கீதை,தான்சானியா- கடிதங்கள்

1

ஜெ

தான்சானியா கடிதம் படித்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இன்று ஆப்பிரிக்காவின் முகம் வேறு.

உகாண்டா, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ, அங்கோலா போன்ற நாடுகள், அனைத்துத் துறைகளிலும், புதிய மற்றும் பெரிய முதலீடுகளின் சொர்க்கம். இவ்வனைத்துமே வெளிநாட்டவர்களுடையது, இந்தியர்கள் உட்பட. அவர்களாலேயே இயலும்.

உங்கள் பாராட்டினைப் பெற்ற “ஏர்டெல்”, காங்கோ மக்களுக்கு தொலைத்தொடர்பு வசதியினை முழுவீச்சில் வழங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான  உள்ளுர்வாசிகள் செயலூக்கம் அற்றவர்கள். உடலுழைப்பு மட்டுமே அவர்களிடம் உள்ளது. பழகுவதற்கு இனியவர்கள்… எளிதாக நட்பு பாராட்டுபவர்கள். இங்கு கொடுக்கப்படும் கல்வி, அவர்களை எங்கும் இட்டுச் செல்வதில்லை. மது, விபச்சாரம்… அரசு அவர்கள் எவ்வகையிலும் தெளிந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது.

(தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால் இருதரப்புக்கும் நன்மை பயக்கும்).

வரலாறு மற்றும் மேலும் சில தகவல்களை இங்குள்ளவர்களிடம் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

அனுபவங்கள், மனப்பதிவுகள் செறிவாக உள்ளது. விரைவில் என் மனப்பதிவினை எழுதுகிறேன்.

மகேஷ் காங்கோ

***

அன்புள்ள மகேஷ்

‘சீராக ஒரு புறவாழ்க்கையை எழுதுவதென்பது பெரிய சவால். எழுதத்தொடங்கியபின் அதன் சிக்கல்களும் அதைக்கடந்துசெல்லும் மகிழ்ச்சியும் இருக்கும்

வாழ்த்துக்கள்

ஜெ

***

அன்பு ஜெயமோகன்,

அருண்மொழி அக்காவையும், சைதன்யாவையும், அஜீதனையும் நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள். உங்களோடு தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாகி விட்டன.

இடையில் கடிதம் எழுதத் தோன்றவில்லை. அதற்கான காரணமும் புலப்படவில்லை. எனினும், தினந்தோறும் உங்கள் இணையதளத்தின் கட்டுரைகளை வாசிக்கத் தவறுவதில்லை. வெண்முரசு தொடர்ந்து படிக்கவும் மனம் இசையவில்லை. ஒருவேளை, திடீரென்று அதை வாசிக்கத் தூண்டும் மன்வெழுச்சி அமையலாம். அப்போது திரும்பவும் வெண்முரசு கடிதங்களை ஆரம்பிக்கலாம். எப்படியாயினும், உங்கள் வெண்முரசு தொடர் நாவல் முயற்சி நாளைய சமூகத்துக்கானது. இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களுக்கு மதச்சாயம் எப்போது பூசப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு இந்து மதம் எனச் சொல்லப்படும் மதத்தின் முதன்மைக் காப்பியங்களாக அவையே தூக்கி நிறுத்தப்படுவதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால், அங்கேயே நான் தேங்கி நின்று விடவில்லை. அக்குற்றச்சாட்டைப் பொதுத்தளத்தில் வைக்கத் தயங்காதவன் எனினும் அப்பூச்சைக் கடந்து அக்காப்பியங்களை அணுகவும் நான் தயங்கியதில்லை. அவ்விரு காப்பியங்களும் நமகுத் திறந்து வைக்கும் வாசல்களில் நவீன வாழ்வின் உணர்ச்சிகளும் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்த நாட்கள் அதிகம். இத்தனைக்கும் அவ்விரண்டு காப்பியங்களையும் நான் திட்டமிட்டு வாசித்த்தே இல்லை. போகிறபோக்கில் சில பெரிய்வர்களிடம் அவற்றைக் கதைகளாகக் கேட்டிருக்கிறேன்; அவ்வளவே. இன்றும் அவ்வப்போது அக்காப்பியக் கதைகளை ஆங்காங்கு கேட்கும் வாய்ப்பு அமைகிறது.

