பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்

Azhagunila 01

எங்கள் குடும்ப வழக்கப்படி நானும் இளமையில் நாட்டுப்புறத் தற்காப்புக் கலை பயிலச் சென்றிருந்தேன். நான் சென்றது சிலம்பப் பயிற்சிக்காக. கிட்டத்தட்ட எட்டு மாத காலம் சிலம்ப மைதானத்தின் ஒர் ஓரத்தில் நிற்க வைத்து கையில் சிலம்பை கொடுத்து இடதும் வலதும் சுழற்ற சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு மாதகாலம் சுழற்றிய பிறகு என்னை ஆசிரியர் ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஓரிரு மாதங்களுக்குள் எம்.ஜி.ஆர் போல சண்டை போடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாட்கள் நான் செல்வதைத் தவிர்த்தபோது அவர் என்னைக் கூப்பிட்டு ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்டார். எனக்கு முறையாகச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்று நான் புகார் சொன்னேன்.

அப்போதுதான் இன்று வரை என் வாழ்க்கையில் தொடரும் முக்கியமான ஒரு பாடத்தை அவர் சொன்னார். ”எந்தக் கருவியைக் கையாள்கிறோமோ அந்தக் கருவி நம் சிந்தையிலிருந்து முற்றிலும் மறைவதற்குப் பெயர்தான் திறமை” என்று. அது பழக்கம் வழியாக மட்டுமே வரும். தட்டச்சுப்பலகையைப்பற்றி பிரக்ஞை உடையவனால் தட்டச்சு செய்ய முடியாது. சிலம்பைப்பற்றிய தன்னுணர்வு இருக்கும் வரைக்கும் சிலம்பு சண்டை போட முடியாது. முதலில் கை பழகவேண்டும். கை அறிந்ததை அகம் அறிய வேண்டும். நனவு அவற்றை முழுமையாக மறந்துவிட வேண்டும். ‘மெய் கண்ணாகுதல்’ என அதைச் சொன்னார். செந்தமிழும் நாப்பழக்கம் என்ற தொல்மொழி அதையேதான் சுட்டுகிறது. சிந்தைப் பழக்கம் அல்ல. அது நாப்பழக்கம் மட்டுமே.

சிறுகதை அல்லது கவிதை போன்ற வடிவங்களில் அவ்வடிவத்தையும் மொழியையும் எந்த முயற்சியும் இன்றிக் கையாளும்திறன் வரும்போதுதான் தன்னியல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்ல முடியும். அல்லது அவ்வடிவிலும் அம்மொழியிலுமே நாம் சிக்குண்டிருப்போம். விருத்தம் என்ற வடிவத்தை தளையெண்ணி எழுதியிருந்தால் கம்பனால் கம்பராமாயணம் எழுதியிருக்க முடியாது. அவன் பேசினாலே விருத்தம் அமைந்துவிட்டிருக்க வேண்டும். அதற்கு அக்கலையின் தொடக்க காலகட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இளம் எழுத்தாளர்களிடம் ”தொடர்ந்து எழுதுங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கதை எழுதுங்கள்” என்று நான் சொல்வதுண்டு. உலக எழுத்தாளர்களில் மிகச்சிறந்தவர்கள் பெரும்பாலும் அனைவருமே தினமும் எழுதியவர்களே.

மிகக்குறைவாக எழுதுவதாகத் தோன்றும் நல்ல எழுத்தாளர்கள் உண்மையில் பிரசுரிக்காத படைப்புகள் நிறைய வைத்திருப்பார்கள். உண்மையிலேயே மிகக்குறைவாக எழுதுபவர்கள் தங்களுக்கென்ற ஒரு நடையோ தனித்தன்மையோ இல்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் நாம் எழுதுவது ஓர் அனிச்சை நிகழ்ச்சி. அனிச்சையாக நாம் செய்யும் எதையும் மிகுந்த முயற்சியுடன் மட்டுமே மாற்றிக்கொள்ளமுடியும். உதாரணமாக, பேசும்போது நீங்கள் கைகளை இயல்பாக அசைப்பதை வேறுவகையாக மாற்றுவதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். எழுதுவது அனைத்தையும் பிரசுரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் பிரசுரிக்கும் வாய்ப்பு வந்தால் மட்டுமே எழுதவேண்டும் என்பது இளம் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய தடை. எழுத்திற்கு நாவும் கையும் பழகிய பிறகு உளஉந்துதலும் தேவையும் இருந்தால் மட்டும் எழுதலாம்.

