‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18

[ 3 ]

ஐதரேயப்பெருங்காட்டை வகுந்தோடிய பிரக்ஞாதாரா என்னும் நீர்நிறைந்த காட்டாற்றின் கரைக்கு காலையில் தருமனும் தம்பியரும் நீராடச் சென்றனர். கருக்கிருட்டு மறையத்தொடங்கியிருந்தது. இலைகளினூடாகத்தெரிந்த வானில் ஒளிநனைவு ஊறிக்கொண்டிருந்தது. அங்கு வந்தபோதிருந்த இறுக்கத்தை அங்கிருந்த பசுமையும், அக்குடில்களில் இருந்த அழகும் மெல்ல இல்லாமலாக்கிவிட்டிருந்தன.

ஐதரேயமரபு ஏழு அரசர்களால் புரக்கப்படுவது. எனவே அங்கே எதற்கும் குறையில்லாமலிருந்தது. நாளும் நெய்யுடனும் கனிகளுடனும் மாணவர்கள் ஊர்களிலிருந்து தேடிவந்துகொண்டிருந்தனர். மண்ணுக்கு அடியில் சுட்டசெங்கற்களை அடுக்கி காரை இடையிட்டுக் கட்டப்பட்டிருந்த கலவடிவமான களஞ்சியங்களில் ஒன்பதுவகை தானியங்களும் நிறைந்திருந்தன. மாணவர்கள் நயமான மரவுரியாடைகளை அணிந்திருந்தனர். மலைப்பாறை உடைத்து எடுத்த உப்புக்களை நீரில் கொதிக்கவைத்து மரவுரிகளை இளமஞ்சள், குருதிச்செம்மை நிறங்களில் ஆக்கிக்கொண்டிருந்தனர். இளமாணவர்கள் மஞ்சளும் மூத்தோர் செம்மையும் அணியவேண்டுமென நெறியிருந்தது.

அகன்ற குடில்களில் இழுத்துக்கட்டப்பட்ட தூளிப்படுக்கைகளில் மரவுரிமெத்தையும் இறகுத்தலையணைகளும் இருந்தன. வெளிக்காற்று அளவோடு உள்ளே வந்து சுழன்றுசெல்வதாக குடில்களின் சாளரங்கள் அமைந்திருந்தன. குடில்களுக்குப் பின்னால் அமைந்திருந்த அடுகுடில்களுக்கு நீரளிக்க சிறிய நீரோடை ஒன்று வெட்டிக்கொண்டுவரப்பட்டு நீர் நெளியச் சுழன்றுசென்றது. மாணவர்கள் மிகமெல்லிய குரலில் பேசியபடி நிழல்கள் போல ஓசையின்றி நடந்தனர். குடில்நடுவே இருந்த குழியிலிருந்து தேவதாருப்பிசின் எரிந்த புகை அப்பகுதியை இரவில் முழுமையாகச் சூழ்ந்தமையால் இரவில் கொசுக்களோ பூச்சிகளோ அண்டவில்லை.

நெடுநாட்களுக்குப்பின் தன்னை முற்றிலும் மறந்து துயின்ற தருமன் காலையில் எழுந்ததுமே தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை உணர்ந்தார். காற்று குளிராக தாழைமணத்துடன் இருந்தது. புலரிவேதமோதுதலுக்காக அவியும் விறகும் கொண்டுசென்ற மாணவர்களின் கைகளில் இருந்த நெய்விளக்குகள் மின்மினிகள் போல நடமாடின. அவர்களின் மென்குரல்கள் இறுகிநெகிழும் மூங்கில்கள் போல ஒலித்தன. அப்பால் தொழுவங்களில் பால்கறக்கும் ஓசையும் கன்றுகள் அன்னையை அழைக்கும் குரலும் கேட்டன. ஒவ்வொன்றும் இனிமை இனிமை என்று சொல்லிக்கொண்டிருந்தது.

அவர் தன் மாற்றாடைகளை எடுத்துக்கொண்டு வெளிவந்தபோது மாணவன் ஒருவன் தேய்த்துக்குளிக்க சதைத்த ஈஞ்சம்பட்டையையும் பல்துலக்க ஆலவிழுதுக்குச்சியையும் தலைக்குத்தேய்க்க வேம்புகலந்த நல்லெண்ணையையும் கொண்டுவந்து அளித்தான். அவற்றை கையில் வாங்கியபடி அவர் நடந்தபோது தங்கள் குடில்முற்றங்களில் அவருக்காகக் காத்திருந்த அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வந்து இணைந்துகொண்டனர். பீமன் எங்கே என அவர் கேட்கவில்லை என்றாலும் நகுலன் மெல்ல “மூத்தவர் நேற்றிரவே காட்டுக்குள் சென்றுவிட்டார். இன்னமும் மீண்டுவரவில்லை” என்றான். தருமன் தலையசைத்தார்.

