தமிழியம் ஓர் ஆய்வு:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

கடைசியில் தமிழியத்தை வாரப்போய், உங்கள் ஆருயிர் நண்பர் வசந்தகுமார் தலையிலேயே கையை வைத்துவிட்டீர்கள், வாழ்க. [தமிழியம் ஓர் ஆய்வு ]

எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் இருக்கிறார். மிகச்சிறந்த எழுத்தாளர். நான் அவரது தீவிரமான வாசகன். நாலும் தெரிந்த மனுஷன் அவர். அவரே இந்த தமிழியக் கிறுக்குக்கு ஆளாகி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவர் நாவலை குமரிக்கண்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். சொல்லப்போனால் குமரிக்கண்டம் தொடங்குவதற்கு முன்னரே நாவலை ஆரம்பிக்கிறார். அங்கே இருந்த குரங்குகள் எல்லாம் தமிழ்க்குரங்குகள். ஆனால் அந்த விஷயம் அவற்றுக்குத் தெரியாது. ஏனென்றால் அப்போது தமிழே கிடையாது. அந்தக்குரங்குகள் பயப்படும் போது ஆ என்று அலறுகின்றன. காலிலே மிதிபட்டால் ஓ என்று அலறுகின்றன. அவ்ளவுதான்,தமிழ் பிறந்துவிட்டது. அப்புறம் அப்படியே அப்படியே சிவன் விஷ்ணு எல்லாரும் பிறந்துவிடுகிறார்கள். அதற்கு முன்னரே கொற்றவை பிறந்துவிட்டாள். அவர்கள் ஆளுக்கொரு யாளி அல்லது டைனோசரில் ஏறி குமரிக்கண்டத்தைச் சுற்றி வருகிறார்கள். இப்படிப் போகிறது நாவல். நகைச்சுவை மிக்க படைப்பு. அதைப்பற்றி நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிடவே இல்லையே. உங்களைவிட்டால் அந்த நாவலைப் படித்த யார் தமிழ்நாட்டில் இருக்கப்போகிறார்கள்?

ராமச்சந்திரன்.

அன்புள்ள நண்பருக்கு

அந்த நண்பரைப்பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள். அவர் அப்பாவி. நிறையப்படித்து படித்தவற்றை ‘கற்றவை’ என்றபேரில் அவர் ஒரு குறிப்புநூலாக எழுதினார். அதை பிரசுரித்தவர் அச்சுப்பிழையுடன் அச்சிட்டுவிட்டார். அவரா அதற்கு பிணை?
ஜெ

*************
அன்புள்ள ஜெயமோகன்,

தமிழியம் ஓர் ஆய்வு ரொம்ப நல்ல கட்டுரை. இந்த வரிசையில் வந்துள்ள கட்டுரைகளில் தீவிரமான ஒரு அங்கதம் இருக்கிறது. அதை சற்று உள்விவகாரம் தெரிந்தவர்கள்தான் முழுசாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த விஷயத்தை கவனித்து அதில் உள்ள கோணலான விவகாரம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை நகைச்சுவையாக ஆக்குகிறீர்கள். உலகில் உள்ள எல்லா சொற்களும் தமிழ்ச் சொற்களே, அந்தந்த மொழியினர் அவற்றை தவறாக உச்சரிக்கும் அறியாமை களையப்பட வேண்டும் என்ற வரி ஓர் உதாரணம் என்று காட்டலாம். உண்மையிலேயே அப்படித்தான் பாவணர் சொல்கிறார். அவரைத்தான் நம்முடைய ஆட்கள் மொழிஞாயிறு என்று சொல்கிறார்கள். ஒரு முப்பது நாற்பது வருஷம் இதை நிரூபிக்க அவர் உழைத்திருக்கிறார். அவர் உருவாக்கிய சொற்பிறப்பியல் அகரமுதலி என்ற அகராதி மாவட்ட நூலகங்களில் இருக்கும் அதை வாசித்துப் பார்த்தால் எல்லா சொற்களுக்கும் அவர் தமிழிலேயே வேர் கண்டுபிடிப்பதைக் காணலாம். ஒரு சொல் காதில் விழுந்ததும் என்ன தமிழ்ச்சொல் நினைவுக்கு வருகிறதோ அந்த தமிழ்ச்சொல்தான் அச்சொல்லுக்கு மூலச்சொல் என்று கண்டுபிடிக்கிறார். அந்த உண்மையான வேடிக்கையை நீங்கள் சற்று சுருக்கமான சொற்களில் சொல்லி அங்கதத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தேன்

