ராஜ்மோகன் காந்தி கடிதங்கள்

ஜெ..

அருந்ததி ராயின் நேர்மையின்மை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சுனீல் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது.

அதைவிடவும், அபாயகரமாகத் தோன்றுகிறது அஜித் தோவலின் பேச்சு. ஏனெனில், அவர் இன்றைய அரசை, அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார்.

அருந்ததி ராய், காசுக்காக எழுதியிருந்தாலும், அது ஒரு பிரச்சாரமாக இருக்கும். அதனால், ஏமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்.

ஆனால், இவரின் குரல் அரசின் குரல். வரலாற்றை மாற்றி எழுதும் அதிகார பீடத்தில் இருந்து எழுப்பப்படுகிறது.

இக்குரலுக்கான நமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்?

http://satyavijayi.com/gandhis-quit-india-movement-flopped-says-ajit-doval-and-credits-bose-for-independence/

பாலா

அன்புள்ள பாலா

அஜித் தோவலின் குரல் ஒன்றும் புதியது அல்ல. அறுபதாண்டுக்காலமாக வங்காள மார்க்ஸிய – முற்போக்கு அறிவுஜீவிகளால் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கப்பட்டதுதான் இது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இதைச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காணலாம். அதை அரசின் குரல் என எண்ணுவதெல்லாம் உங்கள் விருப்பம். இங்கு என்றுமுள்ள குரல். இடதுசாரி வலதுசாரிகளால் என்றும் எழுப்பப்படும் இதை எதிர்கொள்வதும் மிக எளிது.

அருந்ததி ராய் அறிவுஜீவி என ஊடகங்களால் முடிசூட்டப்பட்டவர். அவரது முதிர்ச்சியோ அறிவுநேர்மையோ இல்லாத கருத்துக்களின் அழிவுச்சக்தி அதிகம். அருந்ததியை நியாயப்படுத்த நீங்கள் அஜித் தோவலைச் சுட்டிக்காட்டவில்லை என நினைக்கிறேன். இரண்டுபேரையும் ஒரே தரப்பாகவே நான் காண்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

நீங்கள் கனடாவிலிருந்து வந்தவுடன் இந்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அச்சாகி வெளிவந்து விட்டது. தமிழ் இந்துவில் ஏதோ சில காரணங்களால் இந்த பிரசுரம் தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்தார்கள். இப்போதுதான் பிரசுரித்தார்கள்.

இந்த நூலை பொறுத்தவரை சென்னை காந்தி ஸ்டடி செண்டர் அண்ணாமலை அவர்கள் தான் ராஜ்மோகனோடு தொடர்ந்து பேசி தமிழ் பதிப்புரிமையை பெற்று தந்தார். அருந்ததியின் நூலை வெளியிட்ட காலச்சுவடும் நூலை கொண்டுவர விருப்பமாகவே இருந்தார்கள். பதிப்புரிமை சர்வோதயா வசமிருந்ததால் அவர்கள் வெளியிட்டார்கள். கொஞ்சம் காலதாமதம் ஆனதென்னவோ உண்மைதான்.

மற்றபடி காந்திய புத்தகங்களை அச்சுக்கு கொண்டுவருவது பெரும் சவால் தான். அதற்கான சந்தை மிகக்குறைவு. மேலும் ஒவ்வொருவருடமும் காந்தியின் பேரால் புத்தகங்கள் எழுத பட்டுக்கொண்டே இருக்கின்றன. எவை தரமானவை என்பதை வாசகர் அறிவதும் சிக்கல். இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுக்கும்போது, இணையத்தில் இருக்கிறதே வாசித்துகொள்ளலாம் எனும் மெத்தனம் என பலகாரணங்கள். மிலி போலாக் புத்தகத்தை கொண்டுவரத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இப்போது அதையும் சர்வோதயா கொண்டுவர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

அன்புடன்

சுனில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 5