இணையத்துக்கு வருகிறேன். வெட்டவெளியில் சம்மணமிட்டு அமர்ந்து கட்டுரைகளையும் நாவல்களையும் அச்சு வடிவில் படிக்கும்போதான பரவசத்தை ஏனோ இணையதள வாசிப்பு தருவதே இல்லை. மின் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் தரவிறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் ஒருசிலவற்றையே முழுதாய்ப் படித்திருக்கிறேன். பெரும்பாலான நூல்களை மேலோட்டமாய் மேய்ந்ததோடு சரி. அச்சு நூல்கள் அப்படியன்று; போனவாரம் கூட நண்பர் ஒருவரின் அலுவலகம் சென்று நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களை எடுத்து வந்தேன். அவற்றில் பலவற்றை எளிதில் படித்துவிட முடிந்தது. கோவை ஞானியின் தமிழர் மெய்யியல் குறித்த தமிழ் நேயம் இதழும் அதில் அடக்கம். அந்நூலை ஏற்கனவே கோவை ஞானி அவர்களின் இணையதளத்தின் மின்நூலாகத் தரவிறக்கிப் படித்தேன் என்றாலும் அச்சுவடிவில் படித்தபோது கிடைத்த நிறைவு அதில் இல்லை.

கீதை குறித்து நீங்கள் உரை நிகழ்த்த இருக்கும் இச்சமயத்தில் ஞானி எனக்கு முக்கியமானவனாகத் தோன்றினார். அவரின் “நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்”, “கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?” எனும் இரு நூல்களும் என் வாழ்வில் முக்கியமானவை. கடவுள் குறித்த தடுமாற்றங்கள் மிகுந்திருந்த காலகட்டத்தில் அவ்விரு நூல்களும் எனக்குள் சில வெளிச்சங்களை விதைத்தன. ஒரு மார்க்சியரின் பார்வையில் ஆன்மிகம் என்பதான தளத்திலிருந்து இன்னும் மேல்நகர்ந்து அவர் தன் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருப்பார். சமூகவியல், வரலாற்றியல், மானிடவியல் தளங்களை எளிமையான மொழியில் அவர் விளக்கியும் இருப்பார். அவ்விரு கட்டுரை நூல்களுக்காகவே அவரைச் சந்திக்க விரும்பினேன். சந்திப்பை உருவாக்கிக் கொடுத்தவர் புவியரசு ஐயா. கட்டுரைகளில் சந்தித்த ஞானியை எதிர்பார்த்துப் போன எனக்கு நேரில் சந்தித்த ஞானி வித்தியாசமாகத் தோன்றினார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக அவருடன் உரையாடியபோதும் கட்டுரைகளில் சந்தித்த ஞானியைப் பார்க்க முடியவில்லை. அக்குற்ற உணர்வு இன்னும் எனக்குண்டு. திரும்பவும் தமிழர் மெய்யியலை போனவாரம் படிக்கும்போது எதிர்ப்பட்ட ஞானி மனதுக்கு இணக்கமாகத் தெரிகிறார். ஒருவேளை இம்முறை சந்திக்கும் ஞானி எனக்கு இணக்கமாகக் கூடுமோ? வாழ்க்கையின் புதிர்த்தன்மையில் குழந்தைமையின் தவிப்போடுஇருப்பது சுகமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் கீதைக்கு வருகிறேன். கீதையைப் பற்றி புனிதமாகச் சொல்லப்பட்ட கருத்துக்களாலேயே அதை நான் தொடத் தயங்கினேன். ஒருமுறை என் கல்லூரிப் பேராசிரியர் ந.வெங்கடாசலம் வினோபாவின் கீதைப் பேருரைகள் நூலை எனக்குத் தந்தார். வெளியில் சிரித்துக் கொண்டும் மனதுக்குள் வேண்டா வெறுப்போடும் அந்நூலைப் பெற்று வந்தேன். கொண்டு வந்து அலமாரியில் வைத்த்தோடு சரி. அதைப் படிக்கும் எண்ணமே எழவில்லை. மனது கனத்து பாரமாய்த் தெரிந்த ஒருநாள். அந்நூலை அனிச்சையாக எடுக்கிறேன். முன்னுரையை மட்டும் படிக்கலாம் எனத் துவங்குகிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முழுமூச்சாய் அந்நூலைப் படித்துவிட்டுத்தான் எழுந்தேன். படிக்கும் முன்பிருந்த எனக்கும், படித்த பின்னான எனக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடியும். அந்நூலில் மருந்துக்குக்கூட மதம் இல்லை என்பதை உணர்ந்து வெட்கப்பட்டேன். மேலும், அவ்வுரைகள் வழியாகவே ஒற்றைத் தன்மையில் மனிதர்களை அணுகும்(என் குறிப்பிட்ட முன்முடிவுப் பார்வையில்) போக்கைக் கைவிட்டு பன்முகத் தன்மைகளில்(உலகின் பல்வேறுபட்ட சாத்தியக்கூறுகளையும் கவனத்தில் கொண்ட பார்வையில்) அவர்களைக் காணும் சித்தம் பெற்றேன். அச்சித்தமே இன்றும் நான் மனிதர்களை எதிர்கொள்ளும்போது உதவுகிறது. இவ்விடத்தில் கீதையின் வழியாக நான் சந்தித்த வினோபாவையும், நூலை எனக்களித்த பேராசிரியரையும் நன்றியுடன் வணங்குகிறேன்.

