ஏழரைப்பொன்

ettumanoor temple

 

சில ஊர்களின் பெயர்கள் தெரியாத ஏதோ காரணத்தால் நம்மை ஈர்த்து நாவிலேயே தங்கிவிடும். அவ்வாறு என் நாவில் அடிக்கடி சுழன்று வரும் பெயர்களில் ஒன்று ஏற்றுமானூர். ஏழரப் பொன் ஆனைமேல் எழுந்தருளும் ஏற்றுமானூரப்பாஎன்ற மலையாளப்பாடலே அப்பெயரை என் நாவில் நட்டது. கேரளத்தில் கோட்டயம் அருகே உள்ள தொன்மையான சிவன்கோயில் ஏற்றுமானூர். அங்கு திருவிதாங்கூர் அரசர் அளித்த ஏழு பொன்யானைகளும் ஒரு சிறிய பொன்யானையும் கோடைகாலத்தில் நிகழும் ஆறாட்டு ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்படும். அதைத்தான் ஏழரைப்பொன்யானை என்கிறார்கள்

முன்னர் பொன் முகபடம் அணிந்த ஏழு யானைகளும் ஒரு குட்டியானையும் செல்லும் சடங்கு இருந்தது. இந்த ஏழரைப் பொன் யானைஎன்ற தொன்மம் எங்கிருந்து வந்தது என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. ஏழரைநாட்டுச்சனி எனச் சொல்லப்படும் கிரகபாதிப்பு ஏற்படாமலிருக்க ஏற்றுமானூரப்பனை வழிபடுவார்கள். ஆகவே இச்சடங்கு வந்தது என்பார்கள். இந்த வசீகரமான சடங்கு ஒரு திரைப்பாடல் வழியாகக் காதில் விழுந்ததில் இருந்து அந்த ஊர் மீது ஒரு பிரியம் இருந்தது. ஆனால் அங்கு செல்வது பல காரணங்களுக்காக கைகூடவில்லை.

கோட்டயம் அருகே இருக்கும் இந்த ஊருக்கு இதற்கென்றே சென்றால்தான் உண்டு. வேறு எந்த தனிச்சிறப்பும் அங்கு கிடையாது. ஒவ்வொரு முறை எர்ணாகுளம் செல்லும்போதும் ஏற்றுமானூர் செல்ல வேண்டும் என்று எண்ணுவேன். அது நடக்காது. இந்தியா முழுக்க பயணம் செய்திருந்த போதிலும் நான் குறைவாகவே பயணம் செய்த நிலம் கேரளம்தான். இங்குதானே இருக்கிறது, போனால் போயிற்றுஎன்ற மனோபாவமாக இருக்கலாம். பயணங்கள் திட்டமிடும்போது எப்போதோ எப்படியோ சற்று தொலைவில் உள்ள இடத்திற்கு போகவேண்டும் என்று தான் தோன்றுகிறது. அதில் ஊரைவிட்டுச் செல்லுதல், தொலைந்து போதல் என்னும் கவர்ச்சி உள்ளது.

ஏற்றுமானூருக்கு ஒரு முறை சென்றே ஆகவேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியும் கூட நான் திட்டமிட்டு அங்கு செல்லும்படி நேரவில்லை. தற்செயலாக சென்றேன். எர்ணாகுளத்தில் ஒர் இலக்கிய கூட்டத்திற்கு சென்றுவிட்டு அங்கே விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். மறுநாள் புலரியில் எனக்கு திருவனந்தபுரத்திற்கு ரயில் போடப்பட்டிருந்தது. விடுதிக்கு வெளியே இரவுணவுக்கு வாழைப்பழம் வாங்குவதற்காக வந்தேன். பேருந்து ஒன்று நெற்றியில் ஒளியுடன் வந்து நின்றது. ஏற்றுமானூர் என்று எழுதப்பட்டிருந்தது.

என்ன தோன்றிற்றென்று தெரியவில்லை. ஏறிவிட்டேன். ஏறிய பிறகே பையில் தேவையான பணம் இருப்பதை உணர்ந்தேன். “ஏற்றுமானூர்” என்று பயணச்சீட்டு எடுத்தபோது ஒரு பரவசம் எழுந்தது.ஆளில்லாத பேருந்தில் நனைந்து குளிர்ந்த இருக்கையில் அமர்ந்தேன். இனிய குளிர்மழைச்சாரல் நிறைந்த இரவு. பேருந்தின் ஓசையை மீறிக்கொண்டு இருபக்கமும் இருந்த வயல்வெளிகளிலிருந்து தவளைக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. பேருந்தின் முகவெளிச்சத்தில் ஈர இலைகள் மின்ன மரங்கள் கடந்து சென்றன. கூரைச் சரிவுகளில் செவ்வொளி விரிந்து பரவிச் சென்றது. சில வீடுகளில் இருந்து தொலைக்காட்சி வெளிச்சம் சாளரங்கள் வழியாக அலையடித்தது. ‘ஆற்றுவஞ்சி கடவில் வச்சு அந்நு நின்னே கண்டப்போள்’ என பழைய மலையாளப்பாட்டின் கீற்று காதைத்தொட்டுச்சென்றது.

