பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்

suvenugopal_thumbnail

பதாகை இவ்விதழ்  சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி. இருவகைகளில் இது பயனுள்ளது. அப்படைப்பாளியை கூர்மையாகப்புரிந்துகொள்ள உதவுகிறது. அப்படைப்பாளியை சமகாலம் எப்படிப்புரிந்துகொண்டது என அறிய முடிகிறது

சு.வேணுகோபாலின் நீளமான பேட்டியை மட்டுமே வாசித்தேன். முக்கியமான ஆவணம் அது. எப்போதும்போல நேரடியாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு கலைஞனாக சமூகத்தின் வலிகளை இருள்களை நோக்கிச்செல்லும் அவரது பார்வையைக் காணமுடிகிறது

ஜெ

http://padhaakai.com/

*

சு. வேணுகோபாலின் -சிறுகதைகள் மிகப் பெரும் துக்கத்தை ஏற்படுத்தின.. அவற்றில் சிலவற்றை மனதார வெறுத்தேன். படிக்க முடியாமல் வெளியேறியிருக்கிறேன். இந்த நேர்காணலைப் படித்த பின் தெரிகிறது – அவரில் நானும் இருக்கிறேன்.

சிறு பொருளாதாரச் சூழலை, கல்வியென்னும் கடவுச் சீட்டில் கடந்த பின்பு என் மனது பார்க்க விரும்பாத பக்கம் அது. மிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய சிறுகதைகள்.

ஆனால், நேர்காணலில் ஒரு உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் – இலக்கியத்தின் வளர் நுனியில் இருக்கும் இலக்கியவாதிகள் அனைவரும் கொண்டிருக்கும் ஒரு வாதம் – கணினிக்கு மாற மறுக்கும் பிடிவாதம் – பல காரணங்கள் இருக்கிறது – நாஞ்சில், கணிணியில் எழுதுவது ப்ளாஸ்டிக் பொம்மையைப் புணர்வது போலிருக்கிறது என்பார்.. இவருக்கு இன்னொரு காரணம். எங்களூரில் அதை மொடமசுரு என்பார்கள்.

கண்ணெதிரே கணிணித் தொழில் நுட்ப உதவியுடன் ஜெயமோகன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாதனையைப் பார்த்தும் மாற விரும்பாத நெருப்புக் கோழி மனநிலை இது. கணிணி யில்லையேல் வெண்முரசு இல்லை.

இதை மேலாண் அறிஞர் ஸ்டீஃபன் கவி, தனது 7 habits of highly effective people – புத்தகத்தில், sharpening the saw என்றொரு கதை மூலம் விளக்குகிறார். இரு மரம் அறுக்கும் நபர்கள் மரம் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ரம்பம் தேய்ந்து போய், மொண்ணையாக, அறுக்கும் வேலை பாதிக்கப் படுகிறது. ”அய்யா கொஞ்சம் வேலையை நிறுத்தி விட்டு, ரம்பத்தைக் கூர் படுத்திக் கொள்ளக் கூடாதா” என்பதற்கு, “எங்களுக்கு நேரமில்லை” என்னும் பதில் வருகிறது.

மேலாண் நிறுவனங்களில், திறன் கூர் தீட்டிக் கொள்ளுதல், வேலையின் ஒரு பகுதியாகக் கருதப் படுகிறது. செயல் திறன் (efficiency improvement) மேம்பாடு, செலவு பிடிக்காத ஒரு விஷயம். தேவையெல்லாம், சம்மந்தப்பட்டவரின் மன மாற்றம் மட்டுமே. அதற்காகச் செலவிடும் நேரத்தை, பின் வரும் பயன் பன்மடங்கு ஈடுகட்டிவிடும்.. யாரேனும் சொல்ல வேண்டும்.

பாலா

முந்தைய கட்டுரைமதங்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி…