தலைமையாசிரியரின் காதல்கள்

1

 

தலைமையாசிரியரின் காதல்கள்

சர்வோத்தமன் சடகோபன்

 

தலைமையாசிரியர் சுப்பையா பிள்ளை
கல்லூரிப்பருவத்தில்
நூறு ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும்
வீட்டின் ஒரே பெண்ணுமான
சுதந்திராவை தீவிரமாக காதலித்தார்.

ஒரு டஜன் வாழைப்பழங்களை ஒரே மூச்சில் விழுங்கும்
சுப்பையா பிள்ளையை
சுதந்திராவும் தீவிரமாக நேசித்தார்.

ஒரு நாள் நள்ளரிவில் தன் கனவில்
சுப்பையா பிள்ளை வந்ததை
தன் தோழிகளிடம் சொல்லி உடல் சிலிர்த்தார் சுதந்திரா.
ஆனால் அந்தப் பெண் ஒரு காலைப் பொழுதில்
தலைமையாசிரியரை சந்திக்க விரைந்தோடி வந்த போது
சுப்பையா பிள்ளை சாப்பிட்டு வீசிய
வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்து
சுப்பையா பிள்ளையின் மடியில் அகால மரணமடைந்தார்.
தாடி வளர்த்த தலைமையாசிரியர்
வாழ்க்கை என்பது சூன்யம்
என்று அறிவித்தார்.

இலக்கிய புத்தகங்கள் வாசித்தார்.
சுப்பையா பிள்ளையின் தந்தை சிவிலிங்க பிள்ளைக்கு
செலவு கூடாது என்பதற்காக இலக்கிய புத்தகங்களை
இரவல் வாங்கி வாசித்தார்.
வாசித்த புத்தகங்களை திரும்ப கொடுக்காமல் பாதுகாத்தார்.
சிறந்த வாசகரான தலைமையாசிரியர்
கவிதைகள் எழுத துவங்கினார்.
அவை பிரசுரமாயின.
இருத்தலிய அவதியை கவிதையில் சிறப்பாக
கொண்டுவந்துவிட்டதாக
பெண் விமர்சகர் பூக்குட்டி அவரை பாராட்டினார்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில்
மறுபடியும் ஒரு பெண்னைப் பார்த்தார்
சுப்பையா பிள்ளை.
தாடியை மழித்த சுப்பையா அந்தப் பெண்ணும்
எழுத்தாளர் என்பதை புரிந்துகொண்டார்.
பெண்ணின் உண்மையான பெயர் அமலா என்பதும்
அவளிடம் இரண்டு மாற்றுத் துணிகள்தான் உள்ளது என்பதையும்
அறிந்த சுப்பையா பிள்ளை
மறுபடியும் தாடி வளர்த்தார்.

சிவிலிங்க பிள்ளை
இருநூறு ஏக்கர் நிலமும் மூன்று வீடுகளும் உள்ள
முத்துலிங்க பிள்ளையின் ஒரே பெண்னை
தலைமையாசிரியருக்கு பேசி முடித்தார்.
பெண் பார்க்கும் படலத்தில்
தன்னை கவிஞர் என்று சொல்லிய
தலைமையாசிரியர் தாடியை மழித்திருந்தார்.

வாழைப்பழ வீரன் சுப்பையா பிள்ளை
கிடைக்காததால்
அமலா தற்கொலை செய்துக்கொண்டார்.

அதுவரை
கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த
தலைமையாசிரியர் அன்று
இரண்டு டஜன் வாழைப்பழங்களை முழுங்கி
பெரும் சங்கல்பத்துடன்
தன் முதல் நாவல் தலைமையாசிரியரின் காதல்களை
எழுதத் தொடங்கினார்.ஓரிரவில் நாவலை முடித்தவர் அதை
அமலாவுக்கு சமர்பித்தார்.

தமிழ் கூறும் நல்லுலகு
இருத்தலிய அவதியின் கோட்பாட்டை
சிறப்பாக முன்வைக்கும் நாவலை பெற்றது அதன் நல்லூழ்
என்று
நவீன பெண் விமர்சகர் பூக்குட்டி
புத்தக வெளீயிட்டு விழாவில்
சிறப்பாக பேசினார்.

தலைமையாசிரியர் தன் மனைவியுடன்
வந்து விழாவை சிறப்பித்து
நன்றாக பேசிய பூக்குட்டிக்கு
இரண்டு டஜன் வாழைப்பழங்களை வழங்கினார்.
பின்னர் தன் “தலைமையாசிரியரின் காதல்கள்” நாவல்கள்
ஏன் ஒருமுன்னோடி நாவல்
என்று பேச துவங்கினார்
சுப்பையா பிள்ளை.
கூட்டம் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தது.

கவிதை என்பது எப்போதுமே ஒருவகை குழூக்குறிதான். ஒரு தொழிற்சாலைக்குள் புழங்கும் குறியீடுகளும் பகடிகளும் இன்னொரு தொழிற்சாலையின் தொழிலாளிக்குப்புரிவதில்லை என்பதுபோலத்தான் கவிதையும். சங்ககாலக் கவிதை அவ்வளவு செறிவான நுண்மையுடன் இருக்கக் காரணம் அதன் வட்டம் மிகச்சிறிது என்பதுதான்.

ஆகவே ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள முதல்தேவை என்பது அதன் வட்டத்திற்குள் நுழைவதே. அது ஒன்றும் பெரிய சவாலும் அல்ல. தொடர்ச்சியாக ஒருவருடம் வாசித்தால் அந்த சொற்சூழலுக்குள் சென்றுவிட முடியும்.

சர்வோத்தமன் சடகோபன் எழுதிய இந்தக்கவிதை பொதுவாசகர்களுக்கு ஒரு பகடி என புரியும் என்றாலும் முழுமையாக ரசிக்கமுடியாது. ஆனால் சிற்றிதழ் வாசகர்களுக்கு பல உள்சரடுகள் பிடிகிடைக்கும். நம் எழுத்தாளர்களின் [புதுமைப்பித்தன் சொன்னதுபோல] சீலைப்பேன் வாழ்க்கையும் கூடவே அவர்கள் கொள்ளும் இலக்கிய, தத்துவ பாவனைகளும்தான் சீண்டப்பட்டுள்ளன இதில்.

அத்துடன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின் காதல்கள்’ என்னும் கதையும் நினைவில் எழுந்தால் கவிதையனுபவம் முழுமையடைகிறது

இன்னொன்றும் உண்டு. அது ஒரு கவிதை இன்னொரு கவிதையை நினைவுறுத்துவது. அவை இணைந்து ஒற்றை அனுபவப்படலமாக ஆகின்றன. எல்லாக் கவிதைகளுமே இந்த நினைவுநெசவை நிகழ்த்துகின்றன என்றாலும் பகடிகள் மேலும் கூர்மையாக அதை ஆக்குகின்றன.

 

வித்தியாசமான மியாவ்

 

பசுவய்யா

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று

நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…

 

சுப்பையாபிள்ளையின் காதல்கள்

சர்வோத்தமன் சடகோபன் இணையதளம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’
அடுத்த கட்டுரைபெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்