‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32

[ 10 ]

வாருணம் என்று அழைக்கப்பட்ட அந்நிலத்திற்குச் செல்வதற்கு பாதைகளென எதுவும் இருக்கவில்லை. விண்ணிலிருந்து விழுந்து நான்காகப் பிளந்து சரிந்ததுபோல் கிடந்த வெண்ணிற பாறைக்கூட்டங்களின் அருகே வணிகர் குழு வந்தபோது பீதர் தலைவர்  போ அர்ஜுனனிடம் தொலைவில் வானில் எழுந்து தெரிந்த வெண்ணிற ஒளியை சுட்டிக்காட்டி “அங்குதான் என்று ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் எவரேனும் சொல்வதுண்டு. அந்நிலத்தைப் பற்றிய கதைகளன்றி வேறெந்த செய்தியும் நானறிந்திருக்கவில்லை” என்றார்.

அர்ஜுனன் புன்னகைத்து “நன்று, நான் மீள்வேன்” என்றான். பீத வணிகர் குழுவில் அனைவர் விழிகளும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனுடைய நிமிர்ந்த தலையையும் புன்னகையையும் கண்டு அவர்கள் உணர்வெழுச்சி கொள்வது உடலசைவுகளிலும் ஓசையுடன் எழுந்த உயிர்ப்பிலும் தெரிந்தது. “விடைகொடுங்கள், மூத்தவரே” என்று சொல்லி அர்ஜுனன் குனிந்து முதிய பீதவணிகரின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நன்று சூழ்க! உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க!” என்று போ அவனை வாழ்த்தினார்.

அவர்கள் குளம்படியோசைகளும் கால்கள் மண்ணில் விழுந்தெழும் ஓசைகளும் ஒலிக்க அவனைக் கடந்து சென்றனர். ஒவ்வொரு விழியும் கடந்து செல்லும்போதும் அவன் தலைவணங்கி புன்னகை செய்தான். கண்முன்னால் ஒரு காலத்துண்டு ஒழுகிச்செல்வதுபோல் தோன்றியது. பல மாதங்கள் உடனிருந்தவர்கள். ஒவ்வொருவரின் பெயரும் இயல்பும் உவகையும் துயரும் கனவுகளும் அவன் அறிந்தவை. அம்முகங்களில் ஒன்றைக்கூட அவன் மறக்கப்போவதில்லை. ஆனால் மீண்டும் அவர்கள் எவரையும் பார்க்க வாய்ப்பும் இல்லை. எனவே அந்நினைவுகளுக்கு எப்பொருளும் இல்லை.

குளம்படியோசைகள் முற்றிலும் மாய்ந்தன. அவர்கள் சென்றபின் எஞ்சிய புழுதியை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். முன்காலை வெயிலின் ஒளியில் விண்புகைபோல் நின்றது அது. ஒரு மென்மலரிதழ் போல. பின்னர் புழுதித்திரை சரிந்தபோது வளைந்திறங்கிச் சென்ற பாதையின் தொலைவில் புழுதிச்சிறகு சூடி ஒரு பெரிய பறவை செல்வதுபோல் அக்குழு சென்றுகொண்டிருந்தது.

ஒருவேளை அவர்களை மீண்டும் சந்திக்கலாம். அங்கு சென்று மீண்டும் இங்கு வந்து நிற்கையில் தங்கள் வணிகம் முடிந்து அவர்களும் இந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும். விந்தைகள் நிகழக்கூடாதென்பதில்லை.

அவ்விழைவு எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். அவர்களை மீண்டும் சந்திப்பதனால் என்ன பொருள் வந்துவிடப்போகிறது? திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன? எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா? உறவாடலின் அத்தருணத்தில் உருவாக்கப்படும் பொருள். பின்னர் நினைவுகள். நினைவுகளும் உதிரும் காலம் வரக்கூடும்.

