கொல்லிமலை சந்திப்பு 2

DSC_0952

கொல்லி மலையில் குளிரே இருக்காது என்பது வாசுவின் கூற்றாக இருந்தது. ஆனால் இரவில் நல்ல குளிர். காலையில் நன்றாகவே குளிர். ஆறுமணிக்கு எழுந்து ஒரு நீண்ட காலைநடை சென்றோம். அருகிருந்த படதுக்குளம் வரை சென்று அப்படியே திரும்பி சோழர்காலத்தைய இடிந்த சிவன்கோயில் ஒன்றைப்பார்த்தோம். கோயில் பாதிவரை மண்ணில் மூழ்கியிருந்தது. உள்ளே ஆவுடை மட்டும். அதன் மேல் ஒரு கல்லைத்தூக்கி சிவனாக வைத்திருந்தனர்

கொல்லிமலை பழங்காலத்தில் முக்கியமான ஊராக இருந்துள்ளது. தமிழ்ப்பண்பாட்டின் தொடக்ககாலத்தில் குன்றுகள்தான் முக்கியமான அரசுகளாக எழுந்தன. பாரியின் பறம்பு மலை, ஓரியின் கொல்லிமலை போல. இவர்கள் குறிஞ்சித்திணையின் குறவ அரசர்கள். பின்னர் மருதநிலம் மேலும் அதிக உபரிசெல்வத்தை உற்பத்திசெய்யத்தொடங்கியபோது சமவெளியில் பெரிய அரசுகள் உருவாயின. அவை இந்த குன்று அரசுகளை வென்றன. இந்தச்சித்திரமே நாம் புறநாநூற்றில் இருந்து பெறுவது

திரும்பி வரும்வழியில் கொல்லிமலையின் முக்கியமான அடையாளமாக உள்ள பெருங்கற்காலத்து புதைவிடம் ஒன்றைச் சென்று பார்த்தோம். கல்லால் ஆன அறை இது. கற்பாறையைக் குடைந்து உருவாக்கிய குழியின் மேல் பெரிய சப்பைப்பாறை ஒன்றைத் தூக்கி வைத்து அதை அமைத்திருந்தனர். தமிழகப்பெருங்கற்காலம் என்பது ஏறத்தாழ முப்பதாயிரம் வருடம் பழைமையானது.

உள்ளே முதுமக்கள்தாழிகள் இருந்துள்ளன. அவை அரசு தொல்லியல்துறையால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டன.  உள்ளே ஒன்றும் இல்லை. உள்ளே சென்று குனிந்து பார்க்க சிமிண்டால் குழியாக படி அமைத்திருக்கிறார்கள். கொல்லியின் வரலாறு அங்கே ஆரம்பிக்கிறது கொல்லிமலை சங்ககாலம் முதல் வரலாற்றுக்குள் உள்ளது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் மலை. கொல்லிப்பாவை என்னும் தெய்வம் இங்கிருந்தது எனப்படுகிறது. அது கொற்றவையாக இருக்கலாம். சேரர்களின் கட்டுப்பாட்டில் இந்த மலை இருந்துள்ளது.

பத்துமணிக்கு வாசகர்களை நாமக்கல்லில் இருந்து ஒரு வேனில் அழைத்துவந்தார் வரதரஜன். வாசுவும் வாதராஜனும்தான் இந்தச்சந்திப்புகளை நடத்தியவர்கள். இருநாட்களாகவே தூக்கமில்லாமல் அவர்கள் இதற்காக வேலைசெய்திருந்தனர். சிறிய சந்திப்பாக இருந்தாலும் இத்தனைபேரையும் திரட்டிச்சேர்த்து கொண்டுவருவது சாதாரணமான வேலை அல்ல.

நேரடியாகவே சந்திப்பு தொடங்கியது. முதல்நாள் அனைவரும் கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருந்தனரோ என்று தோன்றியது. பெங்களூர் ,சென்னை. கொங்குவட்டாரத்திலிருந்தும் மதுரை, புதுக்கோட்டை பகுதியிலிருந்தும் வந்திருந்தனர். அனைவருமே இளம் வாசகர்கள். வாசிப்பு சம்பந்தமான வினாக்கள். அங்கிருந்து பொதுவான கேள்விகள்.

இளைய வாசகர்களைச் சந்திப்பது எப்போதுமே பெரிய திறப்புகளை எனக்கு அளித்தது. இம்முறையும் அப்படித்தான். அவர்களின் குழப்பங்கள். அறிமுகத்தடுமாற்றங்கள். கூச்சங்கள். கூடவே ஒருபோதும் நான் நினைக்காத கோணத்திலான கேள்விகளும் அவதானிப்புகளும் . சந்திப்பு எனக்கு ஒரு பெரிய பரவசம் என்றே சொல்லவேண்டும்

மாலையில் ஒரு டிராக்டரில் அனைவரும் ஏறிக்கொண்டு கொல்லிமலையின் சிகர உச்சிக்குச் சென்றோம். ஊரெல்லாம் வேடிக்கைபார்த்தனர். ஆனால் உற்சாகமாக மலைகளை அந்திசாயும் ஒளியில் பார்த்தபடி செல்லமுடிந்தது.

