரிசாக முதல்சொல்லிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே. அது நம் அரசு, கல்வித்துறை அமைப்புகளுக்கு எதிரான ஒரு அறைகூவலும்கூட.

 

சுனீல் கிருஷ்ணன் நன்றியுரை

 

நான் இலக்கியக்கூடல்களை அமைக்க ஆரம்பித்து 25 ஆண்டுகளாகின்றன. என் முதல்நாவலுக்கு விஜயா வேலாயுதம் அமைத்த விழா எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. ஆனால் அப்போது நாஞ்சில்நாடன் என்னிடம் சொன்னார், அவருக்கு இருபத்தைந்தாண்டுக்கால எழுத்துவாழ்க்கைக்குப்பின்னரும்கூட ஒரு விழாகூட எடுக்கப்பட்டதில்லை என. அதன் விளைவாகவே நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் முயற்சியில் எழுத்தாளர்களுக்கான விழாக்களை ஒழுங்குசெய்ய ஆரம்பித்தேன். நாஞ்சில்நாடனுக்கு சென்னையில் மிகச்சிறிய அளவில் ஒரு கூட்டம் ஒருங்குசெய்யப்பட்டது

 

பின்னர் நண்பர் தங்கமணி ஆதரவுடன் தர்மபுரியிலும் வேதசகாயகுமார் உதவியுடன் நாகர்கோயிலிலும்  நிர்மால்யா உதவியுடன்  ஊட்டியிலும்  கலாப்ரியா உதவியுடத் குற்றாலத்திலுமாக இதுவரை 40 இலக்கியகூடுகைகளை நான் ஒழுங்குசெய்திருக்கிறேன். ஒன்றில்கூட என் படைப்புக்களைப்பற்றி பேசியதில்லை. எனக்காக விழா எடுக்கப்பட்டதுமில்லை. எனக்கான விழாக்கள் என் பதிப்பாளர்களும் நண்பர்களுமான வசந்தகுமார் [தமிழினி] மனுஷ்யபுத்திரன் [உயிர்மை] நண்பர் \கெவின்கேர்’ பாலா ஆகியோர் முயற்சியால்ல் அமைக்கப்பட்டவை. அவை பெரும்பாலும் பதிப்பக விழாக்கள்.

 

விஷ்ணுபுரம் விழாக்கள் ஒரு விருதுவிழாவில் படைப்பாளி எப்படி கௌரவிக்கப்படவேண்டும் என ஒரு அளவீட்டை தமிழ்ச்சூழலில் நிறுவிவிட்டன. கிட்டத்தட்ட இரண்டுமாதம் அந்தப்படைப்பாளிமேல் முழுக்கவனமும் உருவாக்கப்படுகிறது. அவரது படைப்புக்கள் வெவ்வேறு குழுக்களில் விவாதிக்கபபடுகின்றன. அப்படைப்பாளிக்கு பலநூறு புதுவாசகர்கள் உருவாகிவருகிறார்கள். விழா அவரை மையமாக்கி மட்டுமே நிகழ்கிறது.

மிகச்சாதாரணமாக நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இன்று இவ்வளவு வளர்ந்துவிட்டது. இன்று இதில் என் பங்களிப்பு மிகக்குறைவு. முழுக்கமுழுக்க இலக்கியநண்பர்களின் அமைப்பு இது. புதியநண்பர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்று இது விருதுவழங்குபவர்களுடன் சேர்த்து அனைத்து எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் விழாவாக மாறிவிட்டது. இம்முறை ஒரு முழுமையான இலக்கியத்திருவிழாவாகவே அமைந்தது.

இரவு முழுக்கவே வெவ்வேறு குழுக்களாக நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அறிந்தேன். அவர்களுக்குத் தங்குமிடமாக அமைக்கப்பட்டிருந்த இரு அடுக்குப்படுக்கை கூடங்களிலும் விடிய விடிய விளக்குகள் எரிந்தன. இலக்கிய நண்பர்களைக் கண்டறிவதற்கான தருணமாகவே இத்தகைய விழாக்கள் அமைய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

[ராஜகோபாலன் அறிமுக உரை]

 

எண்பதுகளில் கலாப்ரியா குற்றாலத்தில் அமைத்த பதிவுகள் அமைப்பு இலக்கிய சந்திப்பு தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு இலக்கிய நட்புகளை உருவாக்கும் களமாக அமைந்திருந்தது. எனது  இலக்கிய நண்பர்கள் அனைவரையுமே அங்குதான் சந்தித்திருந்தேன். பலருடைய நட்புகள் இன்றும் அதே தீவிரத்துடன் தொடர்கின்றன.