அவன் சிபிநாட்டு பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். சிற்றிளமை முதலே அவர் கதைகளை கேட்டு வளர்ந்தான். அவனுடைய தொல்மூதாதை தேவாபியின் இளையோன். அவருடன் பிறந்த அனைவரும் இறந்து மறைந்து கதைகளென்றாகி, பின் நூல்களாக மாறிய பின்னரும் அவர் ஊனுடலுடன் உச்சி மலையடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரைச் சென்று பார்த்துவிட்டு வந்து சூதனொருவன் சொன்னான் “அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முற்றிலும் புதிதாகப் பிறந்திருக்கிறார், இளைய பாண்டவரே! அதற்கு முந்தைய எதுவுமே அவர் நினைவில் இல்லை. முழுமையாகவே அப்படி உதிர்த்துவிட்டுச் செல்வதனால்தான்போலும் அவர் உயிருடன் இருக்கிறார். இங்கு உச்சிமலைக் குடிகளில் அவருக்கு ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது இளம்மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.”

கைநீட்டி அவன் பாடினான் “அவருக்கு இறப்பே இல்லை. காலமென வந்து படிவனவற்றை முற்றாக உதிர்த்துவிட்டு கடந்து செல்பவருக்கு இறப்பில்லை. ஏனெனில் இறப்பென்பது அணுவணுவாக வந்து படியும் துயரத்தின் பெருந்தொகையே. இந்தத் துலாத்தட்டில் மேலும் மேலும் என வைக்கப்படும் துயரத்தின் எடை அச்சிறுந்து போகுமளவு மிகுவதற்குப் பெயர் இறப்பு. வைத்தவற்றை முற்றிலுமாக அவ்வப்போது எடுப்பவனை இறப்பு அணுகுவதே இல்லை.”

அர்ஜுனன் புன்னகைத்தபடி “அவ்விறவாமைக்கு என்ன பொருள்? நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள்?” என்றான்.

சூதன் நகைத்து “எழுவினா ஒன்றே. வாழ்வதா, இருப்பதா? வாழ்பவன் வாழ்வை சுமந்தாக வேண்டும். எடை முதிர்ந்து அச்சிறுந்து சகடம் சரிந்தாகவேண்டும். இருப்பவன் இந்த மலைகளைப்போல. இவை நேற்றற்றவை. எனவே முடிவற்ற நாளை கொண்டவை” என்றான். அவர்கள் சுரபிவனம் என்னும் சிற்றூரின் ஊர்ச்சாவடியில் இரவுறங்கப் படுத்திருந்தனர். மேலே அரசமரம் இலைகளை சிலிர்த்துக்கொண்டிருந்தது.

மிகச்சிறிய புழுதித் தீற்றலாக நெடுந்தொலைவில் அவ்வணிகக் குழுவின் இறுதி அசைவு தெரிந்து வானில் மறைந்தது. ஒரு கணம் மெல்லிய நடுக்கமொன்று அவனுக்கு ஏற்பட்டது. வடிவும் வண்ணமும் இயல்பும் இயைபும் கொண்டு கண்முன் நின்ற பருப்பொருள் ஒன்று வெளியில் கரைந்து மறைவதை கண்கூடாக அப்போதுதான் அவன் கண்டான். இல்லை அது விழி மாயை. அப்பால் துளியிலும் சிறு துளியென அவர்கள் அங்கிருக்கிறார்கள். மறையவில்லை. இல்லாமலாகவில்லை.

ஆனால் வெளி மட்டுமே அங்கிருந்தது. வானும் மண்ணும் இணைந்துகொண்ட மாபெரும் வில் என. அந்த வில் மீது சில முள்மரங்கள் நின்றிருந்தன. துயருடன் விரல்விரித்து இறைஞ்சின. வானை வருடி வீண் வீண் என அசைந்தன. இப்பால் சில உப்புப்பாறைகள் வெண்பற்கள் என எழுந்திருந்தன. அங்கிருந்து அவன் நின்றிருந்த இடம் வரைக்கும் வெண்களர் மண் காற்றின் அலைகளை அணிந்தபடி கிடந்தது. அதன்மேல் மென்புழுதி சுருண்டு ஓடிச்சுழன்று மேலேறி உருவழிந்து அள்ளிச்சென்ற அனைத்தையும் கொட்டியபடி மண்ணுக்கு மீண்டது.

