இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10

IMG_2679

முன்பு ஒரு வெள்ளையத் துறவியை திருவண்ணாமலையில் பார்த்தேன். ‘ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்றேன். ‘இது அணைந்த எரிமலைகளின் நாடு” என்றார். அவர் அணையா எரிமலைகள் கொண்ட ஃபின்லாந்தில் இருந்து வந்திருந்தார்.

தென்னிந்தியாவின் நிலம் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு அணைந்த எரிமலைக்குழம்புப் பாறைகளால் ஆனது. நமது கருங்கற்களில் பெரும்பகுதி லாவாதான். நாம் அணைந்த எரிமலைகளை வீடுகளாக்குகிறோம். தெய்வச்சிலைகளாக்குகிறோம்.

வாழும் எரிமலைகளின் நாடுதான் இந்தோனேசியா. இங்குள்ள பல மலைகள் எரிமலைகள். செங்குத்தான கூம்புவடிவம். மேலே குடைபோல ஒரு வெண்முகில் குவை. வெண்கொற்றக்குடைபோல

எரிமலைகளின் தூசு செழுமையான மண். ஆகவே எரிமலைகளின் அடிவாரம் நல்ல விளைநிலம். அங்கே பசுமை செழித்திருக்கும் நெல்வயல்கள் தட்டுத்தட்டாகப் பரவியிருக்கும். தீயின் மேல் எழுந்த பசுமை. தெய்வம் என்றால் இவர்களுக்கு வேறு எந்த உவமையும் தேவைப்படாது.


பௌத்த விகாரத்திலிருந்து டெய்ங் எரிமலை வளையத்திற்கு நடுவே இருந்த டெய்ங் பீடபூமிக்குச் சென்றோம். எரிமலைகளின் சாம்பலால் ஆன இந்த பீடபூமி மிக வளமான மண். மழையும் அதிகம். ஆகவே பசுமைவெளி

காரில் சிறிய விவசாயக்கிராமங்கள் வழியாகச் சென்றோம். வறுமை இருந்தது, ஆனால் இந்தியாவில் நாம் காணும் பரிதாபகரமான வறுமை எங்கும் கண்ணுக்குப்படவில்லை. வீடுகள் சீரானவை. சாலைகள் மிகமிகச்சீரானவை.

இந்தியாவிலுள்ள குப்பை கந்தல் கொண்டு கட்டப்பட்ட குடியிருப்புகளும் சாக்கடைகள் ஒழுகும் தெருக்களும் உடைந்து சிதைந்த பெருஞ்சாலைகளும் உலகில் வேறெந்த நாட்டிலாவது இன்று உள்ளனவா? நான் எங்கும் இதுவரை பார்க்கவில்லை.

பௌத்த மடாலயத்தில் பிக்கு என்னிடம் கேட்டார். ‘இந்தியா எங்களுக்கு புனித மண். புத்தர் பிறந்த ஞானபூமி. எங்கள் நாட்டுக்கு ஞானமும் கலைகளும் வேளாண் தொழில்நுட்பமும் மருத்துவமும் அங்கிருந்துதான் வந்தன. ஆனால் இந்தியா வரும்போதெல்லாம் என் மனம் கனத்துப்போகிறது. ஏன் இத்தனை வறுமை? இத்தனை இழிவான வாழ்க்கை? எந்த ஒழுங்கும் இல்லாத அராஜகம்? ”

“எவருக்கும் அறநெறி என ஏதுமிருப்பதுபோலத் தோன்றவில்லை. விருந்தோம்பல் என்பதே கிடையாது. எவரையுமே நம்பக்கூடாது என்று சொல்லித்தான் இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை அனுப்புகிறார்கள். இந்தியாவிலுள்ளவர்களே அப்படித்தான் எச்சரிப்பார்கள். ”

“இருந்தும் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஏமாறுகிறோம். சென்றமுறை ஒருவேளை சாப்பாட்டுக்கு எங்களிடம் ஒருவருக்கு ஐநூறு ரூபாய்வீதம் வசூலித்தார் ஔரங்காபாதில் ஓர் ஓட்டல்காரர். அங்கே இருக்கும் விலைக்கு பத்துமடங்கு அது என்றார்கள். ஏன்? என்ன நிகழ்ந்தது அங்கு?”

”ஓர் எழுத்தாளனாக அதற்குத்தான் விடைதேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன். முன்பெல்லாம் வரலாற்றை, அரசியல்வாதிகளை பழிசொல்லும் மனநிலை கொண்டிருந்தேன். ஆனால் இந்தியாவின் பொதுமக்களின் அறமில்லாத தன்மை மேலும் மேலும் கண்ணுக்குப் பட்டபடியே இருக்கிறது இன்று.

