ஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு

செய்க தவம், அன்பிற்சிறந்த தவமில்லை.

-சுப்ரமண்ய பாரதி-

இனிய ஜெயம்,

தங்கைக்கு எடை மிக குறைவாக இருக்கிறது. எடை கூட்டும் முயற்சிகள், மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் அவளுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். காலை டாக்டர் ”நீங்கதான் உங்க தங்கச்சிக்கு கான்பிடன்ட் அப்டின்னு பாத்தாலே தெரியுது. கொஞ்சம் கூடவே இருங்க” என்றுவிட்டு சென்றார். வேறு எங்கே போகப் போகிறேன்? அவள் வலியில் கொஞ்சத்த வாங்கிக்கங்க என்று சொன்னால்தான் சிக்கல். அம்மா தங்கைக்கு துணையாக உடன் இருக்கிறார்கள். அம்மா யாருக்கும் கிடைக்காத என் அபூர்வ அம்மா. இந்த ஜிப்மர் தினங்களில் என் அம்மா இன்னும் அணுக்கமாகத் தெரிகிறார்கள். நேற்று அம்மா வீட்டில் இருக்கும் தங்கை குழந்தைகளுக்கு [மகள் ஐந்தாவது, மகன் இரண்டாவது படிக்கிறார்கள்] கடிதம் எழுதித் தந்தார்கள். பதிலுக்கு குழந்தைகள் அம்மாவுக்கு கடிதம் எழுதித் தந்தார்கள். அந்தக் கடிதம் இப்படி முடிகிறது. பாட்டிக்கு உம்மா உம்மா உம்மா. எழுத்து முத்தத்தின், அன்பின் ஈரம் சுமந்த கடிதம். ஜிப்மரில் அம்மா எப்போதும்போல தனது அன்பு ராஜாங்கத்தை ஸ்தாபித்து விட்டார்.

தங்கை வார்டில் வசிக்கும் அத்தனை நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் இப்போது அம்மாவின் நண்பர்கள். நர்சுகள் டாக்டர்கள் என அனைவருக்கும் அம்மாவின் மீது தனி கரிசனம். காரணம் நர்சுகளுக்கு துணையாக நோயாளிகளை பராமரிப்பது, பணியாளர்களுக்கு துணையாக அவர்கள் பணிகளை பகிர்ந்துகொள்வது என அம்மா அவர்களின் இயல்பால் அங்குள்ளோருக்கு நெருக்கமாக ஆகி விட்டார்கள்.பாண்டேஜ் துணிகள் வெட்டுவது, குப்பைக் கூடைக்கான பாலித்தின் பைகளை மடிப்பது, வலியில் முனகும் குழந்தயை உறங்கவைப்பது, அதன் அம்மாவுக்கு ஆறுதல் சொல்வது, ஏதேனும் முதியவருக்கு மருந்தளிப்பது என நான் பார்க்கும்போதெல்லாம் அம்மா எதோ ஒரு பணியை செய்துகொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் இந்தியாவின் பெரும்பான்மை நோயாளிகள் வந்து கூடும் இடம். எத்தனை பணியாளர்கள் இருந்தாலும் போதாது.

தினமும் எதோ ஒரு மக்கள் வரிசையில், எதோ ஒரு பரிசோதனை அறிக்கையை வாங்கவோ, அப்பாயின்மென்ட் வாங்கவோ, விண்ணப்பத்தை அனுப்பவோ மணிக்கணக்காக நிற்கிறேன். நின்றுகொண்டே வாசிக்கிறேன். பொதுவாக இருளை நோக்கி நிற்கையில் சுந்தர ராமசாமி வசீகரமாக இருக்கிறார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய உள் கட்டமைப்பில் மிக முக்கிய சாதனை இந்த ஜிப்மர். இத்தனை கடன் உள்ள ஒரு தேசம், இத்தனை ஊழல் மிகுந்த தேசம், இத்தனை கருப்புப்பணம் பதுக்கப்படும்,புழங்கும் தேசம்,இத்தனை ஏழைகள் உள்ள தேசம் இதில் கிடைக்கும் வரியில் இதனை பெரிய அரசு நிர்வாகம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறது, அதுவும் மிக மிக வெற்றிகரமாக என்பது எந்த தேசத்துடன் ஓப்பு நோக்கினாலும் இணையற்ற செயல்.

