சங்கரர் உரை கடிதங்கள் 5

 

IMG_20160103_184042_1451829531525

 

அன்புள்ள ஜெ,

சங்கரர் உரையை கேட்டேன். உங்களது எந்த உரையை கேட்டாலும் ஒரு விதமான உவகை எழுந்துவரும். அது ஏன் என்று யோசித்து பார்த்தால் அந்த உவகை அறிதலில் இருந்து பிறக்கும் உவகை என்று புரியும். ஒரு புத்தகத்தை படிக்கும் போது அதில் இருக்கும் சில கருத்துக்களோ அல்லது கற்பனையோ நமக்கு மகத்தான உவகை அளிப்பது வழக்கம். படித்து முடித்து சில நாட்களுக்கு பின் நினைத்து பார்த்தால் அப்படி எது நமக்கு உவகை அளித்ததோ அதுவே பெரும்பாலும் மனதில் நிலைத்துவிட்டிருப்பது தெரியும். உங்களின் உரை அப்படிப்பட்ட உவகைகளை வரிசையாக வைத்து கட்டிய ஒரு இன்விருந்து. பூவிலிருந்து தேனை தேடி தேடி எடுத்து ருசிக்கும் தேனி அதன் ருசியை கடும் உழைப்புக்கு பின் சுவைக்கிறது. ஆனால் எந்த உழைப்பும் இல்லாமல் தேன் தொடர்ந்து விருந்தாக படைக்கப்படும் இன்பத்திற்கு எது நிகர். அப்படிபட்ட ஒரு உவகையை உங்கள் உரை அளிக்கிறது. நன்றி!

அடுத்து உங்கள் உரைகள் ஒரு மிகப்பெரிய செயலூக்கத்தை அளிக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற கனவுகளையும் லட்சியங்களையும் தருகிறது. இந்த ஊக்கத்திற்காகவே உங்களது உரைகளை பல முறை கேட்கலாம். அறிவை அளவில்லாமல் எடுத்து தரும் மனிதர்களிடம் இருந்தே இந்த ஊக்கம் கிடைக்கிறது.

உரையில் வழக்கம் போல் வரலாற்றுப் பின் புலத்துடன் சங்கரரையும், அவர் உருவாக்கிய பள்ளியையும், அதன் சமூக தாக்கத்தையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். சங்கரரை பற்றி உங்களது கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். ஆனால் இந்த உரையிலும் சரி கீதை உரையிலும் சரி இதுவரை படித்திடாத சில விஷயங்கள் எனக்கு கிடைத்தது.

இந்த உரையில் முக்கியமாக என்னை கவர்ந்தது. இதில் சிறிதளவு தத்துவ விஷயங்களுக்குள் நீங்கள் சென்றது தான். அறிபவன் அறிபடுபொருளை பார்க்கும் போது அவன் பார்ப்பது அவனது அறிவையே என்ற இந்த வாக்கியம் இதுவரை எனக்கு பொருள்படாமல் நழுவி செல்வது. ஆனால் உங்களின் உவமைகளாலும் விளக்கங்களாலும் இது தெளிவாக விளங்கியது. அறிவதெல்லாம் அறிவையே என்பது இப்போது பொருள்படுகிறது.

அறிவதெல்லாம் அறிவையே – இதை நான் மேலும் உவமைகளின் மூலம் விரிவாக புரிந்து கொண்டேன். இதற்கு நல்ல உதாரணம் உங்களின் சங்கரர் உரை ஒலிப்பதிவு. அந்த ஒலிப்பதிவே அறிவு தானே. அது அறிவாக இருப்பதாலேயே அதை நம்மால் பதிவு செய்ய முடிகிறது. அதே போல் புகைப்படம், வீடியோ எல்லாமே அறிவின் பதிவுகளே. இந்த ஒலிப்பதிவு எனக்கு அந்த உரையில் பேசப்பட்டதை பதிவு செய்து காட்டுகிறது. ஆனால் அது உண்மையின் மிக குறுகிய வடிவத்தையே அல்லது உண்மையின் விகார வடிவத்தையே எனக்கு கொடுக்கிறது. இந்த உரையில் ஒலியை தவிர மேலும் பல்லாயிர விதமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும்.  பெரிய அரங்கு, ஒளி அமைப்பு, மனிதர்கள், அவர்களின் தோற்றங்கள், எண்ணங்கள் என்று ஒரு பேரியக்கம் அங்கு ஓடிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் இந்த ஒலிப்பதிவு அதில் ஒரு சிறிய பங்கை எடுத்து எனக்கு கொடுக்கிறது. இது கூட உண்மையின் ஒரு பகுதி என்று சொல்லிவிட முடியாது. இதில் உங்கள் குரல் மாறுப்பட்டிருக்கலாம் அல்லது நீங்கள் சொல்ல வந்த கருத்துக்கள் நீங்களே அறியாமல் எங்கேனும் இடறியிருக்கலாம் அல்லது உங்கள் மனம் அறிந்த உண்மை மொழி என்னும் ஊடகத்தினால் வடிகட்டப்பட்டு அல்லது திரிபடைந்து வெளிவந்திருக்கலாம் அல்லது நம் இருவருக்கும் இருக்கும் அர்த்தப்படுத்தல்களில் உங்கள் கருத்து திரிபடையலாம். அதனால் உங்கள் மனதிலிருப்பது அப்படியே என்னை வந்து சேர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அது போல உண்மை எத்தனையோ வித வடிகட்டல்களாலும் திரிபுகளாலும் நம்மை வந்தடைகிறது.

