மொழியெனும் நதி

Falgu River
ஃபால்குனா நதி, கயா

 

 

கயாவில் இருந்து 2008 செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குச் சென்ற பயணம் இன்றும் நினைவில் காட்சிகாட்சியாக நீடிக்கிறது. செப்டெம்பரில் வட இந்தியாவில் மழை தொடங்கிவிடும். எங்கள் பயணத்தில் விந்தியனைக் கடந்ததுமே மழையை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தோம். நாக்பூர், போபால் போன்ற நகர்களை ஒரு முகத்தைக்கூடப் பார்க்காமல் மழைத்திரைக்குள்ளேயே கடந்துசென்றோம். எங்கள் நோக்கம் நகரங்கள் அல்ல, தொல்லியல் சார்ந்த இடங்கள்தான்

கயாவில் மழை இருக்கவில்லை. ஆனால் முகில்கள் வானை நிறைத்திருந்தன. இந்தியாவில் ஒரு சர்வதேச மையம் கயா. புத்தர் ஞானமடைந்த மண். பதிமூன்றாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலையை பக்தியார் கில்ஜி அழித்து அங்கிருந்த பத்தாயிரம் பிக்ஷுக்களை கொலைசெய்தபின் பிகாரில் பௌத்தம் சரியத் தொடங்கியது. நாளந்தா கைவிடப்பட்டது. கயாவும் மறக்கப்பட்டது.

இந்தியாவில் கிட்டத்தட்ட அழிந்துபோய், இலங்கையிலும் பர்மாவிலும் தாய்லாந்திலுமெல்லாம் உருமாற்றம் அடைந்து தேக்கநிலையில் இருந்த புத்தமதம் இந்தியாவையும் இலங்கையையும் பர்மாவையும் ஆண்ட ஆங்கிலேயரால்தான் பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டு எடுக்கப்பட்டது. ரைஸ் வில்லியம்ஸ், பால்காரஸ், ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகிய மூவரையும் பௌத்ததை மீட்டு எடுத்தவர்கள் என்று சொல்லலாம்.

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டவர். அவரது மாணவரான அநகாரிக தம்மபால என்னும் பௌத்தப்பிரச்சாரகர்தான் சர்வதேச அளவில் நிதி திரட்டி கயாவில் இன்றிருக்கும் ஆலயத்தை அமைத்தவர். முன்பு கயாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுசென்று அங்கே பொலனருவாவிலும் அனுராதபுரத்திலும் நட்டுப்பேணபட்ட போதி மரத்திலிருந்து ஒரு கிளை மீண்டும் கயாவுக்குக் கொண்டுவந்து நடப்பட்டது. ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் இன்னொரு மாணவர் தமிழ்பௌத்தத்தின் நிறுவனராகிய பண்டித அயோத்திதாசர்

கயா இன்று பணக்கார பிக்‌ஷுக்களால் நிறைந்துள்ளது. காரணம் பௌத்தம் திகழும் பெரும்பாலான நாடுகள் செல்வ வளம் மிக்கவை. அதேசமயம் பீகார் இந்தியாவின் வறுமை மிக்க மாநிலம். நவீன செல்பேசிகளும் மடிக்கணினிகளுமாக செல்லும் பிக்‌ஷுக்களை பிச்சைக்காரக் குழந்தைகள் துரத்தித் துரத்திப்பிச்சை எடுத்துக் கெஞ்சும் காட்சியே கயாவின் அடையாளம். வேடிக்கை என்னவென்றால் பிக்‌ஷு என்றால் பிச்சைக்காரன் என பொருள். பிச்சை என்னும் சொல் பிக்‌ஷை என்னும் வடமொழிச்சொல்லில் இருந்து வந்தது

கயாவிலிருந்து பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. சிலநாட்களுக்கு முன் பெய்த பெருமழையின் வெள்ளம் சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் சுழித்தோடிய ·பால்குனா சிவந்த ஒளியாக வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. சிலசமயம் அது அந்திவானம் போல விழிகளை ஏமாற்றியது

பீகார் மிக வளமான பூமி. பெரும்பாலும் கங்கை மற்றும் அதன் துணைநதிகளின் வண்டல்படுகைதான். எங்கும் நெல்வயல்கள், தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் சிதறிக் கலந்த இதமான குளிர்காற்று. மகாபோதியின் நினைவு எஞ்சிய மனம் ஒருவகை நிறைவில் அசையாதிருந்தது. இத்தனை நாட்களுக்குப்பின்பும் அந்தப்பயணம் இனிய நினைவாக நீடிப்பதற்குக் காரணம் அதுவே.

