‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 78

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 3

தோரணவாயிலின் பெருநிழல் நாணிழுத்து வளைக்கப்பட்ட அம்பு போல் மணலில் விழுந்து கிடந்தது. அதன் மேல் ஏறி மற்போருக்கு காலூன்றி நிற்கும் வீரனெனத் தெரிந்த அணித்தூண்களின் நடுவே புகுந்தது வணிக வண்டிகளின் நிரை. திருஷ்டத்யும்னன் அவனறியாமல் கை கடிவாளத்தை இழுக்க புரவி விரைவழிவதை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது சாத்யகியின் புரவியும் அவ்வண்ணமே விரைவழிவதைக் கண்டு “யாதவரே நாம் விரும்பாததை நமது முகங்கள் வெளிக்காட்டவேண்டியதில்லை” என்றான்.

திருஷ்டத்யும்னனின் விழிகளைத் தவிர்த்த சாத்யகி “ஆம்” என்றான். ஆனால் அவன் முகம் தாளமுடியாத வலி எழுந்ததுபோல் இழுபட்டு இதழ்கள் கோணலாகி இருந்தன. “யாதவரே, இந்நகருக்கு நாம் காவல் வீரர்கள் மட்டுமே. மண்ணின் களியாட்டம் எதிலும் காவலனுக்கு பங்கில்லை. என்றோ ஒரு நாள் அதற்காக குருதிசிந்துவது மட்டுமே அவனுக்கிருக்கும் உரிமை. அவனுடைய பிழைகளையும் வீழ்ச்சிகளையும் எல்லாம் அக்குருதி ஈடு செய்துவிடும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று சாத்யகி புன்முறுவல் செய்தான். அச்சிரிப்பு சற்றும் தெரியாமல் சற்றே கலங்கியது போலிருந்தன அவன் விழிகள்.

தோரணவாயிலை அணுகி அதன் நிழலை நோக்கி சென்றபோது அச்சம் கொண்டது போல் தன் உடல் மெய்ப்பு கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். எத்திசையிலிருந்தும் நஞ்சு நா கொண்ட அம்பு ஒன்று வந்து தைக்கக்கூடுமென முதுகுத்தோல் விதிர்த்து காத்திருந்தது. பெருநிழலின் எல்லையைக் கடந்து உள்ளே சென்றபோது அதன் குளிர்ந்த பேரெடை தோளெலும்பை அழுத்தி முறிக்கமுயன்றது. மறுபக்கம் சென்றபின் திரும்பி உள்ளே வந்த சாத்யகியை நோக்கியபோது நிழல் அவனை இரண்டாக வெட்டி தனித் துண்டுகளாக உள்ளே அனுப்புவதைக் கண்டான். புன்னகையுடன் “நிழலின் எடை” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் சொன்னதை முற்றிலும் உணர்ந்துகொண்டு புன்னகைத்து “ஆம், விண்சொடுக்கும் சாட்டை” என்றான் சாத்யகி.

“சில தருணங்களில் வாள்நிழலின் கூர்மையை நாம் உணரமுடியும் யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி பெருமூச்சுவிட்டான். ஆனால் தோரணவாயிலைக் கடந்து அரசப் பெருவீதியில் நுழைந்து கோட்டை முகப்பை நோக்கி சென்றபோது தன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல அவிழ்ந்து உள்ளமும் எளிதாவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். இறுக முறுக்கிய கரவுப்பொறிகள் போல நிரம்பியிருந்த ஒவ்வொரு சொல்லும் புரியவிழ்ந்து பிடி நெகிழ்ந்து உதிர்ந்து மறைய கனிகள் விடுபட்ட கிளை என உள்ளம் எழுந்தது. அதன் இலைகள் காற்றில் ஆடின.

சுஃப்ரையின் நினைவு வந்தது. அவளுடைய நீண்ட நீர்ப்படல விழிகள். ஒளிவிடும் மென்மையான கொழுங்கன்னங்கள். சிறுமூக்கு நுனியில் மையம் கொண்ட வட்டமுகம். அவன் திரும்பி சாத்யகியிடம் “நான் இப்போது எதை எண்ணிக் கொண்டிருக்கிறேனென்று தங்களால் சொல்லமுடியுமா?” என்றான். சாத்யகியின் கண்களில் முதல் முறையாக சிரிப்பொன்று வந்தது. “சிறிய சிரிக்கும் விழிகள் விரிந்த வட்ட முகம்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து “குமிழ் உதடுகள்” என்றான். “ஆம்” என்றான் சாத்யகி.

