கேரள அரசியலும் ஆதிக்கசாதியினரும்

1
இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு

 

அன்புள்ள ஜெ சார்,

தமிழ்நாட்டில் கேரள அரசியல் குறித்துள்ள ஒரு பொதுப் புரிதல் அது ஆதிக்க சாதிகளான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கையில் தான் உள்ளது என்று. ஒரு முறை திரு அன்புமணி ராமதாஸ் அவ்வாறு ஒரு பேட்டியில் கூறினார். திரு சமஸ் அவர்களும் இவ்வாறு எழுதுகிறார்:

“ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டியும் கேரளத்தில் நம்பூதிரிகள், நாயர்கள்; ஆந்திரத்தில் ரெட்டிகள், கம்மாக்கள்; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் என்று இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதி அரசியல் இன்றைக்கும் ஆதிக்கச் சாதிகளின் கைகளில் மட்டுமே இருக்க முடியும் என்றிருக்கும் நிலையில், ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து,  அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மாநிலத்தின் இரு மைய சக்திகளில் ஒன்றாகத் தன்னை கருணாநிதி நிலைநிறுத்திக்கொண்டிருப்பது  இந்தச் சாதியச் சமூகத்தில் அவர் நிகழ்த்திருக்கும் மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் ஏனைய எந்த மாநிலத்திலும் இன்றுவரை நிகழாத அற்புதம். இந்த மாநிலத்தின் பெருமிதம். “

பிற மாநிலங்களைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் நானறிந்தவரை கடைசியாக கேரளாவில் ஒரு நாயர் முதல்வராக இருந்தது 1991-95 ல் திரு கே. கருணாகரன் அவர்கள் சமயத்தில் தான். முதல்வராக இருந்த ஒரே ஒரு நம்பூதிரி திரு இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு அவர்கள் தான். ஆனால் இந்திய கம்யூனிச பெரும் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ். அவர்கள் முதல்வரானது நம்பூதிரிகளின் ஆதிக்கம் என்றோ சாதி வெற்றி என்றோ சொல்ல முடியாது அல்லவா?

மக்கள் தலைவர்களான திரு அச்சுதானந்தன் அவர்களோ, உம்மன் சாண்டி அவர்களோ, மறைந்த திரு இ.கே. நயனார் அவர்களோ நானறிந்தவரை ஆதிக்க சாதியினர் அல்லர். திரு ஏ.கே. அந்தோணி அவர்களும் அவ்வாறே. இப்படி இருக்க ஏன் இப்படி சொல்லப்படுகிறது? அல்லது உண்மையிலேயே கேரள அரசியலின் அச்சு நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கையில் தான் உள்ளதா? நேரமிருப்பின் தாங்கள் விளக்க முடியுமா?

அன்புடன்

கிருஷ்ணன் ரவிக்குமார்.

 

இ கே நாயனார்

 

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

ஒரு நாளிதழில் வெளிவரும் கட்டுரைகள் இருவகையாக இருக்கலாம். ஒன்று, ஒரு தரப்பை வெளிப்படையாகப் பிரதிநிதித்துவம் செய்பவை. திமுகவின் சார்பில் ஒருவர் இவ்வரிகளை ஒரு கட்டுரையில் எழுதியிருந்தால் அதில் பிழையில்லை. இன்னொருவர் அதை மறுக்கவும் கூடும்

அந்த நாளிதழின் செய்தியாளர் என்னும் பொறுப்பில், அவ்வடையாளத்துடன் இருப்பவர் இப்படி ஒரு மிகையுணர்ச்சி கொண்டு எழுதுவது, அதிலும் இதைப்போன்ற தமிழக அரசியல் மேடைபாணி புகழ்ச்சிகளை எழுதுவது, எவ்வகையிலும் சரியானது அல்ல. அவர் சாதிய இழிவுபடுத்தலைக் கண்டிக்கலாம். ஆனால் அதற்குப்பின் வரும் வரிகள் பொதுநாளிதழ்களுக்குரியவை அல்ல.  நானறிந்து இதழியலின் பொறுப்பு அறிந்தவர்கள் இவ்வாறு செய்வதில்லை

செய்தியாளர்கள் செய்யக்கூடியது முதன்மையாகத் தகவல்களை அளிப்பது. அதிலும் அவர்களே நேரில் சேகரித்த தகவல்களுக்கே முதன்மை இடம். சேகரிக்கப்பட்ட தகவல்களை அளிப்பதற்கு வேறு பலர் உள்ளன. தேவை என்றால் அதையும் செய்யலாம்.