அந்த விற்கோட்டுக்கு அப்பால் காலமில்லை. அங்கிருப்பது இன்மை மட்டுமே. வெளி மயங்கி இன்மையென்றாகிறது. இன்மை சற்று தயங்குகையில் வெளியென்றாகிறது. மீண்டுமொரு நீள்மூச்சுடன அவன் தன்னை அவ்வெண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொண்டான். நடந்து தொலைதூரத்தில் தெரிந்த அந்த விண்ணொளி நோக்கி செல்லலானான்.

[ 11 ]

தொலைவிலிருந்து பார்க்கும்போது வெண்நெருப்பு எழுந்து தழல் அலைப்பதுபோலத் தோன்றியது. அணுகும்தோறும் வெம்மை மிகுந்து உடல் பொசுங்கும் என்று பட்டது.  காற்றுச் சுவடுகளன்றி வேறேதும் படிந்திராத வெண்ணிற நிலம் மெல்ல சரிந்துகொண்டிருப்பதை சற்று தூரம் நடந்த பின்னரே உணரமுடிந்தது. குனிந்து அம்மண்ணைப் பார்த்தான். அது உப்புத்தூளா என்று ஐயம் தோன்றியது. பின்காலை நேரத்திலேயே வானில் சூரியவட்டம் சூளையென எரிந்தது.

ஊஷரத்தைக் கடந்தபோதே தசையுருக்கும் உயர் வெப்பம் அவனுக்கு பழகத் தொடங்கிவிட்டது. பாலையில் நுழைந்தபோதே நிலத்தில் இருந்து உடலுக்கு வெப்பம் வந்து படியாமல் இருக்கும்பொருட்டு மென்மையான ஆடையால் முகத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்தையும் திரையிடுவதுபோல் மூடிக்கொள்ளும் முறையை அவனும் கடைபிடித்திருந்தான். காற்றில் அலையடித்த மெல்லிய ஆடைக்குள் உடல் அதுவே உருவாக்கிக்கொண்ட நீராவிக்குள் வெம்மைகொண்டு வியர்த்து மீண்டும் குளிர்ந்து தன் இயல்பை பேணிக்கொண்டிருந்தது.

வெளியிலிருந்து வந்த வெங்காற்று முகத்தில் மோதி மூக்கையும் கன்னத்தையும் பொசுக்கி முடிகருக்கி உள்ளங்கையின் தோல்போல ஆக்கியது. பின்னர் கைகளால் முகத்தைத் தொட்டபோது மரத்தாலான முகமூடி ஒன்றை அணிந்திருப்பதாகத் தோன்றியது. வியர்வைமேல் காற்றுபடும் சிலிர்ப்பே குளிர் என நெஞ்சு வகுத்துக்கொண்டுவிட்டிருந்தது.

கையில் இருந்த வில்லை ஊன்றுகோலாக்கி சிற்றடி வைத்து சீரான விரைவில் அவன் நடந்தான். மூச்சு இரைக்கத்தொடங்கிய உடனேயே நின்று தொடைகளில் கைவைத்து சற்று குனிந்து வாயால் முழுக்காற்றையும் இழுத்து உள்ளே நிரப்பி நாய்க்குரைப்பு போல் ஒலியெழுப்பி மூச்சு அனைத்தையும் வெளித்தள்ளினான். அது விரைவிலேயே இளைப்பாற்றி அவன் ஆற்றலை மீட்டளித்தது.