சாத்யகியும் எளிதாகிக் கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். “எவ்வண்ணம் என்று அறியேன். இக்கட்டுகளில் நான் அவளை நினைப்பதில்லை. அது விலகிச் சென்று என் உள்ளமும் உடலும் எளிதாகும்போது அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். “இக்கட்டுகளில் உங்கள் ஆழுள்ளம் தன்னை அறியாது அவளை தெரிவு செய்கிறது. அதைக் கொண்டு இக்கட்டுகளை நிகர் செய்து கொள்கிறது. பின்னரே உங்கள் அலையுள்ளம் அதை அறிகிறது” என்றான் சாத்யகி. ”அப்படி தங்களுக்குள் எழும் முகம் ஒன்றில்லையா யாதவரே?” என்றான் திருஷ்டத்யும்னன். “உள்ளது. அந்த முகத்தையே இப்போது எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் நோக்க “நீல முகம்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து “ஆம், அதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும்” என்றான்.

“பிறிதொன்றில்லை பாஞ்சாலரே. இப்பிறவியில் அவ்வொரு முகம் மட்டுமே” என்றான். பின்பு “இன்று அதன் முன் எப்படி சென்று நிற்பேன் என்ற எண்ணமே தோரண வாயில் வரை என்னை அழுத்தியது. உள்ளே நுழைந்த மறுகணம் ஓர் எண்ணம் வந்தது. அவரறியாத எதையாவது என்னுள்ளே வைத்திருந்தேன் என்றாலல்லவா நான் அஞ்சி தயங்க வேண்டும்? அவரறியாத எதுவும் இங்கில்லை. ஆடையின்றி அகத்தை கொண்டு நிறுத்தும் ஆலயமுகப்பு அவர் விழிகள். அன்னை முன் மலம்பரவிய உடலுடன் சென்று நிற்காத மைந்தருண்டா என்ன? என் இருள்களும் இழிவுகளும் மேலும் துலங்கட்டும். அவ்விடுதலை என்னை மேலும் ஆற்றல் கொண்டவனாக்கும்” என்றான். பெருமூச்சுடன் “அவ்வெண்ணம் எழுந்ததுமே என் உள்ளம் மலர்ந்துவிட்டது. இனியதொரு நிகழ்வுக்காக சென்று கொண்டிருப்பவனாக உணர்கிறேன். அவர் முன் நின்றபின் காலையில் முதற்சிறகு விரித்து எழும் பறவை என என்னை அறிவேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “நானும்” என்றான். பின்பு நகைத்தபடி ”உண்மைதான். நீர் உரைக்கும்போது நானும் உணர்கிறேன். எங்கேனும் ஒரு விழி முகப்பில் முற்றிலும் ஆடையின்றி என் உள்ளத்தை விரிக்க முடியுமென்றால் அது சுஃப்ரையிடம் மட்டுமே. எனக்கு அவள் முதற்பொருளெனப்படுவது அதனால்தான்” என்றான். சாத்யகி “மத்ரநாட்டு அரசியை மணப்பது குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீர்?” என்றான். திருஷ்டத்யும்னன் “அதைப்பற்றி பேசத்தான் அக்ரூரரை நாடிச்சென்றேன். அதை எவ்வண்ணமோ அவரும் உணர்ந்திருக்கக் கூடும். கோசல நாட்டு அரசியை இளைய யாதவர் மணம் கொண்ட கதையை விரித்துரைத்தார். அதில் எனக்கான விடை இருந்தது” என்றான்.

சாத்யகி என்ன என்பது போல் நோக்கினான். “நான் அரச குலத்தவன். அரச மகள் ஒருத்தியை மணக்கையிலேயே அரசர் நடுவே எனது மணம் பொருள் உள்ளதாகிறது. பெரும்புகழ் துவாரகையின் தலைவரால் மணக்கப்பட்டும்கூட காளிந்தி அரசியாகவில்லை. எளிய மீனவப்பெண்ணாகவே இங்குளோர் அனைவராலும் பார்க்கப்படுகிறார். என் தோள் சேர்வதனால் சுஃப்ரை தன் குலத்தை இழப்பதில்லை. விறலியும் பரத்தையுமாகவே அவள் பார்க்கப்படுவாள்.” சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு அச்சொற்கள் பொருள்படவில்லை என்று தோன்றியது.