இனிய படபடப்பொன்றால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். எங்கு செல்கிறேன் என்ற எண்ணம் அடிக்கடி எழுந்தது. அந்தச் சொல் என் உள்ளத்தில் விழுந்ததற்கும் நான் அங்கு செல்வதற்கும் ஏதேனும் மர்மமான காரணமிருக்குமோ? அங்கு என்னை விசித்திரமான அனுபவம் ஏதேனும் காத்திருக்குமோ? அப்படி எண்ணியதுமே அங்கு என்னை மரணம்தான் காத்திருக்கிறது என்று தோன்றிவிட்டது. ஆம், அதுதான் விதையாக என்னில் வந்து விழுந்து முளைத்திருக்கிறது. ஒரு தூண்டில் கொக்கி அது. இருளில் இருந்து மெதுவாக அதை இழுக்கிறார்கள் எவரோ.

அந்த எண்ணம் மேலும் படபடப்பை அளித்தது. எக்கணமும் பாய்ந்து இறங்கிவிடுவேன் என்று என்னை நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறை நடத்துநர் சீழ்க்கை கொடுக்கும்போதும் இதோ இறங்கப்போகிறேன் என்று எண்ணி உள்ளத்தால் எழுந்து உடலால் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

ஏற்றுமானூர் ஆலயத்தருகிலேயே பேருந்தில் இருந்து இறங்கினேன். ஆலயம் அங்கிருந்து பார்த்தால் தெரியாது. மைதானம் போன்ற ஆலயமுற்றத்தின் வழியாகக் கடந்து சென்ற பாதை சில படிகளாக இறங்கி கோவிலை அது சென்றந்தது. இறங்கியபோது மணி பதினொன்றுக்கு மேல் என்று உணர்ந்தேன். நான் நினைத்திருந்தது போல அவ்வூர் ஒரு நடுத்தர நகரம் கூட அல்ல, சிற்றுர்.

மழைத்துருவல் பெய்திறங்கிக் கொண்டிருந்தது. வழிவிளக்குகளின் மஞ்சள் ஒளிவட்டத்திற்குள் நீரின் பொற்சரிகையைப் பார்த்தேன். நான் சென்றிறங்குவதற்கு சற்று முன்பு மிகப்பெரிய மழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும். சாலையின் இருபக்கமும் ஓடைகளில் செந்நிற நீர் குதித்தும் சுழித்தும் சென்றுகொண்டிருந்தது. சேற்றில் என் செருப்புத் தடம் பதிய நடந்தேன். அந்நேரத்தில் ஆலயம் திறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆலயத்தை சுற்றியிருந்த மாபெரும் மைதானம் விளக்கொளிகள் சேற்றுப்பரப்பில் பிரதிபலிக்க ஆளில்லாமல் அசைவில்லாமல் திறந்து கிடந்தது. அதனூடாக நடந்து ஆலய முகப்பு வரை சென்றேன்.

மிகப்பெரிய கோட்டை மதில் சூழ்ந்த ஆலயம். கேரள பாணியிலான மூன்றடுக்கு மரக்கோபுரம் கொண்ட முகப்பு. என் மணத்தை அறிந்து அப்பகுதியில் எங்கிருந்தோ யானை ஒன்று மெல்ல குரல் கொடுத்தது. தனியாய் மழையில் நனைந்தபடி நின்றுகொண்டிருந்தேன். படபடப்பு விலகி இருத்தலின் பெரும்பரவசம் என்னை ஆட்கொண்டது. கைகளை மார்பில் கட்டி குளிருக்கு இறுக்கிக் கொண்டேன். மழைத்துளிகள் சொட்டிக் கொண்டிருந்த சரிந்த கூரை கொண்ட மரக்கோபுரத்தை பார்த்தபடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றேன். தனிமையின் தித்திப்பு கணங்கள். பின்பு தன்னை உணர்ந்து திரும்பி சாலைக்கு வந்தேன்.

அன்றிரவு தங்க விடுதி ஒன்றைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்று தோன்றியது. விடுதி என்று தெளிவாகத் தெரியும்படியான கட்டிடங்களே குறைவாகத்தான் இருந்தன. ‘லாட்ஜ்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஒரு பழைய ஓட்டுக்கட்டிடத்தின் முன் நின்றேன். அது ஒரு வீடு போலத்தான் இருந்தது. கதவைத் தட்டி அழைத்தபோது முதியவர் ஒருவர் வந்து திறந்தார்.

