எழுத்தும் உடலும்

writer-abilash-2

 

அன்புள்ள ஜெயமோகன்
நலமா?
நான் சமீபமாய் எழுத்தில் மிகவும் obsess ஆகி விடுகிறேன். காலை எழுந்த பின் தூங்கும் வரை வேறெதையும் மனம் யோசிப்பதில்லை. வேலை, உணவு, வீட்டு காரியங்கள் எல்லாம் ஈடுபாடின்றி நடக்கின்றன. கிட்டத்தட்ட போதை நிலை. நான் என் முகத்தை கூட கண்ணாடியில் பார்த்துக் கொள்வதில்லை. இது என் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. பொருளாதாரத்தை கவனிக்காததால் பல சிக்கல்கள். எப்படி நீங்கள் உங்கள் எழுத்து வாழ்வில் சமநிலையை பேணுகிறீர்கள் என அறிய விரும்புகிறேன். உங்கள் பதில் எனக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன். நன்றி.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்

 

அன்புள்ள அபிலாஷ்

உங்கள் கடிதத்திற்குப்பின் உங்கள் இணையப்பக்கம் சென்று உங்கள் உடல்நிலைபற்றிய கட்டுரையை வாசித்தேன். வருத்தமாக இருந்தது. அது உங்கள் இயல்பான உடல்நிலை. அதைப்பற்றி இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. உலக அளவில் பெரும் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் பலர் இயல்பான நோய்கள் கொண்டவர்கள்தான்.

அண்டோனியோ கிராம்ஷியின் குறிப்புகளில் அவரது கடும் உடல்சிக்கல்களும் வந்தபடியே உள்ளன என்பதை சிலநாட்களுக்கு முன்னரே கவனித்தேன். அதை வென்றே அவர்கள் எழுதினார்கள். அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு அது ஏதோ ஒருவகையில் உதவவும் செய்தது. அவர்களை அது விலக்கி நிறுத்தியது. பிறிதொருவராக  மாறி அனைத்தையும் பார்க்கச்செய்தது.

உறுதியான ஒன்றுண்டு, உடலில் இருந்து பிறிதல்ல உள்ளம். ஒருநாள் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்தால் சாதாரணமாக அமர்ந்தாலே சிறப்பாக எழுதமுடிகிறது. சரியான தூக்கமில்லாதபோது ஒரு வரிகூட எழுவதில்லை. நல்ல நூலின் உள்ளடக்கம் கூட கவர்வதில்லை. உடலை உதாசீனம் செய்துவிட்டு உள்ளத்தைக் கூர்தீட்டிவிடலாம் என்பது ஒரு பொய். நான் உடலை அழியவிட்டு உள்ளத்தையும் கூடவே சிதையவிட்டு பின்பு அனுபவத்திலிருந்து கண்டுகொண்டது இது

ஆகவே எப்போதும் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்கிறேன். தூக்கம், உணவு, நேரம். இது நானே வகுத்துக்கொண்டது. எனக்கு அது உதவியாக இருக்கிறது. அது என் இயல்பல்ல என்பதனால் எனக்கு இன்றும்கூட மிகமிக கடுமையாக என்னைத்திரட்டியே அம்மூன்றையும் கடைப்பிடிக்கவேண்டியிருக்கிறது. அவ்வப்போது கட்டுமீறுவதும் உண்டு. ஆனாலும் பொதுவாக இவையே என் நெறி.

இயல்பான எட்டுமணிநேரத் தூக்கத்தை கடந்த பல ஆண்டுகளாக நான் வழக்கமாக வைத்துள்ளேன். இரு தடவைகளாக எட்டுமணிநேரம். இரவில் ஆறு. பகலில் இரண்டு. எட்டுமணிநேரத்தூக்கம் என்பது மூளையின் செயல்பாடுகளுக்கு மிகமிக முக்கியமானது.  நல்ல தூக்கம் கூர்ந்த கவனத்தை, இயல்பான ஒருங்குகுவிதலை அளிக்கிறது. தூக்கமில்லாமல் அதே வேலைகளைச் செய்யும்போது குவிதல் நிகழாமையினாலேயே கணிசமான நேரம் விரயம் ஆகிறது. படைப்பூக்கம் கொண்டு எதையும் செய்யவும் முடிவதில்லை

ஆகவே  என் மூளையுடன் விளையாடும் எந்தப்பொருளையும் பயன்படுத்துவதில்லை. மது, மாத்திரைகள் போன்றவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடுகிறேன். கற்பனைஉள்ள எழுத்தாளனுக்கு போதைக்கும் ,களிகூர்வதற்கும் ,எழுச்சி கொள்வதற்கும் ரசாயனங்கள் தேவையில்லை என்பதே என் எண்ணம். அவன் உள்ளத்தை ஆள்வதனூடாகவே அவற்றை அடையமுடியும். திளைக்கமுடியும்.