“என்றோ ஒரு நாள் எங்கோ ஒரு மண்ணை ஆளவேண்டுமென்ற விழைவுதான் என்னை ஷத்ரியனாக்குகிறது. அவ்விழைவுக்கு உகந்தவள் சல்யரின் மகளே. மத்ரம் எனும் நட்பு நாடு எனக்குத் தேவை. அவர் அளிக்கும் மகட்செல்வம் எனக்கு மட்டுமென உடனிருந்தாக வேண்டும். என்றாவது களம் புகுந்தால் சல்யரின் திறன்மிக்க வாள் எனக்கு துணை வரவும் வேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். சாத்யகி “இத்தனை தெளிவான சொற்களில் இம்முடிவை சொல்வது நிறைவளிக்கிறது பாஞ்சாலரே. இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை.” என்றான். “ஆம் இன்றே நான் எந்தைக்கு மறுஓலை அனுப்பவிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கோட்டை வாயிலைக்கடந்து நகர் நடுவே வளைந்து சென்ற பெரும்பாதையின் முதற்புரியில் அவர்களின் புரவிகள் சீரான குளம்படித் தாளத்துடன் மேலேறின. சாத்யகி “ஒவ்வொன்றும் இத்தனை தெளிவாக எப்போதும் இருந்ததில்லை. ஒவ்வொரு எண்ணமும் முழுமை கொண்ட சொற்களால் ஆனதாக உள்ளது. உயர் அழுத்த நெருக்கடி ஒன்றுக்கு பின்னரே இத்தெளிவு கை கூடும் போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம். நானும் அதையே எண்ணினேன்” என்றான். சாத்யகியின் புரவியின் நிழல் தன் புரவியின் நிழலுடன் இணைந்து ஒன்றாவதை திருஷ்டத்யும்னன் கண்டான். எட்டுகால்கள் கொண்ட பெரிய பூச்சிபோல இரண்டு தலைகளுடன் சென்றது அது.

அரசப்பெரும்பாதையின் எட்டாவது வளைவில் துவாரகையின் துணைப்படைத்தலைவன் விஜயவர்மன் தன் கரும் புரவியில் விரைந்து வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அதில் இயல்புக்கு மாறான ஏதுமில்லை என்றபோதிலும் முதற்கணத்திலேயே அவன் தன்னை நோக்கி வருவதை அகம் உணர்ந்ததெப்படி என்று வியந்தான். புரவியின் கடிவாளத்தை இழுத்தபடி காத்து நின்றபோது அவ்வெண்ணத்தையே சாத்யகியும் அடைந்திருப்பதை அவன் தன் புரவியை இழுத்து நிறுத்தியதிலிருந்து தெரிந்தது. விஜயவர்மன் அவர்களை பார்த்தபின் விரைவிழந்தான். அவனது புரவியின் குளம்புகள் பாடல் தேய்ந்த நிலையில் கிணைப்பறை மேல் தட்டி அமையும் விரல்கள் போல தரையில் பாவிய கருங்கல்பாளங்கள் மீது விழுந்தன. அருகே வந்து கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே பக்கவாட்டில் திருப்பி அவர்களை நோக்கி தலைவணங்கினான். “பாஞ்சாலரையும் யாதவரையும் வணங்குகிறேன். தங்களுக்கென அரசர் அளித்த ஓலையுடன் வந்திருக்கிறேன்.”

“யார்?” என்று சுருங்கிய கண்களுடன் திருஷ்டத்யும்னன் கேட்ட மறுகணமே என்ன அறிவற்ற வினா இது என்று எண்ணிக்கொண்டான். “இளைய யாதவர் இந்த ஓலையை தங்களிடம் அளிக்கச்சொன்னார்.” திருஷ்டத்யும்னன் “என்னிடமா, யாதவரிடமா?” என்றான். “நீங்கள் இருவரும் சேர்ந்து தோரணவாயிலுக்குள் நுழைவீர்கள், அப்போது இதை அளிக்கும்படி எனக்கு ஆணை” என்றான் விஜயவர்மன். உயிர் பிரியும் கணம் என விரைப்புகொண்டு கடிவாளத்தை இழுத்த தன் கையை உணர்ந்து உடனே உள்ளத்தின் அனைத்து பிடிகளையும் விட்டு உடலை தளர்த்தியபடி “எப்போது இதைச் சொன்னார்?” என்றான். “இன்று புலரியில்” என்றான் விஜயவர்மன். “மூன்று நாழிகைக்கு முன்பு” என்று மீண்டும் சேர்த்துக் கொண்டான்.