தனிமனிதர்களாக நாம் நல்லவர்கள். ஆனால் ஒரு சமூகமாக அறம் என்பதில் நம்பிக்கையை இழந்துவிட்டோம். மீறலில் மட்டுமே சுவை காண்கிறோம்.


பிரச்சினை இவர்களிடம்தான். இதை இவர்களுக்குச் சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்கள் இல்லை. மதத்தலைவர்கள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்பவர்களே உள்ளனர்

விடுமுறைநாள் ஆதனால் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்களின் முகங்கள்தான் வேறு. மற்றபடி கேரளத்தில் ஒரு கிராமம் என்றால் நம்பமுடியும். பெண்கள் தலையில் துணி மட்டும் போட்டபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இங்கு கிராமங்களில் புர்க்கா என்பதே இல்லை. ஆனால் மெல்லமெல்ல வஹாபியம் பரவி அது நகரங்களில் வந்துகொண்டிருக்கிறது. இந்தோனேசியாவை நாம் இன்று காண்பதுபோல காணமுடியாமலாகலாம்

இங்குள்ள கந்தக ஏரி முக்கியமான சுற்றுலாத்தலம். எரிமலையிலிருந்து வந்த கந்தகம் மழைநீரில் கரைந்து தேங்கிய நீர். இது மூன்றுவண்ணங்களில் இருக்குமாம். அடர்நீலம், பச்சை, மஞ்சள்பச்சை.

நாங்கள் செல்லும்போது ஏரியில் கால்வாசி நீர்தான் இருந்தது. இங்கே ஜூன்மாதமே மழைக்காலம். அப்போது இந்த ஏரி அரியதோர் அழகுக்காட்சியாக இருக்கும் என படங்கள் காட்டின.

ஏரியின் நீரில் கந்தக வாசம் அதிகம். மீனோ பிற உயிர்களோ இல்லை. ஆகவே பறவைகளும் இல்லை. ஓர் அமிலக்குழிதான் இது. வேறுபாடுதான் இதன் அழகுபோலும்

ஏரிக்கு சுற்றும் காதலர்கள் அமர்ந்துபேசும் இடங்கள். அப்போதும் நிறைய காதலர்கள் வந்து அமர்ந்திருந்தனர். இஸ்லாமிய அதட்டல்கள் ஏதும் இன்னும் வரத்தொடங்கவில்லை.

சுற்றிலும் பலவகை சுற்றுலா ஏற்பாடுகள் உள்ளன. அதிலொன்று கம்பியில் தொங்கியபடி கந்தக ஏரிக்கு மேல் பறந்துசெல்வது. வெள்ளையர்களை உத்தேசித்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்

டேய்ங் சமவெளிக்கு மேலெ உள்ள சிகிடாங் எரிமலை முகடுக்கு ச் சென்று அதன் வாய்க்குள் இறங்கினோம். இந்தோனேசியாவில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வரும் எரிமலை வாய்வட்டம் இதுவே.

சற்று குளிர் இருந்தது ஒரு ஜெட் விமானம் செல்வதுபோல ஒலியெழுந்தபடியே இருந்தது. ஜெட் என்றே நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது, அது எரிமலை வாயின் சீறல் ஒலி

அருகே நெருங்க முடியாது. அங்கே குழாய்கள் மூலம் நீர் கொண்டுசென்று ஆவியாக்கி மின்சாரம் எடுக்கிறார்கள். அதற்குச் செல்லும் சுரங்க வழிகள் உள்ளன. அங்கு கந்தகக்குழம்பு கொஞ்சமாகப்பீறிடுகிறது

இன்னொரு வாய் சற்றுச் சிறியது. லாவா வருவதில்லை. ஆனால் ஆழத்திலுள்ள சூடான பாறைகளில் படும் நீர் மிகுந்த வெப்பத்துடன் பீய்ச்சியடிக்கிறது. ஆவியாகி கந்தகப்புகையுடன் கலந்து வெண்முகில் போல எழுகிறது

சின்னவயதில் சமையலுக்குச் செல்வேன். ஆகவே பிரம்மாண்டமான உருளியில் அடைப்பிரதமன் கொதித்துக் குமிழியிடுவதுபோலவே அந்த கொதிக்கும் குழி தோற்றமளித்தது. செம்மண்ணும் கந்தகமும் கலந்த குழம்பு.