தன் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பதே எழுத்தாளனின் உண்மையான ஆராய்ச்சி. அதுவே அவன் சோதனைச்சாலை. அதன்மேல் மயக்கத்தின் புகைமூட்டத்தை உருவாக்குவது தற்கொலைதான். எழுத்தாளனுக்கு முதல் எதிரியே போதைதான். போதையால் எவரும் எழுதுவதில்லை. போதையை மீறித்தான் எழுதுகிறார்கள்.

இயல்பானதூக்கம் என்பது உகந்த உணவின் விளைவு என நானே கண்டுகொண்டேன். பழங்களின்பால் நான் திரும்பியது அதனால்தான். நான் மண்ணுக்குக்கீழே உள்ள அனைத்து இறைச்சியையும் உண்பவன். ஆனால் மிதமாக, பகலில் மட்டும்.  அறிவுஜீவி என்பவன் தன் வயிற்றைப்பற்றி அறிந்தவன் என்று காந்தி ஓர் இடத்தில் சொல்கிறார். தன்னுள் நிகழ்வதை அவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். கூடுமானவரை என் உணவுப்பழக்கத்தை பழங்கள், காய்கறிகள் ,குறைவான உணவு சார்ந்து அமைத்துக்கொண்டிருக்கிறேன்

கடைசியாக நேரம். இந்தியாவில் எதற்கெல்லாம் நேரம் விரயமாகிறதோ எதையும் நான் செய்வதில்லை. முதன்மையாக தொலைபேசியிலோ நேரிலோ வெட்டி அரட்டை. இரண்டு தொலைக்காட்சி பார்ப்பது. மூன்று அவசியமில்லாத காத்திருப்புகளில் சென்று நிற்காமலிருப்பது. என் நேரத்தை முழுமையாக திரட்டிவைத்துக்கொள்ள முயல்வது என்வழக்கம்.

நான் திரும்பத்திரும்ப சொல்லும் ஒன்றுண்டு, உடல் மட்டும் அல்ல உள்ளமும் நேரக்கணக்கு உள்ளதுதான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து எழுதினீர்கள் என்றால் இயல்பாகவே உள்ளம் அந்த மனநிலையை அடைந்துவிடுகிறது. எழுதமுடிகிறது.

இவை நாமே போட்டுக்கொள்ளவேண்டிய ஒழுங்குகள். எழுத்தாளன் எவன் என்றாலும் ஒழுங்கு என்பது மிகமிகக் கடினமானது. ஏனென்றால் கற்பனையும் சிந்தனையும் கட்டற்றவை. மொழியை கட்டறுத்துவிடாமல் கலை சாத்தியமாவதில்லை.  கட்டின்மை என்பதும் கலை என்பதும் சமானமானவையே. அந்த கட்டின்மையை உடலும் வாழ்க்கையும் தாங்கிக்கொள்வதற்கான வழிகளையே நான் சொல்கிறேன்.  அது நம் மீதான நம் அவதானிப்புகள் வழியாகவே சாத்தியம்

உங்கள் கட்டுரைகளில் தெரிவது , நேர ஒழுங்கின்மை. அதன் விளைவான துயில்நீப்பு. இயல்பிலேயே உச்சகட்ட சர்க்கரைநோய் கொண்ட உங்களுக்கு அது தீங்கானது. சர்க்கரைநோய் இலக்கியப்படைப்புக்கு மிக எதிரானது. அது உடல்நோய் அல்ல. அது முதலில் உள்ளத்தைத்தான் களைப்படையச்செய்கிறது. மிகச்சீக்கிரத்திலேயெ பொறுமை இல்லாமலாகிறது. அது நாம் செய்யும் வேலையையும் பாதிக்கும்

சரியான தூக்கம், குறைவான உகந்த உணவு இரண்டையும் கட்டாயமாக்கிக்கொள்வதும், சிறிய காலஅலகுகளில் தொடர்ந்து எழுதுவதும்தாம் உங்களுக்கான வழி.  எழுத்தை விடுவதைப்பற்றி அல்லது குறைப்பதைப்பற்றி சொல்லியிருந்தீர்கள். டாக்டர்கள் அதைச் சொல்வார்கள். அவர்களுக்கு எழுத்தாளனின் உளநிலை பற்றி புரிந்துகொள்ளமுடியாது. என்னிடமே வெண்முரசை இப்படி எழுதவேண்டாமே, உடல்நிலைச்சிக்கல் வருமே என்று சொல்பவர்கள் உண்டு.  ஆனால் நடைமுறையில் எழுதாதபோதுதான் அதிகமான உடல்நல, உளநிலைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுவே துன்பமான காலகட்டம்.  எழுத்த்தாளன் எழுதித்தான் ஆகவேண்டும். சமூகத்திற்காக அல்ல. தனக்காக. தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக. வேறுவழியே இல்லை.