பால்குனா நதியின் பாலம் மீது சென்றுகொண்டிருந்தபோது எவரோ எங்களைத் தொடர்வதை உணர முடிந்தது. “எவரோ தொடர்ந்து வருகிறார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னார். “நம்மையா? நாம் என்ன செய்தோம்?” என்றேன். “பீகார் கொள்ளைக்காரர்களின் ஊர் சார். என்ன ஏது என்று நாம் என்ன கண்டோம்? வண்டியை நிறுத்தவேண்டாம்” என்றார் சிவா

வண்டியில் சென்றபடியே பார்த்தோம். தொடர்ந்து வந்தது ஒரு யமஹா பைக். அதிலிருந்தவர் மொட்டைத்தலையில் குடுமி வைத்து காவி மேலாடையைச் சுற்றியிருந்த வடக்கத்திப் பண்டா. “கயாவில் சடங்குசெய்கிற ஏதோ பிராமணர் போலிருக்கிறது” என்றேன். “இங்கே பிராமணர்கள்கூட பெரிய ரவுடிகள். கேள்விப்பட்டிருப்பீர்கள், பண்டாக்களுக்கும் பிக்‌ஷுக்களுக்கும் அடிக்கடி அடிதடி நடக்கும். கல்லெறியில் பலர் மண்டை உடைந்திருக்கிறது”

பீதியை உருவாக்கிக்கொள்ள விரும்பினோம் என்றுதான் சொல்லவேண்டும். அடுத்த பாலத்திலும் அந்த பைக் விடாது பின்னால் வந்தது. “இவ்வளவு தூரம் வரான் . என்னன்னுதான் பாப்பமே” என்றார் வசந்தகுமார். “தனியாத்தான் வர்ரான். நாம இவ்வளவுபேர் இருக்கோம்” என்றார் செந்தில். “கடைசீல அவன் சும்மா நம்மள கடந்து போயிருவான் . எல்லா திரில்லும் போயிரும். இப்டியே நம்மள ஒருத்தன் ஃபாலோ பண்ணினான்னு நம்பி அந்தக் கதையிலேயே ஊருக்குப்போவோம்” என்றார் கிருஷ்ணன்

அடுத்த பாலத்தில் வசந்த குமார் “நிப்பாட்டுங்க. . ஒரு ஷாட் எடுக்கறேன். நல்ல லொக்கேஷன்” என்றார். நிறுத்திவிட்டு நீர் வழிந்த ஃபால்குனா நதிப் படுகையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். ஓரக்கண்ணால் பைக் காரரையும் நோக்கினோம். அவர் பைக்கில் வந்து சற்று அப்பால் நின்றார். பின்னர் அருகே நடந்து வந்து தமிழில் “தமிழ்நாடா சார்?” என்றார்.

“ஆமாம். . நீங்க?” என்றோம். காரைக்குடிக்காரரான ராம்குமார். அவரது முன்னோர்கள் முந்நூறு வருடம் முன்பு அங்கே ஒரு சிற்றூரில் குடியேறிவிட்டிருந்தார்கள். பால்குனா நதி முன்னோர்களுக்கான நீர்க்கடன்கள் செய்வதற்கு மிகவும் முக்கியமானதாக அக்காலத்தில் கருதப்பட்டிருந்தது. அன்றெல்லாம் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து பீகாரில் அந்தச் சிற்றூருக்கு வந்து அங்கிருந்த பால்குனா கங்கை நதிச்சந்திப்பில் முன்னோருக்கு நீர்க்கடன்கள் செய்துவந்தனர். அவரது குடும்பம் அப்போது அங்கே வந்தது.

ஆனால் சென்ற நூறாண்டுகளாக அப்படி எவரும் தென்னகத்திலிருந்து வருவதில்லை என்றார் ராம்குமார். தென்னாட்டினருக்கு சடங்குகள் செய்துவைக்கும் புரோகிதர் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் வட இந்தியச்சடங்குகளுக்கு மாறி வட இந்தியப்பாண்டாக்களாகாவே மாறிவிட்டிருந்தனர். அவர் பெயர்கூட ராம்குமார் பாண்டேதான்.

