திருச்சீரலைவாய்

பித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன்.

வள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த செந்தேரிக்காடு. அப்பால் அலையுறுமும் கடல். மீண்டும் கொஞ்சம் தூங்கி விழித்தபோது செந்தூர்.

வசந்தகுமாரும் உடுமலை டாட் காம் சிதம்பரமும் வந்து அங்கே திலகா லாட்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று சேர்ந்தேன். தேவதேவனும் வந்திருந்தார். எட்டு மணிக்கு கோயிலுக்குக் கிளம்பினோம். முந்தையநாள் மழையில் திருச்செந்தூர் சாலைகள் ஊறிக்கொதகொதவென்று கிடந்தன. முகூர்த்தநாளாகையால் எங்கும் கால்கள் மிதிமிதித்து சென்றுகொண்டே இருந்தன.

கோயிலுக்குள் நல்ல கூட்டம். செல்வேந்திரனையும் திருக்குறளரசியையும் தரிசனத்துக்கு பாய்ந்துசெல்லும் வழியில் சந்தித்தோம். நாங்கள் வரிசையில் நின்று பிராகாரத்துக்குள் புகுந்து பாலங்களில் ஏறி இறங்கி ஈட்டிமரக்காட்டு இறைவனை தரிசனம் செய்து வெளியே வந்தோம். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. கோயிலுக்குள் சில கூரைத்திறப்புகள் வழியாக நீர் ஓசையுடன் கொட்டி ஓடைகள் வழியாக வெளியேறிக்கொண்டே இருந்தது. அருவிகள் கொட்டு மலைக்குகைக்குள் இருக்கும் உணர்ச்சி

எங்கும் கூட்டம். பல திருமணங்கள். மலையாளப்படம் ஒன்றில் குருவாயுரில் கல்யானாச்சந்தடியில் மாற்றி தாலிகட்டுவார்கள். அதை குருவாயூரப்பன் அருள் என எண்ணி சமாதானம் கொள்வார்கள். அதை நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்து நெரித்த மக்கள்திரளுக்குள் நிற்பது ஒரு நிறைவைத்தான் அளித்தது

வெளியே வந்து கடலைப்பார்த்துக்கொண்டு சுற்றுவழியில் நின்றோம். மழையில் மூடிய கடல் இளம்பச்சை நிறமாக அலையற்று கிடந்தது. அந்த மழையிலும் பலர் கடலில் குளித்தார்கள். சிலர் மழைநீர் கொட்டும் ஜலதாரையில் குளித்தார்கள். யானைப்பிண்டம் மழைநீரில் கரைய அதில் காலை வைத்துக்கொண்டிருந்தாள் ஒரு அம்மாள். பித்தவெடிப்புக்கு நல்லது என்று நம்பிக்கை.

மழை ஓய்ந்ததும் நடந்து வாணியர் மண்டபம் வந்தோம். அங்கே கலாப்ரியாவை பார்த்தோம். பேசிக்கொண்டிருக்கும்போது மாதவராஜ் மற்றும் அவரது வலைப்பூத்தோழர்கள் வந்தார்கள். மாதவராஜை நான் நேரில் பார்த்ததில்லை. தமிழ்ச்செல்வனும் சு வெங்கடேசனும் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை ஜெயகாந்தனை நான் பார்க்கச்சென்றபோது அவர் வீட்டுக்குள் இருந்தார், சந்திக்க நேர்ந்ததில்லை. உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மாதவராஜ் எழுதும் ஆவேசமான இணையப்பதிவுகளை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. என்னையெல்லாம் நன்றாகத் திட்டியிருந்தார். நான் நினைத்ததை விட உயரமாக இருந்தார். ஆனால் எனக்குத்தெரிந்த சாத்தூர்க்காரர்கள் அனைவருமே உயரமானவர்கள். சொல்லப்போனால் எல்லாருமே மார்க்ஸியர்களும்கூட. எங்கள் தொழிற்சங்கத்தலைவர் பழனிச்சாமி உட்பட. ஒன்றும் சொல்வதற்கில்லை.

திருமணம் முடிந்து அறைக்கு திரும்பிவிட்டு சிதம்பரத்தின் காரில் ஊர் சுற்றக்கிளம்பினோம். செந்தூர் என்றும் பரதவர்களுக்குரிய ஆலயமாக இருந்துள்ளது. பலசடங்குகளில் இன்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் உடைய கோயில் அது தென்குமரிநிலம் விட்டு வடக்கே புலம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த பரதவர்களான . பாண்டியர்களின் முதல்கட்ட தலைநகர்களில் ஒன்றாக அது இருந்திருக்கலாம். அலையடிக்கும் வாசலாக இருந்தமையால் அதற்கு அலைவாய் என்று பெயர். திருச்சீரலைவாய் என்று கல்வெட்டு.