இலக்கிய நட்புகள் உருவாவது அவ்வளவு எளிதல்ல. ஒத்த கருத்துடையவர்களை நாம் தேடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒத்த கருத்துடையவர்கள் எனக் கண்டடைவதற்கான உரையாடல்த்தருணம் தற்செயலாகவே அமைகிறது. தமிழகம் முழுக்க இருந்து நண்பர்கள் வந்து கூடுவது போன்ற நிகழ்வுகள் அதற்கு மிக உதவியானவை. அவை இங்கே அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பொதுவாக இவ்விழாவின் கட்டுப்பாடுகள் பற்றிய புகார்கள் உண்டு. அவற்றை மீண்டும் மீண்டும் விளக்கிக்கொண்டே வருகிறேன். இவ்விழாவுக்கு வருபவர்கள் தங்கள் வேலைகளை விட்டு சொந்தச்செலவில் வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவை, மகிழ்வை அளிக்கும்பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.  மிகுந்த உழைப்பில் இவ்வமைப்பை நடத்துபவர்களுக்கு இலக்கியவாதிகள் செய்யும் மாற்றுச்சேவை அதுதான்

விஜயராகவன் அறிமுக உரை

உண்மையான இலக்கியத்தை அதன் தீவிரத்துடன் அறிமுகம் செய்ய நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை. இவற்றை நாம் நம் அகந்தை, பூசல், குடிமுதலிய கேளிக்கைகள் ஆகியவற்றால் தவறவிட்டுவிடக்கூடாது. ஆகவேதான் இந்தக்கட்டுப்பாடுகள். திட்டமிட்டுச் சரியாக நடத்தப்படும் ஒரு நல்ல நிகழ்வை ஒரே ஒரு விஷமி சீரழித்துவிடமுடியும். அதை நாம் ஒப்புக்கொள்ளலாகாது. அதற்காகவே இக்கட்டுப்பாடுகள்.

நான் காலை ஐந்தரை மணிக்கு நண்பர் கடலூர் சீனுவால் எழுப்பப்பட்டேன். அப்போது உண்மையில் ரோமாபுரியில் இருப்பது போன்று ஒரு கனவு. நான் சென்ற ஜுன் மாதம் சென்று வந்த இன்றைய ரோம் அல்ல. பழைய ரோம். ஆனால் அதே செயிண்ட் பீட்டர்ஸ் கதீட்ரல். ஓவியங்களின் கனவுலகம். என்னுடன் இருந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே சென்ற காலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பேச்சுக் குரல்கள் சிரிப்புகள். நிகழ்காலத்துக்கு வந்து இடத்தையும் காலத்தையும் உணர்ந்தபோது வண்ணங்களற்ற உலகத்துக்குள் வந்த சோர்வு தான் ஏற்பட்டது. அந்தக் கனவுக்குக் காரணம் முந்தையநாள் இரவு மறுநாள் கிறிஸ்துமஸ் என நினைத்துக்கொண்டதுதான் என்று தோன்றியது

இரண்டாவது விஷ்ணுபுரம் விருதுவிழாவை  நினைத்துக்கொண்டேன். அன்று போதிய அளவு படுக்கை ஏற்பாடுகள் செய்யமுடியவில்லை. வருகையாளர்கள் நினைத்ததை விட அதிகம். ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கினோம். தங்க இடமில்லை. ஆகவே நானும் கிருஷ்ணனும் பத்து நண்பர்களும் ஆடிட்டர் கோபி செலவில் டீ குடித்தபடி இரவெல்லாம் கோவையில் நடந்து விடியவைத்தோம்

 

