கனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை

Vishnupuram wrapper(1)விஷ்ணுபுரம் ஐந்தாம் பதிப்பை  கிழக்கு பிரசுரம் வெளியிடவிருக்கிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள நாலாம் பதிப்பு [ஏழாம் அச்சு]க்கான முன்னுரை இது.  அட்டை ஓவியம் ஷன்முகவேல்

unnamed1

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் ஆசிரியரான மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுடன் ராமேஸ்வரம் பேராலயத்தைப் பார்த்துக்கொண்டு சென்றபோது அவர் சொன்னார். “இதுதான் கிளாஸிசம். இதைத் தவிர இன்னொரு உதாரணம் தேவையில்லை.” அவரது பரவத்தை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரது வயதும் எப்போதும் இருக்கும் முன்னாள் புரட்சியாளனின் கேலியும் எல்லாம் மறைந்துபோய் சிறுவனின் துள்ளலுடன் அவர் ஒவ்வொரு தூணாக நின்றார். ஒவ்வொரு சிற்பமாகக் கண்டுபிடித்தார். உடைந்த குரலில் ஒவ்வொன்றைப்பற்றியும் ஏதோ ஒன்றைச் சொல்லி மகிழ்ந்தார்.

செவ்வியல் படைப்பு என்பது தன்னைத்தானே முழுமைப் படுததிக்கொள்ளும் நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டது என்றார் ஆற்றூர். அது உண்மையில் ஒரு தொடர்புஊடகமே அல்ல. அது எதையும் சொல்லவோ விவாதிக்கவோ  முனைவதில்லை. அது ஒரு பண்பாட்டின் ஒரு கட்டத்தில் நிகழ்கிறது. மொத்த மாமரமே ஒரு மாங்கனியில் இனிப்பாகத் திரள்வது போல ஒரு பெரும் பண்பாடு அதன் செவ்வியல் அக்கத்தில் தன் நிறைவைக் கண்டடைகிறது. அந்தப் பண்பாடு நெடுங்காலமாகத் திரட்டிய அழகியலையும் மெய்யியலையும் தன் மூலப்பொருட்களாகக் கொண்டு அது ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்கிக்கொள்கிறது. பின்பு அதன் இணைவுச்சாத்தியங்களை மேம்படுத்துவதன் வழியாக மேலும் மேலும் நுட்பத்தைத் தேடிச் சென்றுகொண்டே இருக்கிறது.

ஆகவேதான் செவ்வியல் படைப்புகளுக்குக் காலமில்லை என்று சொல்லப்படுகிறது. அவை எந்தக் காலத்துடனும் பிரிக்க முடியாதபடி பிணைந்தவை அல்ல. அவற்றைப் பொருள் கொள்ள எந்தக் காலச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. மாறாக நவீன ஆக்கங்கள் காலத்துடன் பிணைந்தவை, காலத்தால் பொருளேற்றம் பெறுபவை. காலம் தாண்டும்போது  வரலாற்றால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை. செவ்வியல் ஆக்கங்கள்  கால மாற்றத்தின் தடங்களே இல்லாமல் நிலைநிற்கின்றன. காலந்தோறும் புதிய பொருள் கொள்கின்றன.

காட்டில் ஊறிய நீர் சுனையாகத் தேங்குவது போன்றது செவ்வியல் ஆக்கம். அதில் காட்டின் ஆன்மாதான் உள்ளது. காட்டின் ருசி அந்த நீரில் தெரியும். ஆனால், தடாகம் என்ற அளவில் அது முழுமையானது. செவ்வியல் ஆக்கங்கள் பிறிதொன்றின் உதவி இல்லாமலேயே  நிற்கக்கூடியவை. அவற்றைப் புரிந்துகொள்ளவதற்கான கருவிகளையும் அவையே உருவாக்குகின்றன. அவை உருவாக்குவது ஒரு முழுமையான அர்த்தவெளியை. அந்த அர்த்த வெளி காலம் நகர நகரப் பெரிதாகியபடியே போகும். அதை வாசிப்பவர்கள் அதை கற்பனை செய்து. விவாதித்து, விளக்கி மேலும் மேலும் விரிவாக்குவார்கள். ஒரு கட்டத்தில் அது அப்பண்பாட்டால் உருவாக்கப்பட்ட பொது அர்த்தவெளியாக உருமாற்றமடையும். பல கோடி ஆண்டுகளில் மரத்தின் செல்லுலோஸை மண் சிலிகானால் நிரப்புவது போல. பெரும் செவ்வியலாக்கங்கள் கல் மரங்கள். அவை மட்குவதில்லை.