கீதை ஒரு கவிதை நூல். தத்துவத்தை அது ஒருபோதும் நேரிடையாய்ச் சொல்வதில்லை. நுண்ணுணர்வு கொண்டவர்களாலேயே கவிதைகளை நெருங்க முடியும். அவர்களாலேயே கவிதைகளில் படிமங்களாய் இருக்கும் தத்துவத்தைக் கண்டுகொள்ளவும் முடியும். அப்படி கண்டுகொள்பவர்களிடம் புனிதப்பிரதியாக கீதை இராது. ரத்தமும் சதையுமான சகமனிதனின் தோழமைக் குரலாகவே சேகரமாகி இருக்கும். மேலும், கீதை ஒருபோதும் அது எப்படி இருக்கிறதோ அப்படி நம்மைப் பார்க்கத் தூண்டுவதில்லை. மாறாக, நாம் எப்படி இருக்கிறோமோ அச்சூழலில் இருந்து தன்னைப் பார்க்க வேண்டுகிறது. அதனாலேயே கீதை நுண்ணுணர்வோடு நெருங்குகிறவர்களி ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்களைத் தரவல்ல விசித்திரம் கொண்டது. அது கீதைக்கும் பொருந்தும். இன்கு மற்றொன்றையும் சொல்லியாக வேண்டும். கீதையின் பல அத்தியாயங்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு அத்தியாயத்தோடு முரண்படுகிறேன். எனினும், அதை வாசிக்கும்போதான ஒருவிதப் பரவசத்தில் எவ்வளவு முயன்றும் நாம் கண்டறிந்து விட முடியாத வாழ்வின் விஸ்வரூப தரிசனத்தை ஒருகணம் கண்டுவிட்டதான நிறைவு. அந்நிறைவை இன்னும் அதிகம் உணர்ந்தது விஷ்ணுபுரம் நாவலில்.