”என்னவேண்டும்?” என்றார் கண்களைச் சுருக்கியபடி. “அறை” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தபடி “அறை காலி இல்லை” என்றார். “நான் வெளியூரிலிருந்து வருகிறேன். இந்நேரத்தில் இடம்தேடி அலையமுடியாது” என்றேன். “அறைகாலி இல்லை” என்று மீண்டும் சொல்லிவிட்டு கதவை மூடப்போனார். ஏமாற்றத்துடன் நான் படியிறங்கித் திரும்பும்போது “ஒரு அறை இருக்கிறது” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப்புரியவில்லை. கூரிய மூக்கும் ஒட்டிய கன்னங்களும் சற்றே கூன் விழுந்த உடலும் கொண்ட பெரியவர். நள்ளிரவில்கூட நெற்றியில் சந்தனம் தெரிந்தது. “அதுபோதும்” என்று நான் அவரிடம் சொன்னேன். “சிறிய கட்டில்தான். வசதியான அறை அல்ல. நான் படுக்கும் இடம் அது. நீங்கள் அங்கே படுத்துக் கொள்ளலாம்” என்றார். “பரவாயில்லை” என்றேன். “உள்ளே வாருங்கள்” என்று சொல்லி அழைத்தார்.

உள்ளே சென்றதும் என்னிடம் “பெட்டி ஏதும் இல்லையா?” என்றார். நான் வெறுங்கையுடன் இருப்பதை பலமுறை முன்னரே கவனித்திருந்தார். “இல்லை” என்றேன். அவர் என்னை ஒருமுறை கண்கள் சுருங்கப் பார்த்துவிட்டு ”சரி” என்று தலையாட்டினார். உள்ளே சென்று ஒரு பழைய வேட்டியும் துண்டும் கொண்டு வந்து தந்தார். அதை அணிந்துகொண்டு ஈர உடைகளைக் களைந்தேன். தலை துவட்டிக் கொண்டேன்.

“சாப்பிட்டீர்களா?” என்றார். “இல்லை” என்றேன். “நீர் விட்ட சோறு இருக்கிறது. என் சமையல். சாப்பிடுகிறீர்களா?” என்றார். “சரி” என்று தலையசைத்தேன். ஒரு பாத்திரத்தில் நீர்விட்ட சோறும் ஊறுகாயும் கொண்டு வந்து தந்தார். அதைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் குடிக்க சீரகம் போட்டு காய்ச்சிய வெந்நீர் வந்தது. அந்தக் குளிருக்கு வெந்நீர் இதமாக என் உடலை நிரப்பிக் குருதியை சூடுபடுத்தியது.

அவர் அளித்த அறை மிகச்சிறியது. ஒரு கட்டில் போட்டபிறகு ஒருவர் நின்று கை உயர்த்தத்தான் இடம். கட்டிலில் மடித்து வைத்திருந்த போர்வையை உதறி விட்டு படுத்தேன். அவர் அருகே வந்து அங்கிருந்த சிறிய முக்காலியில் அமர்ந்தார். “எந்த ஊர்?” என்று என்னைக் கேட்டார். நான் “நாகர்கோவில்” என்றேன். “ எனக்குத் திருவனந்தபுரம் பக்கம் காட்டாக்கடை” என்றார். தன் பெயர் சதானந்தன் என்றார். சிரித்தபடி ”சதா ஆனந்தமாக இருக்கவேண்டும் ஆனால் சிறுவயதில் அப்படி இருக்கவில்லை” என்றார்

தந்தை சிறுவயதிலேயே இறந்து போய்விட சித்தியின் வளர்ப்பில் பலவகையான கொடுமைகளைச் சந்தித்து இளமைப்பருவத்தைக் கழித்ததையும், படிக்க ஏங்கி அதற்கான வாய்ப்பு இல்லாமல் துன்புற்றதையும், ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து ஏற்றுமானூரிலேயே ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்ததையும், ஒவ்வொரு நாளும் அடியும் வசைகளும் பெற்று மூன்று வேளை உணவை மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டு அங்கே பணியாற்றியதையும் பற்றி சதானந்தன் சொன்னார்.

”ஆனால் நான் மனந்தளரவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகவே ஏற்றுமானூரப்பன் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தேன். அது வளர்ந்தது. இந்தக் கட்டிடத்தை வாங்கி விடுதியை ஆரம்பித்தேன். திருமணம் செய்து கொண்டேன். நான்கு பிள்ளைகள் நான்குபேருமே எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.”