செவ்வியல் ஆக்கங்கள் வாசகர்களை உ த்தேசிப்பதே இல்லை. சமகாலத்தை அவை எதிர்கொள்வதேயில்லை. என்றுமுள்ள நல்ல வாசகள் என்ற ஒரு இலட்சிய பிம்பத்துடன் அவை பேச முயல்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள்  வெகுசிலரே. அவர்கள் தங்கள் உச்சநிலையில் மட்டுமே அந்தச் செவ்வியல் படைப்பை அடையமுடியும். ஆகவே செவ்வியல் படைப்புகள் பெரும்பான்மையினரால் கண்டுகொள்ளப்படாமல் காலத்தைத்  தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றன. ராமேஸ்வரம் நகரில் வாழ்பவர்களில் அக்கோயிலைச் சரியாகப் பார்த்தவர்கள் பத்துப் போர்கூட இருக்கமாட்டார்கள்.

ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். “இந்தப் பிராகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு அலகும் கச்சிதமாகப் பொருந்தி உருவான ஒற்றைப் பெரும்படைப்பு தெரியும். இது ஒரு மகத்தான கல்ஆபரணம். ஆனால், இதன் ஒவ்வொரு தூணையும் தனித்தனியாகப் பார்த்தால் ஒரு தூண் இன்னொன்றைப் போல இல்லை என்பதை உணரலாம். ஒரு தூணைத் தனியாகப் பார்த்தால் அதிலுள்ள ஒரு சிலை இன்னொன்றைப்போல் இல்லை என்று தெரியும். இந்த முனிவர்  கையில் வைத்திருக்கும் யோகதண்டின்  பிடியில் ஒரு சிறிய சிற்பம் இருக்கிறது. அந்தப் பெண் கழுத்திலணிந்திருக்கும் அட்டிகையின் ஒவ்வொரு மணியிலும் ஒரு சிறிய சிற்பம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் எல்லா சந்துகளிலும் மடிப்புகளிலும் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உள்மடிப்புகளில் மகத்தான கலையழகுள்ள சிற்பங்கள் உள்ளன. சாரம் வைத்துக் கட்டி வண்ணம்தீட்டச் செல்பவன் அன்றி பிறர் அதைப் பார்க்கவே முடியாது. இந்த அறுநூறு வருடங்களில் பல சிலைகளைப் பத்துப் பேர்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.”

“இலையும் கிளையும் தெரியாமல் பூக்கும் செடி போல இருக்கிறது இந்தக் கோயில்” என்றார் ஆற்றூர். “காயாகிக் கனியாகி விதையாவதற்கென்றால் இத்தனை பூக்கள் பூப்பது ஒரு மாபெரும் வீணடிப்புதான். ஆனால், அதுதான் இயற்கையின் வழி. அதைத் தான் செவ்வியல் கடைப்பிடிக்கிறது. இத்தனை ஆயிரம் சிற்பங்கள் எதற்காக? ஒரு ரசிகள் தன் மொத்த வாழ்நாளையும் இங்கே சிற்பங்களைப் பார்ப்பதற்காகவே செலவிட்டால்கூட அவனால் இந்த ஆலயத்தைப் பார்த்துமுடிக்க முடியாது. ஆமாம், இது ரசிகனுக்காக உருவாக்கப்படவில்லை. தன்னைத் தானே முழுமைப்படுத்திக் கொள்ளவே இது சிற்பிகளின் கைகளைக் கவர்ந்து சிற்பங்களைப் பெருக்கிக்கொண்டு விஸ்வரூபம் கொண்டது.”

அன்று நான் விஷ்ணுபுரம் பற்றிய பெரும் கனவை மனதில் தேக்கிக்கொண்டிருந்தேன். அந்தரங்கமாக, எவரிடமும் பகிராமல் அதை சுமந்தலைந்தேன், ஒரு ரசசியக் காதலைப் போல. அந்தச் சொற்கள் என் முதிரா இளமையை  சீண்டின. ஆம், நான் ஒருவாக்கவேண்டியது ஒரு செவ்வியல் படைப்பைத்தான். ஒரு ராமேஸ்வரம் ஆலயத்தைத்தான் என்று சொல்லிக்கொண்டேன். ஓர் அறைகூவலாக ஒரு தன்னுறுதியாக. விஷ்ணுபுரத்தை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்தது அந்த வேகம்தான். காலத்தின் முன்னால் காவியக்கலைஞனாக நான் நின்றிருந்தேன் அப்போது.

ஏன் செவ்வியல் தேவைப்படுகிறது? செவ்வியல் ஒரு பண்பாடு உருவாக்கிய எல்லாப் படிமங்களையும் தொகுத்து நோக்கும் ஒரு முயற்சி. அப்படிமங்களைக்கொண்டே முழுமையான ஒரு உலகை உருவாக்கும் கனவு. கலைகள் படிமங்களை உருவாக்குகின்றன; படிமங்களின் பெருக்கம் செவ்வியலை. எந்தக் கலையானாலும் செவ்வியலை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. செவ்வியல் கலை என்பது அக்கலையின் முதல்தள வாசகர்களுக்கான ஒன்று. விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல் வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது வெவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன்.

ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர் கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதன் புதுமையாலும் வேகத்தாலும் விஷ்ணுபுரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக இத்தனை வருடம் பேசப்பட்ட பிற படைப்புகளின் குறைவே. ஆனால் அது கோரிய அர்ப்பணிப்புள்ள வாசிப்பு அரிதாகவே நிகழ்ந்தது. பெரும்பாலும் எளிய திகைப்புகள், தவறான திறப்புகளே வாசிப்பாக நிகழ்ந்தன. அது இயல்புதான். அன்றாட அரசியலைக் கொண்டு, சமகால வாழ்க்கையைக் கொண்டு, படைப்புகளைப் படிப்பதும் மதிப்பிடு வதும்தான் சாதாரண வாசகர்களின் இயல்பு. அவ்வாசிப்பு நவீன எழுத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். விஷ்ணுபுரம் போன்ற ஒரு நவீனச்செவ்வியல் ஆக்கத்தை, அது உருவாக்கும் படிமவெளியைக் கொண்டு அதன் மையமாகத் திரளும் தரிசனங்களைக் கொண்டு மட்டுமே வாசிக்கமுடியும்.

ஆனால் மெல்லமெல்ல விஷ்ணுபுரம் அதற்கான வாசகர்களை உருவாக்கிக்கொண்டது. சென்ற  பதினைந்து வருடங்களில் அனேகமாக  எல்லா மாதங்களிலும் ஒரு விமர்சனமாவது விஷ்ணுபுரத்துக்கு வெளியாகியிருக்கிறது. பல விமர்சனங்கள் கூர்மையானவைதான். ஆனால், என் கருத்தில் விஷ்ணுபுரத்துக்கு மிக முக்கியமான விமர்சனங்கள், அந்நாவலை மிகநெருங்கிச்சென்று ஆன்மாவைத் தீண்டிப்பார்க்கும் விமர்சனங்கள் இந்த 2012ல் தான் வெளிவந்துள்ளன. அவை எனக்கு ஆழமான நம்பிக்கையை அளிக்கின்றன.

பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் விஷ்ணுபுரம் வெளிவந்த போது அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் ஒரு விசித்திரமான சலசலப்பு மட்டுமே உருவாகியது. அன்றைய இலக்கிய மதிப்பீடுகளை அது மீறிச்சென்றது. அதன்மீது வழக்கமான அன்றாட அரசியல் சார்ந்த வாசிப்பு ஒன்றும், நவீனத்துவ வடிவப்பிரக்ஞை சார்ந்த வாசிப்பு ஒன்றும் மட்டுமே நிகழ்ந்தன. அன்று அந்த ஆரம்பநாட்களில் நாவலின் கைப்பிரதியை வாசித்து அது ஒரு செவ்வியல் ஆக்கம் என்ற வரியை என்னிடம் சொன்னவர் சி.மோகன். அது வெளிவரவும் அவர் காரணமாக இருந்தார். அந்த இளம்வயதில் அச்சொற்கள் அளித்த ஊக்கம் அளப்பரியது. இப்போது அவரை  மீண்டும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் அதைப் புரிந்துகொள்வதற்குரிய பிற தகவல்களும் தொகுக்கப்பட்டு https://vishnupuram.com/  என்ற இணையதளம் நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதில் இந்நாவல் விவாதிக்கப்பட்டபடி இருக்கிறது. அதில் எழுதிவரும் பலரும் இந்நாவல் எழுதப்பட்ட போது சிறுவர்களாக இருந்தவர்கள். உலக இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்புடன் தமிழுக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் வாசிக்கும் விஷ்ணுபுரம் அதிநவீனத் தொழில்நுட்ப யுகத்தக்காகத் தன்னைப் புதியதாக உருவாக்கிக்கொண்ட ஒன்றாக இருப்பதைக் காண்கிறேன்.

விஷ்ணுபுரம் இதுவரை தொடர்ந்து அச்சில் இருக்கிறது; சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு ஓர் அழகிய பதிப்பு வெளியாகவில்லை என்ற எண்ணம் வாசகர் மத்தியில் உண்டு. அதை சாத்தியமாக்கிய நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி. அன்று இதை உருவாக்கத் துணைநின்றவர்களுக்கு என் முதல் முன்னுரையில் நன்றி சொல்லியிருந்தேன். இன்றுவரை இதை நிலை நிறுத்தும் செவ்வியல் வாசகர்களுக்கு இப்போது வணக்கத்தையும் நன்றியையும்  சொல்லிக்கொள்கிறேன்.

 

ஜெயமோகன்

ஜூலை 2012

விஷ்ணுபுரம் ஐந்தாம் பதிப்புக்கான முன்னுரை, அலகில்லாதவை அனைத்தும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31
அடுத்த கட்டுரைதினமலர் – 36, நிபுணர்கள் வருக!