செல்வகுமார்

***

அன்புள்ள எழுத்தாளர் ஜெ., அவர்களுக்கு,

தமிழியம் ஓர் ஆய்வு – ல்,

தமிழ் எழுத்துக்களில் உருவங்கள் காணும் பகுதியைப்
படித்தவுடன் மலையாள ‘ஆ’ எழுதிப் பார்த்தேன். அட, ஆமாம்! தும்பிக்கையைச்
சுருட்டி வைத்து நமது வலதுபுறம் நோக்கி நிற்கும் ஆனை! அதன் குடல்
வளைவுகள் கூட குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனக்கு மற்றொரு எழுத்து நினைவுக்கு வந்தது.

‘ஒ’ என்ற எழுத்தை எழுதிப் பாருங்கள். கூன் விழுந்த கிழவி நின்றிருப்பது
போல் இருக்கின்றது அல்லவா..!

மேலிருக்கும் வட்டம் தலை போலவும், வளைவு கூனாகவும், இடையில் இருக்கும்
வட்டம் இடை போலவும் தோன்றுகின்றன. எனக்கு அது ஒளவைப்பாட்டியை எப்போது
நினைவூட்டும்.

அயல் குழந்தைகளுக்கு இப்படியே நாம் சொல்லிக் கொடுக்கலாம்.

அ – குண்டான ஆள் தூணில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறான்.

ஆ – அதே தூணில் கயிறு கட்டப்பட்டிருக்கின்றது.

இ – முக்காடிட்ட பத்மாசன யோகி.

ஈ – (நீங்களே சொன்ன) ஜன்னல் வழி ஈக்கள். (இது அருமை சார்…!)

உ – அரிவாள்மனை.

ஊ – அரிவாள்மனை மேல் ஊரும் எறும்பு.

எ – ஒரு கால் உடைந்த எறும்பு.

ஏ – ஒரு காலில் நகம் வளர்ந்த எறும்பு.

ஐ – பல்லாங்குழிப் பலகை (அ) கொண்டை போட்ட பட்டாம்பூச்சி.

ஒ – ஒரு கிழவி.

ஓ – ஷூ அணிந்த கிழவி.

ஒள – கிழவியும், எறும்பும்.

ஃ – பவர் ப்ளக்.

நன்றி.

இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்

ஆய்வுப்பொருள் இல்லாமல் தமிழ் கல்வித்துறை வழிமுட்டி நிற்கும் காலத்தில் அழகான புதுவழியைக் காட்டியிருக்கிறீர்கள். பழைய இலக்கியங்களை ஆராய தமிழ் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது. புதிய இலக்கியங்களை ஆராயலாமென்றால் அவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கு தமிழ் தெரியாது. என்ன செய்வார்கள். இந்நிலையில் இந்த ஆலோசனை ஆய்வர்களுக்கு செவியில் அந்த புகழ்பெற்ற இன்பத்தேன் வந்து வீழ்வது போல் இருக்கும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வந்தன என்று ஆராயலாம். அதில் குறைந்தது 500 ஆய்வுகளுக்கு இடமிருக்கிறது. அதன்பின் பாவாணர் வழிநின்று உலக மொழிகளில் எல்லா எழுத்துக்களும் தமிழை தவறாக எழுதியமையால் வந்ததே என்று ஆராயலாம். அது 5000 ஆய்வேடுகளுக்கு தோதுபடும். என்னுடைய ஆலோசனை. அப்படியே பிற எழுத்துக்களுக்கும் செல்லலாம். க பெட்டைக்கோழி. கா குஞ்சை முன்னால் விட்ட பெட்டைக்கோழி. கி வான்கோழி. கீ கினிக்கோழி. கு சேவல்கோழி….எப்படி?
ஜெ 

முந்தைய கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 3