“நேற்று அவர் வந்ததுமே அவரைத்தேடி ஒரு குரங்குக்கூட்டம் இங்கே வந்தது. அருகிருந்த மரக்கிளைகளில் அமர்ந்து அவரை அழைத்துக்கொண்டே இருந்தது. அவர் அவற்றுடன் கிளம்பிச்செல்வதை கண்டேன்” என்றான் நகுலன். “அவன் அங்கே மகிழ்ச்சியாக இருப்பான். அவனை அவை தங்கள்குலமாகவே எண்ணுகின்றன. இளமையில் அவனை முலைகொடுத்துப் பேணி வளர்த்தெடுத்தது ஒர் அன்னைக்குரங்கே” என்றார் தருமன்.

பிரக்ஞாதாராவின் கரையில் பாறைகளில் மோதி நீர் கொப்பளிக்கும் ஓசையும் திவலைப்புகையும் நிறைந்திருந்தன. ஒரு பாறையில் ஆடைகளை வைத்துவிட்டு தருமன் எண்ணையை தன் குழலிலும் தாடியிலும் பூசி கைவிரல்களால் நீவிக்கொண்டார். இளையோர் நீராடுவதற்கான சிற்றாடையை அணிந்தனர். நகுலன் சென்று காட்டிலிருந்து தாளியிலைகளைக் கொய்து வாழையிலை கோட்டி அதில் எடுத்துவந்தான். சிறியபாறைக்குழி ஒன்றில் வைத்து பிறிதொரு கல்குழவியால் அதை அரைத்தான்.

மரங்களுக்குமேல் எங்கோ குரங்கொன்றின் ஒலி கேட்டது. “முதற்கதிரை அது பார்த்துவிட்டது” என்றார் தருமன். தொடர்ந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் எக்களிப்பதுபோலவும் கூவியார்ப்பதுபோலவும் சங்கு போலவும் குறுமுழவுபோலவும் ஓசையிட்டன. “குரங்குவேதம்” என்றார் தருமன். “மூத்தவரும் அவர்களுக்குள் இருக்கலாம்” என்று நகுலன் பச்சிலை விழுதை வழித்தபடி சொன்னான். தருமன் புன்னகைத்தபடி நீரில் இறங்கினார். நீர் அவரை தள்ளாடச்செய்தது. குளிரில் தோள்கள் சிலிர்த்து குறுகிக்கொண்டன. மெல்லிய நடுக்கத்துடன் அரையிருளில் பற்கள் ஒளிவிட சிரித்துக்கொண்டு “இளமையான ஆறு” என்றார். அர்ஜுனனும் ஆற்றிலிறங்கினான். நீரின் ஒளி மாறுபடத்தொடங்கியதை நோக்கி “புலரியின் வெளிச்சம்… அதை நீர்தான் முதலில் அறிகிறது. நீராலானவை என்பதனால் விழிகளும்” என்றான்.

தருமன் நீரை அள்ளி இறைத்து துளிகளை சிதறடித்து சிறுவனைப்போல சிரித்தார். புலரிப்பறவைகளின் ஓசைகள் வலுக்கத்தொடங்கின. அர்ஜுனன் “ஐதரேய மரபின் முதன்மைத்தெய்வம் சூரியன் என்கிறார்கள்” என்றான். “ஆம் அப்கமுனிவரின் மெய்மரபு சூரியனையே அறியக்கூடிய பிரம்மம் என்றது. சூரியனைப்புகழ்ந்து அவியிடும் பன்னிரண்டாயிரம் வேதப்பாடல்கள் இம்மரபில் பாடப்பட்டன. அவற்றில் ஒருபகுதியே பின்னர் சம்ஹிதைவடிவ வேதங்களில் சேர்க்கப்பட்டது” என்றார் தருமன். “இவர்கள் முதல் அவியை சூரியனுக்கு இடுகிறார்கள். இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் சூரியனின் மாற்றுருக்களே என எண்ணி வழிபடுகிறார்கள்.”

“பருப்பொருட்களை வானிலிருந்து பிரித்துக்காட்டுபவை வடிவமும் வண்ணமும்தான். அவை இரண்டும் சூரியனால் உருவாக்கப்படுபவை என்கிறார்கள். எனவே விஸ்வசைத்ரிகன் என சூரியனை வணங்குகிறார்கள். ஒவ்வொருநாளும் இப்புடவிப்பெருக்கை ஏழு வண்ணம் தொட்டு வரைந்துவிட்டு மாலை அதை அழித்து உலகோவியன் மீள்கிறான். இரவில் நாம் காண்பவை கலைந்த கோலத்தின் எஞ்சிய வண்ணங்களே. சூரியன் ஒளிவிரிப்பவன் என்றே பிறமரபுகள் சொல்கின்றன. ஒளியையும் நிழலையும் ஆக்குபவன் என்கின்றது இம்மரபு.”

“ஐதரேயரால் அப்கரின் மரபு கைக்கொள்ளப்பட்டதும் சூரிய ஒளியை நுண்மையாக்கிக் கொண்டனர். பருவடிவம் கொண்ட பிரக்ஞை என அதை மகிதாசர் சொன்னார். கண்களால் காணத்தக்கதும் ஆடிகளால் அளையப்படுவதும் நீர்நிலைகளில் தேக்கப்படுவதுமான பிரக்ஞை என ஐதரேய ஆரண்யகங்களில் ஒன்றில் மகிதாசன் சொல்கிறார். சூரிய ஒளி பிரக்ஞைக்கான முழுமுதல் ஒப்புமையென ஆகியது. அதுவே அனைத்தையும் அவை அமைந்துள்ள முடிவிலிப்பெருக்கில் இருந்து விளிம்புகட்டி பிரித்து இருப்பை உருவாக்கி அளிக்கிறது. அவை ஒளியை எதிரொளிப்பதனூடாகவே தங்கள் அனைத்து இயல்புகளையும் அடைகின்றன.”

