காடு -கடிதம்

விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கக் காட்டிற்கு சென்று வரும் நம் அனைவருக்கும் , ஊருக்குத்திரும்பி வந்த பிறகும், நம் மனதை விட்டு அகலாமல் , மறுபடியும் அடுத்த பயனத்தின்போது இருகரம் நீட்டி அழைக்கும் சக்தி கொண்டதுதான் காடு. அதுபோல மேலோட்டமாக , ஜெயமோகனின் “காடு” நாவலை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மழையூறிய ஒரு இரவில் மீண்டும் என் கைகளில் வந்தமர்ந்தது இந்த நாவல்.

நாவலில் இடம்பெறும் கிரிதரன் கதாபாத்திரம் முதலில் காட்டிற்குள் வழிதவறி சென்று விடுவான். அடுத்தடுத்த முறை காட்டிற்குள் செல்லும்போது காடு வரைபடமாக அவன் கண்முன்னால் விரிவடைந்து கொண்டே போகும். அது போல இந்த மறுவாசிப்பின்பொது என்னால் நாவலின் கதாபாத்திரங்களோடு பேச முடிந்தது. எனக்கு சற்றும் பரிச்சயமில்லாத மொழி நடைத்தான். ஆனாலும் ஜெயமோகன் எழுதும்போது அப்படியொன்றும் அந்நியமாகத்தெரியவில்லைதான். பலகாலம் பழகிய மலையாளப் பெண்ணின் மொழியைபோல என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது. காடும் அது காட்டும் பல நிகழ்வுகளும் 48 மணி நேரத்துக்கும் மேலாக அந்த நாவலோடு என்னைக்கட்டிபோட்டு வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை போன்ற எழுத்தின் மூலம், காடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றத்திற்கு உள்ளாகி வருவதை நாவலில் விரியும் பல்வேறு சம்பவங்களினூடாக காட்சிப் படுத்தும் தன்மை ஜெயமோகனுக்கு மட்டுமே உரித்தானது. முக்கியமாக கனவுகள் ஜெயமோகன் நாவல்களில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நாவலிலும், ஆழ்மனதின் காட்சிகள், நாவலின் கதா பாத்திரங்களின் கனவுகளின் மூலம் ஒரு யட்சியைபோல நம்மைத் தழுவிக்கொள்கின்றன.

கிரிதரன் குட்டப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் வழியாகவே பெருமளவு நாவல் விவரிக்கப்படுகிறது. ஆயினும், குட்டப்பனை விட கிரிதரன் கதாபாத்திரம் சிறியதாகவே தெரிவதற்கு காரனம், குட்டப்பனின் வாழ்வனுபவமு, அவன் வாழ்க்கையை எளிமையாக புரிந்து வைத்திருப்பதுமேயாகும் என்பதின் மூலம் நமக்கு விளங்குகிறது.

இந்த நாவல் நானறிந்த வரையில் மனிதர்களைப் பற்றி மட்டும் பேசுகின்ற மற்றும் வழமையான உறவுச் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசுகிறது என்பதோடல்லாமல் , ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் காணக்கிடைத்த , அழகிய காட்டைப் பற்றிய வரலாறு என்றே கூற வேண்டும்.

“ ஒரு சாலைபோதும் ஒரு முழுக்காட்டையே அழிப்பதற்கு” என்பார் கானியலாளர் தியோடர் பாஸ்கரன். அதுபோல சாதாரன கட்டுமானத் தொழிலுக்காக ஒரு காடும் அதன் வளமும் , அதன் சகல ஜீவராசிகளும் அழித்தொழிக்கப்படுவதன் ஆதங்கத்தை இந்த நாவல் வழிநெடுகிலும், ஒரு சிறுத்தையின் காலடித்தடத்தை போல விட்டுச் செல்கிறது.

“அப்படித்தான் நிகழும், எல்லாப் பெரு நகரங்களும் ஒரு காலத்தில் காடுகளாக இருந்தவைதான், காடுகள் அழிந்துகொண்டே இருக்கின்றன. பின்வாங்கிப் பின்வாங்கி மலையடிவாரத்துக்கு வந்து விட்டன. இனி நகரங்கள் மலைகளையும் வளைத்து உள்ளிழுத்துக் கொள்ளும்…”

“காடு அழிந்து ஊர்களானதே நாகரீகம்…”

“நாகரீகம் என்ற சொல்லுடன் புரண்டு படுத்தேன். நகர் சார்ந்தது நாகரீகம். அதற்கு எதிர்ப்பதம் காட்டுத்தனம், காட்டு மிராண்டி. எவ்வளவு தெளிவாக இருக்கிறது எல்லாம்.!.ஆரம்பப் பள்ளியிலேயே கற்பிப்பது. காட்டை வென்றடைக்கும் ஊர்களின் கதைதான் மனித நாகரீகம் போலும்”

என்ற வரிகளின் மூலம் இந்த நாவல் காட்டின் முக்கியத்துவத்தை எந்தளவு பேசுகிறது என்பதை அறியலாம்.