சிங்கப்பூர் அல்லது இலங்கைப் படைப்புகள் பெரும்பாலானவற்றைப் பார்க்கும்போது இந்தப்பயிற்சியின்மை மொழியில் தெரிகிறது. சில சமயம் கதைக்கருக்களும் கதைவடிவும் கூட நன்றாக இருந்தும் கூட மொழி தனித்தன்மையற்றதாவும் தேர்ச்சியற்றதாகவும் உள்ளது.

அழகுநிலாவின் சிறுகதைகளில் முதலில் என்னைக் கவர்ந்தது தொடர்ந்த வாசிப்பு மற்றும் எழுத்து காரணமாக வந்த இயல்பான சரளத்தன்மை. சிங்கப்பூர்க் கதைகளில் அபூர்வமானது என்பதனாலேயே மிகுந்த புத்துணர்ச்சியுடன் இந்தத் தொகுப்பை படித்து முடித்தேன். இந்த ஒரு அம்சத்திற்காகவே இந்த சிறுகதைத்தொகுப்பு சிங்கப்பூர்ச் சூழலில் மட்டுமல்ல தமிழ்ச் சூழலிலும் முக்கியமானதென்று நான் கருதுகிறேன். கவனிக்கத்தகுந்த ஒரு தமிழ்எழுத்தாளராக அழகுநிலா வரக்கூடும் என்று அவதானிக்கிறேன்.

இந்த முதற்தகுதிக்கு அப்பால் அழகுநிலாவின் கதைகளில் இரு பிரதானமான குறைபாடுகளை என்னால் காண முடிகிறது. ஒன்று அதன் அன்றாடத்தன்மை. சிறுகதை என்பது அன்றாட உண்மைகளை, கணநேர விழிப்புணர்வுகளை சொல்வதற்கான வடிவம் தான். வாழ்க்கையை நோக்கி ஒரு கணம் ஒளிபாய்ச்சி அணையும் ஒரு கலை உத்தியாகவே அதை முன்னோடிகள் வடிவமைத்திருக்கிறார்கள். ஆரம்பகட்டப் படைப்பாளிகளிடமிருந்து நாம் அதைத் தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கலையும் தன்மேல் தான் ஏறிக் கடந்து செல்கிறது. சிறுகதையில் அன்றாட வாழ்க்கையின் தருணங்களை நூறு ஆண்டுகளாக எழுதித் தள்ளிவிட்டோம். அனேகமாக எல்லா தருணங்களும் ஏதோ ஒரு வகையில் எழுதப்பட்டுவிட்டன. இன்று எழுதுகையில் அவற்றை மறுகண்டுபிடிப்புதான் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த ஊடகப்பெருக்கக் காலகட்டத்தில் அனைத்துத் தளத்திலும் மிதமிஞ்சிக்கிடைப்பது என்பதே முக்கியமான சிக்கல். ஒரு கதையை படிக்கும்போது இன்னொரு கதை நினைவுக்கு வருகிறது. பலசமயம் அது இன்னும் பெரிய படைப்பாளியால் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக இத்தொகுதியில் உள்ள நல்ல கதை என்பது ’ஆறஞ்சு’. சிங்கப்பூர்ச் சூழலில் உள்ள முக்கியமான முதல் தேர்வு என்பது Primary Five என்று சொல்லப்படும் ஐந்தாம் வகுப்பு முடிவுத்தேர்வு. இந்தத் தேர்வுக்காக ஒவ்வொரு குழந்தையையும் வாட்டி வதைப்பது இங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆறாம் வகுப்பிலேயே மாணவர்களை மூன்றாக பிரித்துவிடுகிறார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்கள் உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்குச் செல்லும் தகுதி கொண்டவர்கள் என்றும், நடுத்தர மாணவர்கள் நடுத்தர பணிக்காகவும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர்தர கல்விக்கென்றும் பிரிக்கப்படுகிறார்கள். ஆகவே பெற்றோர் உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசும் கதை ’ஆறஞ்சு’. ஒரு குழந்தையின் பார்வையில் எப்படி தான் தன்னை எவ்வகையிலும் உள்ளூற பாதிக்காத பெரியவர்களின் ஒரு தேர்வுமுறையை நோக்கி அழுத்தி செலுத்தப்படுகிறோம் என்பதைச் சொல்கிறது. தனக்குப்பின் வருபவர்களுக்கும் அது சென்று சேரும் விதத்தையும் சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாபம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு செல்வது போல அந்தத்தேர்வு கடந்து செல்வதை ஆரஞ்சு காட்டுகிறது.