“ஒளியுமிழ்பவை ஒளியுண்பவையே. ஒளியை முற்றிலும் கடத்துபவை ஒளியில் மறைகின்றன. ஒளியை முற்றிலும் கடத்தாதவை நிழலில் புதைகின்றன. ஆகவே இப்புவிக்காட்சி என்பது குறையொளி திகழ்பவற்றின் வலைப்பின்னலே. நிறைநிலைகொண்டவை பிரக்ஞைக்கு கீழோ மேலோ சென்று மறைந்துவிடுகின்றன. இரு முடிவிலிகளுக்கு நடுவே நம் பிரக்ஞையால் அள்ளி எடுத்து எல்லைவகுக்கப்பட்ட சிறு துண்டுதான் இப்புடவி” தருமன் சொன்னார். “நேற்றிரவு அவர்களின் முதலாம் கானூலை வாசித்துக்கொண்டிருந்தேன். ஐதரேயமரபு ரிக்வேதத்தை சடங்கெனவும் மெய்யெனவும் இரு கோணங்களில் விளக்கிச்செல்லும்போது விழி தெளியும்தோறும் விண்மீன்கள் பெருகுவதுபோல வேதம் விரிந்துகொண்டே செல்கிறது.”

காடே சூரியனை எதிர்கொண்டு கொந்தளிக்கத் தொடங்கியது. பறவைகள் எறியப்பட்டவைபோல செங்குத்தாக மேலெழுந்து சிறகடித்துச் சுழன்றன. பல்வேறு விலங்குகள் மரச்செறிவுக்குள் ஓசையிட்டன. தொலைவில் ஐதரேயக் கல்விநிலைகளில் இருந்து வேதச்சொல் பெருகியெழுந்தது. தருமன் ஈரம் சொட்டும் உடலுடன் எழுந்து நின்று கிழக்கு நோக்கி திரும்பி நீர்வணக்கம் செய்யத்தொடங்கினார். இளையோரும் அவருக்குப்பின்னால் நின்று நீர் இறைத்து ஒளியை வணங்கினர்.

முதல்கதிர் கூரிய அம்புபோல இலைகளுக்குள் இருந்து வந்து நீர்ப்பரப்பில் விழுந்தது. புன்னகைப்பதுபோல நதியின் நீர் நிறம்மாறியபடியே வந்தது. அலைவளைவுகள் அனைத்தும் ஒளிகொள்ளத் தொடங்கின. தருமன் முந்தையநாள் ஐதரேயக் கல்விநிலையில் ஓதப்பட்ட சாந்திமந்திரத்துடன் தன் வணக்கத்தை முடித்தார்.

“எனது சொல் உள்ளத்தில் நிலைபெறுக
உள்ளம் சொல்லில் நிலைபெறுக
சுடரொளியே நான் என ஒளிர்க
உள்ளமும் சொல்லும் என்றானவை
வேதமெய்மையை எனக்கு அளிக்கட்டும்
நான் அறிந்தவை என்னைவிட்டு விலகாதிருக்கட்டும்
கற்றவற்றை பகலும் இரவும் நான் சிந்திப்பேனாக.
நான் நடைமுறை உண்மையில் தெளிவுள்ளவனாகுக
பிரம்மம் என்னை காக்கவேண்டும்
என் நல்லாசிரியர்களை காக்கவேண்டும்
ஆம், அவ்வாறே ஆகுக!”

அதன்பின் அவர் ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிட்டார். அதை உணர்ந்தவர்கள் போல அவர்களும் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. நீரளையும் ஒலி மட்டும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. தருமன் நகுலன் அளித்த தாளியிலைப் பசையை அள்ளி தன் குழலிலும் தாடியிலும் பூசி நீவியபின் நீரிலிறங்கி அலசி நீராடி எழுந்தார். மெல்லிய மரவுரியால் தலையையும் உடலையும் துடைத்தபின்னர் “தந்தையே” என்னும் பெருமூச்சுடன் எழுந்து கரைநோக்கி சென்றார்.

அவரைத் தொடர்கையிலேயே நகுலன் ஒரு மெல்லிய பதற்றத்தை உணரத்தொடங்கினான். அதை பிறர் உணர்கிறார்களா என அவன் திரும்பிநோக்கியபோது அவர்களின் முகங்களும் அவ்வாறே இருந்தன. அந்தக் காலையின் நெகிழ்வும் இனிமையும் உள்ளம் எதையோ எதிர்நோக்கியமையால் போட்டுக்கொண்ட மாற்றுரு நடிப்புகளே என அப்போது தோன்றியது. கனவில், அல்லது அதற்கும் அப்பால், உள்ளத்தால் எதிர்காலத்தை நோக்கமுடிகிறது. இல்லை, இன்புற்றிருப்பது அளிக்கும் குற்றவுணர்வா? நிலையின்மையின்மேல் அமர்ந்திருப்பதன் அச்சத்தால் உள்ளம் எப்போதும் தீயது எதையோ எதிர்பார்க்கிறதா? நன்று நிகழ்கையில் தீதை எண்ணி கலங்குகிறதா? இல்லை, இது உண்மை. உள்ளத்தின் உள்ளே அத்தனை தெளிவாகத் தெரிகிறது.