அடுத்தபடியாக அத்தகவல்களின் அடிப்படையிலான அலசலையும் செய்யலாம். ஆனால் அது அந்நாளிதழின் வாசகனை ஒரு நடுநிலையாளனாக உருவகித்துக்கொண்டு அந்த நிலைப்பாட்டில் நின்றுதான் செய்யப்படவேண்டும்.நிலைப்பாடு எடுக்கப்பட்டால் அச்செய்தியாளரின் நிலைப்பாடாக அல்லாமல் அந்நாளிதழின் நிலைபாடாகவே அது கருதப்படும். கிட்டத்தட்ட தலையங்கம்போல.

ஆனால் தமிழ் நாளிதழ்களில் பொதுவாக இவற்றை எதிர்பார்க்கமுடிவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான நாளிதழ்செய்தியாளர்களுக்கு முன்னோடிகளிடமிருந்து இந்த மதிப்பீடுகள் அளிக்கப்பட்டிருப்பதில்லை. தமிழ் ஹிந்துவில் பலர் ஜூனியர் விகடன் போன்ற பரபரப்பு இதழ்களிலிருந்து வந்தவர்கள். அங்கே இந்த நெறிகள் ஏதுமில்லை. எதையும் எழுதலாம் என்பதே வழக்கம்.

சமஸின் இக்கட்டுரை தகவல்கள் சார்ந்ததும் அல்ல. ஆராய்ச்சியும் அல்ல.அவரது உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன், அதனுடன் ஒத்துப்போகவும் என்னால் முடிகிறது. ஆனால் அந்த மிகையான புகழுரை பொருளற்றது.

இதை அவர் ஓர் அரசியல்வாதியாகச் செயல்பட்டால் எழுதலாம். இதழாளராக நான் அவர் என் குரலாகவும் ஒலிக்கவேண்டுமென நினைப்பேன் – ஏனென்றால் நான் பணம் கொடுத்து அந்நாளிதழை வாங்கும் வாசகன். இந்த வரிகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன.

ஆனால் தி ஹிந்துவிலேயே அரவிந்தன் போன்றவர்களும் தகவல்களும் இல்லாமல் ஆராய்ச்சியும் இல்லாமல் வெறுமே பொதுவிவாதங்களில் காதில்விழும் வரிகளையே நீட்டி சிக்கலான சிற்றிதழ் நடையில் கட்டுரைகளாக எழுதிவருகிறார்கள். பல கட்டுரைகளை நான் படிப்பதே இல்லை. இதை சமஸ் என்பதனால் வாசித்தேன். இச்செய்திக்கு மட்டும் எதிர்வினையாற்ற விரும்புகிறேன்..

கேரளத்தைப்பற்றி மட்டும் அல்ல, கர்நாடகம் ஆந்திரம் பற்றிக்கூட தமிழகத்தில் சமூக- அரசியல் பின்னணிப்புரிதலுடன் எழுதப்படுவதே இல்லை. தமிழகத்திற்கும் பிறமாநிலங்களுக்கும் ஏதேனும் விவாதம் நிகழும்போதுகூட அம்மாநிலங்களின் எண்ணமோ உணர்வோ இங்கே பதிவாவது இல்லை

உதாரணமாக, மாத்ருபூமி மலையாள மனோரமா ஆகிய இரு நாளிதழ்களுக்குமே சென்னை, கோவை நிருபர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாகவே நிலைமைகளை அறிக்கையிடுகிறார்கள். மேலதிகமாக தமிழகத்தைச்சேர்ந்த மலையாளம் தெரிந்தவர்களைக்கொண்டு கட்டுரைகளும் எழுதி வாங்கிப்போடப்படுகின்றன. தமிழ்நாளிதழ்களில், வார இதழ்களில் அப்படி ஒரு கட்டுரையை நான் இதுவரை வாசித்ததில்லை. அதன் விளைவுகளே சமஸின் இத்தகைய புரிதல்கள்.

