தொழிற்சங்கம் தேவையா-கடிதங்கள்

parvathi_1764449h

 

 

அன்புள்ள ஜெ,

மென்பொருள் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் தேவையா இல்லையா என்பதில் பதில் என்னிடம் இல்லை, ஆனால் இந்த அனுபவம் ஒரு புதிய பரிணாமத்தை தந்தது.

நான் அமெரிக்காவில் வளைகுடா பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஒரு கைபேசி தயாரிக்கும் MNC மென்பொருள் வேலைக்கு சென்றிருந்தேன். வேலை குறைப்பு அறிவிப்பு வரும் என எல்லோரும் அதை பற்றி உணவு நேரங்களிலும் பேசிக்கொண்டிருந்தனர், அலுவலக வளாகத்தில் ஒரு இழவு வீட்டின் அமைதியை அறிவிப்பு வரும் நாள் வரை உணர முடிந்தது. அந்த நாளும் வந்தது சுமார் 300-400 பேர்கள் ஒரே நாளில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். மக்கள் கவலையுடன் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதும் ஒரு சிலர் அன்றே வேலையை விட்டு விலக்கப்பட்டனர் வேறு சிலர்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரை நேரம் இருந்தது.

நான் ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால் இங்கு இல்லை என்றாலும் வேறு இடத்தில வேலை கிடைக்கும் அது வரை என் இந்திய அலுவலகம் சம்பளம் தரும். ஆனால் வேலை இழந்த மக்கள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டமோ கோபமோ படவில்லை. ஏன் இந்த மக்கள் இப்படி இருக்கிறார்கள், அமெரிக்காவில் தொழிற்சங்கம் இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது ஒரு போராட்டம் நடத்தி முதலாளிகளுக்கு புரியவைத்திருக்கலாம் என தோன்றியது. அன்றுபல அதிகாரிகளுக்கும் வேலை போனது அதனால் யார் யாருக்கு உணர வைப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது. அமெரிக்காவில் குழு உணர்வும் போராட்ட உணர்வும் இல்லாமல் மக்கள் இருப்பதை பார்த்த பொழுது எனக்கு கவலை ஏற்பட்டது மற்றும் அமெரிக்கா கலாச்சாரத்தில் மீது வெறுப்பு உண்டானது.

சில நாட்கள் பிறகு வேலை இழந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மின்னஞ்சல் குழு உருவாக்கினர். அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் உருவாகினார். அவர் Bay Area எங்கு எல்லாம் வேலை கிடைக்கும் என்ற மின்னஞ்சல் அனுப்புவதும். நேர்முக தேர்வுகளில் என்ன கேள்விகள் கேட்கின்றனர் என்ற தகவலும் பரிமாறி கொண்டனர். வேலை இழந்ததால் அலுவலகம் வர முடியாதவர்கள் ஒன்று சேர்ந்து படிக்க, தகவல் பெற்று கொள்ள ஒரு சிறு அலுவலகம் திறந்தனர். ஒருங்கிணைப்பாளர் பல மனிதவள மேலாளர்களுடன் பேசி அங்கு வேலை தேவைகளை சேகரித்து கொடுத்தார். அவரும் வேலை இழப்பில் பாதிக்கப்பட்டவர். எனக்கு தெரிந்த வரை எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டது.

இந்த மாற்றம் எனக்கு தொழிற்சங்கம் இருந்தால் போராட்டம் மட்டும் நடத்திவிட்டு தலைவர் வீடு சென்றிருப்பாரோ? ஆனால் இங்கு எந்த அறிவிப்பும் பலகையும் இன்றி ஒரு தொழிற்சங்கம் உருவாகி வேலை முடிந்தவுடன் (எல்லோருக்கும் வேலை கிடைத்தவுடன் ) கலைக்கப்பட்டதாக தான் தோன்றியது.

அன்புடன்

ஆனந்த்

***

ஜெ

வங்கிவேலையில் கோல்டன் ஹேண்ட்ஷேக் என்னும் ஒரு திட்டம் உண்டு. ஆட்குறைப்புக்காக. அது அடிப்படையில் தவறானது. பணம் வாங்கிக்கொண்டு வேலையிலிருந்து நின்றுவிடலாம். கோடிக்கணக்காகச் செலவிடுகிறார்கள். ஆனால் வேலையிலிருந்து நிற்பவர்கள் அடுத்த வேலைக்கு திறமையும் வாய்ப்பும் உள்ளவர்கள். திறமையோ ஊக்கமோ இல்லாதவர்கள் தங்கிவிடுகிறார்கள். குறிப்பாக குடிகாரர்கள், வயதான குடும்பத்தலைவிகள். மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பம் பிடிகிடைப்பதில்லை. கற்றுக்கொள்ள மூளையும் இல்லை. இன்னமும் ஒற்றைவிரலால் கம்ப்யூட்டரில் பார்த்துப்பார்த்துத் தட்டுபவர்களே அதிகம். இதுதான் பிரச்சினை. வங்கி அதிகாரியாக இதைச் சொல்கிறேன்

எஸ்.ஆர்

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் -10
அடுத்த கட்டுரைசிறுகதைகள் என் மதிப்பீடு -3