ஆனால் அசோகமித்திரனின் ’கல்வி’ போன்ற கதைகள் இதைவிடக் கூர்மையாக கல்வி எனும் வதையைச் சொல்லிவிட்டிருக்கின்றன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. நவீனச்சிறுகதையின் சவால் இதுதான். ஒரு பிரச்னையை சரியாகச் சொன்னால் மட்டும் போதாது, அது முன்பு சொல்லப்படாத புதுஅழகியலையும் அடைந்திருக்கவேண்டும். அப்பிரச்னையுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு அது வலுவான கதையாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உரிய கதையாக, காலம் கடந்து நிற்கும் கதையாக மாறுவதற்கு நேற்று எழுதாத ஒரு புதுமை அதில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது.

ஆறஞ்சு ஒரு யதார்த்தக் கதை. குழந்தையின் பார்வையில் அதன் மேல் செலுத்தப்படும் அதன் வன்முறை காட்டப்படுகிறது. ஆனால் அழகியல் ரீதியாக ஏதோ ஒன்று மேலதிகமாக நடந்தால் ஒழிய இதை அசாதாரணமான கதை என்று சொல்ல முடியாது. என்ன நிகழ்ந்திருக்கலாம்? அழகுநிலாவின் ஒரு சக படைப்பாளியாக மனம் போன போக்கில் நான் இப்படி யோசித்துப்பார்க்கிறேன்.

அந்த பிரைமரி ஃபைவ் ஒரு சீன தேவதையாக அந்த குழந்தையைத் தேடிவந்திருக்கலாம். அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு வேற்றுலக ஜீவியாக வந்திருக்கலாம். ஒரு நோயாக அந்ததேர்வை உருவகப்படுத்தியிருக்கலாம். அத்தனை குழந்தைகளையும் ஊனமுறச்செய்யும் ஒரு மர்ம நோய். ஆனால் அரசால் உருவாக்கப்பட்டு பெற்றோரால் குழந்தைக்கு அளிக்கப்படுவது. அல்லது குழந்தையை ஆட்டிப்படைக்கும் ஒரு எந்திரனாக உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஐந்தாம் வகுப்பிலிருந்து குழந்தை அதற்கு அடிமையாக வேண்டும். அது குழந்தையின் காவலனாகவும் பணியாளாகவும் எஜமானாகவும் இருக்கிறது.

அல்லது யதார்த்தத் தளத்திலேயே அக்கதை மேலும் நுட்பமான அர்த்தங்களை நோக்கிச் செல்லலாம். விரல்களுக்கான கழைக்கூத்தாட்டம் என ஃபூக்கோ எழுதும்கலையைச் சொன்னார். சீன எழுத்துக்களை குழந்தைகள் எழுதுவதைப்பார்க்கையில் அதை எண்ணிக்கொண்டேன். அத்தனைபேருக்கும் கழைக்கூத்தாட்டம் கட்டாயமாக்கப்பட்ட சமூகம் எப்படி இருக்கும்? அசாதாரணமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகள் எழுதமுடியாமையாலேயே தோற்றுப்போகும் யதார்த்தம் இங்குள்ளது. எழுத்தே அன்னியமாகிப்போன நாளைய உலகில் இது எப்படிப்பார்க்கப்படும்? எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கின்றன. அப்படி ஒன்று நடந்து இந்தக் கதை அது இன்றிருக்கும் ஒரு யதார்த்த உண்மையை சுட்டுவதிலிருந்து மேலெழுந்து காலந்தோறும் பெரியவர்கள் சிறியவர்கள் மேல் கல்வி என்ற பெயரில் இழைக்கும் கொடுமைகளைச் சுட்டுவதாக ஆகியிருந்தால் அது ஒரு சர்வதேச கதையாகியிருக்கும்.

