சங்கரர் உரை – கடிதங்கள்

1

 

ஜெ,

எப்படி இருக்கிறீர்கள்? இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சென்ற ஆண்டு நடந்த விஷ்ணுபுர இலக்கியக் கூட்டங்களில் பங்குகொண்ட புதியவர்களுள் நானும் ஒருவன். ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை எனக்கு கடிதம் எழுதுவதற்கான அவசியம் ஏற்படவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உங்கள் புனைவுலகில் தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். அதனுடன் தான் என் உரையாடல். அதன் அடுக்குகளின் விசாலங்களிலிருந்து சாமானியத்தில் வெளிவர முடிவதில்லை.

இப்பவும் இந்தக் கடிதம் எழுத மனம் இசைந்து வரக் காரணம் ஞாயிறு அன்று கோவையில் உங்கள் ‘அத்வைதம்’ உரையைக் கேட்டேன். ஒரு சிறிய மலைப்பாம்பு தன் உணவுக்குழாய்களின் அளவிற்கு சற்றும் பொருந்தாத ஒரு மாபெரும் இரையை உண்பது போல அந்த ஒன்றரை மணிநேரம் இருந்தது. அடுத்தடுத்து கனமான வாக்கியங்கள் வந்து விழுந்துகொண்டிருந்தது. ஒரு நல்ல இயற்பியல் விரிவுரையாளன் சார்பியல் கோட்பாடுகளை விளக்கும் பாங்கு உங்களின் பிற்பகுதி உரை இருந்தது.

என்னைக் கேட்டால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு தெளிவான உரை. அத்வைதத்தின் பிறப்பு, சங்கரரின் காலம், அப்போது இந்தியாவில் நிலவிய ஆன்மீக வறட்சி, ஞானயோகம் எப்படி எல்லா மதங்களையும் ஒன்று திரட்டுகிறது கடைசியாக அத்வைதக் கோட்பாடுகள் என்று ஒரு frameworkஐ உணர முடிந்தது . புனைவுகளில் காண்பது போல ஒரு மாபெரும் நிலத்தை, காலத்தை அடித்தளமாகக் கட்டிவிட்டு அதன் மேல் கோட்டைகளை எழுப்பிக்கொண்டே போகிறீர்கள்.

நீங்களே கூட கவனித்திருப்பீர்கள் அந்த ஒன்றரை மணிநேரம் ஐநூறுபேரின் கவனமும் ஒரு மையமாகக் குவிந்தது. ஒரு சலசலப்பைப் பார்க்கவில்லை நான். உரை முடிந்ததும் நச்சரவம் சிறுகதையில் வந்த அந்த பிரிட்டிஷ்க்காரர்கள் போல ஒரு மாதிரி பேதலித்துத் தான் வெளியே வந்தோம். மறுநாள் அதை மீட்டுருவாக்கம் செய்யும் போதுதான் சங்கரரின் சமூகப் பார்வை குறித்த வினாக்கள் எழுந்தது. உரையில் சண்டாளனாக சிவபெருமான் வருவது, சூத்திரர்களின் மீட்பு அத்வைதம் வழியாக நடந்தது என்று கூறினீர்கள். எனக்கென்னவோ உரையின் ஒரு கணிசமான பகுதி அத்வைத கோட்பாடுகளின் சமூகப் பார்வை குறித்து இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. சங்கரர் வெறும் ஆன்மீக விசாரணைகள் பற்றி மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தாரா என்று கேள்விகளுக்காக உங்கள் தளத்தைத் தேடிய போது ‘சங்கரப் புரட்சி’ கட்டுரை ஓரளவிற்கு பதில் சொன்னது.
உரை முடிவுக்கான சமிக்ஞைகள் எதையுமே போடாமல் ஒரு பாறாங்கல்லை கிணற்றுக்குள் போடுவது போல ழொழக் என்று நன்றி வணக்கம் கூறி கீழே ஓடிவிட்டீர்கள். மற்ற சில பேச்சுக்களிலும் இதை கவனித்திருக்கிறேன். இதைப் பாணியாகவே ஆக்கிவிட்டீரா என்ன ? ;).