அன்று அந்தியானபோது தொலைவில் அவன் பார்த்த வெண்ணிற ஒளி முற்றிலும் அணைந்துவிட்டது. ஒதுங்குவதற்கு பாறையோ மரநிழலோ எதுவும் இல்லாமல் மண்வெளி கண்களை நிறைத்தது. சுழன்று பார்க்கையில் பிழையற்ற வட்டம் என தொடுவானத்து ஒளிக்கோடு தெரிந்தது. கவிழ்ந்த பளிங்குக்கிண்ணம்போல முகிலற்ற வானம். உயிர் என எதுவும் அங்கு இல்லை என்று தோன்றியது. மணல் வெளியிலேயே அவன் படுத்துக்கொண்டான். வயிற்றின் குறுக்காக வில்லை வைத்து வலதுகைப் பக்கம் அம்பறாத்தூணியை போட்டுக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தான்.

வானொளி முற்றிலும் அணைவதற்கு நெடுநேரம் ஆகியது. கிழக்கு இருண்ட பின்னரும் மேற்குச் செம்மை வெகுநேரம் எஞ்சியிருந்தது. சூரியன் இருக்கையிலேயே விண்மீன்கள் எழுந்து வந்தன. பாலையில் புகுந்த பின்னர் விண்மீன்களை முழுமையாக நோக்குவதற்கு அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் இரவில் விண்மீன்களுடன் துயின்றான். திசைகளாக முதலில் அவை பொருள்கொண்டன. பின்னர் இடங்களாயின. மண்ணின் வழிகளைச் சுட்டி நிற்கும் அதிரும் சொற்களாயின. நண்டு, தேள் என வெவ்வேறு வகை வடிவங்களாயின. ஆனால் ஒரு கணத்தில் அத்தனை பொருளையும் இழந்து திகைக்கவைக்கும் வெறும் அதிர்வுகளாகி எஞ்சின.

அந்தியில் விண்மீன்களை நோக்கி அவை கொண்ட ஒவ்வொரு பொருளையாக உதிர்த்து வெறும் அதிர்வுப்பரப்பென ஆக்கி தானும் வெறுமைகொண்டு அவற்றை நோக்கிக்கொண்டிருப்பதும் புலரிக்கு முன் அவற்றை எண்ணி எண்ணி எடுத்து ஒவ்வொன்றாக பொருளேற்றம் செய்து மண்ணுக்குரியவையாக மாற்றுவதும் அவை சுட்டும் ஒவ்வொன்றையும் தன்னுள் இருந்து எடுத்து அமைத்துக்கொள்வதுமே மீள மீள நடந்துகொண்டிருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் அவன் சென்றுகொண்டிருப்பது அம்மண்ணில் அல்ல, விண்மீன்கள் பரவிய இருள் வெளிக்குள்தான் என்று தோன்றியது. மண் இருப்பது அவ்விண்மீன்களுக்கு நடுவே எங்கோ அல்லது மண்ணென அவன் உணர்வது ஓர் விழிமயக்கு.

அவன் துயின்று எழுந்து நோக்கியபோது வெயில்விழுந்து சூழ்ந்து அலையடித்தது. வானம் அனைத்துத் திரைகளும் இழுக்கப்பட்டு நீல ஆடிப்பரப்பென தெரிந்தது. இரவு முழுக்க அவன் நீரருந்தவில்லை. பீதவணிகரிடம் பெற்றுக்கொண்ட தோல்குவளையில் நீர் சற்றே எஞ்சியிருந்தது. அதை அருந்தியதும் மீண்டும் அவன் உடல் நீர் என எழுந்தது.  நீரைப்பற்றி எண்ணக்கூடாதென்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டான். நீரைப்பற்றி எண்ணுவேன் என்றால் அதன்பிறகு நீருக்கான பயணம் மட்டுமே நிகழ முடியும்.