உர்சுலா லே குவின் எழுதிய ‘ஒமல்லாசை விட்டுச் செல்பவர்கள்’ என்ற கதை நினைவுக்கு வருகிறது. ஓர் அழகிய, அமைதியான, இன்பம் நிறைந்த நகரத்தின் நடுவில் சதுக்கத்தின் அடியில் சிறையில் ஒரு குழந்தை பிறந்தது முதல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை அங்கு வைத்திருந்தால் மட்டும்தான் அந்த நகர் அப்படி இருக்க முடியும். அந்தக் குழந்தை அங்கு செல்பவர்களைப் பார்த்து கெஞ்சி அழுகிறது. அதை வெளியே விடமாட்டேன் என்கிறார்கள். அந்நகரத்துக்காக அந்தக் குழந்தை செத்து அழியத்தான் வேண்டும் என்கிறது அந்த ஊரின் நெறி. அந்த ஊர்மக்களின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் அது. ஒருவகையில் அந்தக் கதை பேசுவதும் அழகு நிலா பேசுவதைத் தானே?

இதையே நீட்டி யோசிப்போம், ஆறுவயதில் அம்மை குத்துவதைப்போல அல்லது உபநயனம் செய்து வைப்பதைப்போல குழந்தைகளுக்கு நாக்கை நீக்கும் ஒரு சடங்கை செய்வதாக இந்தக் கதை இருந்திருந்தால் இதன் பாதிப்பு வேறொரு கட்டத்துக்கு சென்றிருக்கும் அல்லவா. போர்ச்சுக்கீஸ் எழுத்தாளர் யோஸ் சரமகோவின் Blindness உதாரணமாகச் சுட்டப்படலாம். இப்படி எத்தனையோ சாத்தியங்கள்.

இன்று தேவையாக இருப்பது அன்றாட உண்மையிலிருந்து எழுந்து அதை மானுட உண்மையாக ஆக்கும் ஒரு பரந்த எழுத்து. அதற்கு தேவையான கற்பனை வளம். நடப்பதை சரியாக சொல்லிவிட்டோம் என்பது இனிமேல் சிறுகதையின் வெற்றி அல்ல. அது இதே அளவுக்கு அல்லது இதைவிட வீரியத்துடன் இன்று குறுஞ்செய்திக்கட்டுரைகளாலும் சிறிய செய்திப் படங்களாலும் காட்டப்பட்டுவிடும். உண்மையிலேயே ஒரு குழந்தையின் தத்தளிப்பை மூன்று நிமிடம் பதிவு செய்து அக்குழந்தையின் திகைப்பு தெரியும் கண்களுக்கு அண்மைக்காட்சி வைக்கும் ஒரு செய்தித் துணுக்கு இந்தக் கதை உருவாக்குவதை விட அதிக பாதிப்பை நமக்கு அளித்துவிடும். கடந்து செல்வது எப்படி, தனித்தன்மையை பேணிக்கொள்வது எப்படி, பிற எந்த ஊடகமும் சொல்லாத ஒன்றை தான் சொல்வது எப்படி என்பதே சிறுகதையின் அல்லது இலக்கியத்தின் இன்றைய சவாலாகும்.

அழகுநிலாவின் கணிசமான கதைகளில் உள்ள இரண்டாவது குறைபாட்டை இவ்வம்சத்துடன் பொருத்திப்ப்பார்க்கலாம். இறுதிவிரிவு நிகழாமை. சிறுகதைக்கு முடிவு அல்லது இறுதிக் கண எழுச்சி மிக முக்கியமானது. சொல்லப்பட்ட தளத்திலிருந்து சிறுகதை சொல்லப்படாத தளம் நோக்கி வாசகனை தள்ளுவது அது. வாசகனின் முற்கணிப்பை மீறிச்சென்று புதிய ஒன்றை முன்வைப்பது. வாசித்த பிறகு கற்பனைக்கும் அமைதியின்மைக்கும் கேள்விகளுக்கும் அவனைக் கொண்டு சென்று அமர்த்துவது. வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் ஆசிரியனுக்குள் திறந்துகொள்ளும் மேலதிகக் கேள்வி அல்லது கண்டடைதல்தான் சிறுகதைக்கான கருவை அளிக்க முடியும். ஒரு நிகழ்வை நேர்சக்தி என்றால் அதில் கிடைக்கும் திறப்பை எதிர்சக்தி என்று கூறலாம். இந்த யின் -யாங் சரியாக அமையும்போது மட்டும்தான் சிறுகதை நிகழ்கிறது. அத்தகைய வலுவான ஒரு முடிச்சு அல்லது திருப்பம் அல்லது உச்சம் சிறுகதைக்கு இன்றியமையாதது.