விஜயராகவன் உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் ஒரு காலை நடை சென்றேன். ஊட்டியில் ஒரு காலை நடை சென்றஅளவுக்கு குளிர்ந்தது. இரு வெவ்வேறு டீக்கடைகளில் டீ சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு திரும்பி வந்தேன். அவசரமாக குளித்து உடை மாற்றி சந்திப்புகளை ஆரம்பித்தோம். முந்தைய நாள் சந்திப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட அரங்கு போதவில்லை என்று தெரிந்துவிட்டது. நூற்றிருபது பேர் அமர ஐம்பது பேர் சூழ நின்றுகொண்டிருக்க பகல் முழுக்க விவாதிப்பதென்பது எந்த இலக்கிய வாசகனுக்கும் கடினமானதுதான். ஆகவே அவசரமாக இன்னும் ஒரு பெரிய கூடத்தை ஏற்பாடு செய்தோம். அதில் இருநூறு பேர் அமர முடியும் சற்று நெருக்கி இருக்கைகளை போட்டு மேலும் இருபது பேர் அமர ஏற்பாடு செய்தோம்.

சு.வேணுகோபால் பேசத் தொடங்கும்போது அரங்கு நிறைந்திருந்தது. பதினொன்றரை மணிக்கு அந்த அரங்கிலும் முப்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள், நான் உட்பட. வேணுகோபால் இலக்கிய விவாத அரங்குக்கு முற்றிலும் புதிய ஒரு மணத்தைக் கொண்டு வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு உளவியலாளர்களின் ஒர் அரங்கு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. உளவியல் சார்ந்த ஒரு தத்துவ வினா எழுந்த போது நித்ய சைதன்ய யதி  வினய சைதன்யாவை அழைத்துவா என்றார். ஒருவர் ஓடிச்சென்று சொல்ல அருகே வயலில் கேரட்டுக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்த வினயா அப்படியே கிளம்பி வந்தார்.

இரண்டு நாட்களாக அவரை வயலில் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்தான் வினய சைதன்யா என்னும் யோகி என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாய வேலைக்கு வந்த ஊழியர் என்றே நினைத்திருந்தேன். இருகைகளிலிருந்த மண்ணை லேசாக தட்டியபடி அவர் உள்ளே வந்தபோது புது மண்ணின் மணம் அறைக்குள் நுழைந்தது. ப்ரெஞ்சுக் காரர்களும் ஜெர்மானியர்களும் அமெரிக்கர்களும் அடங்கிய அந்த அவையில் முற்றிலும் புதிய ஒரு வாசனை .நாற்பது நிமிடம் மேலை உளவிய கொள்கைகளுக்கும் பதஞ்சலியோக சூத்திரத்துக்கும் நுட்பமான முரண்பாடைப்பற்றிப் பேசிவிட்டு அங்கிருந்து எழுந்து அவர் வெளியே சென்றார். அதைத்தான் நினைத்துக் கொண்டேன்.

 

வானவராயர்

எருவடிப்பதும் தொளிமிதிப்பதும் சாணி அள்ளுவதுமான ஒர் உலகத்திலிருந்து வந்து நவீன இலக்கிய மேடையில் வேணுகோபால் அமர்ந்திருக்கும்போது அது உருவாக்கும் அதிர்வே பிறிதொன்றாக அமைந்திருந்தது. அவர் கதைகளில் வரும் இயல்பான மக்கள் அவர்களின் வாழ்க்கைச்சூழல். அவர் ஒரு கருத்தைச் சொல்வதற்குக்கூட தன் உலகிலிருந்தே உதாரணங்களை எடுத்துக்கொண்டார்

வண்ணதாசன் பதினொரு மணிக்கு அரங்குக்கு வந்தார். வேணு அவரை அறிமுகம் செய்து வைத்து தனது வண்ணதாசன் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். வண்ணதாசன் மென்மையான கனிந்த குரலில் அரங்கு தனக்கு அளிக்கும் உணர்வு எழுச்சிகளை குறிப்பிட்டார். மெல்ல மெல்ல வெவ்வேறு தளங்களுக்குச் சென்று வாழ்க்கையிலிருந்து எவ்வாறு தனது புனைவுகளைத் துளித்துளியாகச் சேர்த்துக் கொள்கிறேன் என்பதை அவர் விளக்கினார்.