விழா முடிந்து ஆர்எஸ் புரத்தில் ஒரு உணவகத்துக்குச் சென்றோம். டேபிளின் எதிர்ப்புறம் பின்நாற்பதுகள் வயது மதிக்கத்தக்க தம்பதியினர் நாங்கள் இது பற்றியெல்லாம் பேசுவதைக் கேட்டுவிட்டு, ‘தம்பி நீங்க ரெண்டுபேரும் காலேஜு ஸ்டூடண்ட்ஸா. நாங்களும் விழாவுக்கு வந்திருந்தோம் .ஜெயமோகன் சார் சொல்றாப்ல சின்னப் பசங்க இந்த லெக்ச்சர்லாம் கேக்க வர்றதைப் பார்க்க சந்தோசமா இருக்குப்பா. என் பையனும் தான் இருக்கானே, கூப்பிட்டா வர்றதே இல்லை. லேப்டாப் முன்னாடி எப்பப்பாரு உக்காந்துக்கறான். அதுல என்ன இருக்கோ !’ என்று நொந்துகொண்டு ஒரு விள்ளல் இட்லியை விழுங்கினார். எங்களால் ஆன உதவி அந்தப் பையனுக்கு கண்டிப்பாக இரவு ஒரு பெரிய வசவு உண்டு.

கிஷோர் ஸ்ரீராம்

அன்புள்ள கிஷோர்

இத்தகைய உரைகளின் சவால்கள் மூன்று. ஒன்று வழக்கமாக பக்தியுரைகளைக் கேட்டு அமர்ந்திருப்பவர்களின் கவனத்தை சுமார் ஒன்றரை மணிநேரம் பிடித்து நிறுத்தவேண்டும். இரண்டு தத்துவ அறிமுகமே இல்லாதவர்களுக்கு தத்துவத்தின் மையத்தைத் தொட்டுக்காட்டவேண்டும். கடைசியாக என் நோக்கில் இத்தகைய விஷயங்களை ஒரு விரிந்த வரலாற்றுப்பின்னணியின் வைத்து புறவயமாக அணுகவேண்டும்.

அந்நிலையில் முதல்தளத்தில் ஓர் அசைவை, கலைதலைத்தான் உருவாக்க முடியும். முழுமையாகப்புரியவைத்தல் அல்ல நோக்கம். ஒரு முன்வரைவை அளிப்பது. ஒரு தொடக்கத்தை உருவாக்குவது. அது நிகழ்ந்திருக்கிறதென நினைக்கிறேன்

ஜெ

அன்பு ஜெ ,

கீதை உரைக்கு இயல்பான தொடர்ச்சியாக வந்தது போலவே இருந்தது சங்கரர் உரை .வேதங்கள் , உபநிஷத்துகள் , பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை , அத்வைதம் என்ற வரிசையில் இந்திய நிலப்பரப்பின் மொத்த ஞானவெளியும் திரண்டு ஒரு சிறு முத்தாக உள்ளங்கையில் சேரும் பயணத்தை இந்த உரை காட்சிப்படுத்திவிட்டது .பால் தயிராகி வெண்ணை திரண்டு நெய்யாக – உருக்கி பின் நாவில் தடவியது போல .வரலாற்று நோக்கை அடித்தளமாகக் கொண்டும் சிந்தனையும் கற்பனையும் உள்ளுணர்வும் கவித்துவமும் இணைத்து முன் வைக்கும் கறாரான ஆய்வு நோக்கு மிகவும் தனித்தனிமையுள்ள ஒரு அடையாளத்தை பெற்று விட்டது , இதை உங்கள் signature style என்றே சொல்லலாம் :)

கீதையைப் போலவே சங்கரர் மற்றும் அத்வைதம் பற்றி மிக மேலோட்டமான புரிதலே எனக்கிருந்தது .இந்த உரைகளில் உள்ள முக்கிய அம்சம் அது முன்வைக்கும் கோணத்தில் இருக்கும் , வேறுபட்ட அறிதல்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் தன்மையும் அதன் மூலம் நம் புரிதலில் இருக்கும் போதாமைகளை நிரப்பக்கிடைக்கும் வாய்ப்புமே .இந்த உரைகளில் பல தருணங்களில் எனக்கு அவ்வாறு நிகழ்ந்தது .குறிப்பாக எவ்வாறு வேதாந்தத்திலிருந்து அத்வைதம் எவ்விதம் ஒரு படி மேலே போனது , இந்து மதம் திரண்டதில் ஸமர்த்தர்களின் பங்கு , இந்திய நோக்கில் சமன்வயம் , பெளத்தம் ஏன் நாட்டார் தெய்வங்களை உள்ளிழுத்துக்கொள்ள முடியவில்லை , உவமைகள் மூலம் விளக்கப்படும் தத்துவமரபு என்று நம் புரிதலை தொடர்ச்சியான வலைப்பின்னல் ஆக்குகிறது.

