உபியும் பிகாரும்

1

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் கருத்தைப் பகிரவும்.

நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

ராஜேஷ்குமார் முத்தையா

அன்புள்ள ராஜேஷ்குமார்

சுருக்கமான கட்டுரை. நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் பயணம்செய்தபோது தேசியநெடுஞ்சாலைகளில் ஊர்க்காரர்கள் தடுப்புகளை நிறுவி தண்டல் வசூல் செய்வதைக் கண்டேன். எவரும் எதிர்த்துப்பேசமுடியாது. தினம் பல்லாயிரம் ரூபாய் வசூலாகும். உள்ளூர் ரவுடிகளின் பணம் அது.

சென்ற ஆட்சியில் நிதீஷ்குமார் பிகாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக அறுபதாயிரம் பேரை நியமித்தார். அவர்கள் பஞ்சாயத்துத்தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். பின்னர் தெரிந்தது அவர்களில் நேர்ப்பாதிப்பேர் ஆரம்பக்கல்வியே பெறாதவர்கள். அவர்கள் காட்டிய சான்றிதழ்கள் அனைத்தும் போலி. அவர்கள் பள்ளிக்கே வருவதில்லை

ஆனால் அவர்கள் எவரையும் வேலைநீக்கம் செய்யமுடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருமே பிகாரின் செல்வாக்கான நடுத்தரச் சாதியைச் சேர்ந்தவர்கள். பஞ்சாயத்து முதல் பாட்னா வரை அவர்களுடைய அதிகாரம்தான். அவர்கள் அளிக்கும் அந்தக் கல்விக்கு என்ன மதிப்பு? அனைத்து நிர்வாகமும் செயலிழந்த்போக வேறென்ன வேண்டும்?

பிகார் , உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களின் நிலைமையைச் சொல்லும் அங்கதநாவலான ‘தர்பாரி ராகம்’ [ஸ்ரீலால் சுக்ல] வாசித்துப்பாருங்கள்.

உண்மையான பிரச்சினை எங்கே உள்ளது? ஒருமுறை இம்மாநிலங்களில் பயணம்செய்தால் போதும், புரியும். இங்கே பண்டைய நிலப்பிரபுத்துவமுறை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. ஒரே மாறுதல் பழைய பிராமண, ஷத்ரிய நிலவுடைமையாளர்களிடமிருந்து அதிகாரமும் நிலமும் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் கைகளுக்கு வந்துள்ளது. அவர்கள் எண்ணிக்கையும் அதிகமென்பதனால் ஜனநாயக அதிகாரமும் அவர்களுக்கே.

நம்மூரின் நடுச்சாதிவெறியை முற்போக்காக சித்தரிக்கும் கும்பல் இதையே முற்போக்கான அதிகார கைமாற்றம் என்கிறார்கள். ஆனால் எந்த விதமான குணாம்சமாற்றமும் நிகழவில்லை என்பதுடன் மேலும் மோசமான ரவுடித்தனமே உருவாகியிருக்கிறது என்பதே நடைமுறை உண்மை. எங்கும் ரவுடித்தனம்தான். ஒரு சாதாரண போலீஸ் செக்போஸ்டிலேயே ரவுடி அமர்ந்து வசூல் செய்வதை கயா அருகே கண்டிருக்கிறேன்.

ஆகவே அங்கே அனைத்துமே உறைந்து நிற்கின்றன. எங்கும் ஊழல், பொறுப்பின்மை. ஒவ்வொரு ஊரும் சில அடாவடி நில உடைமையாளர் கைகளுக்குள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் கூட அவர்களால் எல்லை பிரித்து ஆட்சிசெய்யப்படுகின்றன. அவர்களே அரசு, காவல்துறை, கலால்துறை அனைத்தும் ஆக உள்ளனர். மாநிலத்தின் கல்வி, பொருளியல் அனைத்தும் தேங்கிவிட்டன

உபி பையாக்களும் பிகாரிகளும் இந்தியாவெங்கும் கூலிவேலை செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள், அல்லது நிகரான சாதியினர். லடாக்கில் உறைபனிக்குளிரில் சாலைபோடுபவர்கள் இவர்களே. கஷ்மீரில் விவசாய வேலைகள், வீட்டுவேலைகள் அனைத்தும் இவர்களே. இந்தியாவே அவர்களைச் சுரண்டித்தான் வாழ்கிறது. இன்று திருப்பூரும் கோவையும்கூட அவர்களின் ரத்தத்தால் வாழ்கின்றன.