 

மீண்டும் மீண்டும் அன்பு என்ற ஒன்றையே எழுதுவதாகவும் அதன் வண்ணங்களை ஒவ்வொரு முறையும் புதிதாகக் கண்டடைவதாகவும் சொன்னார். அதுவரை இருந்த சிரிப்பும் கொண்டாட்டமான நிலையும் மாறி தீவிரமும் உணர்வெழுச்சியும் கொண்டதாக ஆகியது. பல வண்ணதாசன் வாசகர்கள் நெகிழ்ச்சியுடன் அந்த சந்திப்பு தம் வாழ்நாள் நிகழ்வுகளில் ஒன்று என்று சொன்னதைக் கேட்டேன்.

கிருஷ்ணாஸ்வீட்ஸ் கிருஷ்ணன்

மதிய உணவுக்குப்பின் எச் .எஸ். சிவப்பிரகாஷ் அரங்குக்கு வந்தார். அதுவே ஒரு தனி இலக்கிய நிகழ்ச்சி என்று தோன்றும்படி  அரங்கு நிறைந்து இடைவெளிகள் செறிந்து இருந்தது. நூற்றைம்பது வரிசையாக அமரக்கூடிய அவையில் முன்னூறு பேர் இருந்தனர்.  சிவப்பிரகாஷின் அமர்வு சென்ற பதினைந்தாண்டுகளில் நான் பங்கு கொண்ட மிகச்சிறந்த இலக்கிய தத்துவ அரங்குகளில் ஒன்று என்று சந்தேகமில்லாமல் சொல்வேன். அவருடைய தோரணையும் குரலும் மேதமையும் அரங்கை ஒரு உச்ச மனநிலையில் அமைத்தன.

தொல் வேதங்களிலிருந்து நவீன உளவியல் கோட்பாடுகள் வரை இந்திய வரலாற்றிலிருந்து சமகால அரசியல் வரை நாடகத்திலிருந்து கவிதை வரை எங்கு வேண்டுமானாலும் முழுமையான தன்னம்பிக்கையுடன் அசாதாரணமான நினைவாற்றலுடன் செல்லும் அவருடைய கல்வியும் அக்கல்வியின் வெளிப்பாடாக அல்லாமல் அசல் சிந்தனையாக மட்டுமே அந்தந்தக் கணங்களில் அவர் பேசிய விதமும் மேதை என்றால் யார்  என்பதை வாசகர்களுக்கு காட்டியது. ஜெயகாந்தனின் மிகச்சிறந்த அரங்குகளில் மட்டுமே அந்த மின்சூழ் நிலை அமைந்திருக்கிறது என்று தோன்றியது.

 

சிவப்பிரகாஷ் இந்த அமர்வில் பேசியவை பல திறப்புக்களை உருவாக்கும் தொடக்கப்புள்ளிகள். நம் மரபின் மீதான விமர்சனமும் ஆழ்ந்த ஞானமும் ஒன்றாக அவரிடம் குடிகொண்டன. தமிழில் ஒருசாராருக்கு மரபே தெரியாது, அதன்மீதான விமர்சனம் மட்டும் உண்டு. மரபை சற்று அறிந்திருப்பவர்களுக்கு தோத்திரம் மட்டுமே வாயில்வரும். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் உருவாக்கிய அலை அதன்பொருட்டு எழுந்ததே

 

ஜான் சுந்தர் கிறிஸ்துபிறப்புப் பாடல்

மதிய உணவுக்குப்பின் பாவண்ணன் சுப்ரபாரதி மணியன் இரா.முருகன் நாஞ்சில் நாடன் தேவதேவன் ஆகியோர் அமைந்த ஒரு பொது மேடையை வாசகர் வினாக்களால் சந்தித்தனர். பாவண்ணன் தனது புனைவுலகின் சாரமாக அமைந்த நிபந்தனையில்லாத அன்பு என்னும் தரிசனத்தை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து எப்படி கண்டு கொண்டேன் என்பதை சொன்னார். சமூக போராட்டங்களினூடாக தனது புனைவுலகை எப்படி உருவாக்குகிறேன் என்று சுப்ரபாரதிமணியன் விளக்கினார். நாலரை மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.