ராம்குமார் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார் என்றார். சிவப்பாக வட இந்தியக் களையுட்ன் இருந்தார். தமிழ்நாட்டுக்கு அவரோ அவரது தந்தையோ வந்ததே இல்லை. ஆனால் வீட்டில் தமிழ்தான் பேசுகிறார்கள். வினோதமான தமிழ் உச்சரிப்பு நம்மூரில் கம்பிளி விற்கவரும் ராஜஸ்தானியர் பேசுவதுபோலிருந்தது.

சாலையில் தமிழ்நாட்டு பதிவெண் உள்ள வண்டியைக் கண்டதனால் பரவசமைந்து முப்பது கிலோமீட்டர் தூரம் விரட்டி வந்ததாகச் சொன்னார். அவரது மனதில் தமிழ்நாடு ஒரு கனவு பூமியாகவே இருக்கிறது என்று தெரிந்தது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், திருப்பத்தூர் என்று ஊர்ப்பெயர்கள் மட்டும்தான். தமிழ்நாட்டின் காட்சிச்சித்திரம் கூட இல்லை. ஏனென்றால் அவர் அறிந்த எவரும் தமிழகத்தைப் பார்த்ததில்லை.

ஆச்சரியமாக இருந்தது. எது அவரை தமிழன் என உணரச்செய்கிறது? அந்த உணர்ச்சி அவரை அங்கே அவர் வாழும் ஊரில், அப்பண்பாட்டிலிருந்து தனிமைப்படுத்தவே செய்யும். அவரது உலகியல் வாழ்க்கைக்கு அதனால் ஒருலாபமும் இல்லை. அந்த அடையாளத்தால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு உண்மையில் வாழ்க்கையின் பயன்சார்ந்த எந்த அர்த்தமும் இல்லை.

அதை அவரால் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை. “எங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுவோம். என் பாட்டி தமிழில் பேசும்படிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது பாட்டி இல்லை. என் அக்காவின் குழந்தைகளுக்கு பத்துவயதும் ஆறுவயதும்தான். அவர்களும் தமிழ்பேசுவார்கள். தமிழ் எழுதப்படிக்கக்கூடத் தெரியும். நான் பாட்டியிடமிருந்து தமிழ் படித்து என் தங்கைக்கும் அக்கா குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தேன்”

“ஏன் தமிழ் படிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டேன். “சந்தோஷமா இருக்கு சார். தமிழ் பேசுறப்ப ரொம்ப பழைய தாத்தா பாட்டியெல்லாம் கூடவே இருக்கிறதுபோல இருக்கு” என்றார் ராம்குமார். ”நான் தமிழ் ஸ்லோகமெல்லாம் கூடச் சொல்லுவேன். வைஷ்ணவர்களுக்கு நிறைய தமிழ் ஸ்லோகங்கள் இருக்கு”

மொழி என்பது வெறுமே ஒரு பண்பாட்டுச்சின்னம் மட்டும் அல்ல என்று எப்போதும் உணர்வதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். அது அறிவின் வடிவம் மட்டும் அல்ல. அது குறியீடுகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அதற்கு ஒருவரின் ஆன்மாவை தாங்கி நிற்கும் சக்தி இருக்கிறது. நம் மூதாதையர் அதைப்பேசினர் என்பதே நமக்கு அதை அணுக்கமாக ஆக்குகிறது.

மூதாதையர் தேவைதானா? விலங்குகளுக்கு மூதாதையர் நினைவுகளில்லை. அவற்றின் மரபணுவில் வாழும் மூதாதையர் மட்டுமே உள்ளனர். நாம் நினைவுகளில் சுமந்து கொண்டிருக்கிறோம். அழியாது தலைமுறைகள் தோறும் கொண்டு செல்கிறோம். அதுவே நமக்கும் விலங்குகளுக்கும் இடையேயான வேறுபாடு

தமிழ் ஃபால்குனா நதிபோல. எத்தனை தலைமுறைகள் அதில் மூச்சென எண்ணங்களெனக் கலந்திருப்பார்கள். அதன் கரையில் வாழும்போது நாம் அப்பெருக்கால்தான் அடையாளப்படுத்தப்படுகிறோம். ராம்குமார் பேணிக்கொண்டிருப்பது அந்த பல்லாயிரமாண்டுக்காலத் தொடர்ச்சியை. இறந்தகாலத்தை அழியவிடுவதே இல்லை மனிதன். ஏனென்றால் அவனுடைய இன்றுக்கு பொருள்தருவது அதுதான். கயாவிலிருந்து நாளந்தா சென்று நின்றபோது அதைத்தான் மீண்டும் எண்ணிக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைமௌனி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49