கீதை உரை கடிதம் 2

2

அன்பு ஜெ

இன்று கீதை பற்றிய உரை உங்களை தொடச்சியாக படிப்பவர்க்கு ஏற்றதோ என்று ஐயம். உங்களது கீதை பற்றிய வரலாற்று கட்டுரைகளில் விடுபட்டவற்றை நிரப்பியது போல் இருந்தது.

இன்று உரை முடித்து வெளியே வரும்போது தான் கவனித்தேன். உரையை கேட்க வந்தவர்களில் 70 விழுக்காடு பேர் 50 வயதடைந்தவர்கள்.

வெளியே வரும் போது ஒரு முதியவர் “இவர் எங்கெங்கோ செல்கிறார். குழப்புகிறார்” என்றார்.

இன்னொருவர் “இவர்க்கு நல்ல அறிவு. அதெல்லாம் பிறப்புலயே வர்றது” என்றார்.

இது நாள் வரை கீதையை பக்தி வழிபாட்டின் கருவியாகவோ, அல்லது ஏதோ ஒரு சூத்திரத்தை

[செயலை செய், பலனை எதிர்பாராதே

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
]

கெட்டியாக பிடித்து கொண்டு தம் நம்பிக்கைகளின் படி இத்தனை தூரம் வந்தவர்களிடம் நீங்கள் புரிந்து கொண்டிருந்தது தவறு என்றுரைப்பது அவர்களிடம் மிகுந்த அவ நம்பிக்கையை உருவாக்காதா?

சரி தம் நம்பிக்கையை எவ்வளவு பேர் இந்த வயதான காலத்தில் மாற்றி அமைக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்?

உங்களது ஒரு மரம், மூன்று உயிர்கள் கட்டுரையில் சொல்வது போல் இவர்களால் மலர்களின் தேனை உண்பது சாத்தியமா?

என்னுடைய இக்குழப்பத்தினூடே இன்னொரு கேள்வியும் வருகிறது. 50 வயதை தாண்டியவர்களுக்கு பிரம்மம், மாயை தாண்டி உள்ளுணர்வு வளருவது கடினம் என்றால் ஞான மார்க்கத்தில் ஒருவர் பயணிக்க சரியான வயது தான் உண்டா?

நன்றியுடன்
கெளரிஷ்

அன்புள்ள கௌரிஷ்,

இந்த உரையிலும் சரி இதற்கான அறிவிப்புகளிலும் சரி தெள்ளத்தெளிவாகவே ஒரு விஷயம் சொல்லப்பட்டிருந்தது. இந்து மெய்யியலில் இரு பெரும்போக்குகள் உள்ளன. ஒன்று, பக்திமரபு அல்லது கர்ம மரபு. இன்னொன்று, ஞானமரபு.

பக்தியையும் கர்மத்தையும் நான் நிராகரிக்கவில்லை. அதையே மிகப்பெரும்பாலானவர்கள் ஏற்று எளிதில் ஒழுக முடியும்.ஆகவேதான் இந்துமதம் அவற்றை முதன்மைபெருமரபாக முன்வைக்கிறது.

ஆனால் இந்து மெய்யியலில் ஞானமரபு ஒன்று உள்ளது என்றே அறியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். அதன் வழிமுறைகளை அறிமுகம் செய்யவும் அதன் வழியாக ஞானநூலாகிய கீதையை அணுகவும்தான் இந்த உரை ஒழுங்குசெய்யப்பட்டது. அந்த தளத்தில் ஆர்வமோ அதற்கான அறிவுத்திறனோ அதற்கான கவனத்தை அளிக்கும் பொறுமையோ அற்றவர்கள் வரவேண்டியதில்லை என்ற அறிவிப்புடன்தான் இந்த அரங்கு தொடங்கியது.

எந்த கூட்டமும் அனைவரும் வருக என்றுதான் அழைக்கும். இந்தக்கூட்டம் அனைவரும் வரவேண்டியதில்லை, தகுதிகொண்டவர் மட்டும் வந்தால்போதும் என அறிவித்தது. நாளிதழ் விளம்பரங்களில்கூட அதைத்தான் சொல்லியிருந்தோம். இந்த உரை உங்களை சுவாரசியப்படுத்த எவ்வகையிலும் முயலாது, குட்டிக்கதைகளோ, நகைச்சுவைகளோ இருக்காது, நீங்கள் நன்கறிந்த விஷயங்களை மீண்டும் சொல்லும் உரையாக இருக்காது என்றே அறிவித்திருந்தோம்

அதை ஏற்றும் எண்ணூறு பேர் வந்ததே ஆச்சரியம். வந்தவர்கள் மறுநாளும் நீடித்தது மேலும் ஆச்சரியம். அப்படியென்றால், அவர்கள் இந்த உரைமுறையை ஏற்று இதை எதிர்பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

எழுத்துமுறையிலேயே இரண்டு போக்குகள் உண்டு. வாசகனுக்குப்பிடித்ததை அவை ஆசைப்படுவதை முன்வைக்கும் எழுத்துக்கள்,வாசக ரசனைக்கும் அறிவுத்திறனுக்கு ஏற்ப தன்னை அமைத்துக்கொண்ட எழுத்துக்கள் ஒருவகை. எழுத்தாளன் தன் அகத்தை முழுமையாக முன்வைப்பதை மட்டுமே செய்யும் எழுத்துக்கள் இரண்டாவது வகை, தகுதிகொண்டவர்களை நோக்கி மட்டுமே அவை பேசுகின்றன, வாசகனுக்காக தன்னை மாற்றிக்கொள்வதில்லை மாறாக வாசகனை தன்னை நோக்கி இழுக்க முயல்கின்றன அவை. நான் இரண்டாவது வகை எழுத்தாளன்.