சிறுகதையின் செவ்வியல் வடிவம் நான் சொல்வது. நடுக்கால யதார்த்தவாதக் கதைகளில் ஒரு சாரார் அந்த முடிச்சை நீக்கி எளிமையான நிகழ்வுகளையே கதையாக்க முடியுமா என்று பார்த்தார்கள். சா.கந்தசாமி அவ்வாறான கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் மிக விரைவிலேயே அக்கதைகள் வெறும் அனுபவப் பதிவுகள் என்ற இடத்தை மட்டும் அடைந்தன. அடுத்தகட்ட ஊடகவளர்ச்சி அவற்றை எளிதில் கடந்துசென்றது. சா.கந்தசாமியின் கதைகளில் ஓரிரு கதைகள் மட்டுமே இன்றைய வாசகன் நினைவில் நீடிக்கின்றன. அக்கதைகள் இறுதியில் வலுவான திருப்பமோ உச்சமோ கொண்டவை. உதாரணம் தக்கையின்மீது நான்கு கண்கள். ம் சிறுகதை அதன் செவ்வியல் வடிவுக்கே மீண்டும் வந்திருக்கும் காலம் இது.

அழகுநிலாவின் பலகதைகள் அந்த உச்சம் நிகழாத சுவாரசியமான குறிப்புகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. உதாரணம் ’வேர்க்கொடி’. சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைக் கொண்டு வா அது ஒரு சடங்குக்கு தேவைப்படுகிறது, அதைப்பாதுகாத்து வைக்க வேண்டுமென்று அவள் கிராமத்து அன்னை சொல்கிறாள். அவள் குழப்பமடைகிறாள். அருகிலிருக்கும் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண் இந்தியப்பண்பாட்டையும் சடங்குகளையும் ஆராய்ச்சி செய்பவள். அவள் அது ஏன் ஏதோ ஒரு பழைய மருத்துவ முறையில் முக்கியமானதாக இருக்கக்கூடாது என்கிறாள். அதைத்தானே நவீன மருத்துவம் ஸ்டெம் செல் என்று சொல்கிறது என ஒரு வியப்பு எழுகிறது. அவ்வளவுதான் கதை

சிறுகதைகள் எழுதப்படுவது இத்தகைய முதிரா அறிவியல் ஊகத்தைச் சொல்வதற்காக அல்ல. தொப்புள் கொடி என்பது அதற்கு அப்பால் குறியீட்டு அர்த்தம் உள்ளது. உயிர்த்தொடர்பு, பண்பாட்டுத்தொடர்பு. அந்தக் குறியீட்டு அர்த்தத்தை நோக்கி இந்தக் கதையைக் கொண்டு சென்றிருந்தால் இது வேறொரு தளத்துக்கு போயிருக்கும். பொருட்களை அப்பொருட்கள் அளிக்கும் ஒட்டுமொத்த அர்த்தத்துடன் சொல்வதற்கு பெயர்தான் குறியீடு என்பது. பல சமயங்கள் நான் எண்ணியதுண்டு, மருத்துவ அறைகளில் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் எதிர்காலம் என்ற அன்னையின் அல்லது தொழில்நுட்பம் என்ற அன்னையின் தொப்புள் கொடியோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என.

இன்னொரு கதை உறவுமயக்கம். சிங்கப்பூர் சிறுகதைகள் அனைத்திலும் இருக்கக்கூடிய பணிப்பெண் பிரச்னை. பணிப்பெண்ணை எப்படி பார்ப்பது? நிலப்பிரபுத்துவ மரபில் வந்தவர்களுக்கு பணிப்பெண் ஒருவகையான அடிமை. ஆனால் அது ஓர் அறுபடா உறவு தொழில்முதலாளித்துவ மரபில் ஊன்றி நிற்பவர்களுக்கு பணிப்பெண் ஊதியம் பெறும் ஒரு உழைப்பாளி.அது ஓரு வணிக ஒப்பந்தம். அவளை உணர்வு ரீதியாக எப்படி வகுப்பது என்பது இரு வகையினருக்கும் இருவகையான சவால்கள்.