இந்த ஒலிப்பதிவை செய்த கருவி அதன் திறனுக்கு ஏற்ப அந்த நிகழ்விலிருந்து எதை எடுத்து கொள்ள முடியுமோ எப்படி எடுத்து கொள்ள முடியுமோ அதை எடுத்து பதிந்திருக்கிறது. அதே போல் எனது புலன்களும் கருவிகள் தானே. அதன் இயல்புக்கு ஏற்ப எதை எப்படி எடுக்க முடியுமோ அதை எடுத்து எனக்கு உணர்த்துகிறது. அது ஒரு போதும் அறிபடுபொருளை எனக்கு காட்ட போவதில்லை. ஒரு மாமரத்தை நாம் பார்போமானால் அதை நமக்கு நம் புலன்கள் காட்டும் ஒரு வடிவையே நாம் காண்கிறோம். அந்த வடிவே அறிவு. ஆனால் அந்த வடிவே அந்த மாமரம் என்று சொல்லிவிட முடியாது. ஒரு நாளும் புறப்பொருளை நாம் பார்த்துவிட போவதில்லை. அதனால் தான் சைவ சித்தாந்தத்தில் புறம் என்றும் புறப்புறம் என்றும் இரு வகை புறங்கள் சொல்லப்படுகிறது போலும். நாம் காண்பது புறம். நம் அறிதலுக்கு அப்பால் இருப்பது புறப்புறம்.

முக்தி என்ற கருத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறியாமையை நீக்குதலே முக்தி என்றால் அதற்கென்று முழுவாழ்வையும் அற்பனித்து அதை முயல்வது எனக்கு அவ்வளவு அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. வாழ்வின் ரசத்தை உட்கொண்டு உயர்வான இன்பத்தில் திளைத்து மறைவதே வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதாகும்.

நல்ல உரைக்கு நன்றி.

அன்புடன்,
ஹரீஷ்

 

அன்பு ஜெயமோகன்,

சமீபத்திய உங்கள் உரைகள் கூர்மையாக இருக்கின்றன. குறிப்பாக கீதை உரைகளும், ஆதிசங்கரர் குறித்த உரையும் சமகாலத்தில் கவனம்பெற வேண்டியவை; அதிக இளைஞர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டியவை. அவ்வுரைகள் எங்களுக்கு சம்யம் குறித்த ஒரு தீர்மானமான சட்டகத்தை அளிக்கவில்லை. மாறாக, சமயத்தை ஏதாவது ஒரு சட்டகத்துக்குள் அடைத்துப் பார்க்கும் அறியாமையைத் தெளிவாக அடையாளப்படுத்தின. கடவுளை நம்புபவன் மட்டுமே சமயவியலாளனாக(மதவாதி) இருக்க முடியும் என்பதான ஒற்றைத்தளத்தை அடித்து நொறுக்கும்படியான துணிச்சலை இதுவரை நான் யாரிடமும் கண்டதில்லை. முன்தீர்மானங்களோடு வருபவர்கள் எத்தளத்தைச் சார்ந்தவர்கள் ஆயினும், கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருப்பர். உங்கள் உரைப்பயணம் இன்னும் பலதளங்களில் நீந்தட்டும்.