 

சி அச்சுத மேனன்

 

கேரள அரசியலில் நாயர்கள் மேலாதிக்கம் வகிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அங்குள்ள ஆதிக்கசாதியினர் என்றாலும் மிகச்சிறுபான்மையினர்.நாயர்களுக்கு அங்குள்ள ஆதிக்கம் என்பது மூன்றுதளங்களில். ஒன்று, கல்வி அதன்மூலம் அடையப்பட்ட அரசுப்பதவிகள். அதுதான் முதன்மையானது.  இரண்டாவதாக நில உடைமை. ஆனால் நாயர்கள் தொடர்ச்சியாக நிலத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். மூன்றாவதாக கலையிலக்கியசிந்தனைத்தளத்தில் உள்ள மேலாதிக்கம். அது கல்வியின் இன்னொரு பகுதி. அது நீடிக்கிறது.

ஆனால் கேரள அரசியலைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்கள் வணிகம், தொழில். இரண்டிலும் நாயர்களுக்கான இடம் அனேகமாக இல்லை.  முஸ்லீம்கள் மரம் கயிறு போன்ற தொழில்களில் மேலாதிக்கம் கொண்டிருக்கிறார்கள். சிரியன் கிறிஸ்தவர்கள் ஏற்றுமதித் தொழிலையும், ரப்பர் வேளாண்மையையும் கையில் வைத்திருக்கிறார்கள். ஈழவர்கள் மதுவணிகத்தை நடத்துகிறார்கள். நாயர்கள் அனேகமாக எந்தத் தொழிலும் இல்லை.

கேரள அரசியல் என்பது இந்த மூன்று வணிகங்களின் இடையே நடைபெறும் ஒரு ஒத்திசைவுதான். எந்த அரசியல் மாற்றமும் இந்த சூத்திரப்படி விளக்கப்படக்கூடியது என்பார்கள். ஆகவே கேரளத்தில் எப்போதும் ஆட்சியில் முஸ்லீம், கிறிஸ்தவர்களின் பங்குதான் முதன்மையானது. இடதுசாரிகள் ஆட்சிக்கு வரும்போது ஈழவர்களின் கை சற்று ஓங்கியிருக்கும். எப்போதும் நாயர் ஆதிக்கம் செலுத்தியதில்லை.

கேரள முதல்வர்களில் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு, சி.அச்சுதமேனன், பி .கெ. வி,  இ கே நாயனார்  போன்றவர்களை ‘உயர்சாதி’ என்று முத்திரைகுத்துவதெல்லாம் வேதனை என்றே சொல்லவேண்டும். அவர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு, பெரும் தியாகங்கள் வழியாக ஆட்சிக்கு வந்தவர்கள். அடித்தள மக்களின் பிரதிநிதியாக இருந்தவர்கள். அடித்தள மக்களுக்காக உண்மையான சீர்திருத்தங்கள் அவர்களால்தான் கொண்டுவரப்பட்டன.

கேரளத்தின் நிலச்சீர்திருத்தம் லட்சக்கணக்கான தலித்துக்களுக்கு நிலம்பெற்றுத்தந்தது. அத்தகைய ஒரு நடவடிக்கைக்காகவே கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசு பதவிநீக்கமும் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு உண்மையான நிலச்சீர்திருத்தம் இந்தியாவின் பிறபகுதிகளில் இனிமேல்தான் நிகழவேண்டும் — இனிமேல் நிகழவே முடியாது என்பது நாமறிந்ததே.