திருஷ்டத்யும்னன் சொல்லின்றி கைநீட்டி அந்த ஓலையை பெற்றுக்கொண்டான். விஜயவர்மன் தலைவணங்கி தயங்க “நன்று விஜயவர்மரே” என்றான் சாத்யகி. விஜயவர்மன் சாத்யகியை நோக்கி புன்னகைத்துவிட்டு புரவியை திருப்பிக்கொண்டு சென்றான். கையில் ஓலையுடன் திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி “மூன்று நாழிகைக்கு முன்பு என்றால்…” என்றான். “அப்போது தாங்கள் என்னை சந்தித்திருக்கவே இல்லை.” திருஷ்டத்யும்னன் “பறக்கும் புள்ளுக்கு பத்து முழம் முன்பு என்று பழஞ்சொல் உண்டு. கூட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே அம்பு கிளம்பியிருக்கிறது” என்றபின் இதழ் விரித்து புன்னகைசெய்து “ஆனால் அதில் வியப்பதற்கொன்றும் இல்லை அல்லவா?” என்றான். சாத்யகியும் புன்னகைத்து “ஆம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் ஓலை அடங்கிய மூங்கில் குழல் வலது ஓரத்தில் மூடப்பட்டிருந்த மெழுகுப்பூச்சை கையால் நெகிழ்த்தி மரத்தாலான அதன் மூடியைத் திருகி வெளியே எடுத்தான். உள்ளே சுருளாக இறுக்கப்பட்ட மெல்லிய தாலியோலை இருந்தது. அதை எடுத்து விரல்களால் நீவி பற்றிக்கொண்டான். நாணம் கொண்ட இளம் பெண்ணென அது தன்னை சுருட்டிக் கொண்டது. திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை விட்டுவிட்டு இரு கைகளாலும் இரு நுனிகளையும் பற்றி அதை படித்தான். “பாஞ்சாலரே, வஞ்சத்திற்கு தண்டமென்ன என்றறிவீர். சதுக்கப்பூதம் நின்றிருக்கும் நகர் மையத்தில் அதை நிறைவேற்றும்படி அரசாணை.” இளைய யாதவர் அரச முத்திரை அதிலிருந்தது. மீண்டுமொரு முறை அச்சொற்களைப்படித்தபின் அவன் கையை விட விரைந்து சுருண்டு அட்டையென ஆயிற்று ஓலை.

சாத்யகி அவனை நோக்கியபடி விழிநாட்டி இழுத்த கடிவாளம் இடக்கையில் நின்றிருக்க வலக்கை உடைவாளைத் தொட்டதுபோல் விழுந்திருக்க புரவியில் அமர்ந்திருந்தான். திருஷ்டத்யும்னன் அந்த ஓலையை அவனிடம் நீட்டினான். “வேண்டியதில்லை” என்றான் சாத்யகி. “ஏன்?” என்றான். “என்னை சிறைப்பிடித்துக்கொண்டு தோரணவாயிலில் நீங்கள் நுழைவீர்கள் என்று அறிந்தவர் எதை ஆணையிட்டிருப்பார் என்று எளிதில் உய்த்துணர முடியும்” என்ற சாத்யகி “பாஞ்சாலரே, இளைய யாதவர் முறைமை சார் தண்டத்திற்கு ஆணையிட்டிருந்தார் என்றால் அதை நிறைவேற்றுவது உங்கள் கடமை” என்றான்.

திருஷ்டத்யும்னன் சில கணங்கள் சாத்யகியை நோக்கிவிட்டு பெருமூச்சுடன் விழிதிருப்பி சுழன்றேறிச்சென்ற பாதையின் மறுஎல்லையில் விழுந்து கிடந்த மாளிகையின் நிழல் ஒன்றை நோக்கினான். அதன் உச்சியில் இருந்த கொடி சிறகறுந்து கீழே விழுந்த வௌவால் என துடித்துக் கொண்டிருந்தது. அதையே நோக்கியபடி “அவ்வாணையை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை யாதவரே” என்றான். சாத்யகி ஏதோ சொல்லவர கையமர்த்தி “இப்புவியில் எந்த நெறியையும்விட, எத்தெய்வத்தின் ஆணையையும்விட இன்று தாங்கள் இந்நகரில் கழுவேற்றப்படுவீர்கள் என்றால் அருகே பிறிதொரு கழுவில் அமர்ந்திருப்பதை மட்டுமே என் கடமை எனக் கொள்வேன்” என்றான்.