நான் இப்போதுகூட இந்து எனச்சொல்லிக் கொள்ளக் கூசுகிறேன். அந்த அளவுக்கு அச்சொல்லைப் புனிதப்படுத்தி வைத்திருக்கின்றன சில பிற்போக்கு இந்துத்துவ அமைப்புக்கள். அவ்வமைப்புகள் வலியுறுத்தும் சடங்குகளையும், வேள்விகளையும் நக்கலடித்துக்கொண்டு முற்போக்கு பகுத்தறிவாள அமைப்புக்கள், மற்றொருபுறம். இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஒன்று, நான் கடவுளை ஏற்றுக்கொண்டு பிற்போக்குவாதிகளுக்குக் கொடிபிடிக்க வேண்டும் அல்லது கடவுளை மறுத்து முற்போக்காளனாக சிலைக்குச் செருப்புமாலை போட வேண்டும். ஒருபோதும் கடவுள் எனும் சொல்லைக் குறித்த ஆய்வில் இறங்கி விடக்கூடாது. முற்போக்கு, பிற்போக்கு எனும் சொல்லாடல்கள் தரும் அடையாளத்தோடே வாழ்ந்து செத்துவிட வேண்டும். எப்பேர்ப்பட்ட அபத்தம்?

ஆதிசங்கரருக்கு வருவோம். பள்ளி படிக்கும் வயதில் இருந்தே ஆதிசங்கரர் என்றாலே எனக்கு கடும் வெறுப்பு. அவருடைய சிந்தனைகள், த்த்துவப்புலம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இன்றைய சங்கரமடத்துக்கு அவர்தான் அடித்தளமிட்டார் எனும் செய்தியாலேயே அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு அவர் மலையாளி என்றுவேறு சுற்றி இருந்தவர்கள் கொளுத்திப்போட்டிருந்தனர். எங்காவது யாராவது ஆதிசங்கரர் என்றாலே சண்டைக்குப் போகுமளவுக்கு உள்ளுக்குள் கோபத்தைச் சுமந்து திரிந்தேன். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு பயணித்திருந்தால் ஒழிய, அவரைப் பற்றி நான் பொதுவாகக் கேள்விப்படும் கருத்துக்கள் எல்லாம் யூகங்களே எனும் புரிதல் இப்போது வந்திருக்கிறது. வரலாற்றியலோடு உங்களைப் போன்றோர் முன்வைக்கும் கருத்துக்களில் இருந்து ஓரளவு உண்மையை நெருங்க முடிகிறது. உடனே, இப்போது ஆதிசங்கரரின் அடிமையாகி விட்டாயா எனச் சில சிந்தனைச்சில்வண்டுகள் சீண்டக்கூடும். இப்போது அவரை நான் வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. அவரின் தத்துவப்பரப்பின் வழியாக நான் பெற்ற அனுபவத்தை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேன். முன்பு என் எதிரில் இருப்பவர் நான் நினைப்பது மாதிரியே பேச வேண்டும் அல்லது நடந்து கொள்ள வேண்டும் எனத்தீர்மானமாக இருப்பேன். இப்போது அப்படி இல்லை. மேலும், பிற உயிர்களின் வாழ்வைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தியிராத நான் சில எறும்புகளுக்கு அருகே அமர்ந்து கொண்டு மனதுக்குள் அவற்றின் முதுகு தடவும் கவித்துவமும் வாய்த்திருக்கிறது. இவ்விடத்தில் தான் யார் என்று தேடச் செய்ததன் ஊடாக பல சிந்தனை மரபுகளைத் தேடி வாசிக்கத் தூண்டிய மலைக்குரு முருகனின் பாதம் பணிகிறேன்.

பிரம்மம் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் அதன் தோற்றங்கள், அத்தோற்றங்களும் மாயை போன்ற ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவ மரபு அத்வைதம். இவற்றைப் புரிந்து கொள்ளத் துவங்கும் முன்பு ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை அல்லது தத்துவம் என்பது எப்போதும் அக அனுபவத்தின் தூண்டுதலில் முன்வைக்கப்படும் அறிவுப்பூர்வமான எளிய தருக்கம்; ஒருபோதும் அதைப் புறவடிவாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது. பிரம்மம் எனும் சொல் புறவடிவு அன்று; அகஅனுபவத்தின் வழியாக ஒருவர் அறிந்துகொண்ட பேரண்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான சாரத்தைச் சுட்டும் குறியீடு. அச்சாரம் பொருளா, ஆற்றலா, அலையா, துகளா எனும் ஆராய்ச்சியைச் சிந்தனையாளர்கள் கண்டுகொள்வதில்லை; அது அத்தளத்தில் பயனுமற்றது. புரிதலுக்காக ஒரு உதாரணம். ஒரு மரம் கிளைவிட விதை, மண், சூரிய வெளிச்சம் போன்ற பலகாரணிகள் அவசியம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும், எல்லாவற்றினுள்ளும் ஊடுருவி இருக்கும் ஏதோ ஒன்றாலேயே அவை அத்தோற்றங்களாக இருக்கின்றன. ’ஏதோ ஒன்று’ இல்லாமல் அத்தோற்றங்கள் தொழிற்படா. அந்த ’ஏதோ ஒன்றை’ ஒரு சொல்லால் குறிப்பிட விரும்பினால? அப்படியான சொல்தான் பிரம்மம். சைவ சமயத்தில் அது சிவம் எனக்குறிப்பிடப் பெறுகிறது. நம் உடம்பைத் தோற்றம் எனக்கொண்டால் உயிர்தான் பிரம்மம். உயிர் இல்லாவிட்டால் உடலுக்கு மரியாதை ஏது?