அவன் சென்றுகொண்டிருப்பது வருணனின் நிலம். வரமளிப்பவனின் உலகு. இங்கு அவன் விடாய்கொண்டு உயிர் துறப்பான் என்றால் அது வருணனின் ஆணை என்றிருக்கட்டும். இப்பயணத்தில் நடுவில் அவன் எங்கு இறந்து விழுந்தாலும் அதுவே முறையென்றாகுக. நீர் தேடி பரிதவித்து செத்துவிழுந்தான் என்றால்தான் அது அவன் தோல்வி.

அவன் எண்ணியதுபோலவே சற்று தொலைவில் நீரைப் பார்த்தான். அதற்கு நெடுநேரம் முன்னரே  வானில் சுழன்று கொண்டிருந்த பறவைகளை கண்டிருந்தான்.  பறவைகள் அங்கிருந்த மஞ்சள் நிறமான பாறையொன்றின் மேல் கூடிச்சுழன்று எழுந்து அமர்வதைக் கண்டபோது அங்கு நீர் இருக்கலாமென்று தோன்றியது. காலையின் அரைவிழிப்பில் சித்தம் எழுந்ததுமே  வானில் பறந்த பறவைச்சிறகுகளின் நிழலை தன்னைச்சுற்றி உயிரசைவென உணர்ந்ததை அப்போதுதான் எண்ணிக்கொண்டான். பறவைக்குரல்கள் ஓங்கின. அவை அவனை பார்த்துவிட்டிருந்தன. அவன் அணுகி அப்பாறைமேல் தொற்றி ஏறியபோது அதன் குழி ஒன்றில் நீர் இருந்ததை கண்டான். சிறிது அள்ளி வாயில் வைத்தபோது அது தூயநீர் என்று தெரிந்தது. கையில் எஞ்சியிருந்த உலர் உணவை உண்டு அந்நீரை அருந்தி தோல் குடுவையையும் நிரப்பிக்கொண்டான்.

அவனைச் சுற்றி நீர் நாடி வந்த பறவைகள் எழுந்து பறந்து அமைந்துகொண்டிருந்தன. வெண்ணிறமான கடற்காகங்கள். அவற்றின் குரல் அவனை எச்சரிப்பதுபோல மன்றாடுவதுபோல மாறி மாறி ஒலித்தது. அவற்றின் நோக்கை சந்தித்தபோது அச்சொற்களை மிக அணுக்கமாக புரிந்துகொண்டான். அவை அவனைத் தாக்கி கீழே தள்ள விரும்புபவைபோல சிறகுக்காற்று அவன் மீது படும்படியாக சீறிப் பறந்தன. ஒன்று அவன் தோளை தன் நகத்தால் கீறிச்சென்றது.

புன்னகையுடன் அவன் பாறையைவிட்டு இறங்கியபோது அவை மீண்டும் அமர்ந்து நீரருந்தத் தொடங்கின. குனிந்து நீரில் தலையை முக்கி அண்ணாந்து தொண்டையை சிலிர்த்தன. சிறகுகளை நனைத்து உதறி எழுந்து மீண்டும் அமைந்தன. நீர் நீர் என்று அவை கூவிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

முன்னால் சென்றபோது மேலும் மேலும் பறவை நிழல்கள் தரையைக் கடப்பதை அவன் கண்டான். அவை அப்பாலிருந்து வந்து மீண்டுசென்றன. அன்று மாலை நெடுந்தொலைவில் பறவைகளின் ஓசையை கேட்க முடிந்தது. எங்கோ பெருங்கூட்டமாக அவை வாழ்கின்றன என்று எண்ணிக்கொண்டான். இரவில் அப்பறவைக்குரல்களைக் கேட்டபடி துயின்றான். கனவில் பறவைகள் சூழ வானில் மிதந்துகொண்டிருந்தான்.