சாத்யகியின் உளம்கொண்ட அதிர்வை அவன் புரவியில் எழுந்த அசைவே காட்டியது. குளம்படிகள் ஒலிக்க அருகே வந்து “பாஞ்சாலரே” என்றான். கை நீட்டி அவன் கையைப்பற்றிக் கொண்டு “யாதவரே, இத்தருணத்தில் நாம் அடைந்த தெளிவைப்போல பிறிது எப்போதும் அடைந்ததில்லை. எண்ணுவதற்கோ மாற்று கணிப்பதற்கோ ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றான் சாத்யகி. “இளைய யாதவரிடம் சென்று நிற்கப்போகிறேன். அவர் விழிகளை நோக்கி இதுவே என் முடிவென அறிவிப்பேன். அவரளிக்கும் தண்டம் எதுவாக இருப்பினும் அதன் முன் தலைபணிவேன்” என்றான் திருஷ்டத்யும்னன்

சாத்யகி “அவ்வண்னமெனில் தயங்க வேண்டியதில்லை, கிளம்புவோம்” என்றான். “இல்லை. இது என் உளச்சான்றின் மொழி” என்றான் திருஷ்டத்யும்னன். “இதை சதுக்கப்பூதத்தின் விழி முன் நின்றுதான் நான்சொல்ல வேண்டும். சொல்காக்கும் ஆற்றல் கொண்டது அத்தென்னகத் தெய்வம். அதன் கையில் உள்ள உழலைத்தடியும் பாசச்சுருளும் முடிவு செய்யட்டும் பிழையென்ன அறமென்ன என்று.” சாத்யகி “ஓலையில் சதுக்கப்பூதம் பற்றி அவர் சொல்லியிருக்கிறாரா?” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “நாம் நேற்றிரவு அங்கு பேசியதை அறிந்திருக்கிறார்” என்றான் சாத்யகி. “அவரறியாத ஒன்று இந்நகரில் இல்லை” திருஷ்டத்யும்னன் உரக்கச் சிரித்து “யார் கண்டது? அல்லும் பகலும் என இரு பெரும் பூதங்களாக சொல்லுக்கு உறுதி தேர்ந்து இங்கெழுந்து நின்றிருப்பதும் அவர்தானோ என்னவோ?” என்றான்.

இருவரும் சிரித்தபடியே புரவிகளில் விரைந்தனர். அணுக்கப்பாதையில் விரைந்து மூன்று வளைவுகளைக் கடந்து நாளங்காடியின் நெரிசலான தெருவுக்குள் நுழைந்தனர். இளம்புலரியிலேயே அங்காடி விழித்தெழுந்துவிட்டிருந்தது. வெயில் ஏற ஏற அங்கு வியர்வை வழியும் உடல்களுடன் வணிகரும் பொருள் கொள்ள வந்தவரும் பொதி சுமக்கும் ஊழியர்களும் சிறு வண்டிகளை இழுத்த அத்திரிகளும் கழுதைகளும் சிற்றுணவு தேடி சுற்றிவந்த நாய்களும் என உயிரசைவுகள் நிறைந்திருந்தன. திருஷ்டத்யும்னன் “வழி! வழி விடுங்கள்!” என்று உரக்கக்கூவி ஒருவரை ஒருவர் தோள் முட்டி மாறி மாறிக் கூச்சலிட்டு வழி நிறைந்திருந்த மக்களை விலக்கியவண்ணம் சென்றான்.

அனைத்து கடைகளும் திறந்து தென்னகத்து சங்கும், நறுஞ்சுண்ணமும், அகிலும், பொற்குவை என மஞ்சளும், மென்மணம் எழுந்த சுக்கும், கொம்பிலும் தந்தங்களிலும் வெண்பளிங்கிலும் செதுக்கப்பட்ட அருங்கலைப்பொருட்களும், பருத்தியாடைகளும் குவிக்கப்பட்டிருந்தன. சிறுசெப்புகளில் கோரோசனையும் புனுகும் சவ்வாதும் விற்ற நறுவணிகர்களின் கடைகளை மூக்கால் கடந்துசென்றனர். தங்கள் குடிமுத்திரை கொண்டு கொடிகள் பறக்க அருகே அமர்ந்திருந்த வணிகர்கள் உரக்க கை தூக்கி பொருள் கொள்ள வந்தவர்களை அழைத்தனர். தீரா குலப்பூசலின் உச்சியில் இருப்பவர்கள் போல விலை பேசி பூசலிட்டனர். ஏதோ ஒரு மாயக் கணத்தில் பூசல் முழுமையுற இரு தரப்பினரும் புன்னகைத்து பிறிதொரு மொழியில் பேசத்தொடங்கினர். விற்கப்பட்டதுமே பொருள் அதன் மேலிருந்த விழிகளை இழந்து மண்ணில் வந்து விழுந்தது. வணிகர்கள் அவற்றை எடுத்து இலைகளாலும் கமுகுப்பாளைகளாலும் பனையோலைகளாலும் பொதியத்தொடங்கினர்.

