ஒண்ணுமே வாசிச்சதில்லே- கடிதங்கள்-2

photo 1

 

பிரிய ஜெ,

நலம் தானே?

“சாரி சார்! நான் ஒண்ணுமே வாசிச்சதில்லே!’ பதிவைப் படித்தேன்.

மிகச்சரியாக, ஒரு படைப்பாளியை சந்திக்கும் முறையை சொல்லியிருக்கிறீர்கள்.

எந்த வகைப் படைப்பாளியாகினும், தன் உணர்ச்சிகளையும் கற்பனையையும் கொதிநிலைக்கு ஏற்றி, படைப்பை இழைபிரிக்கும் ரசவாதத்தை நடத்தித்தான் தன் கலையை வெளிப்படுத்த முடியும். அவருக்குத் தன் படைப்புகள் யாவும் ‘பெற்ற பிள்ளைகளே’. யாரோ தாயொருத்தியின் கையிலுள்ள குழந்தையைப் பார்த்து நாம் சிரிக்கும் போது, பூரித்துப் போகிறாளல்லவா? அந்தப் பூரிப்போன்றே எழுத்தாளனுக்கும் ஏற்படும் ஆனந்தம். தன் கதை மாந்தர்களைப் பற்றி பிறர் நினைவு கூர்வதும், எழுதிய சொற்றொடர் மாறாமல் செய்யப்படும்   பிரஸ்தாபமும் படைப்பாளிக்கு பெரும் ஊக்கம். இது எந்த கலைஞனுக்கும் பொருந்தும். இதை எழுத்தாளனுடைய தற்பெருமை என்றோ சுயமுனைப்பு என்றோ கொள்ளலாகாது.

படைப்பாளிகள் உணர்ச்சிப் பிழம்பாக அன்றி, வேறு வகையில் இருக்க இயலாது என்றே தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ அவர்களால் தன் கதைமாந்தர்களின் உணர்வுகளை நுண்மையாக வேறுபடுத்திக் காட்ட முடிகிறது. இதொன்றாலேயே, ‘வாசித்ததில்லை’ என்ற அசட்டையை எதிர்கொள்ளும்போது எளிதில் காயப்பட்டுப் போகிறார்கள்.

எனக்கென்னவோ இன்றைய இளம் வாசகர்கள் போன தலைமுறை வாசகர்களை விட, இந்த சந்திப்பு விஷயத்தில் நாசூக்காக இருக்கிறார்கள் என்றே படுகிறது. ஆர்வமாகவும் கூடத்தான்.

உங்களை மறுமுறை சந்திக்கும் போது, ஒரு முழு பகலுக்குமான உரையாடலை மேற்கொள்ள, உங்களைப் படித்த சரக்கு இருக்கிறது. சாயங்காலமும் இருக்க சொன்னீர்களேயானால், விஷ்ணுபுரத்தை இன்னொரு முறை ரிவிஷன் பண்ணிவிட்டு வந்து விடுகிறேன் !

சகோதரி அருண்மொழிக்கும், குழந்தைகளுக்கும் என் அன்பு.

மோகன்ஜி

ஹைதராபாத்

***

அன்புள்ள ஜெ

ஒருமுறை நானும் உங்களைச் சந்திக்கவந்து ஒண்ணும் படிச்சதில்லை சார் என்று சொல்லிவிட்டேன். நீங்கள் பேசுவதைக் கேட்கலாம் என்று நினைத்தேன். நீங்கள் சினிமா அரசியல் என்று பேச ஆரம்பித்தீர்கள். என்னுடன் வந்த நண்பர்களும் உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று செல்லும்வழி முழுக்க வருந்தினேன். பிறகுதான் தெரிந்தது. அதை நான் தன்னடக்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த அசட்டுத்தனத்தை நினைத்து வருந்தாத நாள் இல்லை. மீண்டும் உங்களை சந்திக்கவே முடியவில்லை. என்னைப் பற்றிய ஒரு மதிப்பை உங்களிடம் எப்படி உருவாக்குவது என்றும் தெரியவில்லை

ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைமென்மையில் விழும் கீறல்கள்
அடுத்த கட்டுரை“நானும் ஒரு ஆளுதான்!”