அதே போல இந்த உரையில் சொல்லப்படாமலேயே சில விஷயங்கள் துலங்குகின்றன.இந்து மத இணைப்புமுறையில் உள்ள நுட்பங்கள் , இந்திய ஞானமரபின் கட்டுமானம் , (distributed yet loosely coupled architecture என்று சொல்வார்களே), அதன் மைய இழை , ஒரு வலுவான அரசுக்கு ஒரு வலுவான மெய்யியல் அளிக்கும் அடித்தளத்தின் தேவை , இந்திய மதங்களுக்கெல்லாம் கலசமாக இருக்கும் அத்வைதம் மதங்களையே சாராமல் கூட தூய தத்துவமான இருக்கும் தன்மை பற்றி , அனைத்திற்கு உச்சமாக கருதப்பட்டாலும் அதில் இருக்கும் மறுக்கவே முடியாத உள்ளார்ந்த சமத்துவம் பற்றி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அத்வைதம் பற்றிய ஒரு தொடக்க அறிமுகம் விரிவாகவே இருந்தது , குறிப்பாக பெளத்தத்தை வெல்ல சங்கரர் முன் வைத்த வாதங்கள்.இதே போல மீமாம்சகர்களுடனோ , சுத்த அத்வைத, துவைத தரப்புகளுடனோ ஏற்பட்ட வாதஙகளையும் சிறிது விவரித்திருக்கலாம்.

கீதை உரையையும் , சங்கரர் உரையையும் இந்தியத்தன்மையின் ஆதாரமான சாரத்தை மையமாக்கி அமைந்துள்ளன. இந்த மையத்தை சுற்றியும் அதன் மேலும் என்னும் பல உரைகள் வரும் என்று எதிர்பார்ப்பு கூடுகிறது .சொல்லப் போனால் இவ்வுரைகளை கேட்டபின் ஒருவர் இன்றைய காந்தியை படித்தால் அதை மேலும் எளிதாக உள்வாங்க முடியும் என்று தோன்றுகிறது.

ஆஸ்திரேலியாவில் வருடா வருடம் காட்டுத்தீ வருவது வழக்கம் , இங்கு எங்கும் பரவியிருக்கும் யூக்கலிப்டஸ் மரங்கள் இந்த காட்டுத்தீயிலிருந்து சமாளித்து வளரவே சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக தோன்றும் . அதன் விதைகள் , உறுதியான வெளிக்கூடு தீச்சூட்டிற்கு உடைய வெளிவரும் தன்மை கொண்டவை . காட்டுத்தீ அணைந்த பின் தரையில் பரவும் சாம்பல் மண்ணுக்கு அடியிலிருந்து எதையும் வளர விடாது , பெரிய மிருகங்கள் எல்லாம் வேறு பகுதி தேடிப் போயிருக்கும் , விதையை உண்ணும் தரையில் ஊறும் சிறு பூச்சிகள் எல்லாம் அழிந்து போயிருக்கும் .எரிந்த மரத்திலிருந்து வெடித்து வெளியறும் யூகலிப்டஸ் விதைக்கு முளைத்து இலைவிட இதைவிட சிறந்த வாய்ப்பு அமையாது

.இந்திய ஞானமரபில் அத்வைதம் , என்றும் உள்ள ஒரு விதையாக அப்படி ஒரு தருணத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதான நம்பிக்கையை இந்த உரை கிளர்த்தியுள்ளது நன்றி.

அன்புடன்
கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்

கட்டுரைக்கும் பேச்சுக்கும் உள்ள வேறுபாடென்பது பேச்சில் முன்னால் மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே. எப்படியோ அவர்களுடனான ஒரு மானசீகமான உரையாடலாகவே உரை அமைகிறது. அவர்கள் அதை இட்டுச்செல்கிறார்கள். அதன் சாதகமும் பாதகமும் உரைக்கு உள்ளது. இந்த உரை பல திசைகளில் விரித்தெடுக்கவேண்டிய ஒரு முன்வரைவு மட்டுமே

யூகலிப்டஸ் விதை ஒரு மிகச்சிறந்த உவமை

ஜெ

 

சங்கரர் உரை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18
அடுத்த கட்டுரைஇ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015