கொல்லிமலையின் இன்னொரு தொன்மையான பாரம்பரியத்தின் தடயமாக அங்கே ஒரு தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அமர்ந்த கோலம். ஆனால் பாதி மண்ணில் புதைந்துள்ளது. எந்த தீர்த்தங்காரர் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. வர்த்தமானர் என்று தோன்றியது.

மிக அழகிய சிலை  ஒரு வாழைத்தோப்புக்குள் உள்ளது. இப்போது அங்குள்ள மக்கள் விபூதி பூசி சைவத்தெய்வமாக வழிபடுகிறார்கள். சிலையெல்லாம் தெய்வமென்பது நம் மனப்பழக்கம் என்பது ஒருபுறமிருக்க, வழிபடும் தகைமைகொண்ட அழகிய சிலைதான் அது.

மலைமேல் உள்ள கொங்கலாயி அம்மன் இங்குள்ள மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் தெய்வம். மலையுச்சியில் காட்டுசெண்பக மரங்கள் சூழ்ந்த தனிமையில் அமைந்திருந்தது. அங்கு செல்லும் வழியிலேயே செருப்புக்களைக் கழற்றிவிடவேண்டும் என்றார்கள். செல்லும் வழியிலுள்ள கோணக்கல் என்னும் பீடத்தைத் தொட்டு சத்தியம் செய்தால் அம்மனே வந்து தண்டிப்பாள் என்றார் முதியவர் ஒருவர்

கோயிலின் நடை தினமும் திறப்பதில்லை. நாங்கள் சொன்னதனால் திறந்தனர். இரு கிராமப் பூசாரிகள் ஊர்க்கவுண்டரின் முன்னால்வைத்து சில உறுதிமொழிகளுக்குப்பின் அதைத் திறந்தனர். வாசலுக்கு நேராக எவரும் நிற்கலாகாது. திறப்பதற்கான ஆசாரங்கள் பல இருந்தன. பலமுறை தெண்டனிட்டு வணங்கினர். தரையில் நிலம்பட தொழுதனர்

அவை சடங்குபோலத் தோன்றவில்லை, மிகுந்த பக்தியுடனும் உணர்வுபூர்வமாகவும் அவை செய்யப்பட்டன. நான் நாமக்கல்லில் வைணவ அர்ச்சகர்கள் பூசைசெய்த முறையிலிருந்த அலட்சியத்தையும் அவலட்சணத்தையும் நினைத்துக் கூச்சம் அடைந்தேன்

வெளியே நின்ற பெரியவரிடம் “உள்ள சிலை இருக்குங்களா?” என்றபோது அவர் “அவளே உக்காந்திருக்கா” என்றார். அந்த நம்பிக்கை அவர்கள் அனைவரையும் உயிர்ப்புகொள்ளச் செய்திருந்தது. அது நமக்கும் பரவி அசாதாரணமான ஓர் உச்சநிலை ஏற்பட்டது.

உள்ளே இருந்தவள் கொற்றவை. காலடியில் மயிடன் விழுந்து கிடந்தான். நான்கு கைகளில் கட்கமும் வில்லம்பும் சூலமும் இருந்தன. உருளைப்பாறை ஒன்றில் புடைப்பாகச் செதுக்கப்பட்ட சிலை மிகத்தொன்மையானதாக இருக்கலாம்.

முன்பெல்லாம் கொற்றவை மலைப்பாறைகளில் அல்லது குகைகளில்   செதுக்கப்பட்டு கிட்டத்தட்ட மறைந்தே கிடக்கும். போர்களின்போதும் ,பயணத்தின் போதும் மட்டுமே பூசை. பெரும்பாலும் உயிர்ப்பலி. அவ்வப்போது மானுடப்பலி. பாலைநிலத்து எயினர் இட்டெண்ணித் தலைகொடுத்த கொற்றத்தாள் இப்படித்தான் இருந்திருப்பாள்.

அன்று பதினெட்டு தேங்காய்களை உடைத்தனர். அந்த ஆலயத்தைச் சூழ்ந்து அங்கு பூசாரியாக இருந்தவர்கள் இறந்தபின் நடப்பட்ட சிறிய நடுகற்கள்  நின்றிருந்தன. கொல்லிமலையின் ஒரு மைய நரம்புமுடிச்சு அந்த ஆலயம் என்று தோன்றியது.