“எனக்கு ஒரு குறையும் இல்லை” என சதானந்தன் தொடர்ந்தார் “மனைவி மகன்களுடன் இருக்கிறாள். இந்த விடுதி என் பொறுப்பில் இருக்கிறது. இதை விற்றுவிட்டு வரும்படி என்னைச் சொல்கிறார்கள். ஆனால் ஏற்றுமானூரப்பனின் பிரசாதம் இது. நான் உயிரோடிருக்கும் வரை இங்குதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆகவே தான் இங்கிருக்கிறேன். காலையிலும் மாலையிலும் ஏழரப்பொன் ஆனைமேல் ஏறியவனை வணங்குகிறேன். மனம்நிறைவாக இருக்கிறது” என்றார்.

தன் வாழ்க்கை பற்றி அவர் விரிவாக சொல்லி முடிக்கும்போது மணி இரண்டு தாண்டியிருந்தது. அதன் பிறகு கேரள அரசியலுக்குள் புகுந்தார். இடதுசாரிகளை விமர்சனம் செய்தார். நான் இடதுசாரிகளை ஆதரித்துப் பேசியபோது என் கருத்தை அவர் ஒத்துக் கொண்டார். அங்கிருந்து திரையுலகம் சென்றது. எம்.டி.வாசுதேவன் நாயரை விட பி.பாஸ்கரன் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றார். நான் அதை மறுத்தேன். அதையும் விவாதத்திற்குப்பின் ஏற்றுக்கொண்டார். அது அவர் இயல்பு என தோன்றியது

ஐந்து மணிக்கு அவர் சமையலறைக்குச் சென்று எனக்குக் கறுப்பு டீ போட்டுக் கொண்டு வந்து தந்தார். அதைக் குடித்துவிட்டு மேலும் பேசிக் கொண்டிருந்தோம். சன்னல் வழியாக வெளி ஒளிகொள்ளத்தொடங்கியதும் என்னிடம் ”நீங்கள் குளித்துவிட்டு ஏற்றுமானூரப்பனைத் தரிசனம் செய்யலாம். பொழுது விடிந்துவிட்டது” என்றார். நான் புன்னகையுடன் எழுந்து கொண்டேன். எழுந்தேன். “வெந்நீர் போட்டுத் தருகிறேன்” என்றார். அறைகளில் தங்கியிருந்த ஒரு பெரிய குடும்பம் துயிலெழுந்து ஓசையெழுப்பத்தொடங்கியது.

அவர் செம்புக்கலத்தில் கொண்டு விட்ட வெந்நீரின் புகைமணம் இருந்தது. தென்னை ஓலைச் சருகை எரிய வைத்து காய்ச்சியது. குளித்து காய்ந்த ஆடைகளை அணிந்து அவரிடம் விடை பெற்று நான் ஆலயம் சென்ற போது ஏற்றுமானூரப்பனை தொழுவதற்கு ஐம்பது பேர்வரை கூடியிருந்தார்கள்.முன்னரே நடைதிறந்திருந்ததது. நிர்மால்யபூசை முடிந்து முழுஅலங்காரங்களுடன் கருவறையில் லிங்கம் அமர்ந்திருந்தது.

உளம்நிறையும் இறை தரிசனங்களில் ஒன்று அது. நன்றாக வெயில் எழுவது வரை பெரிய ஆலயத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன். மழைகழுவிய கருங்கல் பரப்புகள் மெழுகுபோலிருந்தன. சுவர்களில் எல்லாம் பச்சைநிறப் பூனைமயிர் போல புல்பாசி படிந்திருந்தது. இளங்காற்றில் மழைநினைவு எஞ்சியிருந்தது.

திரும்பி வரும்போதே காலையுணவு உண்டேன். விடுதிக்கு வந்து சதானந்தனிடம் விடைபெற்றேன். “எங்கு செல்கிறீர்கள்?” என்றார். “மீண்டும் எர்ணாகுளம் செல்கிறேன். அங்கு விடுதியில் எனது பெட்டி இருக்கிறது” என்று சாவியைக் காட்டினேன். புன்னகையுடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு “உங்களை நான் தூங்கவிடவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றார். “பரவாயில்லை உங்களிடம் பேசமுடிந்தது” என்றேன்.

“நீங்கள் தற்கொலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். கையில் பையில்லாமல் நனைந்தபடி வந்ததனால் அப்படித்தோன்றியது. ஆகவே தான் இங்கே இடம் கொடுத்தேன். தனியாக விடக்கூடாது என்பதனால்தான் விடியும் வரை உங்களுடன் இருந்தேன்” என்றார்.

நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் கைகளைப்பற்றிக் கொண்டு “சரி,எப்போதாவது தற்கொலை எண்ணம் தோன்றினால் இங்கு வந்துவிடுகிறேன்” என்றேன். அவரும் உரக்க நகைத்து “ஏழரப்பொன் ஆன மேல் ஏறிய அரசன் ஒருவன் ஆளும் மண் இது. அவன் செங்கோல் துணையிருக்கும்” என்றார்.

 

[குங்குமம் முகங்களின் தேசம் தொடர்]

 

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2