முரண்படும் தரப்புகள்

1

[அரவிந்தன் கண்ணையன்]

ஜெ

உங்கள் சங்கரர் உரை பற்றி உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். அவர் உங்களை தொடர்ச்சியாகக் கடுமையாக வசைபாடி எழுதியவர். திடீரென்று அவருடன் நீங்கள் நட்புகொண்டது ஓர் ஆச்சரியம். இப்படிப்பட்ட நட்புகள் எப்படி உருவாகின்றன, அவரை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என அறிய ஆவல்

சாமிநாதன்

எம் டி முத்துக்குமாரசாமி

 

அன்புள்ள சாமிநாதன்,

அரவிந்தன் கண்ணையன் இன்று என் நண்பர்தான். அவர் என்னை கடுமையாக தாக்கியிருக்கிறார், ஆனால் வசைபாடியதில்லை, அவதூறு செய்ததும் இல்லை. அவரது விவாதமுறை என்பதே கடுமையான கருத்துக்களை சொல்வது. அது ஒரு ஃபேஸ்புக் வழிமுறை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை

அரவிந்தன் கண்ணையன் என் சிந்தனைகளுக்கு எதிராக வைக்கும் எதிர்தரப்புக்கள் மேல் எனக்கு மதிப்புண்டு. அவற்றில் சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். ஆனால் என்கருத்துக்களின் முரணியக்கத்தில் அவை முக்கியமான குரல்.

என்னை அவதூறு செய்து வசைபாடியவர்கள் பெரும்பாலும் நான் நண்பர்கள் என நினைத்த சிலர்தான். அணுக்கமாக இருந்தவர்கள் மிக எளிய காரணங்களுக்காக விலகிச்செல்லும்போது அதை செய்தார்கள், செய்கிறார்கள். சமீபமாக தீவிர இந்துத்துவர்கள்.

அவர்களையும் நான் என் கருத்துக்களின் முரணியக்கத்தின் ஒரு தரப்பாகவே எண்ணினேன். ஆனால் நான் அரவிந்தன் கண்ணையனிடம் ஒன்றரை கோடி ரூபாயை என் மகன் சினிமா எடுப்பதற்காக வாங்கினேன் என்றும் அமெரிக்க பல்கலை ஒன்றில் நான் வருகைதருபேராசிரியராகச் செல்ல அரவிந்தன் கண்ணையன் ஏற்பாடு செய்கிறார் என்றும் அவர்கள் எழுதினர்.

தனிப்பட்ட குழுமங்களில் கடும் அவதூறுமழை.அந்த ஸ்கிரீன் ஷாட்கள் ஆரம்பத்தில் ஒருபடபடப்பை அளித்தன. பின்னர் சிரிப்புதான். அரவிந்தன் கண்ணையன் ஒரு கணிப்பொறி நிபுணர். தனியார் நிறுவன ஊழியர் மட்டுமே. கோடியெல்லாம் அவரிடமிருந்து பேரும் என்று இவர்களே எண்ணிக்கொண்டு போய் சரணடைந்துவிடுவார்களோ என்னும் பயம் வந்துவிட்டது

பொதுவாக என்னை மறுப்பவர்களை நான் கவனிப்பதுண்டு. அவர்கள் நான் மதிக்குமளவுக்கு வாசிப்பவர்களாக, விஷயமறிந்தவர்களாக இருக்கவேண்டும். வெறும் காலிடப்பாச் சத்தம் என தோன்றும் கணம் முழுமையாகப் புறக்கணித்துவிடுவேன். எதையும் சாதிக்காதவர்களின்  வன்மம், வீண் நக்கல் போன்றவை இன்று எளிதில் இணையம் வழி நம்மை வந்தடைபவை.

தங்களை அசட்டுபீடங்களில் அமர்த்திக்கொள்ளுதல், பெயர் உதிர்த்தல், ஒற்றைவரிக் கருத்துக்கள்  எல்லாம் காலிடப்பாக்களின் இயல்பு. அதிலும் ஃபேஸ்புக்கில் பேனெல்லாம் காண்டாமிருகமாக உலாவருகின்றன. அவர்களைக் கடந்து செல்லாமல் நாம் சிந்திக்கமுடியாது, எதையும் செய்யவும் முடியாது.