தென்னகத்து நெடும்பனையின் ஓலையாலும் நாராலும் செய்யப்பட்ட வலுவான பொதிப்பெட்டிகள் இளநீலம், இலைப்பச்சை, செம்மண் நிறங்களில் இருந்தன. திருஷ்டத்யும்னனிடம் சாத்யகி “இவர்களின் கரும்பனை பாதாளத்திலிருந்து எழுந்து வந்த பெருநாகம் ஒன்று உடல் கொண்டது என்கிறார்கள். அம்மரத்தைப்பார்க்கையில் அது உண்மை என்று உணர்வோம். இவர்களுக்கு கள்ளும், இனிப்பும், காயும், கனியும், கிழங்கும், பாயும், பெட்டியும், கூரையும், தூணும், நாரும் என அனைத்துமாக ஆகும் ஒற்றை மரம் அது” என்றான். “இவர்கள் எழுதுவது இந்தப் பனையோலையில்தான். அது தாலியோலைகளைப்போல மென்மையானது அல்ல. வாள்தகடுகளுக்கு நிகரான உறுதி கொண்டது. ஒரு முறை எழுதப்பட்ட சுவடி மூன்று தலைமுறைகளை காணும் என்கிறார்கள்” என்றான்.

எழுது பொருளாக ஆக்கப்பட்ட பொருள்களை விற்கும் கடையொன்றை சுட்டிக்காட்டி “இங்கும் பிறவி நூல்கள் குறிப்பதற்கு தென்னகத்து நெடும்பனையின் ஓலையையே விரும்புகிறார்கள்” என்றான். கையளவு நீளத்தில் தறிக்கப்பட்டு நிழலில் உலர்த்தி கற்சக்கரத்தால் உருட்டி சீரமைக்கப்பட்ட சீரான சுவடிகள் பித்தளைத் தகடுகளாக மின்னின. தீயால் சுட்டு துளையிட்டு அதில் செம்பட்டு நூல்கோத்து நூலாக்கியிருந்தனர். எழுதப்பட்ட சுவடிகள் ஓரங்களில் மஞ்சளும்சுண்ணமும் கலந்த செங்குழம்பு பூசப்பட்டு மஞ்சள் பட்டுநூலால் சுற்றிக் கட்டி அடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் எழுதுவதற்கான கூர்முனை கொண்ட எழுத்தாணிகள் நாகத்தலையும் அரிமுகத்தலையும் ஆலிலைத்தலையும் கொண்டு அருகே குவிக்கப்பட்டிருந்தன.

திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கி புன்னகைத்து “இளமையிலேயே ஏடும் எழுத்தாணியும் எனக்கு உளமொவ்வாதவையாகவே இருந்தன. ஏனென்று இப்போது நினைவுறுகிறேன். அன்னை மடியில் நான் அமர்ந்திருந்த வயதில் முதுகணியர் ஒருவர் மெல்லிய ஓலையை எழுதுபலகையில் வைத்து நீவி நான்கு விரலால் இறுகப்பற்றிய கூர் எழுத்தாணியால் அதில் எழுதுவதைக் கண்டேன். அது ஒரு வதை என்று தோன்றியது. அந்த ஓலை குருதி வழிய உடல் நெளிப்பது போல. ஓலைக்கு வலிக்கும் என்று நான் அழுதேனென்று செவிலியர் நெடுங்காலம் சொல்லி சிரிப்பதுண்டு. முதுகணியர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து எழுத நான் எழுந்து சென்று என் களிப்பாவை ஒன்றைத் தூக்கி அவர் தலையில் அடித்தேன். அந்த ஓலையை அவர் கொல்கிறார் என்று கண்ணீர்விட்டு அழுதேன். பின்னர் செவிலியும் சேடியும் நகையாட்டு வழியாக அந்நிகழ்வை என்னெஞ்சில் ஆழ நாட்டினர்.”