இந்தக் கருவை சிங்கப்பூரில் வெவ்வேறு வடிவில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கலாம். என்னுடைய சிறுகதைப் பயிற்சி வகுப்பிலேயே பலமாணவிகள் இந்தப் பிரச்னையைத்தான் எழுதினார்கள். அந்தப் பணிப்பெண் ஓர் அன்னை. ஒரு மகள், ஓர் உடன்பிறந்தவள். அவளை அப்படியெல்லாம் பார்க்கலாமே. இக்கதை அதைச் சொல்கிறது – பணிப்பெண்ணை உறவாகப்பார்க்கலாமே என்று. அவவ்ளவுதான் இக்கதை. ஆனால் இது ஒருவகை எளிய திறப்பு மட்டும்தான். இதிலுள்ளது பழகிப்போன அந்த மனிதாபிமானம் மட்டுமே.

இக்கதையிலும் வாசகன் தேடுவது மேலதிகமான ஒன்றை. நடைமுறையில் பணிப்பெண்ணை உறவாக அணுகினால் அவளுடனான வணிகஒப்பந்தம் அழிய ஆரம்பிக்கிறது, அது தொழிற்பிரச்சினைகளை உருவாக்கும். அது வெறும் வணிக ஒப்பந்தம் மட்டுமே என்றால் அதில் மனித அம்சம் இல்லை. இந்த முரண்பாடே நவீன உலகின் சிக்கல். அன்றாடவாழ்க்கை சென்று முட்டிநிற்கும் அத்தனை புள்ளிகளிலும் தத்துவச்சிக்கல் உள்ளது. அனைத்து தத்துவச்சிக்கல்களும் அறச்சிக்கல்களே. அதைத்தான் சிறுகதை எதிர்கொள்ளவேண்டும், எளிய விடைகளைச் சொல்வதல்ல அதன் பணி

இதனுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு கதை தோன்றாத் துணை. இதுவும் சிங்கப்பூரின் இயல்பான பிரச்னைகளில் ஒன்று. சிங்கப்பூர் குடிமகன் x வந்து குடியேறிவர்கள் என்ற இரட்டைமுரண். சிங்கப்பூர் குடியேறிகளை அயலவர்களாகக் கருதும் ஒரு சிங்கப்பூர் குடிமகள் ஓர் இக்கட்டில் அவர்கள் இயல்பாக உதவி செய்வதை வைத்து அவர்களைப் பற்றி புரிந்து கொண்டு நெகிழ்வதைக் காட்டுகிறது. மிக இயல்பாக ஒரு கேள்வி அப்படி உதவாவிட்டால் அவர்களை வெறுக்கலாமா? அவர்கள் அன்னியர்களா? அவர்கள் உதவி செய்வதனால் தான் அவர்கள் வேண்டியவர்களாகிறார்களா? மனிதர்கள் எந்நாட்டிலும் எங்கும் சென்று குடியேறலாம் என்பதும் எந்த மண்ணில் வாழ்கிறார்களோ அந்த மண்ணின் உரிமையாளராக ஆகலாம் என்பதும் பிழையா? ஓர் இக்கட்டில் அவர்கள் தான் வந்து நிற்பார்கள் என்ற ஒற்றை வரிதான் அந்த பெரிய கேள்விக்கான விடையா?

இத்தகைய அன்றாட உண்மைகளை மையக்கண்டுபிடிப்புகளை முடிவாக கதைக்குள் நிறுத்தும்போது அக்கதை மிக சாதாரணமானதாக ஆகிவிடுகிறது. நேர்மாறாக இலக்கியத்தின் சவால் என்பது அன்றாடவாழ்க்கையில் இருந்து பெரிய கேள்விகளை உருவாக்கிக்கொள்வதுதான்

அழகுநிலாவின் கதைகளில் வடிவ ரீதியாக மொழி சார்ந்து குறைகள் சொல்ல ஏதும் இல்லை. ஒரு பயில்முறை எழுத்தாளரின் தளத்தில் இருந்து அவர் வெகுவாக மேலெழுந்துவிட்டிருக்கிறார். இனி அவரது சவால் என்பது சர்வதேச அளவில் எழுதப்படும் சிறந்த சிறுகதைகளை நோக்கி தன் எழுத்தைக் கொண்டு செல்வது என்பதே. ஆகவே தான் இந்த விவாதம்.