பெருங்கற்கால கல்லறை

கொங்கலாயி அம்மனுக்கும் இரண்டு வருடங்களுக்கொருமுறை உயிர்ப்பலி உண்டு. இருநூறு ஆடுகள் வரை பலியிடப்படுமாம். வரும் ஏப்ரலில் விழா நிகழ்கிறது. கொற்றவையின் தோற்றம் அந்த பெருங்கற்கால கல்லறையை நினைவுறுத்தியது. ஏனெனென்று தெரியவில்லை.

அங்கிருந்து மலையுச்சிப்பாறையில் சென்று அமர்ந்தோம். கண்ணெட்டும் தொலைவுவரை நாமக்கல் நிலப்பரப்பு. முதலில் இருளில் ஓரிரு விளக்குகள். மெல்ல விண்மீன்கள் தெளிவதுபோல ஒளிப்புள்ளிகளின் பெருவெளி. வானத்தில் விண்மீன்களின் அதிர்வு. மேலும் கீழும் விண்மீன்களால் சூழப்பட்டிருந்தோம். குளிர்ந்த காற்று அடித்துக்கொண்டிருந்தது

 

அங்கே பேசிக்கொண்டும் நிலவுக்காகக் காத்துக்கொண்டும் அமர்ந்திருந்தோம். நிலவெழுந்தபின் சென்று இரவுணவை அங்கேயே முடித்துவிட்டு திரும்பி வந்தோம். பதினொரு மணிக்கெல்லாம் அனைவருமே தூங்கிவிட்டோம்

மறுநாள் காலையில் அனைவருகே புத்துணர்ச்சியுடன் எழுந்தோம். உடனே விவாதங்கள். தோட்டத்தினுள் இருந்த பாறையுச்சிக்கு ஒரு காலைநடை சென்றோம். சுற்றிலும் பசுமைமேல் காலையொளி மெல்ல எழுவதைக் கண்டு அமர்ந்திருந்தோம்.

மீண்டும் விவாதங்கள். மெல்ல தயக்கங்கள் அவிழ்ந்து அனைவருமே உற்சாகமாகப்பேசத்தொடங்கினர்.மதிய உணவுவேளை வரை இடைவெளி இல்லாமல் சென்றது உரையாடல். நண்பர்கள் கொண்டுவந்த  கவிதைகளையும் கதையையும் வாசித்து விவாதித்தோம்.

மதியம் இரண்டு மணிக்குச் சந்திப்பு முடிந்தது. தழுவல்கள், புகைப்படங்கள். நாங்கள் மூன்றுமணிக்குக் கிளம்பினோம். எனக்கு இரவு 11 மணிக்குத்தான் நாகர்கோயில் ரயில். அஜிதன் ஈரோடு வழியாக கனகபுரா செல்வதாகச் சொன்னான். சமணப்பயணம்.

காங்கோ மகேஷ் இல்லத்தில் [மஞ்சள் சட்டை]
வரும் வழியில் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலைச் சென்று பார்த்தோம். மணல்பாறையால் கட்டப்பட்ட ஆலயம். மழுங்கலான சிற்பங்கள். கோயிலின் உள்ளே சம்பந்தமே இல்லாமல் எழுதிப்போடப்பட்டிருக்கும் துதிகள், கலையம்சம் இல்லாத படங்கள். இத்தகைய ‘பயன்பாட்டுக் கோயில்கள்’ எல்லாமே விழிகளை உறுத்துபவையாகவே இருக்கின்றன

மாலையில் நாமக்கல் ரங்கநாதர் ஆலயத்தைப்பார்த்தோம். குடைவரைக்கோயில். உள்ளே கரிய திருமேனியாகப் படுத்துறங்கும் திருமால். கார்க்கோடகன் மேல் படுத்திருப்பதாக தொன்மம். வழக்கம்போல பெருமாளுக்கு அலுமினியத்தில் தொப்பி போல கிரீடம் செய்து மாட்டி. அழுக்குத்துணி சுற்றி உடம்பெங்கும் வெள்ளைபெயிண்டால் கண்டபடி நாமம் போட்டு ,  சிவந்த பெயிண்டால் வாய் வரைந்து, கார்க்கோடகன் முகத்திற்கு வகைவகையாக பற்களும் கண்களும் வாயும் வரைந்து முடிந்தவரை சீரழித்திருந்தனர்

பல்லவர் காலகட்டத்துச் சிற்பம். அன்று ஒரு கலைஞனின் கனவில் எழுந்த தெய்வம். இன்று கலை என்றால் என்னவென்றே அறியாத மூடர்கள் நடுவே சீர்கெட்டு விரிந்திருக்கிறது. முன்பொருமுறை கும்பகோணம் ராமசாமி ஆலயத்தின் மகத்தான சிற்பங்கள் நடுவே நின்றிருந்தபோது ஒருவர் “என்ன சார் பொம்மை?’ என்று என்னிடம் கேட்டார். நம்மவர் உள்ளத்தில் இருப்பது மரப்பாச்சியும் பிளாஸ்டிக் பொம்மையும்தான். எந்தச்சிற்பத்தைப்பார்த்தாலும் அது குறையுடையதாகத் தோன்றுகிறது. அதை மரப்பாச்சியாக ஆக்கிவிடுகிறார்கள்