எப்படி இருப்பினும் கீதை முக்கியமானது. அதிலும் முக்கியமானது உங்களைப் போன்றோர் அது குறித்து நிகழ்த்தும் உரையாடல்கள். எக்காரணம் கொண்டும் அப்படியான வாய்ப்புகளைப் புறந்தள்ளி விடாதீர்கள். நாளை யாராவது ஒருவர் உங்கள் இணையதளத்தின் கீதை கட்டுரைகளையோ அல்லது வலையேற்றப்படும் உங்கள் கீதை உரைகளையோ கேட்டுவிட்டு கீதைக்குள் நுழையலாம். கீதைக்குள் நுழைகிறவன் முதலில் அர்ஜுனனைப் பார்க்கிறான்; பிற்பாடு கிருஷ்ணனைப் பார்க்கிறான். கொஞ்ச நேரத்திலேயே அர்ஜுனன் மறைந்து அவ்விடத்தில் மனிதகுலத்தையும், கிருஷ்ணன் மறைந்து அவ்விடத்தில் இயற்கையையும். இப்படியாக ஏதாவது ஒரு காட்சி கிடைக்க. அதன்வழி அவன் வாழ்வின் சிக்கல்கள் தானாக அடங்கி ஆனந்தத்தில் திளைக்கும் குழந்தைமை அவனுக்கு கிட்டலாம்.

உங்கள் தொடர் உரைகளை நேரில் காண வாய்ப்பு அமைகிறதா எனத் தெரியவில்லை. எப்படியும் வலையேற்றுவீர்கள் என நம்புகிறேன். மற்றபடி, நான்கு நாட்களும் விழா சிறப்பாக நடைபெற மனதார வாழ்த்துகிறேன்.

அரும்பெறல் மரபில் அக்கறை கொண்டிருக்கும்,

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

***

அன்புள்ள முருகவேலன்

நலம்தானே?

கீதை உரை சிறப்பாக முடிந்தது

ஞானியை நாம் ஒரு மரபான மார்க்ஸியராக அல்ல தமிழ் மரபில் என்றும் இருந்துகொண்டிருக்கும் ஜடவாத- நாத்திக சித்தர்மரபின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கவேண்டும். அதற்கு நம் சிந்தனைமரபில் எப்போதும் ஓர் இடமுண்டு.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் தானே. சகிப்புத்தன்மை குறித்த உங்களின் கட்டுரையை இன்று தான் படித்தேன். அமெரிக்காவில் ராஜன் வீட்டில் நாம் இதைப் பற்றி விவாதித்தோம். ஏனோ இந்த விவாதம் அப்போது தொடரவில்லை. தற்போதைய சூழ்நிலையில், இக்கட்டுரையை நான் மிக முக்கியமான ஆதாரமாக ஒரு நேர்மறையான விவாதத்தை தொடங்கும் என்றே நினைக்கிறேன். உங்களுடைய இரண்டு வெவ்வேறு கட்டுரைகளை எல்லோரும் இதனுடன் தொடர்படுத்திப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.

  1. இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவரை பற்றிய உங்களின் கருத்து.

www.jeyamohan.in/56606

  1. சு.ரா வின் நினைவின் நதியில் புத்தகத்தில் சு.ரா சொன்னதாக நீங்கள் குறிப்பிட்டது. இந்திய அறிவு ஜீவி ஆங்கில எழுத்தளர்களின் அட்டகாசத்தையும், அவர்களுக்கு இந்த பொது புத்திகள் அளிக்கும் புனிதர் பட்டங்களும்.

அரசியல் சூதாட்டங்களில் இவர்கள் உருட்டும் பகடைக்கு கலை என்பது முகமூடியே. மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் வளர்க்கும் கலையை நினைத்தால் அடி வயிறு பற்றி கொண்டு தான் வருகிறது. நான் எப்போதுமே இவர்களை கூர்ந்து கவனித்திருக்கிறேன், ஒரு விசயம் தெளிவாக தெரியும். இவர்களுக்குள் எப்போதுமே கருத்தியல் ஒற்றுமை இருக்கும். யார் இவர்களில் முதலில் கருத்துகளை கூறுகிறார்களோ, அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து வழிமொழியலே. அறம் என்பது இவர்களுக்கு மதுவிற்கு போடும் பனிக்கட்டி போன்றது. சரி சகிப்பின்மை என்பது இன்று நம் முன் நிற்கும் மிகப் பெரிய சவாலே. அதற்கு மேலாக மிகப்பெரிய சவால் இந்த கும்பலின் கருத்தியல் வன்முறை.

நன்றி,

விவேக்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 8
அடுத்த கட்டுரைவிருதுவிழா, முதல்நாள்