இங்கிருந்து மேலே சென்று இன்றைய மதுரை உருவாக்கப்பட்டபோது அதற்கு அலைவாய் அல்லது ஆலவாய் என்ற பெயர் நீடித்ததை இப்படியே புரிந்துகொள்ள முடியும். மீன்விழியம்மனையும் அந்தகோணத்தில் புரிந்துகொள்ளலாம். அலைக்கும் மதுரைக்கும் வேறு தொடர்பில்லை. ஆதி ஆலவாய் அல்லது திருச்சீரலைவாயில் இன்றுள்ள கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டு நாயக்கர்களால் விரிவாக்கம்செய்யப்பட்டது.

எனக்கு தாமிரவருணி கடலில் கலக்கும் இடத்தையும் சில ஊர்களையும் பார்க்கவேண்டியிருந்தது. முதலில் ஏரல் சென்று அங்கிருந்து கொற்கை சென்றோம். பாண்டியர்களின் இரண்டாம்தலைநகரமாகவும் மையத்துறைமுகமாகவும் ஆயிரமாண்டுகள் விளங்கிய கொற்கை இன்று ஒரு சிற்றூர். சொல்லப்போனால் சிற்றூகளின் தொகுப்பு.

அந்த நிலப்பகுதி பெரும் வண்டல்படிவுகளால் ஆனது. தாமிரவருணி பெருகி வந்த காலத்தில் அதன் அழிமுகத்தில் இருந்தது கொற்கை நகரம். கப்பல்கள் நதிவழியாகவே உள்ளே வந்து மீளும். ஆற்றுநீர் குறைந்தபோது ஓட்டமிழந்து அது நான்கு கைவழிகளாகப்பிரிந்தது. பெரிய வண்டல்குன்றுகள் உருவாகி நீர் தேங்கி காயலாகியது. இன்று புன்னக்காயல் முதல் காயல்பட்டிணம் வரை உள்ள பகுதி அன்று நீர்த்தேக்கமாக இருந்தது. பின்னர் நீர் தேக்கங்கள் நடுவே வண்டல்குன்றுகள் உருவாகி ஊர்களாயின. பழையகாயல் என்ற இடம் இன்று ஒரு ஊர்.

இன்றும் இப்பகுதி பள்ளமாகவே உள்ளது. வண்டல்படிந்த காயல்பகுதிகள் வளமான அடர்ந்த வாழைத்தோப்புகளாக ஆகியிருக்கின்றன. தமிழகத்தில் குமரிமாவட்டத்துக்கு வெளியே இத்தனை செழிப்பான வாழைத்தோப்புகளை எங்கும் பார்க்க முடியாது. கன்னங்கரிய மண். புதுமழையில் அப்பகுதியே நனைந்து மண்மணம் வீசிக்கொண்டிருந்தது. சில இடங்களில் சதுப்புகள் பல ஏக்கருக்கு விரிந்து கோரையும் ஆகாயத்தாமரையும் நீரூமத்தையும் மண்டிக் பச்சைவெளிகளாகக் கிடந்தன.

கொற்கையில் பாண்டியன் வெற்றிவேல்செழியன் கட்டியதாகச் சொல்லப்படும் வெற்றிவேலம்மன் கோயில் உள்ளது. காயல்சதுப்பு நடுவே மேட்டில் தனியாக நிற்கும் கோயிலுக்குச் செல்ல ஒரு மண்பாதை போடப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறு கற்கோயில். உள்ளே உள்ள சிற்பமும் புதியதே. வெற்றிவேலம்மன் என்ற பெயர் மட்டுமே ஐதீகமாக இருந்து வருகிறது. அது கண்ணகிதான் என்று அங்கே நெடுங்காலம் தொல்லியலாளராக பணியாற்றிய ராமச்சந்திரன் சொல்கிறார்.

இப்பகுதி ஒருகாலத்தில் உமணர்களின் குடியிருப்புகளால் ஆனதாக இருக்கலாம். இன்றும் உப்புகாய்ச்சுவதே இங்கே முக்கியமான தொழில். உவரி , உமரிக்காடு போன்ற பல ஊர்கள். உமரிக்காட்டில் உள்ள கோட்டைவாழய்யன் கோயிலுக்குச் சென்றோம். ஊருக்கு கொஞ்சம் வெளியே தாமிரவருணி ஓடையின் கரையில் அமைந்துள்ள கோயில் மிகக்குளுமையான சூழலில் உள்ளது.

புதிதாக சீரமைக்கப்பட்ட கோயில் பூட்டியிருந்தது. அங்கே பழங்காலத்தில் கோட்டை இருந்திருக்கிறதென்பதற்கான ஆதாரம் கோட்டை வாழ் அய்யனார்தான். அப்பகுதியின் அமைதியும் நிழலும் காற்றும் விளக்கமுடியாத மனநிறைவை அளித்தது. கோட்டைவாழ் அய்யனின் சிலை ஒன்று வெளியே உள்ளது. தலைப்பாகை அணிந்து குதிரைமேல் அமர்ந்த தோற்றம். மிக இளமையான முகம்.