இப்போதெல்லாம் நம் ஆலயங்களைப் பார்க்கையில் ஓர் அழியாப்பதற்றம் நெஞ்சில் குடியேறுகிறது. அறியாமயால் இவற்றை அழித்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறோம் என்னும் எண்ணம். அதை கடந்து ஆலயங்களைப் பார்க்கவே முடியவில்லை. மிக அபூர்வமாகவே நல்ல முறையில் பேணப்படும் ஆலயங்களைக் காணமுடிகிறது

மாலை நாமக்கல் மலைமேல் ஏறிச்சென்றோம். ஒருகாலத்தில் நாமக்கல் மலை வெறும் குப்பைமேடாகக் கிடக்கும் என்றார் கிருஷ்ணன். அருகில் இருக்கும் குளங்கள் சாக்கடையால் நிறைந்து நாறுமாம். இப்போதுள்ள எம்.எல்.ஏ முயற்சியால் மலை தூய்மையாக்கப்பட்டுள்ளது. குளம் செப்பனிடப்பட்டு நல்ல நீர் நிறைந்து அழகிய சுற்றுச்சுவரும் அமர்ந்திருக்கும் பெஞ்சுகளுமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சற்றேனும் அக்கறை இருந்தால் சிறப்பாக பேணமுடியும்.ஆனால் அப்போதே ஆங்காங்கே மக்கள் குப்பைகளைக் கொண்டு போட்டிருப்பதைக் கண்டேன். “ராத்திரியில் கொண்டாந்து போட்டிடறாங்க சார்” என்றார் வரதராஜன்

வரதராஜனின் இல்லத்தில் இரவுணவு. பத்தரை மணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின் என்னை ரயில் ஏற்றிவிட்டனர். நாகர்கோயிலில் இருந்து வந்திருந்த நண்பர் ஷாகுல் ஹமீதுடன் நான் ரயிலேறினேன். இன்னொரு நிறைவான சந்திப்பு. பின்னாளில் இதையெல்லாம் பெருமையுடன் நினைத்துக்கொள்ளப்போகிறேன் என எண்ணிக்கொண்டேன்.

இந்தச் சந்திப்புக்கு இருவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். வரதராஜன், வாசு. வாசு என்னுடன் பாலக்காடு கல்லூரியில் நிகழ்ந்த உரையில் பங்கெடுக்கவந்தார். அப்போது முதல் அறிமுகம். வரதராஜன் விஷ்ணுபுரம் நிகழ்ச்சி வழியாக அறிமுகம். இருவருமே ஜக்கிவாசுதேவ் அமைப்புக்கு அணுக்கமானவர்கள். நிகழ்ச்சிகளை ஒங்கிணைப்பதில் திறமை அங்கிருந்து வந்திருக்கலம். மிகச்சிறந்த இலக்கிய வாசகர்கள்

வாசு
வாசு

கொல்லிமலையின் அந்த விருந்தினர் மாளிகையும் தோட்டமும் வாசுவின் தம்பி செந்திலின் பொறுப்பில் இருந்தன. அவர் அங்கே தங்கி விவசாயம் செய்கிறார். முன்பு சொந்தமாகத் தொழில்செய்துகொண்டிருந்தார். இயற்கைவேளாண்மையில் ஆர்வம் வந்ததும் தொழிலை முடித்துக்கொண்டு பண்ணையிலேயே தங்கிவிட்டார். அவரது மகன் மட்டும் நாமக்கல் பள்ளியில் படிக்கிறான்

செந்திலின் உபசரிப்பால்தான் இந்நிகழ்ச்சியே நடந்தது. உண்மையில் சமையல் முழுக்க செந்திலின் மனைவியால்தான் செய்யப்பட்டது. நானே அதை நிகழ்ச்சி முடிந்தபின்னர்தான் அறிந்தேன். அவர்களைப்பொறுத்தவரை நாங்கள் அவர்களிடம் வந்த விருந்தினர்கள். அவர்களுக்கு நன்றி சொல்வதைவிட என்றும் அழியாத நினைவாக இது இருக்கவெண்டும் என நினைப்பதே முறையானது.

செந்திலும் குடும்பமும்
வரதராஜன்
வரதராஜன்

 

கொல்லிமலை புகைப்படத் தொகுதி

 

முந்தைய கட்டுரைஅமெரிக்கப்பொருளியல் – கடிதம்
அடுத்த கட்டுரைவரலாற்றாய்வின் வீழ்ச்சி