“இளம் குருகுலக்கல்விக்குச் சென்றபோது ஏடு தொட்டெடுத்து பீடத்தில் வைத்து என்னை மடியமர்த்தி முதலாசிரியர் எழுத்தாணியை என்கையில் அளித்தபோது இருகையின் விரல்களையும் இறுகப்பற்றியபடி எழுதமாட்டேன் என்று சொல்லி அழுதேன். இரு கால்களையும் உதறி எழ முயன்றேன். முதலெழுத்தை மட்டும் என்னை எழுதச்செய்வதற்குள் ஒரு நாழிகை நேரமாகியது என்றார்கள். பின்னரும் எழுத்தாணியால் ஏட்டில் எழுதுவது என் தோலின்மேல் வாளால் கீறிக்கொள்வது போன்ற உணர்வையே அளித்தது. இன்றும் ஓலைகள் என்னை அச்சுறுத்துகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவரே, மானுட எண்ணங்கள் நீரலைகள் போன்றவை. ஒவ்வொரு கணமும் அவை நிகழ்ந்து கொண்டிருப்பதே அவற்றின் அழகு. நீரலைகளை நோக்கி கல்லில் செதுக்கி வைப்பது போன்றது எழுத்து. அது அலையல்ல, மானுடனின் அச்சத்தின் சான்று மட்டுமே.”

“நிலையின்மையென இங்கு நிறைந்துள்ள அனைத்தையும் சொல்லாலும் விழியாலும் தொட்டு நிலைத்தவை என ஆக்க முயல்கிறது மானுட அச்சம். நிலையற்று விரிந்திருக்கும் இப்பெருவெளியே உண்மை. அதை தன் இருண்ட சிற்றாலயத்தில் ஒரு கற்சிலையாக நாட்ட விழைகிறார்கள். இச்சுவடிகளில் பதிந்திருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரு தெய்வம். கல்லில் கட்டுண்டு விழி பதைத்து நிற்கும் தெய்வம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திருஷ்டத்யும்னனின் அந்தச் சொற்பெருக்கை முழுக்க உள்வாங்காதவன் போல விழிகளால் கேட்டுக்கொண்டு தொடர்ந்து வந்தான். “எத்தனை சொற்கள்! ஒரு பெரு நகரத்தில் ஒரு நாழிகைக்குள் எழுதிக் குவிக்கப்படும் ஏடுகள் எத்தனை ஆயிரம்! சுங்கம், வணிகம், அரசாணைகள், காவியங்கள், கடிதங்கள், கருவூலக்கணக்குகள்! இவ்வனைத்தும் என்றும் அழியாதவை என்று மானுடர் எண்ணிக் கொள்கிறார்கள். அவை இக்காலமெனும் பெரும் பெருக்கில் வெவ்வேறு எழுத்துக்களே!”

சாலையின் மறுபக்கம் ஒற்றைநோக்கில் எழுந்து தெரிந்த நாளங்காடிப் பூதத்தின் சதுக்கத்தில் சிறுகுழுக்களாக வணிகர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். ஒவ்வொரு குழுவாக எழுதப்பட்ட வணிக ஓலையுடன் சென்று அதன் காலடியில் நின்றனர். காலைவெயில் விழுந்திருந்த பூதத்தின் பேருடல் உறை உருவி எழுந்த வாள் என மின்னிக் கொண்டிருந்தது. அதன் கால்நகங்கள் ஒவ்வொன்றும் ஒரு செம்புக்குவளை. சிறுமண்டைகளால் ஆன பெருங்கழல். கால்களுக்கு நடுவே இருந்த சிறிய பீடத்தில் மலரும், செந்தூரமும், கைப்பிடி மண்ணும், அரிசியும், சிறுகுவளை நீரும் கொண்ட தாலத்தில் எழுதப்பட்ட சாத்தோலையை வைத்து அதை எழுதியவரும் அளிப்பவரும் பெறுபவரும் அருகே நின்று வணங்கினர். பின்னர் ஓலையை எடுத்து சென்னியிலும் விழியிலும் நெஞ்சிலும் வைத்து சொல்லளிப்பவர் பெறுபவருக்கு நீட்டினார். அவர் அதை வாங்கி தன் நெஞ்சிலும் விழியிலும் தலையிலுமாக வைத்துக் கொண்டார். இருவரும் மும்முறை தலைவணங்கி புறம் காட்டாமல் விலகினர்.