எழுதுவதனால் கண்டிப்பாக உடல்நிலை மோசமாகாது. எழுத்து உருவாகி வருவதன் மகிழ்ச்சியும் எழுதிமுடித்தபின் ஏற்படும் நிறைவும்  உடல்நிலையை மேம்படுத்தக்கூடியவை. ஆகவே எழுதிக்கொண்டே இருங்கள். மேலும் பெரிய, நினைத்தால் மலைப்பு அளிக்கக்கூடிய பெருந்திட்டங்களை எடுத்து அதைநோக்கிச் சென்றுகொண்டே இருங்கள். ஒன்றும் ஆகாது. எழுதாமல் இருந்தால் அந்த வெறுமையை வெல்ல மூளைமேல் வைக்கோலை அள்ளிப்போட்டு எரியவைப்பீர்கள். அதுதான் தற்கொலை.

எழுத்து பித்தினால் மட்டுமே வரும். கம்பல்சரி அப்செசிவ்  டிஸார்டர் என்று மனநலமருத்துவர்கள் சொல்வார்கள். மொழிமேல் உணர்வுகள் மேல் அமர்ந்திருத்தல். எழமுடியாமலிருத்தல். அது உண்மையில் ஒரு வரம். ஒரு சொத்து. அதை எவர் சொல்லியும் இழக்கவேண்டியதில்லை. அதற்குரியவகையில் கொஞ்சம் உடலை , நேரத்தை சரியமைத்துக்கொண்டால் மட்டும் போதும்.

அதை விடுவது மிக எளிது. ஆறுமாதம் சும்மா இருந்தால்போதும், தவமிருந்தாலும் மீண்டு வராமல் போகும். எழுத்தாளனின் உளத்தடை என்பது  மிகமிகச்சிக்கலான ஒருவிஷயம். உலகம் முழுக்க அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஒரு பதவி உயர்வுக்காக, ஒரு வீடு கட்டுவதற்காக இலக்கியத்தை விட்டு விலகியவர்கள் உண்டு.பல்லாண்டுகள் கழித்து அந்த இழப்பை உணர்ந்து திரும்ப வந்து படைப்பூக்கமே அமையாமல் பரிதாபமாக விழிப்பார்கள். புலம்புவார்கள். வசையாளர்களாக மாறி சீரழிவார்கள். ஆகவே குதிரை மேல் இருந்து ஒருபோதும் இறங்கவேண்டாம்

சில ஆண்டுகளுக்கு முன் நானே கொஞ்சநாள் எழுதப்போவதில்லை என அறிவித்தேன். ஆறுமாதம் வரை எழுதவில்லை. என் நண்பர் அன்புவிடமிருந்து செய்தியறிந்து ஜெயகாந்தன் என்னை ஃபோனில் அழைத்தார். அவர் எவரையுமே அழைத்துப்பேசும் வழக்கம் கொண்டவர் அல்ல. என்னிடம் “எழுத்த்து வருவதும் வராததும் உன் கையில் இல்லை. இன்றைக்கு வருகிறது, நீ வேண்டாம் என்று சொல்லலாம். நாளை நீ தவமிருந்தாலும் வராது. ஒரு போஸ்ட் கார்ட் எழுதவே ஒருநாள் ஆகும் நிலைகூட வரலாம். வரும்போது எழுது. வராவிட்டால் நிம்மதியாக உட்கார்ந்துகொள். அதுதான் நாம் செய்யக்கூடுவது” என்றார். நான் உடனே, அன்றே, மீண்டும் எழுதினேன்.

நான் சொல்வது இவ்வளவே. எழுதுங்கள், கூடவே உடலை கட்டுக்குள் வைத்திருங்கள். தூக்கம், உணவு நேரம் என்னும் மூன்று மந்திரங்கள். சிறிய அளவிலான அமர்வுகளாக எழுதிக்கொண்டிருக்க பழகுங்கள். கொஞ்சம் கடினம். அதைப்பழகிவிட்டால் வாழ்க்கையை எழுத்தால் நிறைக்கமுடியும். அதுவே எழுத்தாளனின் சொர்க்கம் என்பது

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைபச்சைத்தண்ணீர்ப்பக்கோடா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்