எதிரே அஸ்தினபுரியில் இருந்து வந்த ஒற்றனாகிய காலன் நிற்பதைக்கண்டதும் ஒருவகையான நிறைவுணர்வே ஏற்பட்டது. அந்த அறியமுடியாத தவிப்பு மெல்லியதென்றாலும் அதை தாளமுடியவில்லை. இப்போது அது விலகிவிட்டது. எதிர்பார்த்தது மறைந்திருக்கவில்லை, எதிர்நிற்கிறது. தருமன் அவனை நோக்கி செல்ல அவன் தலைவணங்கி மெல்லியகுரலில் முகமன் உரைத்தான். அவனைக்கண்டதுமே தருமனின் முகம் மாறுவதை நகுலன் கண்டான். அதில் தீயதை எதிர்நோக்கும் பதற்றம் இல்லை, மாறாக நாற்களப்பலகையை விரிக்கும் சூதாடியின் பரபரப்பே இருந்தது. நீரையும் வானையும் ஒளியையும் கண்டு நெகிழ்ந்த முனிவனை அரசு சூழ்தலில் ஆடும் அரசன் வென்று மேலெழுந்தான் என நகுலன் எண்ணிக்கொண்டான்.

“அரசே, பேரரசி குந்தியால் இங்கு அனுப்பப்பட்டேன்” என காலன் நேரடியாகவே தொடங்கினான். “அமைச்சர் விதுரர் ஒருமாதம் முன்பு அஸ்தினபுரியிலிருந்து வெளியேறிவிட்டார்.” அதை தருமன் எந்த உணர்ச்சியுமில்லாமல் கேட்டுக்கொண்டார். “அவரைத் தேடி எங்கும் ஒற்றர்களும் தூதர்களும் சென்றிருக்கிறார்கள். அவர் உங்களைத்தேடி வந்திருக்கக்கூடுமென அங்கே பேசப்பட்டது. நம் ஒற்றர்கள் உங்களை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர் உங்களிடமும் வரவில்லை என அரசி அறிந்துகொண்டார். நாமும் அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.”

“ம்…” என தருமன் தலையசைத்தார். “அவர் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டிருக்க முடிவுசெய்திருக்கக் கூடும் என பேரரசி எண்ணுகிறார்” என்றான் காலன். தருமன் திகைப்படைவதை அவர் முகம் காட்டியது. அறியாமல் மேலாடைமுனையை விரல்கள் பற்றிக்கொண்டன. சிலகணங்களுக்குள் அவர் மீண்டார். “அவர் உயிர்துறக்கலாகாது என பேரரசி விரும்புகிறார். இங்கு நிகழவிருக்கும் சமரில் நம் தரப்பின் முதன்மையான வல்லமைகளில் அவரும் ஒருவர். அவரை எப்படியேனும் கண்டுபிடித்து அந்நோன்பை விட்டுவிடச்செய்யவேண்டும்… அவரைத்தேடி நீங்கள் சென்று மன்றாடவேண்டும் என பேரரசி ஆணையிடுகிறார்.”

“அவர் எங்கே என்று எப்படி அறிவது?” என்றான் நகுலன். “இன்னும் சிலநாட்களில் அதை நம் ஒற்றர்கள் கண்டறிந்துவிடுவார்கள். அச்செய்தியை தங்களிடம் பறவை வழியாக தெரிவிப்பார்கள். நீங்கள் அக்கணமே கிளம்பியாகவேண்டும்.” தருமன் “ஆம், அன்னையின் ஆணை எங்களுக்கு கடமை” என்றார். அர்ஜுனன் “அவர் உண்ணாநோன்பிருக்கக் கூடும் என எப்படி உய்த்தறிந்தார் அன்னை?” என்றான். “இளவரசே, முதலில் அவர் சினம்கொண்டு கிளம்பிச்சென்றதை மட்டுமே பேரரசி அறிந்திருந்தார். பின்னர் காந்தார மாளிகையிலிருந்து நம் உளவுச்சேடி அங்கே பேரரசரும் காந்தாரப்பேரரசியும் மந்தணமாகப் பேசியவை அனைத்தையும் செவிகூர்ந்து நமக்கு சொன்னாள். அதன்பின்னரே நிகழ்ந்தவற்றின் முற்றுருவும் நம்மை வந்தடைந்தது. அதைக்கொண்டுதான் பேரரசி அவ்வாறு எண்ணத்தலைப்பட்டார்” என்றான் காலன்.