டிஸ்கவரி சேனலின் “ Survivor Man” நிகழ்ச்சியில் வரும் சாகசக்காரர் இனி எனக்கு நாவலின் கதாபாத்திரமான “குட்டப்பனை” எப்போதும் நினைவு கூர்வர். காட்டில் உள்ள பொருட்களையே உணவாய் கொண்டு வாழும் குட்டப்பன் நாவலில் வாழ்ந்திருக்கிறார். அவருடைய முடிவு நாவலின் ஆரம்பத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டாலும், நாவலின் ஒவ்வொரு கனத்திலும் அவரே நிறைந்திருக்கிறார்.

வெகுஜன வாழ்க்கையில் நாமனைவரும் சாதாரனமாக சந்திக்கும் ஒரு கதாபாத்திரமே “அய்யர்”. அவருடைய சபலத்தை அழகிய நகைச்சுவை உணர்வுடன் கையாண்டிருப்பது அழகு. குறிப்பாக கையுடைந்து மருத்துவமனையில் படித்திருப்பதாக வருமிடம். இந்த நகைச்சுவை ஜெயமோகனுக்கே உரியது.

நாவல் முழுக்க ஒரு சாதாரன மனிதனின் பயணத்தின் போது காட்டுக்குள் காணக் கிடைக்கு, மிளா, முயல், தேவாங்கு, மலை அணில், மாண், கூழக்கடா மற்றும் யானை இவற்றை மட்டுமே பயன்படுத்தி இருப்பதன் மூலம் ஒரு பயனியின் நிறைவை நாம் அடைகிறோம். மற்ற அரிய உயிர்கள் ஆராய்ச்சியாளர்களின் பைனாகுலர் கண்களுக்கே கிடைக்கும் என்பதே உண்மை.

நீலி நாவல் முழுவது ஒரு வந்தாலும், அவளுடைய முடிவின் மூலம் வாசகரை ஒரு கணம் துக்கப்பட வைக்கிறாள். நீலியுடனான கிரிதரனின் சந்திப்புகள் ஜெயமோகனின் வேறொரு நாவலை நினைவுறுத்துகிறது. கபிலனும் குறுந்தொகையும் காட்சிகளை விளக்குவதற்கு பயன்பட்டிருந்தாலும் ஜெயமோகனின் வரிகளே பெரிதான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருவேளை குறுந்தைகையையும் கபிலனையும் புரிந்துகொள்ள எனக்கு இன்னும் பலகாலமாகலாம். ஆனால் எனக்கு அதுவரை ஜெயமோகன் போதும். அடுத்தமுறை இந்த நாவலைப்படிக்கும்போது 40 வருடம் காட்டில் அலைந்தவனைபோல பரிச்சயமாக இருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

நாவல் தந்த அனுபவம் காட்டை மேலும் மேலும் ரசிக்கவும், வாழ்க்கையை புத்துணர்ச்சியுடையதாகவும் ஆக்கும் என்ற ஆவலோடு அடுத்த காட்டு பயணத்திற்கு காத்திருக்கின்றேன்.

எனக்கு தீவிர இலக்கிய விமர்சகர்களின், பூதக்கண்ணாடிகளின் மேலும், இந்த நாவலைப்பற்றிய விமர்சனத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லை. ஜெயமோகனுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். மாறாக ஒரு மண்ணும் அது சார்ந்த மலையினமும், நம் கண் முன்னே அழிந்து கொண்டிருப்பதை தேர்ந்த வாசகனுக்கு நாவலின் வழி சொன்ன ஜெயமோகனின் இலட்சம் வார்த்தைகளுக்கு கோடானு கோடி நன்றி.

அன்புடன்

கோகுல்.

அன்புள்ள கோகுல்

நன்றி.

காடு நாம் மீண்டும் மீண்டும் எழுதும் ஒரு கரு. நமக்கு காடு என்பது வெறும் மரக்கூட்டம் மட்டும் அல்ல. அச்சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கையின் மறுபக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஆடும் கூத்து