அரவிந்தன் நீலகண்டன்

நான் மதிக்கும் படைப்பாளிகள் சிலரும் நம்மைத்தாக்கக்கூடும். மனுஷ்யபுத்திரன் மிகக்கடுமையாக என்னையும் என் நண்பர்களையும் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் நான் விரும்பும் கவிஞர். தமிழ்ச்செல்வன் நான் விரும்பும் சிறுகதையாசிரியர். ஆகவே அதை கடந்துசெல்லவேண்டியதுதான்

நாம் முக்கியமான படிப்பாளிகளாக,  நினைக்கும் சிலரும் அவ்வகையில் கடும் தாக்குதல்களை முன்வைக்கக்கூடும். காரணமற்ற காழ்ப்புகூட கொண்டிருக்கக்கூடும். நம் படைப்புலகை பொருட்படுத்தாமலிருப்பவர்களாக அல்லது அதற்குள் நுழையமுடியாதவர்களாக அவர்கள் இருக்கலாம். அது என் எதிர்பார்ப்பு அல்ல. ஒரு விரிந்த கருத்துவிவாதத்தளத்தில் அவர்களெல்லாம் முக்கியமானவர்கள் என்பதே என் எண்ணம்.

உதாரணமாக கல்வியாளராக  எம்.டி.முத்துக்குமாரசாமி மேல் எனக்கு ஆழமான மதிப்புண்டு. தருமராஜ், அ.ராமசாமி போன்றவர்கள் மேலும் அதே மதிப்புண்டு. அவர்களின் பல கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவையே. ஆயினும் அவர்களை முன்வைப்பது என் பணி என நினைக்கிறேன்

அதைப்போல அரவிந்தன் நீலகண்டன் ஜடாயு போன்றவர்களுடனும் எனக்கு உடன்பாடில்லாத இடங்கள் பல உண்டு. ஆனாலும் அவர்கள் அறிஞர்கள் என்பதனால் எனக்கு முக்கியமானவர்கள். இவர்களின் கட்டுரைகளை நான் கவனப்படுத்துவதும் அதனாலேயே.

அரவிந்தன் கண்ணையன் என் எழுத்துக்களை அறியாத நிலையில் என்னை அறிமுகம்செய்துகொண்டவர். என் கருத்துக்களால் சீண்டப்பட்டு கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். நானும் அவற்றை கடுமையாக மறுத்தேன். ஆனால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்துவந்தேன். அவர் விரிவாக வாசிப்பவர் என்னும் எண்ணம் உருவாகியது. ஆகவே அவர்மேல் மதிப்புகொள்ளத்தொடங்கினேன்.

என் எழுத்துக்களை அரவிந்தன் கண்ணையனும் அதன்பின்னர் தான் வாசித்தார். அது அவருக்கும் என் மேல் மதிப்பை உருவாக்கியது. நாங்கள் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். நட்புகொண்டோம். நேரில் சந்தித்தோம். கண்டிப்பாக அவரது கருத்துக்களில் பல என் சிந்தனைக்கோணத்தை மாற்றியமைத்தன. அதற்காக நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இன்றும் பலவிஷயங்களில் அவர் எனக்கு மறுதரப்பாகவே இருக்கிறார். ஒருபோதும் நானும் அவரும் ஒத்த கருத்து கொள்ளப்போவதில்லை. அவருடைய தளமே வேறு. ஆனால். என் மறுதரப்பு  தீவிரமும் ஆற்றலும் கொண்டதாக இருந்தால் என்னை மாற்றியமைக்க நான் அனுமதிக்கவேண்டும் என்பதே எனக்கு நான் இட்டிருக்கும் கட்டளை.

ஜெ

 

முந்தைய கட்டுரைவிவாதம் என்னும் முரணியக்கம்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு -2