ராஜாவுக்கு விருது

1

 

எல்லா மின்னஞ்சல்களையும் வாசிக்காமல் இருக்கும் திமிரின் விலையாக ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்டேன். கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளமுதல்வர் உம்மன்சாண்டி விருதை வழங்கி ராஜாவைக் கௌரவித்தார்

ராஜா தமிழ்நாட்டில் பெருமதிப்புக்குரியவராக மக்களிடையே இருந்தாலும் அரசுசார்ந்து அவர் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. இங்கே எந்தக்கலைஞரும் அப்படி அரசாலோ அரசுப்பொறுப்பில் இருப்பவர்களாலோ மதிக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. மிகப்பிந்திக்கிடைத்த பத்மபூஷண் மட்டுமே அவர் பெருமைகொள்ளத்தக்க விருது எனலாம்.

2

கேரள அரசு அளித்த இவ்விருது ஏன் முக்கியமானது என்றால் முழுக்கமுழுக்க தகுதியின் அடிப்படையிலேயே இது வழங்கப்படுகிறது என்பதால்தான். மிகத்தேர்ந்த கலைரசனையுடையவர்கள் என சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள் இதன் நடுவர்கள். ராஜா கேரளத்தில் கேரளப்பண்பாட்டின் அறியப்படாத இசைமரபொன்றை கொண்டுவந்தவர் என்றே கருதப்படுபவர். ஆகவே என்றும் மதிக்கப்படுபவர். பெற்றவரும் கொடுத்தவர்களும் பெருமைகொள்ளத்தக்க விருதாக இது உள்ளது.

3

விழாவுக்குச் சென்று வந்த நண்பர்களிடம் பேசியபோது பொறாமையாக உணர்ந்தேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் சரி, சொற்பொழிவுகளிலும் சரி, இளையராஜாவுக்கே முதன்மையளித்து நடந்த அழகிய நிகழ்ச்சி எல்லாவகையிலும் அவருக்குரிய மரியாதையே என்றனர். உம்மன்சாண்டி எளிமைக்கும் நேசபாவத்திற்கும் புகழ்பெற்றவர். எனக்கும் அவரது அண்மையின் இனிமை அனுபவமாகியிருக்கிறது. இத்தருணம் ராஜாவின் அணுக்கமான இளையவன் என்னும் வகையில் எனக்குள் இருக்கும் ஏக்கம் ஒன்றை நிறைவுசெய்கிறது

இளையராஜாவுக்கு வணக்கம்.

முந்தைய கட்டுரைசெவ்விலக்கியங்களும் செந்திலும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35