தமிழ் இந்துவுக்கு நன்றி

venk_2594320f

தொண்ணூறுகளில் இராம சம்பந்தம் தினமணியின் ஆசிரியராக இருந்தபோது அவருக்கு நான் இரு மலையாள நாளிதழ்களை அனுப்பி கூடவே ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தேன். மறைந்த மலையாள எழுத்தாளர் ஒருவருக்கு மனோரமா, மாத்ருபூமி இரு பத்திரிகைகளும் எழுதிய அஞ்சலித்தலையங்கங்கள் அவை.

முன்னர் ஒரு தமிழ் எழுத்தாளர் மறைந்தபோது தினமணி மிகச்சிறிய செய்தியை வெளியிட்டிருந்தது. அதே நாளிதழில் தினமணியில் பிழைதிருத்துநராக வேலைபார்க்கும் ஒருவரின் வயதான தந்தை மறைந்த செய்தி அதைவிடப்பெரிய செய்தியாக வெளிவந்திருந்தது. அதைச்சுட்டிக்காட்டி நான் எழுதியபோது ‘செய்திதானே வெளியிடமுடியும்?’ என்று சம்பந்தம் எனக்கு எழுதினார். அதற்கு நான் அளித்த பதில் அது.

மலையாள நாளிதழ் வெளியிட்ட செய்திகளும் தலையங்கங்களும் தினமணியின் மனநிலையை ஓரளவு மாற்றின. அதன்பின் எழுத்தாளர்கள் மறைந்தபோதெல்லாம் தினமணி அன்ஞ்லிக் கட்டுரைகளை வெளியிட்டது. சிலசமயம் நான் அஞ்சலிக்கட்டுரைகளை அன்றே எழுதி உள்ளூர் தினமணி நிருபரிடம் கொடுத்து மறுநாள் செய்தியுடன் அஞ்சலிக்கட்டுரையையும் வெளியிட ஏற்பாடு செய்தேன். அவை சூழலில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணின என்று பின்னர் பல வாசகர்களின் பேச்சுகள் காட்டின.

ஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்தது, எழுத்தாளர் பற்றியும் இலக்கியம் பற்றியும் செய்திவெளியிட மிகப்பெரிய தடை அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் துணைஆசிரியர்கள்தான். அவர்கள் பலவகை. பெரும்பாலானவர்கள் எதுவும் வாசிப்பதில்லை. ஆகவே எழுத்தாளர்கள் என்றால் யாரென்றே அவர்களுக்குத்தெரியாது. சிலர் தங்களை பெரிய எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் அழுக்காறுகொண்ட சோட்டாக்கள். சிலர் கொள்கைப்பிடிப்பு என்ற பேரில் வன்மங்களை சுமந்தலைபவர்கள். மாற்றுக்கொள்கைகளை அமுக்குவதை அறிவுலகப்பணி என நினைப்பவர்கள்.

இராம சம்பந்தம் விலகியபின் தினமணி மீண்டும் பழைய பாணிக்கே திரும்பியது. நிலையவித்வான்களின் பள்ளிகூட பாணி கட்டுரைகளால் நிறைந்துள்ளது அது. எப்போதாவது பார்க்கநேர்ந்தால் சலிப்புடன் தூக்கிவிசும் தரம்.

தமிழ் இந்து நாளிதன் இலக்கியம் கலைகள் சிந்தனை ஆகியவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழில் மிகப்பெரிய பாய்ச்சல் என நினைக்கிறேன். பிற ஊடகங்களுக்கும் இது ஒரு கட்டாயத்தை அளிக்கிறது. தமிழில் எழுதுபவர்கள் பரவலாக அறியப்பட வழிவகுக்கிறது

வெங்கட் சாமிநாதனுக்கு இன்று தமிழ் இந்து நாளித தலையங்கம் மூலவும் அவரது கட்டுரை ஒன்றை மறுபதிப்பு செய்வதன் மூலமும் செய்துள்ள அஞ்சலி நெகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. சிந்தனைகளும் இலக்கியமும் மக்களுக்கு இயல்பான ஆர்வத்தை ஊட்டுவன அல்ல. அறிவார்ந்த தளத்தில் அவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டுமே அவை வாழும். ஆகவே ஊடகங்களுக்கு கலையிலக்கியங்களையும் சிந்தனைகளையும் முன்னிறுத்தும் பொறுப்பு உள்ளது. தமிழ் இந்து ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.நன்றி

வெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்!

காந்தியைப்பார்த்தேன் வெ சா

முந்தைய கட்டுரைசொல்புதிது வெ.சா சிறப்பிதழ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40