இத்தொகுப்பின் முக்கியமான கதையாகிய ’பச்சை பெல்ட்’ இந்தியாவிலிருந்து இங்கு வேலைக்கு வந்திருக்கும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கை. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தவன். தந்தை சேர்த்துவைத்த கடன்களை அடைப்பதற்காக இங்கு வேலைக்கு வந்திருக்கிறான். தன் பங்காளி ஒருவர் அணிந்திருந்த பச்சை பெல்டை வாங்கி ஒரு முறை அணிந்துவிட்டு தருகிறேன் என்று சொன்னதற்காக அவரால் அவமதிக்கப்பட்ட அவன் தந்தை தன் மகன் சிங்கப்பூர் சென்று பணம் சேர்த்து ஒரு பச்சை பெல்ட் வாங்கி தனக்கு தரவேண்டும் என்று விரும்புகிறார். அவன் சிங்கப்பூர் செல்லும்போது அதை உண்மையில் நினைவும் படுத்துகிறார். ஆனால் இங்குள்ள உழைப்புச் சூழலில் அதை அவன் மறந்துவிடுகிறான். தந்தை அங்கு இறந்த செய்தி வருகிறது. பணம் செலவு செய்து இறுதிச் சடங்குகளுக்காக செல்ல முடியாத நிலையில் அவன் அதை தவிர்த்து விடுகிறான். இங்கிருக்கையில் தந்தை பெல்ட் வாங்கி தரும்படி கோரியது நினைவுக்கு வருகிறது. அவன் ஆழ்ந்த உளச் சோர்வு அடைந்து அழுகிறான்.

இந்தக் கதையின் கூறல்முறை நேர்த்தியுடன் அமைந்துள்ளது. நுண்தகவல்கள் சிறப்பாக உள்ளன. கதையின் எடுப்பும் முடிப்பும் ஆசிரியையின் அத்துமீறல்கள் ஏதுமின்றி நவீன இலக்கியத்துக்குரிய வடிவ அமைதியுடன் உள்ளன. ஆகவே சிறுகதை வடிவம் அல்லது கூறுமுறை பற்றி குறை செல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் திரும்பவும் இது அசோகமித்திரன் எழுதிய கதைத் தளத்திலிருந்து ஒரு படி கீழாக அந்தப்பாணியிலேயே அமைந்துள்ளது. இன்றைய எழுத்தாளர் அசோகமித்திரனை திரும்ப எழுத முடியாது ஏனெனில் அவர் எழுதிய தளத்தை முடிந்த வரை ஆற்றலுடன் அவரே எழுதிவிட்டார்.

இங்கு கதை அந்தப் பச்சைபெல்டை பற்றியது. தலைப்பும் அப்படித்தான் சொல்கிறது. அப்படியிருக்கையில் அந்த பச்சை பெல்ட் இன்னும் பலவாக விரிந்திருக்கலாம் அது அந்தஸ்தின் அடையாளமாக நுணுக்கமான விவரணைகள் வழியாக வெளிப்பட்டிருக்கவேண்டும். மதுரை, நெல்லை பகுதிகளில் அது சாதியடையாளம். ஆதிக்கசாதி அல்லாத ஒருவர் பட்டைபெல்டை அணிய முடியாது. அழகியல் ரீதியாக பார்த்தால் அது மனிதர்களைக் கட்டியிருக்கும் ஒரு பாம்பு. இந்திய மரபு சார்ந்த குறியீடுகளைப் பார்த்தால் தெய்வங்கள் அணிந்திருக்கும் யோக பட்டம். எவ்வளவோ சாத்தியங்கள்.

எப்படியோ சொல்லப்பட்ட விதத்திலிருந்து அந்த பச்சைபெல்ட் மேலெழுந்திருக்க வேண்டும். அப்படி மேலெழும் பொருட்டு பச்சை பெல்ட் ஆரம்பத்திலேயே இக்கதையில் வந்திருக்க வேண்டும். இந்தக் கதை அப்பா பையன் கதையாக அல்லாமல் ஒரு பச்சை பெல்டின் கதையாக இருந்திருக்க வேண்டும். சிறுகதையின் இன்றைய சவால் என்பது இந்தக் கவித்துவத்தை அதற்கு அளிப்பது எப்படி என்பதுதான். அழகுநிலா அந்த சவாலை ஏற்றுக் கொள்வார் என்றால் சிங்கப்பூரின் முக்கியமான கதையாசிரியராகவும் நவீனத் தமிழிலக்கியத்தின் நிரந்தர இடம் உள்ள ஒருவராகவும் ஆக முடியும். வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

 

முந்தைய கட்டுரைசிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் 3