அதன் ஆவியை காற்று அள்ளி ஒருபக்கமாக வீசுகிறது. மறுபக்கம் நின்று அதைப்பார்க்கமுடியும். அதைப்பார்க்கையில் அதற்கு உயிருண்டு என்னும் எண்ணம் ஏற்படுகிறது. எதையோ சொல்லத்துடிப்பதுபோல. விம்முவதுபோல

வழிந்த கந்தகம் மஞ்சள்நிறமாக பாறையாகியிருக்கிறது. கந்தகநீர் கீழிறங்கி சிறிய ஓடையாக வழிகிறது. ஆனால் எரிமலைச்சரிவுகள் மிகமிக பசுமையானவை. உண்மையில் இவை வெளியிடும் கரியமிலவாயுவும் கந்தகமும் செடிகளுக்கு உகந்தவை

இந்த எரிமலை புகைக்கு அடியில் மக்கள் இத்தனை செறிவாக வாழ்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியம்தான். உணவு எங்குள்ளதோ அங்கே உயிர் செழிக்கிறது. சீனிப்படலத்தில் எறும்பும் ஈயும்போல

அதேபோன்ற கந்தகக்குழிகள் கலிஃபோர்னியாவில் மௌண்ட் லாசன் எரிமலை மேலே இருந்ததைக் கண்டிருக்கிறேன். நான் கண்ட முதல் எரிமலை அது. டெவில்ஸ் கிச்சன் என்று அதற்குப்பெயர். இக்குழி மேலும் பெரியது.

எரிமலையின் வாய்க்குள் சுற்றிவருவது ஓர் அரிய அனுபவம்தான். எறும்புகள் அடுப்பில் வைக்கப்பட்ட பானையில் ஆனந்தமாகச் சுற்றிவருவதுபோல. அறியாமையின் ஆனந்தம். விடுதலை.


டெய்ங் எரிமலைப் பீடபூமியில் பாண்டவர் ஆலயங்கள் என்னும் சிறிய ஆலயங்கள் உள்ளன. அர்ஜுனன் பீமன் கடோத்கஜன் ஆலயங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவையனைத்துமே சிவன் கோயில்கள்

ஒருகாலத்தில் இந்த எரிமலைப்பகுதி முழுக்கவே சிவனுக்குரியதாகக் கருதப்பட்டது. எரிதூணாக எழுந்தவன். நாநூறுக்கும் மேல் ஆலயங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது ஏழு ஆலயங்களே எஞ்சியிருக்கின்றன

மாமல்லபுரத்தில் உள்ளதுபோன்ற பல்லவ பாணி கோயில்கள். ஆரம்பகட்ட திராவிடபாணி என்பார்கள். கலிங்கத்திலிருந்து இங்கே வந்து அரசாண்ட கலிங்க வம்ச அரசர்களால் ஆறு, ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை இவை. மாமல்லபுரம் ஆலயங்கள்போலவே இவையும் பஞ்சபாண்டவர் பேரால் வழங்கப்படுகின்றன.

ஒற்றைக் கருவறை. மேலே சிறிய கோபுரம். உள்ளே பீடத்தில் கருவறைத்தெய்வம். முகமண்டபம் கூட கிடையாது. நிறுத்திவைக்கப்பட்ட தேர்கள் போன்றவை இவை. ஹம்பியில் ஒரு பாறைச்சரிவில் இதே போன்ற ஆலயங்கள் உள்ளன

அர்ஜுனா கோயிலின் அருகே இருட்டுவது வரை அமர்ந்திருந்தோம். இந்தியாவிலிருந்து வந்து முளைத்து கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்த இந்துமதம் வெறும் கல்நினைவுகளாக மாறிவிட்டிருக்கிறது

கிட்டத்தட்ட இதேகாலகட்டத்தில்தான் மலேசியாவும் இஸ்லாமியமயமானது. இந்தியா அதன் பிரம்மாண்டமான மக்கள்தொகையால், சிக்கலான சாதியமைப்பால், பழங்குடிவேரால் தாக்குப்பிடித்தது என தோன்றியது

காரில் இருளில் திரும்பும்போது தூக்கம் வந்து அழுத்தியது. ஒரு கார் பல்லவர் காலகட்டத்திற்குள் பறந்து சென்றுகொண்டிருக்க முடியும். நூற்றுக்கணக்கான சிறிய கற்கோயில்கள் இருளுக்குள் நிரைவகுக்க முடியும். ஒவ்வொன்றும் ஒரு காலம். ஒரு கனவின் விதை.

Dieng Plateau, Sikidang & Arjuna Temple

முந்தைய கட்டுரைடப்பிங்
அடுத்த கட்டுரையாருடைய கலை?