“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு,

“என்னதான் இருக்கிறது வேதத்தில்?” என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று ஊகித்திருந்தால் யாரோ சிவப்பழம் ஒருவர் வேதத்தின் மகிமையை புராணத்தன்மையுடன் நீட்டி முழங்கி இருக்கிறார் என்று கடந்து சென்றிருப்பேன்.ஆனால் “என்னதான் இருக்கிறது வேதத்தில்?” என்ற தலைப்பு ஒரு சவாலை அளிப்பதுபோன்று ஈர்த்தமையால் வாசிக்கத்தொடங்கினேன்.நிறுத்தமுடியாதவாறு உள் இழுத்துக்கொண்டது.நோன்புப் பெருநாள் விடுமுறை என்பதால் ஐம்பத்துநான்கு அலகுகளையும் வாசித்து முடித்துவிட்டேன்.

இந்த தொடரில் கவர்ந்த முக்கியவிடயம் சு.கோதண்டராமனின் சமநிலையுடனான அணுகுமுறைதான்.இந்த அணுகுமுறை மிகப்பெரும்பாலான இடங்களில் இத்தொடரில் நீடிக்கின்றது.

“மாமிச உணவு சாப்பிடுபவர்கள் கொடுக்கலாம். வேதத்தில் ஆடு, மாடு, குதிரை பலி கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளன. புதிய மந்திரம் இயற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் ரிஷிகள், உயிர்க் கொலையையும், யக்ஞங்களையும் நீக்கி பிரார்த்தனை ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் என்பதையும் பார்க்கிறோம். புதிய ரிஷிகள் பழைய யக்ஞ முறைகளைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பின்னர் யஜுர் வேத காலத்தில் மிருக பலியுடன் கூடிய யாகங்கள் பெருகியதையும் பார்க்கிறோம். புத்த சமண மதங்களின் பிரசாரத்தால் இந்து சமயத்தில் பலி இடுதல் குறைந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. அதனால் அவரவர் வழக்கப்படி செய்து கொள்வதை வேதம் தடுக்கவில்லை.” என தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு அளிக்கும் பதிலாகட்டும்,

மாமிச உணவு உண்ணலாமா என்பதற்கான “வேத ரிஷிகள் காலத்தில் மாமிச உணவைச் சாப்பிடுவது தவறாகக் கருதப்படவில்லை. எனவே இன்று மாமிசம் உண்பவர்களை நாம் வேத விரோதிகளாகக் கருதித் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் வேதத்திலேயே உயிர்களைக் கொல்லாதீர்கள் என்ற கருத்தும் காணப்படுவதால், வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்னமேயே மாமிச உணவுக்கு எதிரான கருத்தும் தோன்றி விட்டது என்பதை அறிகிறோம். ஆடை அணியாதிருந்த மனிதன் வளர்ச்சி பெற்று ஆடை அணியத் தொடங்கினான். அது போல,உணவு விஷயத்திலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மாமிசம் உண்பது மறையத் தொடங்கியது. சிந்தனை வளர்ச்சியில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து அவரவர் தத்தம் உணவுப் பழக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.” கருத்தாகட்டும் அவரின் ஆச்சார வைதிக நோக்கிற்கு அப்பாலான ஆய்வுப்பார்வைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கூறியவை பலரும் அறிந்தவை என்றாலும் அவரின் சமநிலைப்பார்வைக்கு எடுத்துக்காட்டாகவே குறிப்பிடுகிறேன். தொடர் முழுவதும் வேதத்தை ஆய்வு நோக்குடன் எளிமையாக முன்வைத்துக்கொண்டு செல்கிறார்.

வேதம் குறித்து அரசியல் காரணங்களால் எதிர்நிலை எண்ணங்கொண்டவர்களையும் அதை வரலாற்றுரீதியாக சாய்வுநிலை நின்று பாராது நேர்கொண்டு நோக்குவதற்கு இந்தத் தொடர் வழிவகுக்கக்கூடியது.

தற்போது இது “வேதம்:சந்தேகங்களும் விளக்கங்களும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.ஈர்க்கக்கூடிய தொடரின் தலைப்பை வெகு சாதாரணமான பழகிப்போன ஒரு தலைப்புக்கு ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.சு.கோதண்டராமனின் அணுகுமுறைக்கு எதிரான தலைப்பு என்பது முரண்நகை.இந்தத் தலைப்பினால் ஆச்சார வைதீக வட்டத்துக்குள் மட்டும் இந்நூல் தேங்கிவிடும் அபாயம் இருக்கின்றது.

http://www.vallamai.com/?p=44066

சிவேந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50
அடுத்த கட்டுரைபுதியநாவல் (உரை)