சதுப்புநிலங்கள் வண்டல்மேடுகளில் அமைந்த சிற்றூர்கள் வழியாக சுற்றி வந்தோம். பழையகாயல் அக்கசாலை வழியாக வந்து உப்பளம் ஒன்றுக்குள் சென்றோம். மழைக்காலமானதனால் உப்புக்குவியல்களை பனையோலைக்கூரைகளால் நன்றாக மூடி வைத்திருந்தார்கள். உப்பளங்களில் சேற்றுக்கலங்கலாக நீர் நிறைந்து கிடந்தது. வெண்ணிறக் கடற்பறவைகள் மட்டும் எங்கும் பறந்து அமர்ந்துகொண்டிருந்தன.

அங்கிருந்து புன்னக்காயல் சென்றோம். தாமிரவருணியின் பெரிய கிளை கடலில் கலக்கும் இடம் இதுவே. நீர் தேங்கிய ஆறு மெல்லலைகளுடன் கிடந்தது. ஆற்றின் இருபக்கமும் செடிகள் மண்டிய பெரிய சதுப்பு நிலம். அரை உப்புநீர் கொண்ட இவ்வகை நிலங்கள் எஸ்டுவரி என்று சொல்லப்படுபவை. பலவகையான பறவைகளின் உகந்த வாழ்விடம். அகன்ற சிறகுகளுடன் எழுந்து எழுந்து அமர்ந்த பெரிய நாரைகள் பச்சைவெளியெங்கும் தெரிந்தன.

புன்னக்காயல் ஒரு மீனவக்கிராமம் நதிநீரில் பெரிய மரப்படகுகள் நின்று ஆடிக்கொண்டிருக்க மீனவர்கள் வலைகளை சிக்கெடுத்துக்கொண்டிருந்தார்கள். கிராமமே தூங்கீக்கொண்டு இருந்தது. சந்தையில் யாருமில்லை. சிமிண்ட் சாலைபோன்ற பரப்பில் மீன்கள் வெள்ளிச்சில்லுகளாக வெயில் காய்ந்தன. பெண்கள் சில வீடுகள் முன் அமர்ந்து பேன்பார்த்தனர். கடல் தூரத்தில் அலையில்லாமல் கிடந்தது. சாம்பல்நிறமாக மேகம் மூடிய வானம் நீர்கனத்து நின்றது. வெளிச்சம் மட்டுமேயான வெயில்.

காயல்பட்டினம் சென்று திரும்பலாமென்று வசந்தகுமார் சொன்னார். காயல்பட்டினம் 1310ல் இஸ்லாமியர் படையெடுப்பை ஒட்டி உருவான ஊர். மரபான கடல்வணிகர்கள் சுல்தான் ஆட்சிக்காலத்தில் அதிகாரமிழக்க காயல்பட்டினம் முக்கியமான துறைமுகமாக உருவாகி வந்தது. 1700களில் கூட காயல்பட்டினம் துறைமுகமாக இருந்துள்ளது. இன்று அங்கே கடலில் கலந்த தாமிரவருணியின் கிளை முழுமையாக நின்றுவிட்டது. அந்த பாதை சிறிய குளங்களாக குப்பையும் ஆகாயத்தாமரையும் மண்டி கிடக்கிறது.

காயல்பட்டினம் கடற்கரையில் இரு குடும்பங்கள் ஒரு காதலிணை. கடல் மெல்லிய அலைகளுடன் வெளிறி பரந்து கிடந்தது. தாமிரவருணி ஓடை கடலில் கலக்குமிடத்தைப் பார்க்க கொஞ்சதூரம் நடந்து சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பி விட்டோம்.

அங்கிருந்து தென்திருப்பேரை சென்றோம். தாமிரவருணிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள்கோயில்கள் நவதிருப்பதிகள் எனப்படுகின்றன, அவற்றில் ஒன்று இக்கோயில் மிக அமைதியான தெருக்கள். அமைதியான கோயில். சிற்பங்கள் இல்லை என்றாலும் அழகான சூழலின் நிறைவு சூழ்ந்துகிடந்தது. என் அமெரிக்க நண்பர் திருமலைராஜன் அவ்வூர்க்காரர். அவரது வீட்டை விசாரித்துச் சென்று அவரது மாமனாரிடம் அரைமணி நேரம் பேசிவிட்டு திரும்பினோம். இருட்ட ஆரம்பித்திருந்தது. வாழைத்தோப்புகளுக்குள் இருட்டு அடர்ந்தது. மழைமேகம் சுழந்த வானில் திரைக்குள் நிலா ஒளிவிட்டது.

திருச்சீரலைவாய்க்கே திரும்பி விடுதியில் தங்கினோம்

[மேலும்]

அனைத்து புகைப்படங்களும் :

http://picasaweb.google.com/vishnupuram.vattam/TiruchendurAndErode#

செங்காடு http://www.jeyamohan.in/?p=624
ஆலயம்:கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=742

முந்தைய கட்டுரைஇரு இணைப்புகள்
அடுத்த கட்டுரைநின்றிருந்துகிடந்த நெடியோன்