“அங்கே இந்த ஓலையை நானும் வைக்கப்போகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இது நாம் எழுதிய ஓலை அல்ல” என்றான் சாத்யகி. “நாம் இந்த ஓலையை ஏற்கவில்லை என்பதை பூதம் அறியட்டும். மண்ணில் காலூன்றி விண்ணில் தலை புதைத்து திசைநோக்கி நின்று மானுடருடன் ஆடும் நீலப்பூதம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி நகைத்து “ஆம், அதைச்செய்வோம்” என்றான். “பாஞ்சாலரே, இதே நகரில் இதே பிழையை செய்ததற்காக கிருதவர்மனை நீங்கள் தேரிலேற்றி கைதளைத்துக் கொண்டு வந்து அவை நிற்கச்செய்தீர்கள்.”

திருஷ்டத்யும்னன் “ஆம். அவன் செய்த பிழைக்கு அத்தண்டம் உரியதே. அது அரசருக்குரிய நெறி. அதில் எனக்கு மாற்று எண்ணம் இப்போதுமில்லை” என்றான். “அரசநெறி நீளவேண்டுமென்றால் நூல் எழுதிய சொல் பிழைக்கலாகாது. ஆனால் நூலை மட்டுமே கற்று அறமாற்ற நுண்ணுணர்வுகொண்ட மானுடன் ஒருவன் அரியணை அமரவேண்டியதில்லை. பேரறம் ஒன்றுக்காக அனைத்துச் சொற்களும் கடந்து செல்லும் முடிவை எடுப்பதற்கே அங்கொரு அரசன் தேவையாகிறான். இன்றும் எனக்கு தயக்கமில்லை. இங்குள்ள எவரிழைத்தாலும் ஓர் அரசனாக தண்டமளிக்க நான் தயங்கமாட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு இப்புவியில் இதுவரை எழுந்த அனைத்துச் சொற்களும் அளிக்கும் அறங்களுக்கு அப்பாற்பட்டவர். அது எனக்கான பேரறம் என்றே எண்ணுகிறேன். பிழை என்றால் என்னை சதுக்கப்பூதம் கொல்லட்டும்.”

சாத்யகி சிரித்து “பார்ப்போம்” என்றான். திருஷ்டத்யும்னன் மூன்று படிகளிலேறி சதுக்கப்பூதத்தின் காலடிகளை அடைந்தான். மூங்கில் குழாய்க்குள் சுருட்டிப் போடப்பட்ட ஓலையை எடுத்து பூதத்தின் இரு கால்களின் நடுவே வைத்தான். இருவரும் இருபக்கமும் கைகூப்பி நின்றனர். “என் இணை இவன். இவன் பொருட்டு எப்பிழையையும் பொறுப்பதும் இவனுக்கென உயிர் துறப்பதும் என் கடனென நினைக்கிறேன். இது பிழையெனில் இப்பெரும் பாசம் என்னை கைகால் பிணைக்கட்டும். இவ்வுழலைத்தடியால் என் தலை உடைந்து தெறிக்கட்டும். ஆம்! அவ்வண்ணமே ஆகுக!” என்றான் திருஷ்டத்யும்னன். பூதத்தின் இடது பெருவிரல் நகத்தைத் தொட்டு சென்னியிலும் விழியிலும் நெஞ்சிலும் சூடினான். சாத்யகி அவ்வண்ணமே வணங்கி பெருமூச்சு விட்டான்.

சிலகணங்களுக்குப்பின் ஓலையை கையில் எடுத்தபடி படிகளில் இறங்கி வெளியே வந்தனர். “இனி பூதம் முடிவெடுக்கட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, நீங்கள் இச்சொற்களை முதன் முறையாகச் சொன்னபோது என் உள்ளம் உருகி பொங்கியலைத்தது. இங்கு பூதத்தின் காலடிகளில் மீண்டும் கேட்டபோது இதிலென்ன இருக்கிறது, இது மாறாப் பேருண்மை என தோன்றியது. நாம் இன்று இந்த நட்பை அடையவில்லை. ஏழாவது முறையாக கண்டடைந்திருக்கிறோம்” என்றான் சாத்யகி. அவனை நோக்கி சிரித்தபடி “மேலும் உரையாடத்தொடங்கினால் எளிய சொற்களால் இக்காற்றுவெளியை நிறைத்துவிடுவோம் யாதவரே. வருக! துவாரகையின் அவை மன்றுக்குச் சென்று நிற்போம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

முந்தைய கட்டுரைஇன்று கோவையில் உரை
அடுத்த கட்டுரைதடைகள்