ஊடகமாயை -2

 

 

1ஊடகங்கள் உருவாக்கும் மாயையைப்பற்றி சொல்லியிருந்தேன். ஊடகங்கள் நடுநிலையானவை, மக்களை பிரதிநிதிப்படுத்துபவை என்பது ஒரு பொய்த்தோற்றம். அவை முதலாளிகளால் நடத்தப்படுபவை. திட்டவட்டமான உள்நோக்கம் கொண்டவை. ஊடகங்கள் முக்கியமானவை. ஆனால் அவை அரசின் திட்டங்களை தடுக்கவோ திசைதிருப்பவோ முடியும் என்னும் அதிகாரத்தை அவற்றுக்கு நாம் அளித்துவிடக்கூடாது. அவை நினைத்தால் எதைவேண்டுமென்றாலும் உண்மை என காட்டிவிடமுடியும் என அனுமதிக்கக்கூடாது

 

இந்தச்செய்தியைப்பாருங்கள். இன்று செய்தியூடகங்கள் முழுக்க இதைத்தான் கூவிக்கொண்டிருந்தன.

வங்கியில் பணம் எடுக்க காத்திருப்பு: தந்தை உடன் வந்த 4 வயது சிறுமி காய்ச்சலில் இறந்த சோகம்

 

இந்தச்செய்தியை வாசித்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிக்கொதிக்கும் அப்பாவிகள் உண்டு. இதையே சாக்காக வைத்து போலிக்கொந்தளிப்பைக் காட்டும் அரசியல் காழ்ப்பாளர்கள் உண்டு. கொஞ்சம் பொதுப்புத்தி இருப்பவர்கள் சிந்திக்கலாம்

 

சாகும்நிலையில் உள்ள ஒரு குழந்தையுடன் , அதற்கு உரிய மருத்துவசிகிழ்ச்சை அளிக்காமல் வங்கிக்கு வந்த அந்தத் தந்தையின் பொறுப்பு என்ன? முன்னரே பணம்கட்டாமல் எந்த ஆஸ்பத்திரியிலும் குழந்தையை அனுமதிக்கமாட்டார்களா? அப்படியென்றால் அந்த டாக்டர்களை விடப்பெரிய குற்றவாளிகள் யார்? அங்கே ஓர் அரசு மருத்துவமனை கூடவா இல்லை? அங்கும் காசில்லையேல் துரத்திவிடுவார்கள் என்றால் அந்த ஆஸ்பத்திரி ஊழியர்களின் பொறுப்பு என்ன?

 

சரி, சாகும்நிலையிலுள்ள குழந்தையுடன் வந்தவருக்குக்கூட வரிசையில் முன்னுரிமை அளிக்காமலிருக்கும் அளவுக்கு நீசர்களா அந்த வங்கியில் நின்றிருந்தவர்கள்?

 

எந்தக்கேள்வியுமே நம் மனதில் எழவில்லை என்றால், மோடி மட்டும்தான் குற்றவாளி என்று சொல்லி உடனே ஃபேஸ்புக்கில் எம்பிக்குதிக்கிறோம் என்றால் நாம் ஊடகத்தின் அடிமைகளாக நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் என்றே பொருள்.

 

மோடியை வில்லனாக்க நாலாந்தர செண்டிமெண்டுகளை சமைக்கும் அவசரத்தில் ஒட்டுமொத்த தேசத்தையே கருணையற்ற கொலைக்காரர்களின் தேசமாகச் சித்தரிக்கிறார்கள் .

 

ஒரு திருவிழாக்காலகட்டத்தில் ரயிலுக்கே பலமணிநேரம் வரிசை காத்திருக்கவேண்டிய இந்தத் தேசத்தில் ஏடிஎம்களில் நான்குநாட்கள் நின்றமையால் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து உதிர்கிறார்கள் என நம்மிடம் சொல்கிறது ஊடகம். என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் ஊடகம் இத்தனை கீழிறங்கி நான் பார்த்ததில்லை.

 

ஊடகமாயை 2

முந்தைய கட்டுரைவறுமையில் இறந்தாரா சுஜாதா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35