கேரள முதல்வர் வரிசையைப் பார்த்தால் நம்பூதிரிகள், நாயர்கள் முதல்வர் பதவிகளில் இருந்ததெல்லாம் இடதுசாரிகளின் ஆட்சியில்தான். [இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, சி அச்சுதமேனன், பி கே வாசுதேவன் நாயர், இ கே நாயனார்]. அதற்கு முன் ஒருங்கிணைந்த கேரளம் உருவாகாத காலகட்டத்தில் பட்டம் தாணுபிள்ளை மட்டுமே கம்யூனிஸ்டு அல்லாத நாயர்

என்ன காரணம்? கேரளத்தில் கல்விகற்று இலக்கியம், கலை, அரசியல் என பரந்துபட்டு செயல்பட்ட சாதியினர் முதன்மையாக நாயர்களே. ஆகவே அவர்களில் இருந்தே ஓரு சிறுபான்மையினர் காங்கிரஸ் அரசியலுக்கும் அங்கிருந்து இடதுசாரி அரசியலுக்கும் வந்தனர்.  பிற வணிகசமூகங்களில் இருந்து அரசியல்போராட்டங்களுக்கு வந்தவர்கள் மிகச்சிறுபான்மையினதான். ஏனென்றால் வணிகசமூகத்தின் மனநிலை அது.

ஆனால் சுதந்திரம் கிடைத்து அரசியல் என்பது அதிகாரம் என ஆனபோது இயல்பாகவே வணிகச்சாதியினர் தங்கள் பிரதிநிதித்துவத்துக்காக களமிறங்கினர். 1957ல் முதல் இடதுசாரி அரசு நிலச்சீர்திருத்தம், விவசாயத்தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அமல்படுத்தியபோது கேரள நிலப்பிரப்புகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அன்று நாயர்கள், ஈழவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஓரு போராட்டத்தை மேற்கொண்டனர். அது விடுதலைப்போர் [விமோசன சமரம்] எனப்படுகிறது. அதன் வழியாக உருவாகி வந்தவர்கள் தான் இன்றுள்ள காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள்.   அதாவது அவர்கள் அடித்தள மக்களுக்காக உருவாகி வரவில்லை. அடித்தளமக்களுக்கு எதிராக உருவாகி வந்தவர்கள்.

ஆதிக்கசாதியில் இருந்து வந்தவர்கள் என்றாலே ஆதிக்கசாதிக்கான அரசியல்வாதிகள்தான், பிறர் அடித்தளச்சாதிப்போராளிகள் என்ற எளிமையான சித்திரம்போல இந்தியாவைப்புரிந்துகொள்ள தடை பிறிதில்லை. அது கடந்த முப்பதாண்டுக்கால தமிழக அரசியலில் இருந்து வந்த மனப்பதிவு. அதாவது ஒவ்வொரு சாதியின் அரசியல்வாதியும் தன் சாதிக்காக மட்டும்தான் போராடுவான் என்னும் எண்ணம்.

கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் அடித்தள மக்களின் உரிமைக்காக, நலனுக்காக மட்டுமே நிலைகொண்டார்கள்.  நம்பூதிரிகளின் நாநூறாண்டுக்கால நிலவுடைமை ஆதிக்கத்தை ஒரே கையெழுத்தில் ஒழித்தவர் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு. கடைசிவரை அச்சுத மேனனும், நாயனாரும் அவர்களின் சாதிக்கு எதிரானவர்களாகவே இருந்தனர். கேரளத்தின் வலுவான நாயர் சாதியமைப்புக்கள் அவர்களை தங்களவர் என்று ஒரு தருணத்திலும் சொன்னதில்லை.

ஆர் சங்கர்

 

கேரள அரசியலில் சுதந்திரம் கிடைத்த தொடக்கத்திலேயே நாராயணகுருவின் இயக்கத்திலிருந்து வந்த ஈழவரான சி.கேசவன் திருவிதாங்கூர் – கொச்சி பகுதியின் முதல்வராக ஆகிவிட்டார். 1951- 52 வரை கேசவன் பதவியில் இருந்தார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட சாதியினரான ஏ.ஜே.ஜான்  1952 ,முதல் 1954 வரைபதவியில் இருந்தார்.