ஜிப்மர் அமைய வேண்டிய இடத்தை அரவிந்த அன்னைதான் குறிப்பிட்டுத் தந்தார் என சிவாத்மா சொன்னார். இந்தியாவில் மொழிகளும், கலாச்சாரமும் மட்டும்தான் வேறு. நோயும் வலியும் நம் பண்பாடு போல , இந்தியாவின் மொத்த மொழிகளையும் சில தினங்களில் ஜிப்மரில் கேட்டுவிட முடியும். [சில தினங்கள் முன்பு வார்டில் அம்மா, சும்மா விளையாட்டுக்கு ஒரு குழந்தையை ஏமி காவலா? என்று கொஞ்சினார்கள். புதிதாக வந்திருக்கும் ஹைதிராபாத் டாக்டர் நூவு தெலுகா என்றபடி ஆவலுடன் ஓடி வந்தார்]. நோயில் இணையும் குட்டி இந்தியா. பா மா கா அரசியல் மீது பூ தூவுவது போல இருந்தாலும், இதை சொல்லாமல் இருக்க முடியாது இன்று ஜிப்மரில் இருக்கும் பல வசதிகள் ,புற்றுநோய் சிகிச்சைக்கான தனி கட்டிடம் உட்பட பலவற்றை , அன்புமணி அவர்கள் பதவியில் இரும்போது தனது தனி ஈடுபாடு வழியே கொண்டுவந்தார்.

தினமும் புதிய புதிய மனிதர்கள், புதிய புதிய முகங்கள், புதிய புதிய நோய்கள். மனிதர்கள் கூட, காத்திருக்க, கழிப்பறை வசதி கொண்ட ஒரு பெரிய திடல். திடல் முழுக்க, உணவுக் குப்பைகளும், துப்பிய எச்சிலும், அதன்மீதே அட்டை விரித்து அமர்ந்து, படுத்து, குழந்தைகள் தவழ்ந்து…. இத்தனைக்கும் திடலை சுற்றி எண்ணிப் பார்த்தேன் பிரும்மாண்டமான ஆறு குப்பைத் தொட்டிகள். இந்தியர்களுக்கு, எங்கே ருசியுள்ள ,காசு குறைவான உணவு கிடைக்கும் என்று தெரிகிறது, கீழே விழுந்த உணவை நாய் மட்டுமே தின்னும், நாம் தின்னக்கூடாது என்று தெரிகிறது, ஆனால் உண்ட மிச்சிலை எழுந்துசென்று குப்பைத் தொட்டியில் போடத் தெரியாது . இது அறியாமை அல்ல. நாய்க்கும் லபிக்காத தடித்தனம். இந்த வார விகடனில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் மலை போல் குவிந்த குப்பைகளால் பாதிக்கப்பட்டு கதறும் ஏழை மக்கள் குறித்து அறம் பொங்கும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. இன்று சொல்கிறேன் இந்த தடித்தனம் நம்முள் உறைந்திருக்கும் வரை, குப்பைகளால் வரும் நோயில் நாம் சாவது சாலவும் சரியே. முந்தா நாள் எவனோ கழிப்பறை கோப்பையில் சாராய போத்தலை உடைத்து குமித்து வைத்திருந்தான். நேற்று ஒருவன் தனது உள்ளாடையை கோப்பைக்குள் செருகி வைத்து மொத்த கழிவும் வெளியேறா வண்ணம் கழிப்பிடத்தை முடக்கினான். இத்தனைக்கும் மேல் மருத்துவம் வேண்டி காத்திருக்கும் மக்கள்.