மறுநாள் பகல் முழுக்க நடந்து மாலையில் வெட்டவெளியில் விண்மீன்களுக்குக் கீழே துயின்றான். அதற்கு அடுத்தநாள் பின்காலையில் தொலைவிலிருந்து பறவைகளின் சிறகடிப்பை பார்த்தான். புகையசைவென, வெண்ணிற இலைக்கொந்தளிப்பென அது அவன் காலடிகளுக்கு ஏற்ப தெளிந்து வந்தது . பறவைக்குரல் இணைந்து எழுப்பிய இரைச்சல் அணுகியது. அவன் அந்த உயிரில்லாத கடல் வரக்கூடுமென எதிர்பார்த்தான். ஆனால் கரையொதுங்கிய பெரிய மீன்கள் என வெள்ளி மின்ன நூற்றுக்கணக்கான நீர்க்குட்டைகள்தான் கண்ணுக்குத் தெரிந்தன.

அணுகுந்தோறும் அவை உருப்பெருகி வந்தன. முதல் குட்டையின் அருகே சென்றதும் அதன் கரையெங்கும் செறிந்திருந்த வெண்நாரைகளும் கடற்காகங்களும் கூச்சலிட்டபடி சிறகடித்து வானில் எழுந்து பறந்தன. குட்டையின் மணற்சேற்று விளிம்பை அணுகும்போது மென்கதுப்பு புதைந்து இடைவரைக்கும் இறங்கியது. கைகளை ஊன்றி நீச்சலிட்டு அந்நீரை அணுகி தொட்டு அள்ளி வாயிலிட்டான். உப்பு நீர். குட்டை முழுக்க வெள்ளி நாணயங்களென ஒளிர்ந்து ஒளிர்ந்து திரும்பியபடி சிறிய பரல் மீன்கள் நிறைந்திருந்தன. நோக்க நோக்க மீன்கள் மேலும் தெரிந்தன.  குறுவாள்கள், மூங்கில் இலைகள், வெள்ளிச் சிமிழ்கள். இளஞ்சிவப்பு நாக்குகள். கன்றுச்செவிகள்.

அவன் கைகளை எடுத்துவிட்டு மேலே வந்து நோக்கியபோது அவை நீர்ப்பரப்பின் மேலே வந்து விழிகள் மின்ன, வால் தவழ, செவுள்கள்  அலைபாய அவனை நோக்கின. அவன் உடல் சற்று அசைந்தபோது ஒரு கணத்தில் நீரில் விரிந்த வானில் மூழ்கி மறைந்து  பின் ஒவ்வொன்றாக உருவம்கொண்டு எழுந்தன.

கரையேறி மணல்விளிம்பில் நின்றபடி அந்தச் சுனைகளை விழிதொடும் தொலைவு வரை பார்த்தான். வெள்ளி ஆரம்போல வானிலிருந்து வான்வரைக்கும் வளைந்து கிடந்தன அவை. அக்குட்டைகளின் இடைவெளியினூடாக நடந்து மறுபக்கம் சென்றான். அங்கு சிறிய அலைகளாக தொலைதூரம்வரை படிந்துகிடந்த மணல் அவன் கால் பட்டு பொருக்குடைந்து தடம்கொண்டது. பொருக்கு உடையும் ஒலி சிம்மம் எலும்புகளை மென்று இரையுண்பதுபோல ஆழ்ந்த அமைதியுடன் ஒலித்துத் தொடர்ந்தது.

மணல் பொருக்குகள் அடர்ந்து வந்தன. அங்கு மட்டும் மழை பெய்திருக்கிறதா என்று பார்த்தான். மழை விழும் இடம் அல்ல அது. அவ்வாறென்றால் நீர் வற்றி கீழிறங்கிச் சென்றிருக்கிறது. அருகமைகாலத்தில் அல்ல. நெடுங்காலத்துக்கு முன். பலநூறு தலைமுறைகளுக்கு முன். அப்பரப்பில் பறவைகள்கூட வந்தமர்வதில்லை என்று தெரிந்தது. காலால் தட்டிப்பார்த்தான். பொருக்கு மணலுக்குள் இருந்த மீன்கள் அனைத்தும் வெறும் எலும்பு வடிவுகளாகத் தெரிந்தன. வெண்சுண்ணச் சித்திரங்கள் என பல்லாயிரம் மீன்கள். வெள்ளி இலைநரம்புகள். பளிங்குச்சீப்புகள். பல்வரிசைகள்.