ஆனால் மலபாரையும் இணைத்துக்கொண்டு ஒருங்கிணைந்த கேரளம் உருவானபின் பதவிக்கு வந்த ’உயர்சாதி முதல்வரான’இ.எம்.எஸ்ஸின் காலகட்டத்தில்தான் கேரளத்தில் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்டவரும் நில உரிமையை அடைந்தனர்.ஒருவர் எந்தச் சாதியில் பிறந்தார் என்பதல்ல, எந்த மக்களுக்காக என்ன செய்தார் என்பதே அளவுகோல். அதை சாதியரசியலில் ஊறிப்போன தமிழக இளந்தலைமுறையினரிடம் சொல்லிப்புரியவைப்பது கடினம்.  தமிழகத்தில் இடதுசாரிகளின் தோல்வியும் அதனால்தான்..

கேரள அரசியலில்  ஈழவர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்  வலுவானஅரசியல்வாதிகளாக எப்போதும் இருந்தனர்.   சி.சங்கர், ஏ.கே ஆண்டனி, சி எச் அகமது கோயா, உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் ஆகியோர்தான் ஒப்புநோக்க அதிககாலம் கேரளத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். கெ.கருணாகரன் நாயர் அல்ல, ஆலயங்களில் வாத்தியங்கள் வாசிக்கும் மாரார் சாதியினர். ஈ கே நாயனார் நாயர்தான். வடகேரளத்தில் நம்பியார், நாயனார் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் உண்டு.தமிழக அரசியலைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ள முடியாது. கேரள அரசியலில் முதலமைச்சர் என்பவர் தமிழகத்திலுள்ளதுபோல கண்கண்ட தெய்வம் அல்ல. கட்சித்தலைவரும் முழுமுதற்கடவுள் அல்ல. அங்கே கட்சிப்பொறுப்பும் சரி , முதல்வர் பொறுப்பும்சரி எப்போதுமே ஒருங்கிணைப்பாளர் பதவிதான். அதிகாரம் கூட்டானது. அங்கு பெரும்பாலும் கூட்டணி ஆட்சிதான்.

ஆகவே கேரள அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசிகள் அல்ல. எந்த அமைச்சரவை என்றாலும் பொதுப்பணித்துறை, கல்வி , மதுவினியோகம், வனத்துறை போன்றவற்றை முஸ்லீம்லீக், கிறிஸ்தவர்களின் கட்சியான கேரள காங்கிரஸ் ஆகியவையே கையில் வைத்திருக்கின்றன.சென்ற அரைநூற்றாண்டாக அதிகாரம் இவ்வாறுதான் பங்குவைக்கப்படுகிறது.

கேரள முதல்வர்கள் ஆதிக்கசாதியான நாயர்கள் மட்டுமே என்பதும் சரி, ஆகவே கேரளம் ஆதிக்கசாதியால் ஆளப்படுகிறது என்பதும் சரி, அபத்தமான புரிதல்கள்.

உண்மையில் இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்குப்பின் உருவானது பிற்படுத்தப்பட்டோர் அரசியல். ஏனென்றால் அவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். இயல்பாகவே அரசியல் அதிகாரம் அவர்களின் கைகளுக்குச் சென்றது இந்தியாவெங்கும் மெல்லமெல்ல நிகழ்ந்த அரசியல் மாற்றம் இதுதான்.

திடீரென்று  இதழாளர்களால். பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் ‘ஆதிக்கசாதி’ என்று கன்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே மொத்தச் சித்திரத்தையும் அதனடிப்படையில் மாற்றி எழுதுகிறார்கள்,  அவ்வளவுதான்.

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ
அடுத்த கட்டுரைதினமலர் 21 எதிரும் புதிரும்