இரு நாட்களும் ஒரு கணமும் தொய்வின்றி சென்ற இலக்கிய நிகழ்ச்சி உண்மையில் எண்ணிப்பார்க்கையில் பல்வேறு தற்செயல்களின் விளைவென்று தோன்றியது ஆனால்  அத்தகைய தற்செயல் நிகழ்வதற்கு மழையை பிடித்துக் கொள்ள கலம் வைத்திருப்பது போல மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பு தேவை என்று மறுகணம் எண்ணச்செய்தது.

 

செந்தில் வரவேற்புரை

ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு பாரதி வித்யாபவனில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது. ஐந்தரை மணிக்கு நான் அங்கு சென்ற போதே பெரும்பாலும் அரங்கு நிறைந்திருந்தது. அரங்கு முற்றிலும் நிறைந்ததனால் மாற்று ஏற்பாடாக கீழே ஒளித்திரை வைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஒரு நூறு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

நாசர் அன்று மதியம் தான் வந்திருந்தார். முதலில் அவரே அரங்குக்கு வந்தார். அதன் பிறகு வண்ணதாசன், கு.சிவராமனும், பவா.செல்லத்துரையும், இரா.முருகனும் எச்.எஸ் சிவப்பிரகாஷும் அரங்குக்கு வந்தனர். கவிஞரும் சொந்தரயில்காரி என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியருமான ஜான் சுந்தர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை துதித்து பாடிய இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது

 

வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் எனும் ஆவணத்திரைப்படத்தின் பதினைந்து நிமிடக்காட்சிகளை அரங்கில் முதலில் திரையிட்டோம். இம்முறை மேடை நிகழ்ச்சிகளை அனைத்தையுமே மேகாலயா ஆட்சியரும் எனது நண்பருமான ராம்குமார் வடிவமைத்தார். நிகழ்ச்சி வடிவமைப்பில் அவருடைய திறமை மொத்த நிகழ்ச்சியும் மிகக் கச்சிதமாக நடைபெற வழிவகுத்தது. அனேகமாக விருந்தினர் அனைவருமே அதை பலமுறை சொன்னார்கள். ஆறு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி ஒன்பது மணிக்கு நிறைவுற்றது. ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்தனர்.

ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் விருதுகள் அமைப்புகளால் வழங்கப்படும் போது வரும் அவநம்பிக்கைக்கு பதிலாக சக எழுத்தாளர்களால் சேர்ந்து வழங்கப்படும் போது வரும் கொண்டாட்ட மனநிலையையும் , அந்த மனநிலை நிறைந்திருந்த விஷ்ணுபுரம் நிகழ்ச்சி இந்தியாவிற்கே ஒரு முன்னோடி முயற்சி என்றும் சொன்னார். வரும் வருடங்களில் இருந்து ஒரு இந்திய எழுத்தாளருக்கு இந்த விருதை அளித்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார்.

 

இந்தியா முழுக்க அரசியலில் ஒரு வகையான மக்கள் மொழி புழங்கும்போது கவிதைகளில் சொல்லடுக்கு கொண்ட மொழி பயின்று வருகிறது. மாறாகத் தமிழில் அரசியல் மேடை முழுக்க அணிச்சொற்களின் வரிசையாக இருக்கிறது. அதற்கு மாற்றாக தமிழ்க் கவிதை மிக நேரடியான குறைந்த பட்ச கூற்றுகளால் ஆன வெளிப்பாடாக இருக்கிறது என்றார். . ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் மொழி பெயர்த்த வண்ணதாசனின் கவிதை ஒன்றை வாசித்து அது எந்த அளவுக்கு சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது என்பதை குறிப்பிட்டார்.

 

டைனமிக் நடராஜன் வண்ணதாசனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்

நாசர் பெருங்கனவுகளுடன் கலை உலகுக்குள் நுழைய துடித்துக் கொண்டிருந்த ஆரம்பகாலத்தில் எப்படி அவர் நண்பர் ஒருவர் வண்ணதாசனின் புனைகதைகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றும், அவற்றைப்படித்த போது ஏற்பட்ட புரிந்து கொள்ள முடியாமையின் பதற்றம் அவற்றை மானசீகமாக நடிக்க ஆரம்பித்த போது எப்படி விலகியதென்பதையும் விளக்கினார். பாடாத பாட்டெலாம் என்ற அவருடைய கதையில் கண்ட காட்சி எப்படி தன் கனவுகளில் நீடித்து பின்னாளில் அவதாரம் போன்ற ஒரு திரைப்படத்திற்கு  ஒரு காட்சியாகவே மாறியது என்றும் சொன்னார். தனி அனுபவங்களிலிருந்து ஒரு கலைஞன் வந்து இலக்கிய எழுத்தை சந்திக்கும் அந்தத் தருணம் ஆத்மார்த்தமானதாக நுட்பமான வெளிப்பாடாக அமைந்தது.