அறிவால் விளக்க, விளங்கிக்கொள்ள முடியாத சொற்கள்தான் பிரம்மம் போன்றவை. என்றாலும், அச்சொற்கள் குறித்த அனுபவத்தை ஒருவர் பெற அவரைத் தூண்ட அறிவால் முடியும். அதைத்தான் நம் சமயச்சான்றோர்கள் செவ்வனே செய்திருக்கின்றனர். ”தன்னந்தனி நின்றது தானறிய / இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ” என்பது அருணகிரிநாதரின் அனுபவ அறிவு. அனுபவத்தூண்டலுக்கு உரைநடை ஒருபோதும் ஒத்துவராது என்பதலேயே சமயத்தளத்தில் கவிதைகளைக் கையாண்டிருக்கின்றனர். ஆதிசங்கரரின் காலத்துக்கு முன்பிருந்தே ஒருமைக்கருத்தை(பிரம்மம்) தமிழ்ப்பக்திபனுவல்களில் காணமுடிகிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கலம்மையாரின் சில பாடல்களைச் சான்றாகத் தருகிறேன். ”அறிவானும் தானே அறிவிப்பான் தானே”(பா.20),”அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்”([பா.21) போன்ற அவரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல்களில் அவ்வனுபவத்தைக் காணலாம்.

இனி, மாயைக்கு வருவோம். மாயை எனுஞ்சொல்லை பொய் என்பதான அர்த்ததில்தான் நாம் கையாள்கிறோம். உண்மையில் மாயை என்பது ’நிலையில்லாத தற்காலிகமான’ போக்கைக் குறிக்க வந்தது. பேரண்டம் கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது என நவீன அறிவியல் ஒப்புக்கொண்டிருக்கிறது. கடலில் எழும் அலையை மாயைக்கு உதாரணமாகச் சொல்லலாம். அலை பொய்யன்று; ஆனால் தற்காலிகமானது. கடலுக்கும் அலைக்கும் அடிப்படையான சாரம் ஒன்றை கற்பனை செய்யுங்கள். அச்சாரம் இரண்டிலும் இருக்கும்; என்றாலும் இரண்டாலும் பாதிக்கப்படாது. அது இல்லாமல் இரண்டு தோற்றங்களும் இல்லை. அதைத்தான் ’ஏதோ ஒன்று’ எனச் சொல்கிறோம். ”யாவையும் சூனியம் சத்தெதிர் ஆதலின் சத்தே அறியாது / அசத்து இலது, அறியாது / இருதிறன் அறிவுலது இரண்டலா ஆன்மா” எனும் மெய்கண்டாரின் சிவஞானபோத சூத்திரத்தைக் கவனியுங்கள். சத், அசத் எனும் இரண்டு சொற்களும் குழப்புவதைப்போலத் தெரியலாம். சத் என்பதற்குப் பதில் கடலையும், அசத் என்பதற்கு அலையையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்; மெய்கண்டாரின் அனுபவம் உள்ளுக்குள் சிலிர்ப்பாய் மாறும். இங்கிருக்கும் ஆன்மா என்ற சொல்லே நாம் முன்மொழியும் ‘ஏதோ ஒன்று’.

போதும் என்று நினைக்கிறேன். இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்களைக் குறித்த கட்டுரைகளை பலமுறை உங்கள் இணையதளத்தில் படித்திருக்கிறேன். ஏனோ நிறைவு அமையவில்லை. நேற்று, ஈரோடு விஜயா பதிப்பகத்தில் அந்நூலை வாங்கி வந்திருக்கிறேன். பல அமர்வுகளில் அதைப் படிக்க திட்டம். அந்நூலில் உள்ள சோதிப்பிரகாசத்தின் முன்னுரை சிறப்பான ஒன்று. ஆறு தரிசன்ங்களைப் பற்றிய எனது அனுபவங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன் என்றே நினைக்கிறேன்.

 

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22
அடுத்த கட்டுரைகபாடபுரம் இதழ் கட்டுரை