“வருக!” என்றபின் தருமன் முன்னால் நடக்க காலன் தலைவணங்கி உடன் நடந்தான். அவர்கள் தருமனின் குடிலை அடைந்ததும் தருமன் திரும்பி தம்பியரிடம் “நாம் இங்கு மந்தணச்சொல் சூழ்வது முறையல்ல. இது வேதநிலை. இங்கு எந்த அரசுக்கும் எதிராக எதுவும் பேசப்படலாகாது. எனவே அந்த மரத்தின் அடியில் அமர்ந்து சொல்லாடுவோம். எவ்வகையிலும் எவருக்கும் எதிராக ஒருசொல்லும் எழாதபடி அறுவரும் நாகாப்போம்” என்றார்.

 

[ 4 ]

“அரசே, நீங்கள் அஸ்தினபுரியிலிருந்து காடேகியநாள் முதலே விதுரர் விழிதெரியாமல் மறைந்துவிட்டார். அவர் தெற்கே இடுகாடுகளுக்குள் எங்கோ சென்றுவிட்டதாகவும், மேற்குக்காட்டில் கலியின் ஆலயத்தருகே பார்த்ததாகவும் சொன்னார்கள். அவர் நகர்நீங்கியிருக்கலாமென்றும் பேசிக்கொண்டார்கள். பேரரசர் விதுரர் எங்கே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் அன்றைய உணர்வுக்கொந்தளிப்புகளில் அவரை முழுமையாக எவரும் தேடவில்லை என்பதே உண்மை” என்றான் காலன்.

அவன் முன் தரையில் விலகி அமர்ந்து பாண்டவர்கள் அவன் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அமர்ந்திருந்த தோற்றமே அவர்களின் உள்ளங்களைக் காட்டுவதாக இருந்தது. இருகால்களையும் மலரமர்வில் மடித்து கைகளை மடிமேல் விடுதலென மலரவைத்து தருமன் அமர்ந்திருந்தார். அந்தக் கூடுகையில் பேசப்படுவதை கேட்காமல் காட்டை நோக்கி அமர்ந்திருப்பவன் போல சற்றே உடல் திரும்ப அர்ஜுனன் இருந்தான். அவன் இடச்செவி மட்டுமே காலனை எதிர்கொண்டிருந்தது. சற்றே தளர்வான உடலுடன் இயல்பாக அமர்ந்திருந்தான் சகதேவன். நகுலன் இறுகிய தோள்களும் கூர்ந்த விழிகளும் கோத்த விரல்களுமாக காலனின் சொற்களை நோக்காலேயே கேட்பவன் போலிருந்தான்.

“உண்மையில் விதுரர் தன் இல்லத்தில்தான் இருந்தார் என்பதை பின்னர்தான் அறிந்தனர். அவர் அங்குள்ள மந்தணவைப்பறைக்குள் புகுந்து கதவை தாழிட்டுக்கொண்டிருந்தார். அங்கே அவர் துணைவி மறைந்தபின் அவருக்கு அணுக்கமான எவருமில்லை. அவரது மைந்தர்கள் நாற்பத்தொன்றாம்நாள் நீர்க்கடன் முடிந்ததுமே துவாரகைக்கு சென்றுவிட்டனர். அவர் உள்ளே வந்ததையும் கரவறைக்குள் சென்றதையும் எவருமே நோக்கவில்லை. நீங்கள் நகர் நீங்கியபின் பேரரசர் அவரை தேடிக்கொண்டு வந்தாகவேண்டும் என ஆணையிட்டார். ஒற்றர்கள் தேடத்தொடங்கினர். அவர் நகர்நீங்கவில்லை என்பதை உறுதிசெய்தனர்” காலன் சொன்னான்.

நான்காம்நாள் விதுரரை அவரது அணுக்கனாகிய கனகர்தான் கண்டடைந்தார். அவர் தன்அரண்மனைக்குள்தான் இருக்கிறார் என்பதை கனகர் முன்னரே அறிந்திருக்கக்கூடும். அரண்மனைவிட்டு அவர் வெளியேறவில்லை என உறுதிசெய்துகொண்டபின் பிறிதொருமுறை விதுரரின் அறையை நோக்கலாமெனச் சென்ற அவர் கரவறையின் வாயிலருகே அவரது மேலாடை நழுவிய நிலையில் கிடப்பதை கண்டார். கரவறை உள்ளிருந்து மூடப்பட்டிருக்கலாம் என எண்ணி அதை தள்ளியபோது அது ஓசையின்றி திறந்துகொண்டது. உள்ளே இருளுக்குள் முதலில் எதுவும் தெரியவில்லை. வெளியொளி உள்ளே சென்றதும் சற்றுநேரத்தில் சிறிய சுடர் ஒன்று உள்ளே விழிதிறந்தது. வியப்புடன் அவர் விழிகூர்ந்து நோக்கினார். கீழே விதுரர் தரையில் விழுந்தவர் போல படுத்திருந்தார். அவர் இடக்கையில் ஒரு அருமணி இருந்தது.