குனிந்து ஒரு மீன்முள்ளைத் தொட்டபோது அது அரிசிமாவுப் பொருக்கு என உதிர்ந்தது. மீனென அது வாழ்ந்தபோது அங்கு வாழ்ந்தவர்கள் எவர்? அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை? இறந்தநிலம். இறந்தமையால் காலத்தை வென்ற இடம். இறப்புவரைதான் வளர்வும் தளர்வும். இறப்பு என்பது நிலையமைவு. மாறிலியென மாற்றங்களுக்கு மையம் கொள்ளும் புள்ளி. தயங்கிய விழிகளுக்கு முன் நெடுந்தொலைவில் வானின் வெண்ணிறஒளி மீண்டும் தெரியலாயிற்று. வெண்ணிற அனல். அல்லது அங்கிருப்பது வெண்பாற்கடல்.

பொருக்கு மண் மீது கால்களை தூக்கிவைத்து காண்டீபத்தை ஊன்றி உடல்நிகர் செய்தபடி நேர்நடையிட்டு அவன் சென்றுகொண்டிருந்தான். அந்தி வரை சென்று திரும்பிப்பார்த்தபோது அவன் வந்த பாதை மண் கிளறப்பட்டு ஒரு செந்நிற வடு என அவனை நோக்கி வந்து கால்களைத் தொட்டு இணைந்திருந்தது. அந்தத் தடம் அங்கே கிடக்கும். காலமுடிவுவரை. அதை எவர் வந்து பார்க்கக்கூடும்? பார்த்து அவன் விழைவை தயக்கமென எண்ணிக்கொள்வார்கள் போலும். அவன் குழப்பத்தை அச்சமென பொருள்கொள்ளலாம். மூதாதையரை நம்மில் உள்ளவற்றின் பின்நீட்சியென உருவகித்துக்கொள்கிறோம். அல்லது நம்மில் இல்லாதவற்றினாலா?

பொருக்கு மண்மேலேயே படுத்து விண்மீன்களை நோக்கியபடி துயின்றான். விண்மீன்கள் காலிடற முகில்களில் கால்புதைந்து புதைந்து தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். நீலநீரில் எலும்புருவான மீன்கள் நீந்தித் திளைத்தன. சுண்ணமுள் வடிவ இலைகளுடன் செடிகள் காற்றில் ஆடின. அவன் தன் கால்களை குனிந்து நோக்கினான். அவை எலும்புவடிவிலிருந்தன. நீர்விடாயென விழித்துக்கொண்டபோது புலரி எழுந்திருந்தது. பாலையின் குளிரில் அவன் ஆடைக்குள் அவன் உடம்பு சிலிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. குடுவையில் எஞ்சிய சிறிதளவு நீரை அருந்தினான். நாநனையும் அளவுக்கே நீர் இருந்தது. ஆனால் அது உடலை ஊக்கம் கொள்ளச்செய்தது.

மீண்டும் புரண்டு சுருள் விரிந்து அகன்று அகன்று சென்றுகொண்டிருந்த நிலத்தில் அசையாமல் நின்றுகொண்டிருந்த வெண்ணிற ஒளிகொண்ட தொடுவான் வளைவு நோக்கி நடந்தான். நிலப்பொருக்கு சேற்றுப்பலகை அடுக்குகளாக ஆகியது. முதலையின் செதில்தோல் பரப்புபோல வெடிப்புகள் கொண்டது. ஓட்டுக்கூரை ஒன்றின் சரிவில் நடப்பதாக மறுகணம் தோன்றியது. அவன் காலடியில் அவை ஓசையுடன் நொறுங்கி துண்டுகளாயின.

