ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6

r

டியர் ஜெ,

போன கடிதத்தில் கேட்க நினைத்ததை விட்டு விட்டேன். வரலாறு குறித்து நீங்கள் பேசிய நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளவே சிரமப்பட்டேன். புனைவு வாசித்த அளவுக்கு இன்னும் வரலாறு வாசித்ததில்லை. வாசித்து மட்டுமே வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் சொன்னதையும் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும் இந்திய வரலாறு, தமிழக வரலாறு குறித்த வாசிப்பை யாரிலிருந்து தொடங்கலாம்? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தமிழில் வெளிவந்த வரலாற்று நூல் பட்டியல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்கள்.

ரிஷி

அன்புள்ள ரிஷி

பொதுவாக இம்மாதிரி தேவைகள் வருகையில் என் தளத்தில் ஒரு பொதுவான தேடலை நடத்திப்பார்க்கலாமென நினைக்கிறேன். சில ஆயிரம் கட்டுரைகள் எழுதிவிட்டேன். இவையெல்லாம் அடிப்படைக்கேள்விகள். இவற்றுக்கு அங்கேயே பதில் அளித்திருப்பேன். வரலாறு என ஒரு பகுப்பே அதிலிருப்பதைக் காணலாம்

வரலாற்றுக்கட்டுரைகள்

வரலாற்றை வாசிக்க

*

மதிப்பிற்குரிய திரு .ஜெ

எப்படி ஆரம்பிப்பது, சரி இப்படி ,2013 இல் ஒரு நாள் திரு கமலஹாசன் ,தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறம் பற்றி சொல்ல, அதன் மூலமாக அந்நூலை பற்றி அறிந்து ஆன்லைன் இல் அறம் வாங்கி வாசித்தேன், என்ன சார் நீங்க பாட்டுக்கு இப்படி எழுதிட்டு போய்ட்டீங்க ,மூச்சடைச்சுல போய்ட்டேன், பூமேடையை வாசிச்சுட்டு பைத்தியம் மாதிரி யோசிச்சுட்டு இருந்தேன் ,யானை டாக்டர் தந்த ஆழ்ந்த உற்சாகம், கெத்தேல் சாகிப் இன் உரிமை மிரட்டலின் நேசம், நூறு நாற்காலிகள் தந்த மன வலி -நூறு நாற்காலிகள் என் மனதின் சம நிலையே அசைத்து விட்டது, மற்றும் மத்துறுதயிர், மயில்கழுத்து இவ்விரண்டு  கதைகளும் எனக்கு சுத்தமாக புரிய வில்லை,,

இப்படி அறம், இவர்கள் இருந்தார்கள், முன் சுவடுகள், வாசித்துள்ளேன், அறம் வாசித்து 3 வருடங்கள் ஆகிவிட்டது ,இன்று அதில் உள்ள பல பெயர்கள் மறந்து விட்டது ,அனால் அக்கதையின் அடிப்படை படிமங்கள் உள்ள உறுத்தியபடியே வாழ்கின்றன,

சார் வெளிப்படையா கேக்குறேன், உங்களோட நெறைய பேசணும்,பல அரிய இலக்கியம் பற்றி தெரிஞ்சுக்கணும்,  அரிய புத்தகங்களை பற்றி விவரம் அறியணும், பல அறியபடாத ,மரியாதைக்குரிய எழுத்தாளர்களை பற்றி அறியணும், என் மண் மதுரை பற்றி நெறைய கேட்டு தெரிஞ்சுக்கணும் ,

பத்ம விருதுகள் பற்றி ,உங்களிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் ,கடந்து போகணும்,

இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது, போதும், இனி நேரில் உரையாட காத்திருக்கிறேன்

விரைவில் தங்களை தேடி சந்திப்பேன் .உரிமையுடன் உரையாடுவேன் .

சில மாதங்களாக ,ஒரு நாளின் பல மணி நேரத்தை jeyamohan.in இல் முதலீடு செய்கிறேன் . நான் என்னை சில மன தாழ்விலிருந்து மீட்க இம் முதலீடு அவசியம் ஆகிறது .

ஈரோடு -புதியவர்களின் சந்திப்பு, நல்ல முறையில், ஆக்கபூர்வமாகவும், நிறைவுற்றதில் மகிழ்ச்சி .

நீங்கள் வருடம் தோறும் மே மாதம் நடத்தும் உதகை காவிய முகாம் இல் பங்குபெற விரும்புகிறேன், வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் .

நன்றி

வே .அழகு மணிகண்டன்

 

அன்புள்ள அழகுமணிகண்டன்

இலக்கியவாசிப்புக்கான வழிமுறை என்பது தொடர்ந்து வாசிப்பதும் விவாதிப்பதும்தான். இலக்கிய ஆக்கங்கள் எப்போதும் கொஞ்சம் சொல்லி வாசகனை ஊகிக்கவைக்க முயல்கின்றன. அந்த ஊகங்களை கதையிலுள்ள குறிப்புகளைக்கொண்டு எப்படி நிகழ்த்துவது என்பது சற்று பயின்று அறியவேண்டியது. பெரிய கலையெல்லாம் ஒன்றுமில்லை, இந்த வட்டத்திற்குள் வரவேண்டும், அவ்வளவுதான். ஒரு கதையின் வாசிப்பு அடுத்த கதையை வாசிக்க பயிற்சியாக அமையும்

தொடர்ந்து வாசியுங்கள். நான் பலசமயம் தொடர்ச்சியாக எழுதுவதனால் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தாமதமாகிறது. ஊட்டியில் இம்முறை ஒரு கூட்டம் நடத்திவிட்டமையால் மேற்கொண்டு சந்திப்பு தேவையா என யோசிக்கிறேன்

ஜெ

t

அன்புள்ள ஜெயமோகன் அய்யா அவர்களுக்கு,

சகிப்புத்தன்மை என்ற வார்த்தை சரியான ஒன்று தானா என்று ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் உள்ளது. உங்கள் “அரசியல்சரிநிலைகள்” கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தேன். “கும்மட்டம்” என்பது எப்படி “மசூதி” என உருவகம் செய்யப்பட்டதோ அதே போல “மதநல்லிணக்கம்” தான் “சகிப்புத்தன்மை” என தவறாக பயன்படுத்தப்பட்டதோ என்ற சந்தேகம் உள்ளது.

‘நீ சகித்து வாழ்” என்பதற்கும் “நீ நல்லிணக்கத்துடன் வாழ்” என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தான் இந்த வினாவை எழுப்பியது. கடந்த வருடம் விவாதங்களில் “சகிப்புத்தன்மை” என்ற சொல் ஒற்றுமையை நிலை குலைக்கும் கருவியாக பயன்பட்டதா??? தாங்கள் விளக்க வேண்டும்.

தாழ்மையுடன்,

ஷியாம் பிரசாத்,

நாகர்கோவில்.

 

அன்புள்ள ஷியாம்பிரசாத்

உண்மை

சகிப்புத்தன்மை என்னும் சொல் எதிர்மறை அர்த்தம் கொண்டதுதான். ஆங்கிலத்திலும் அப்படித்தான் அது ஒலிக்கிறது. நல்லிணக்கம் என்னும் சொல்லே பொருத்தமானது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
அடுத்த கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)