என் உரையும் அப்படியே அமையவேண்டும் என நினைப்பேன். நான் கல்லூரிகளுக்குச்செல்லும்போது பேராசிரியர்கள் கூடவே வந்து ‘எங்க பையன்களுக்கெல்லாம் ஒண்ணுமே தெரியாது. தந்திப்பேப்பரையே கஷ்டப்பட்டுதான் வாசிப்பானுக. கொஞ்சம் அவனுங்களுக்கு ஏத்தமாதிரிபேசுங்க’ என்று கோருவார்கள். அதாவது அவர்களைச் சிரிக்கவைக்கவேண்டும், கொஞ்சம் நெகிழவைக்கவேண்டும்.

அதைத்தான் அத்தனைபேரும் செய்வார்கள். மேடையேறியதுமே கூட்டத்தைப்பார்த்ததும் முடிவுசெய்துவிடுவார்கள். பிரபலப்பேச்சாளர்கள் முதல் பத்துநிமிடம் சில ‘டெஸ்ட் டோஸ்’ களை அளிப்பார்கள். கதைகள், நகைச்சுவைகள், நையாண்டிகள் என போடுவார்கள். எதற்கு எதிர்வினை இருக்கிறதோ அதை அளிப்பார்கள். அவர்களே வெற்றிகரமாக அந்த அரங்கை குதூகலிக்கச்செய்வார்கள்

நான் அந்தக்கூட்டத்தில் ஒன்றோ இரண்டோ விழிகளை தேர்வுசெய்வேன். அவற்றை மட்டும் நோக்கியபடி மிகமிகத் தீவிரமாக உரையாற்றுவேன். இன்று தமிழகத்தின் ஒரு கல்லூரியில் – எந்தக் கல்லூரியாக இருந்தாலும் – நவீனச்சிந்தனைகளை எவருமே அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களிடம் ஜாரேட் டைமண்டையோ ரிச்சர்ட் டாக்கின்ஸையோ முன்வைப்பது என்பது ஒரு துணிச்சல்தான். அவை அப்படியே உறைந்துவிடும். பேசிமுடித்து கேள்விநேரத்தில் மயான அமைதி நிலவும்

பலசமயம் அவையில் ஒருவருக்குக்கூட உரை போய்ச்சேர்ந்திருக்காது. ஆனால் இன்னொரு பக்கம் உள்ளது, இப்படி ஒருவராவது பேசாவிட்டால் நம் கல்லூரிமாணவனிடம் நவீனச் சிந்தனை ஒன்று உள்ளது, நவீன இலக்கியம் என ஒன்று உள்ளது என்றே எவரும் சொல்லாத நிலை உருவாகிவிடும் அல்லவா? அவன் குழம்புகிறான் , திகைக்கிறான், பயப்படுகிறான். ஆனால் ஒரு புதிய விஷயத்தின் முன் நிற்கிறான்.

அதேதான் இங்கும். கீதை என்றால் திரும்பத்திரும்ப ஒன்றேதான் இங்கே பேசப்படுகிறது. அதற்கு அப்பால் எவருக்கும் எதுவும் சொல்லப்படுவதில்லை. இன்றைய நவீனச்சிந்தனைகளின் பின்னணியில் அறிவார்ந்த ஓர் அணுகுமுறையில் கீதையை முன்வைக்கையில் குறைந்தபட்சம் அந்தச்சாத்தியம் திறக்கப்படுகிறது அல்லவா? ஒரு திகைப்பும் நிலைகுலைவும் மட்டும் எஞ்சினாலும் அது ஒரு தொடக்கம். ஆகவேதான் மறுநாளும் வருகிறார்கள்.

என்றைக்கும் அறிவார்ந்த அணுகுமுறை மிகச்சிறிய வட்டத்திலேயே இருந்தது. அதுவே சாத்தியம். அதற்குள் சிலரே செல்லமுடியும். அவர்களை உத்தேசித்தே என் உரை நிகழ்த்தப்பட்டது. எனக்கு எவரையும் மகிழ்விக்கும் நோக்கமில்லை, நான் கேளிக்கையாளன் அல்ல.

ஆனால் அங்குகூடியிருந்தவர்களில் நான் பேசியவர்கள் மிகப்பெரிய மனஎழுச்சியையும் சிந்தனைத்தூண்டலையும் அடைந்ததாகவே சொன்னார்கள். அதைத்தான் உரைக்கு அரங்கில் எழுந்த எதிர்வினையும் காட்டியது. சிலருக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு புரிந்துகொள்வதில் இடர்பாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் அவர்கள் அதுவரை அறியாத ஏதேனும் ஒரு வாயில் திறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்

என்வரையில் அறிவார்ந்த அவைகளின் நோக்கமே அதுதான்

ஜெ

முந்தைய கட்டுரை‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2
அடுத்த கட்டுரைமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்