உறுப்பிலிருந்து நீளும் குழாயின் முனையில் தொங்கும் தனது மூத்திரப் பையை இடதுகையில் பற்றியபடி வலது கையில் உணவு உண்ணும் முதியவர், வயிற்றில் நேரடியாக துளை போட்டு உணவுகள் கரைக்கப்பட்டு இறங்கும்
தொண்டை நோயாளி, வேதனை முனகல்கள் வேதனையின் உச்சத்திலும், உவகையின் உச்சத்திலும் உடல் ஒரே விதமாகத்தான் முனகுகிறது. நேற்று காலை ஒருவரை பார்த்தேன். தனது மகளை அழைத்து வந்திருந்தார். இருபது வயது இருக்கும். இடது கண், கை, கால் யாவும் ஊனம், மூளை வளர்ச்சி குறைவு. ஆகவே அத்தகையோருக்கு இருக்கும் அபரிமிதமான ஆற்றலும் உடல் பலமும் கொண்டவள். மகளுக்கு ஐஸ் க்ரீம் வாங்கித் தந்திருந்தார். முகத்தில் ஐஸ் க்ரீம் வழிய சிரித்தபடி, அப்பாவின் தலையை வலதுகையால் மாறி மாறி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . பின்பு மருத்துவமனைக்குள் சென்றனர். மாலை ஒரு மருத்துவரின் அறையில் அவர்களை பார்த்தேன். எதோ சிகிச்சை. அது அந்த மகளுக்கு பிடிக்கவில்லை. அமானுஷ்யமாக கிரீச்சிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தால். செக்யுரிட்டி இருவர் பிடித்தும் அவளை சமாளிக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து துள்ளி துள்ளி அப்பாவை வலதுகையால் அவரது தலையில் அடித்துக் கொண்டிருந்தாள். விளைந்த மரத்தில் கட்டையால் அடித்தால் எழுவதுபோல ஒலி எழுந்தது. அப்பா தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. வெறுமனே குனிந்து அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார்.

நேற்று ஒரு நண்பர் கேட்டார். இந்த நாட்களை எப்படி கடக்கிறீர்கள் என்று. ஒன்று. அவ்வப்போது மொபைலை எடுத்து நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்துக் கொள்வேன். இரண்டு, ஏதேனும் வாசித்துக் கொண்டிருப்பேன். மூன்று பிடித்த பணியை எந்த மடையனும் செய்வான். பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் ,சிறப்பாகவும் முழுதாகவும் செய்தே ஆக வேண்டியது கடமை. கடமை தவம் போன்றது. கடமையை செய்ய வாருங்கள் சகோதரர்களே இது விவேகானந்தர் சொன்னது. அல்லது அப்படி அவர் சொன்னதாக நான் நம்புவது. அதை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வேன். நான்கு கொஞ்சம் நடந்து அடுத்த கட்டிடம் சென்றால் பிரசவ கட்டிடம். மாலையில் புல்வெளியில் மூச்சு சீற, கீழ் உதட்டை மடித்துக் கடித்தபடி நிறைசூலிகள் நடை பயிலுவார்கள், ஏதேதோ பாட்டிகளும், அப்பாக்களும் அன்றலர்ந்த குழந்தைகளை சுமந்தபடி , ஓரிடம் விட்டு வேறிடம் செல்வார்கள், அந்த நிறை சூலி முகங்களையும், குழந்தைகளின் முகங்களையும் அள்ளி அள்ளி என் அகத்துக்குள் பதுக்கிக் கொள்வேன். ஐந்து. இந்த பிரும்மாண்ட நோய் வெளிக்குள் உள்ளே எங்கோ என் அம்மா எங்கோ எவருக்கோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அன்பே தவமாகக் கொண்ட அம்மா. அவர்களை நினைத்துக் கொள்வேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஒப்பிலக்கியம்
அடுத்த கட்டுரைமலையுச்சியில்