அரசே, அது அஸ்வதந்தம் என்னும் பெயருடைய அருமணி. முன்பு மாமன்னர் பாண்டுவால் விதுரருக்கு அளிக்கப்பட்டது. அப்படி ஒரு மணி இருந்ததையே அனைவரும் மறந்துவிட்டிருந்தனர். விதுரர் நினைவழிந்திருந்தார். பலநாள் துயில்நீப்பும் உணவின்மையும் அவர் உடலை வீழ்த்திவிட்டன. மருத்துவசாலைக்கு கொண்டுசென்றனர். அவர் உணவுண்ணும் நிலையில் இருக்கவில்லை என்பதனால் மெல்லிய ஆம்பல்தண்டுக் குழாயை அவர் வாய்க்குள் செலுத்தி அதனூடாக தேனையும் நீரையும் கலந்து புகட்டினர். இரண்டாம்நாள்தான் அவர் விழித்தெழுந்தார். அப்போது அவர் அருகே பேரரசர் இருந்தார். விழித்தெழுந்த விதுரர் உரத்தகுரலில் பேரரசரை நோக்கி “பழிகொண்டவரே, வெளியே செல்லுங்கள்! உங்கள் பழி என் மேல்படியலாகாது. வெளியே செல்லுங்கள்” என்று கூவி மீண்டும் மயக்கமானார்.

துயரத்துடன் பேரரசர் திரும்பிச்சென்றார். நிலைகொள்ளாமல் தனக்குத்தானே புலம்பியபடி, எவரையும் சந்திக்க மறுத்து தன் அறைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தார். இசைகேட்பதும் நின்றுவிட்டிருந்தது. மூன்றாம்நாள் விதுரர் எழுந்ததும் அவரைப் பார்க்கவேண்டுமென அவர் சொல்லியனுப்பினார். மருத்துவநிலை விட்டு மீண்ட விதுரரைக் கண்டு நானும் அஞ்சிவிட்டேன். அரசே, அவர் காந்தார இளவரசர் சகுனியைப்போன்ற விழிகள் கொண்டிருந்தார். அவரை நான்தான் பேரரசரிடம் அழைத்துச்சென்றேன். அடைப்பக்காரனாக உள்ளே நானும் இருந்தேன்.

அரசர் அப்போது தன் படுக்கையறைக்குள் இருந்தார். அந்நாட்களுக்குள் அவரும் மெலிந்து வெளிறிவிட்டிருந்தார். கழுத்தெலும்புகள் புடைத்திருந்தன. கண்கள் பழுத்திலைகள் போல மஞ்சளோடி உதடுகள் உலர்ந்து மெல்லிய நடுக்குடன் காய்ச்சல் கண்டவர் போலிருந்தார். விதுரர் உள்ளே நுழைந்ததும் அவ்வொலி கேட்டு அவர் கைகளை விரித்தபடி அறியாமல் எழுந்தார். பின்னர் தானே தயங்கி திரும்ப அமர்ந்துகொண்டார். விதுரர் வாழ்த்தோ முகமனோ சொல்லவில்லை. சிலகணங்கள் பேரரசரின் மூச்சு மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.

பின்னர் தொண்டையை கமறியபடி “இளையோனே, ஒரு முகமனுக்குக்கூட தகுதியற்றவன் ஆகிவிட்டேனா நான்?” என்றார். விதுரர் அவரை சுருங்கிய விழிகளுடன் கூர்ந்து நோக்கி “ஆம்” என்றார். அச்சொல் பேரரசர் உடலில் சென்று தைப்பதையே காணமுடிந்தது. அவர் ஏதோ சொல்ல விழைபவர் போல உதடுகளை மென்றார். பின்னர் பெருமூச்சுடன் தலைகுனிந்தார். விதுரர் “நீங்கள் செய்த இச்செயலின்பொருட்டு நம் கொடிவழியினரால் பழிக்கப்படுவீர்கள். ஆயிரம் தலைமுறைகள் உங்களை கீழியலார் என்றே நினைவில்கொண்டிருக்கும். இதுவரை அமர்ந்திருந்த அறத்தின் பீடத்திலிருந்து சேற்றில் விழுந்துவிட்டீர்கள்” என்றார்.

“நான் என்ன செய்வது? என்னால் முடிந்தவரை இங்கே ஒரு குருதிப்பெருக்கு நிகழலாகாதென்றே முயன்றேன். வேறுவழி தெரியவில்லை இளையோனே, நீயாவது இதை புரிந்துகொள்” என்றார் பேரரசர். “வீண்சொல் வேண்டியதில்லை. உங்கள் முடிவுக்குப்பின் இருந்தது எந்த அரசுசூழ்தலும் அல்ல. உங்கள் மைந்தர்பற்று மட்டுமே…” என்றார் விதுரர். “இல்லை, உண்மையிலேயே எனக்கு மாற்று தெரியவில்லை. பிறிதொன்றும் ஆகக்கூடுவதாக இல்லை. எவரும் எனக்கு வெளியேற வழிகாட்டவில்லை” என்றார் பேரரசர். “மூத்தவரே, அகச்சான்று அருகே நின்றிருக்க சொல்லுங்கள். உங்களை அம்முடிவை எடுக்கவைத்தது பீமனின் சொற்கள் அல்லவா?”

பேரரசர் நடுங்கத்தொடங்கினார். “சொல்லுங்கள்! நீங்கள் அஞ்சிவிட்டீர்கள் அல்லவா? உங்கள் மைந்தரைக் காப்பதற்காகத்தானே அவர்களை காடேகச்செய்தீர்கள்?” பேரரசர் நடுங்கிக்கொண்டே இருந்தார். தன் பெரிய கைகளைக் கோத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். எழுபவர் போல ஓர் அசைவு அவரில் உருவாகியது. தன் உடலுக்குள்ளேயே அவர் திமிறிக்கொண்டிருப்பதுபோல. பின்பு யானைமூச்சென உயிர்த்து அவர் “ஆம்…” என்றார். கனைத்துக்கொண்டு “உண்மை… அவன் என் மைந்தர்களை கொல்வதாக சொன்னான். மூத்தவனின் தொடை பிளந்து… இளையவனின் நெஞ்சுபிளந்து…”

பேருருவம்கூட நடுங்கும்போது சிறுத்துக்குறுகிவிடுவதன் விந்தையை நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் கண்களிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. உதடுகளை அழுத்தி விம்மல்களை தடுக்கமுயன்றார். அவை பீரிட்டு வெளிவந்து திடுக்கிடச்செய்யும்படி அறைக்குள் இருந்த அமைதிக்குள் ஒலித்தன. “அவன் ஊழின்மைந்தன். அவன் பிறக்கையிலேயே அதை நிமித்திகர் சொன்னார்கள். இளையோனே, அவன் பிறந்த நாள்முதல் நான் அஞ்சிக்கொண்டிருப்பது அதைத்தான். நான் ஆற்றிய அனைத்தும் அவ்வச்சத்தை வெல்வதற்காகத்தான்… நீ உணரமாட்டாய், தன் மைந்தரின் இறப்பை அவர்கள் பிறந்த கணம் முதல் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தந்தையின் துயரை.”

விதுரர் நெகிழ்ந்ததுபோல முகம் தூக்கி பார்த்தார். “இளையோனே, நான் அவன் தொடைபிளந்து ஒரு சிறுசுனையருகே கிடப்பதை கண்டுவிட்டேன். இளையோன் நெஞ்சுபிளந்து குருதிபெருக்கி களம்பட்டுக் கிடப்பதை என் கனவில் பலமுறை கண்டுவிட்டேன்… அது நிகழும். அதைநோக்கியே அனைத்தையும் கொண்டுசெல்கின்றன தெய்வங்கள். பழிகொண்ட தெய்வங்கள். அளியறியா தெய்வங்கள். அழிவில் களியாட்டமிடும் கொடுந்தெய்வங்கள். இளையோனே, என்னை பெருந்தந்தை என்கின்றனர். தந்தையென்றிருப்பதே ஒரு பெரும் வதை. பெருந்தந்தை தீராப்பெருந்துயரில் ஆடுபவன் மட்டுமே.”

“இதோ என்னைச்சூழ்ந்திருக்கிறார்கள் என் மைந்தரும் பேர்மைந்தரும். அள்ளி அள்ளி அணைத்து என் தோள்சலிக்கவில்லை. எண்ணிப்பார், இவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள் என்றறிந்ததுமே அப்பேரின்பமே மேலும் பலமடங்கு துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது எனக்கு. ஒவ்வொரு சடலமாக பார்த்துப்பார்த்து உடல்நடுங்கி விழித்துக்கொள்வதே என் இரவுகள். ஒவ்வொரு முகத்தைப் பார்க்கையிலும் துணுக்குற்று உடல்நடுங்குபவை என் பகல்கள். இப்புவியில் நீயும் என் துயரை அறியாவிட்டால் நான் எங்கு சென்று அதை உரைப்பேன்?”

அவர் தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார். விதுரர் திரும்பி என்னை நோக்கினார், ஆனால் நான் நின்றிருப்பதை அவரது அகம் அறியவில்லை. தத்தளிக்கும் உடலுடன் மூத்தவரை நோக்கினார். பின்னர் எழுந்து சென்று அவர் தோளை தொட்டார். “மூத்தவரே, இப்போதும் ஒன்றும் பிழைபட்டுப்போகவில்லை. நாம் மீண்டுவர இன்னும் வழியுள்ளது. இத்தனைக்கு அப்பாலும் அனைத்தையும் பொறுத்தருளக்கூடியவனே உங்கள் முதல்மைந்தன் என்பது நமக்கு இருக்கும் நல்லூழ். இப்போது நாம் செய்யக்கூடியது ஒன்றே, அவர்களை திரும்ப அழைப்போம். அவர்களின் மண்ணை அவர்களுக்கே அளிப்போம். இருசாராரும் பன்னிரண்டு ஆண்டுகாலம் ஒருவரை ஒருவர் சந்திக்கலாகாதென்றும் எவ்வுறவும் கொள்ளலாகாதென்றும் ஆணையிடுவோம்.”

“அது நிகழக்கூடியதல்ல, இளையோனே” என்றார் பேரரசர். “எத்தனை முறை அவர்களிடம் நான் கேட்டிருப்பேன். தந்தையென்ற இடத்தில் இருந்து இறங்கி மன்றாடியுமிருப்பேன்…”. விதுரர் “அவர்கள் சற்றேனும் அறிவிருந்தால் உணர்வார்கள். நாம் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்குகிறது. நெறிமீறி காட்டுக்குள் அனுப்பப்பட்டவர்கள் என்னும் சொல்லே அவர்களுக்கு மக்களின் ஆதரவை பெற்றுத்தருகிறது. கானேகி மீண்ட தசரத ராமனுடன் தருமனின் பெயரும் இணைந்துவிட்டது இன்று.”

“பாரதவர்ஷத்தின் அரசர்களும் அவ்வண்ணமே எண்ணுவார்கள். ஓர் அரசன் எதன்பொருட்டேனும் காட்டுக்குள் அனுப்பப்பட்டான் என்றால் அது தவறான முன்நெறியாகிவிடும். அது என்றேனும் தங்களுக்கும் பொருந்தும் என அரசகுடியினர் அஞ்சுவார்கள். மூத்தவரே, இங்குள்ள அரசகுடியினரில் அரியணைக்கு உரிமைகொண்ட இளையோர் பலர் உள்ளனர். மாற்றன்னையருக்குப் பிறந்தவர்கள். முறைக்குருதி அற்றவர்கள். இரண்டாம் தலைநகராள்பவர்கள். அவர்களில் வென்று கோலேந்தியவர்களும் பலர் உண்டு. அவர்கள் இத்தருணத்தில் தருமனுடன் நிற்பார்கள். காடேகலை ஏற்கமறுப்பார்கள்” என்றார் விதுரர்.

“அதைவிட இன்று துவாரகையில் நிகழ்வது என்ன? அங்கே விருஷ்ணிகளும் அந்தகர்களில் ஒருசாராரும் அன்றி பிறர் இளைய யாதவர் இந்திரப்பிரஸ்தத்திற்கு உதவிசெய்வதை ஏற்கவில்லை. மூத்த யாதவர் துரியோதனனையே ஆதரிக்கிறார். மதுராவின் வசுதேவருக்கும் அவ்வெண்ணமே உள்ளது. இவர்கள் காடேகிய செய்தி அங்கே பரவி யாதவர்கள் ஒருமித்து இளைய யாதவருக்கு ஆதரவுசெலுத்துவார்கள் என்றால் போர் முடிந்துவிட்டதென்றே பொருள். இன்று, அரசு சூழ்தலின் நோக்கில்கூட அவர்களை திரும்ப அழைப்பதே நன்று.”

“ஆம், எனக்குப் புரிகிறது. ஆனால் அந்த மூடனுக்கு அது புரியவேண்டுமே” என்றார் பேரரசர். “அவருக்குப் புரியாது. ஆனால் அங்கனுக்குப் புரியும். அவனுடன் அவர் இருக்கையில் இதை அவர்களின் செவிசெலுத்துவோம்.” பேரரசர் “நானா? நான் அவர்களுடனிருக்கையில் முன்னரே மறைந்து மண்நுழைந்தவனாக அல்லவா உணர்கிறேன்?” என்றார். “நானும் சொல்லுமிடத்தில் இல்லை. ஆனால் ஒருவர் சொல்லக்கூடும். நம் நல்லூழாக மைத்ரேய முனிவர் நாளை இங்கு வருகிறார். அவர் சொல்லட்டும்” என்றார்.

“முனிவர்சொல் கேட்குமிடத்திலா அவர்கள் இருக்கிறார்கள்?” என்றார் பேரரசர். “இல்லை, ஆனால் அவர் ஒருமையை உருவாக்குபவர். அதனாலேயே அவ்வாறு அழைக்கப்படுபவர் அவரது சொல்லும் சொல்கடந்த வல்லமைகளும் அதற்கு உதவக்கூடும். நாம் ஏன் நம்பிக்கை இழக்கவேண்டும்? இது நம் இறுதிமுயற்சியாகவே இருக்கட்டும்…” என்றார் விதுரர். “ஆம், அவ்வாறே ஆகுக!” என பேரரசர் பெருமூச்சுடன் ஒப்புக்கொண்டார்.

SOLVALAR_KAADU_EPI_18_A

காலன் சொன்னான் “அன்று விதுரருடன் நானும் அவர் அலுவல்கூடம்வரை சென்றேன். அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறாரா என எனக்கு ஐயமாகவே இருந்தது. அவரது நடையிலும் அசைவுகளிலும் நிறைவோ மகிழ்வோ தென்படவில்லை. அமைச்சுநிலைக்குச் சென்று தன்பீடத்தில் அமர்ந்ததும் அவர் சற்று விடுதலை கொண்டவர்போல் தோன்றினார். தன் கச்சையிலிருந்து அந்த வைரத்தை எடுத்து சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். வைரங்கள் நம் விழிகளை சந்தித்ததுமே ஒளிகொள்பவை. நாகவிழி போல மயக்கி வயப்படுத்துவை. அவர் விழிகளுக்குள் அந்த அருமணியின் ஒளி இரு புள்ளிகளாக தெரிந்தது. அறிதுயிலில் ஆழ்ந்தவர்போல அவர் முகம் அமைதிகொண்டிருந்தது.”

முந்தைய கட்டுரைகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
அடுத்த கட்டுரைபயணம் – கடிதங்கள்