குனிந்து ஒரு சிறு ஓட்டை எடுத்துப் பார்த்தான். அதன் அடியிலும் ஈரம் இருக்கவில்லை. அடியில் அவன் எதிர்பார்த்த சிற்றுயிர்களும் இல்லை. அவற்றின் அசைவை மட்டும் கண் ஒருகணம் அடைந்து நிலைமீண்டது. என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? பித்துக்குள் சென்றுகொண்டிருக்கிறது என் உள்ளம். ஆனால் இத்தனித்த பயணத்தில் அவ்வாறு அனைத்து வழிகளிலும் சிதறும் எண்ணங்களே பெரும்வழித்துணை என்றாகும். அவை பெருகும் சித்தவிடாயை மாற்றுலகங்களை உருவாக்கி நிறைவுசெய்கின்றன. தனியன் பல உலகங்களில் வாழ்பவன். பல புவிகளை சுமந்து செல்பவன்.

பயணத்தில் இல்லம் துறந்து ஊர் துறந்து பெயர் துறந்து உளம் துறந்து செல்பவன் மீண்டும் இளமைந்தனாகிறான். தவழும் குழந்தையென்றாகிறான். பார்க்கும் ஒவ்வொன்றும் புதிதென்றாகிறது. பொருளற்று வெறும் பொருளென நின்று பொருள் அவனை நோக்குகிறது. பொருளை பொருள்மட்டுமே என நோக்கும் சித்தத்துடன் தவித்து தன்னிலை மீண்டு பொருள் தேடுகிறான். இது களிமண்ணால் ஆன சருகுப்பரப்பு. இல்லை, இவை அப்பங்கள். பழைய தோற்கவசப்பரப்பு. மாபெரும் ஆமையின் ஓடு. இங்கிருந்ததா ஒரு கடல்?

அப்பரப்பின் மறுஎல்லையென்று ஒன்று விழிக்குப்படவில்லை. நடந்து நெடுந்தொலைவு கடந்து திரும்பிப் பார்க்கையில் அப்பொருக்குப் பரப்பு அன்றி வேறெதுவும் புவியிலேயே இல்லை எனத் தோன்றியது. ஆம், இதுதான் கடல். இங்கிருந்த நீர் கடல்களில் மட்டுமே எஞ்சி இங்கு வற்றிவிட்டிருக்கிறது. இது கடலடி வண்டல். இக்கடலைக் குடித்து உலர்த்தியது யார்? இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா? இங்கிருந்த நீரனைத்தும் ஆவியென்றாகி எழுந்து காற்றில் நிறைந்துள்ளன. அலையடித்து அலையடித்துத் தவித்து அலையைச் சிறகென்றாக்கிப் பறந்தெழுந்து விண்நின்றுள்ளது கடல்.

KIRATHAM_EPI_32

இதோ என் தலைக்கு மேல் உள்ளது கடல். நுண் வடிவக்கடல். இங்கு வெண்சுண்ண வடிவுகளெனப் பதிந்திருக்கும் மீன்கள் அங்கு நுண் வடிவில் நீந்திக்கொண்டிருக்கலாம். அதில் ஓடிய கலங்கள் அங்கு நுண்வடிவில் மிதந்தலையலாம். கடலோடிகள் அங்கிருக்கலாம். என்ன எண்ணங்கள் இவை? ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு எண்ணமும் பிறிதொரு எண்ணத்தால் கட்டுண்டிருக்கிறது. கட்டடத்தில் அமைந்த செங்கற்கள் போல. கட்டடம் இடிந்து சரிகிறது. என்னுள் விடுதலைகொண்டுள்ளது ஒவ்வொரு கல்லும். எண்ணங்கள் ஓட தோற்றம் மயங்கிய நோக்குடன் திரும்பியபோது அவன் தொலைவில் அந்தக் கடலை ஒரு பெரிய முகில் நிழல் என கண்டான்.

முந்தைய கட்டுரை2.0
அடுத்த கட்டுரைநமது முகங்கள் -கடிதங்கள் -1