பிகாரின் அரசியலைக் கூர்ந்து பார்க்கும் எவருக்கும் இந்த ஆதிக்கம் தெரியும். லல்லு ஆட்சியில் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்ற யாதவ அரசியலை சற்று ஓரங்கட்ட நிதீஷால் முடிந்தபோது சிறிய மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. ஆனால் அதனால் பெரிய பயனேதும் இல்லை என பிகாரை காண்கையில் தோன்றுகிறது. பிகாரின் ஒரே பணப்புழக்கம் பிற மாநிலங்களில் கூலிவேலைசெய்து ஈட்டப்படுவதே.

பிகார் தேர்தலை மதவெறிக்கு எதிரான போர் என புளகாங்கிதம் கொண்டவர்கள் இங்கே பேசாமல் தவிர்த்த விஷயம் ஒன்று உண்டு. ஒட்டுமொத்த தலித் கட்சிகளும் அங்கே பாரதிய ஜனதாவுடன் நின்றன என்பதுதான். தலித்துக்கள் பாஜக கூட்டணியில் இருந்தமையாலேயே பல உயர்சாதியினரின் வாக்குகள் பாரதிய ஜனதாக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இன்றைய நடுச்சாதிகளுக்கு எதிராகத் திரள்வதன் அரசியல் என்ன என்பதே முக்கியமானது. ஏன் அவர்கள் பாஜக ஆதரவு நிலை எடுக்கிறார்கள்? அதற்கு அவர்களைக்கொண்டுசெல்வது எது? அதைமட்டும் எந்த தேசிய ஊடகமும், அரசியல் நோக்கர்களும் விவாதிப்பதில்லை. இன்றைய இந்திய அரசியல் விவாதங்கள் அனைத்துமே நடுச்சாதிகளுக்குச் சாதகமானவை என்பதனாலேயே இந்த சங்கடமான வினாக்கள் மழுப்பப்படுகின்றன.

உபியின் பிகாரின் எதிர்காலம் அங்குள்ள இன்றைய புதிய நிலப்பிரபுத்துவம் உடைக்கப்படுவதில்தான் உள்ளது. பிகாரிலும் உபியிலும் இன்றுள்ளது இடைநிலைச்சாதி நிலப்பிரபுக்களின் அரசுகள். இவற்றை அகற்றி ஆட்சிக்கு வரும் சாத்தியம் கொண்ட பாரதிய ஜனதா முன்வைப்பதோ உயர்சாதி நிலப்பிரபுத்துவம். அவர்கள் பேசுவது இன்னொரு வகை பழைமைவாதம். ஆயினும் அவர்களுடன் தலித் கட்சிகள் இருந்தமையால் ஜனநாயகத்துக்கான ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது

சாதியரசியலை விட்டு விலகி ஒரு ஜனநாயக அரசியலை நோக்கி இம்மாநிலங்கள் செல்லமுடிந்தால் மட்டுமே ஏதேனும் மீட்பு. ஒரிசாவில் அது சாத்தியமாகியிருக்கிறது. சத்தீஸ்கரில் நிகழ்ந்திருக்கிறது. பிகாரில் இனி ஒன்றுமே நடக்காது. லல்லுப்பிள்ளைகளின் வானர அரசியல்தான் கதி

குகா சொல்வதுபோல சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் உபிக்கு மீட்பு நிகழலாம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73
அடுத்த கட்டுரைபௌத்தம் கடிதங்கள்