மலையுச்சியில்

இந்திரநீலம் முடிந்ததும் ஆரம்பத்திலிருந்தே நாவலை நினைவில் ஓட்டினேன். நான் செவ்வியல் ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவன். வெண்முரசு நாவல் வரிசையும் செவ்வியல் படைப்புகள்தான். ஆனால் முற்றிலும் திட்டமிடாமல்தான் அத்தனை நாவல்களும் எழுதப்படுகின்றன. முதலில் ஒரு திட்டம் இருக்கிறது, தொடங்குவதற்கான ஒரு தைரியத்துக்காக மட்டுமே அது தேவைப்படுகிறது. தொடங்கியபின் அது தன்பாட்டுக்கு இழுத்துச்செல்கிறது. கதைப்போக்கை, படிமக்கோப்புகளை, மொழியை என்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

ஆகவே அதில் திட்டமிடல், விவாதம் எதற்கும் இடமில்லை. உண்மையில் நாவல் எழுந்துவிட்டபின் எழுதுவதைப்போல சுலபமான வேலையே வேறில்லை. மூச்சு போலத்தான். ரயில்நிலையங்களில், விமானநிலையங்களில் எங்குவேண்டுமானாலும் எழுதலாம். முந்தைய அத்தியாயம் முடிந்ததுமே அடுத்த அத்தியாயம் வந்து நின்று துடிக்கும். எழுதாமல் தவிர்த்து அடுத்த வேலைக்குப் போவது மட்டுமே இம்சை. அமெரிக்கப்பயணம் முழுக்க வெண்முரசு உள்ளே வந்து நின்று இழுத்துக் கொண்டே இருந்தது. நண்பர்கள், நிலக்காட்சிகள் அனைத்திலும் என்னை இழுத்துப் பிடுங்கி செலுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஓரளவு அரைக் கவனமாகவே எப்போதும் இருந்தேன்.

ஆனால் ஒரு நுணுக்கமான தெளிவான திட்டம் என் ஆழ்மனதுக்கு இருந்திருக்கிறது என்பதை நாவல் முடிந்தபின் உணர்கிறேன். முதலிலேயே விருத்தகன்யகையின் தவம் வந்துவிட்டது. ஆகவே இது கண்ணனுக்கான தவத்தின் கதை மட்டுமே என என் அகத்துக்குத்தெரியும். ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாக ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருக்கிறது. இறுதி அத்தியாயங்களில் ஸ்ரீசகஸ்ரத்தில் பாற்கடலில் இருக்கிறார் கிருஷ்ணன். அலைகடல் கொந்தளிப்பு பால் பால் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக அதை நெருங்கும்போது ஆக்ஞா சக்கரத்தில் உருவாகும் கள்வெறி , மதுநமக்கு மதுநமக்கு என பாரதி பாடிய நிலை, அமைந்திருக்கிறது. அதை வெளியாகி இருநாட்கள் கழித்தே நானே அறிகிறேன்.

இவ்வாறு அமைவது பெரும் கொந்தளிப்பை அளிக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால் அதிலிருந்து இறங்கியதுமே மீண்டும் அமையுமா என்னும் பதற்றம் வந்து சூழ்ந்துகொள்கிறது. அமையாவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. இது முழுக்க முழுக்கத் தற்செயலான ஒன்று, கனவுபோல. இதை நான் நிகழ்த்தமுடியாது. என் திறமை பயிற்சி என எதற்குமே இங்கு பங்கேதுமில்லை. அப்படியென்றால் வராமலாகிவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்தலில் எழும் பதற்றம் இனிமேல் வராதோ என்னும் ஐயமாக மாறுகிறது. ஓரிருமுறை முயன்று தோற்றுவிட்டால் பிறகு எழுத அமர்வதற்கே பயமாகிவிடும். அதைத்தவிர்க்கவே தோன்றும்.

கிருஷ்ணனிடம் பேசினேன். ‘எழுதுங்க ஜெ, இதுவரை வந்தது இனிமேலா வராம இருந்திரப்போகுது” என்றார். நான் சொன்னேன், மலையுச்சியிலிருந்து குதிக்கவிருக்கிறேன். நூறடியில் வலுவான வலை இருக்கிறது என புத்திக்குத்தெரியும். ஆனால் அதை கண்ணால் பார்க்க முடியவில்லை. அந்தத் தயக்கம்தான். புத்தி மனதை சமாதானப்படுத்தவேண்டும். அது முடியாது. சிறந்த வழி கண்ணைமூடிக்கொண்டு குதிப்பதுதான்’

ஆகவே முதலில் தலைப்பை வைத்துவிட்டேன். தினமும் கணிப்பொறி முன் அமர்ந்து ஆனால் உள்ளே நுழையாமல் திரும்பிக்கொண்டிருக்கிறேன். பதற்றமும் எரிச்சலும் தனிமையும் பயமுமாக அலைக்கழிகிறேன். இந்த பத்துப் பதினைந்துநாள் இருட்டைக் கடந்துவிட்டால் எல்லாம் வெளிச்சம்தான்.

முந்தைய கட்டுரைஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்