இரா.முருகன் வண்ணதாசனின் புனைகதைகளைப்பற்றிய முழுக் கட்டுரை ஒன்றை வாசித்தார். வண்ணதாசன் என்ற எழுத்தாளனுக்கும் வண்ணதாசன் என்னும் தனி மனிதனுக்குமான இரு முகங்கள் தன்னுடன் எப்படிதொடர்பு கொண்டிருக்கின்றன என்று சொல்லி வண்ணதாசன் என்னும் மனிதரின் இயல்பான வெளிப்பாடாக அவரது புனைகதைகள் அமைந்திருக்கிறது என்பதை மருத்துவர் சிவராமன் பேசினார்.

 

வண்ணதாசன் கதைகளில் அடிப்படையான மனிதாபிமான உள்ளடக்கம் பற்றி பவா செல்லத்துரை சொன்னார். அன்றாட வாழ்க்கையின் எளிய சித்திரங்களை எழுதுபவர் என்ற சித்திரத்திற்கு அப்பால் குரூரமும் வலியும் மிகுந்த அடித்தளத்து வாழ்க்கையை வண்ணதாசன் எவ்வளவு ஆழமாகச் சித்தரிப்பார் என்பதை இருகதைகளை சித்தரித்துக்காட்டி  விளக்கினார்.

வண்ணதாசனின் புனைவுலகு ஒரு மின்மினி காட்டும் வெளிச்சத்தில் தெரியும் ஒற்றை எழுத்து போல நுட்பமானது. கற்பனையில் குறுஞ்சித்திரங்களை எழுப்புவது. மின்மினிகள் இணைந்த ஒரு தீயை போல அவருடைய புனைவுலகம் அது எரிக்காது சுடாது ஆனால் தீ தான் என்று நான் பேசினேன்.

வண்ணதாசனின் ஏற்புரை உணர்ச்சிகரமாக இருந்தது. நேரடியாக வாசகர்களின் உள்ளத்துடன் பேசுவதாக இருந்தது. தன் அந்தரங்கத்திலிருந்து வாசகனை நோக்கி நீட்டும் ஒரு கைதான் தன் படைப்புலகம் என்று அவர் சொன்னார் ஒன்பது மணிக்கு மேலும் வாசகர்கள் சூழ்ந்து வண்ணதாசனை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.

 

நிகழ்ச்சி முடியும்போது தோன்றியது. வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சி ஒரு சில நண்பர்களின் ஒத்துழைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் அதில் கலந்து கொள்பவர்களின் ஒட்டுமொத்தமான உத்வேகத்தால் அது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு அவர்களே அதை தங்களுக்குரிய வெற்றியாக அமைத்துக் கொள்கிறார்கள்.

வண்ணதாசன் என்னும் ஒரு படைப்பாளிக்கு கௌரவம் செய்வதாக தொடங்கிய இந்த விழா பல்வேறு படைப்பாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை திரட்டி முன்வைத்து அவர்களே நேரடியாக அவர்களிடம் பேச வழிவகுத்தது. பாரதி மணியிலிருந்து சு.வேணுகோபால் வரை மூன்று தலைமுறை படைப்பாளிகளுக்கு களம் அமைத்தது. முழுக்க முழுக்க அப்படைப்பாளிகளை மட்டுமே அது முன்னிறுத்தியது. அதனூடாக இங்கு அறுபடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய இயக்கம் ஒன்றை இருநாள் நிகழ்வாக நடத்திக் காட்டியது. இது அரசு ஆதரவின்றி அமைப்பு பலமின்றி நிகழ்ந்து கொண்டிருந்தாலும் நவீனத் தமிழிலக்கியம் என்பது  தமிழகத்தின் அடிப்படையான அனல் என்பதை மீண்டும் நிறுவியது.

 

 

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்

ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்